வாசிப்பும், யோசிப்பும் 168: ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவாக…..

நெடுந்தீவு சண்முகநாதன்இன்று தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்களின் இறுதி அஞ்சலிக்காக எழுத்தாளர் தேவகாந்தனுடன் சென்றிருந்தேன். தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமான ஒருவர் சண்முகநாதன். இவரை நான் ஒருமுறை 81.82 காலகட்டத்தில் சந்தித்திருந்த விடயத்தை இன்றுதான் உணர்ந்தேன். அவருக்கு அஞ்சலி செய்வதற்காக வந்திருந்த வந்திருந்த ‘ஜான் மாஸ்ட்டர்’ பழைய நிகழ்வொன்றினை நினைவு படுத்தியபோதுதான் அதனை உணர்ந்தேன். ஒருமுறை 81/82 காலகட்டத்தில் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்திருந்த அநாதைகள் இல்லத்தில் நடைபெற்ற, காந்தியம் அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   ‘தமீழீழ விடுதலை’ பற்றிய மூன்று நாள் கருத்தரங்கில் பல்வேறு  அமைப்புகளைச்சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்நிகழ்வில் சண்முகநாதனும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான் அவரைச்சந்தித்திருக்கின்றேன். நீண்ட நேரம் அவருடன் உரையாடியுமிருக்கின்றேன். அதன் பின்னர் அவர் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் கோப்பொன்றினை (ரோனியோப் பிரதி) எனது கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி ‘தாயகம்’ (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் கட்டுரையொன்றினை ‘நாவலர் பண்ணை நினைவுகள்’ என்று எழுதியிருந்தேன். பின்னர் அதனைப் ‘பதிவுகள்’ இணைய இதழிலும் மீள்பிரசுரம் செய்திருந்தேன். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கும்”

“அந்தக் கருத்தரங்கில் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்று தன்னை அறிமுகப்படுத்திய நெடுந்தீவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரை சந்தித்ததும் நினைவிற்கு வருகின்றது. பின்னர் இவர் ‘றோனியோ’ பிரதியாக தமது கட்சியின் கொள்கைப்பிரகடன அறிக்கையினைத் தபால் மூலம் கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார்..” (பதிவுகள், ‘நாவலர் பண்ணை நினைவுகள்‘ – 24 ஏப்ரில் 2012).

ஆரம்பத்தில் அவரது பெயர் உடனடியாக ஞாபகம் வர மறுத்தது. நெடுந்தீவு ராமநாதன் என்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் ‘நெடுந்தீவு சண்முகநாதன்’ என்பது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் ‘தேடகம்’ நிகழ்வுகளில் அவ்வப்போது கண்டிருக்கும் சின்னத்தம்பி சண்முகநாதன்தான் அவர் என்பது இன்றுவரை தெரியாமலே இருந்தது இன்று ஜான் மாஸ்ட்டர் நினைவுபடுத்தும்வரை.

இறம்பைக்குள அநாதைகள் இல்லத்தில் அன்று நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் சார்பில் கலந்துகொண்டிருந்த நெடுந்தீவு சண்முகநாதனே இவர் என்று ஜான் மாஸ்ட்டர் நினைவு படுத்தியபோதுதான் அருகிலிருந்தும் நீண்ட காலம் சந்திக்க நினைத்திருந்தும் சந்திக்க முடியாமல் போய் விட்டதே என்று எண்ணினேன். அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அசோக் யோகன் கண்ணமுத்து, எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் இவரை நன்கு ஞாபகமிருக்குமென்று எண்ணுகின்றேன்.

இவர்தான் அவர் என்று ஞாபகத்திற்கு வராமல் போனதுக்கு முக்கியமான காரணங்களாக வயதுக்கு மீறிய முதுமையுடன் கூடிய இவரது தோற்றம், அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் இவரது பண்பு ஆகியன காரணங்களாகவிருக்கலாம் என்றுதான் நினைக்க முடிகின்றது.

அன்று இவருடன் அந்தக் கருத்தரங்கில் நீண்ட நேரம் உரையாடியது ஞாபகத்துக்கு வருகின்றது. இளைஞராக, தீவிரமான மார்க்சிய சிந்தனைகள் மிக்கவராக இவரது உரையாடல் அமைந்திருந்தது. ஆனால் அந்த ஒரு நிகழ்வில் சந்தித்தைத்தவிர வேறு எங்கும் சந்தித்திராதபடியால், இங்கு வயது முதிர்ந்த தோற்றத்தில் அவரைக் கண்டபோது அவரே இவர் என்பது ஞாபகத்துக்கு வராலமலே இன்றுவரை , அவரது மரண அஞ்சலி நிகழ்வுவரைக் காலம் கடந்துபோய் விட்டிருந்தது.

நிறைகுடம் தழும்பாது என்பார்கள். தோழர் சண்முகநாதன் அவர்கள் அத்தகைய ஒருவர். நினைவிலிருத்தி வைப்போம்.