1. போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்! எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மாவின் முகநூற்பதிவு!
எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா தனது முகநூலில் பின்வருமாறு பதிவொன்றினையிட்டிருந்தார்.
“கிளி நொச்சியில் மு்னனாள் போராளிகளின் வீடுகளை இராணுவம் கையளித்த ஓருமாதமாகியும் அங்கு குடியேறவோ காணியுள் பிரவேசிக்கவோ அரச அதிபர் தடை விதித்துள்ளார். காணியை பார்க்கச் சென்றவர்களை பொலீசை வைத்து மிரட்டி வெளியேற்றியுள்ளனர். அத்தனை குடும்பங்களும் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்கள் என்பதும் தனித்து பெண்களும் குழந்தைகளுமே உள்ள குடும்பங்களாகும். பல லட்சம் செலவளித்து கட்டிய வீடுகள் இவை என்பதுடன் ஆதரவற்ற நிலையில் இவர்கள் அல்லல் படுகிறார்கள் என்பதும் உண்மை ஒவ்வொரு காரியாலயங்களாக இழுத்தடிக்கப்பட்டு அலைக்களிந்தாலும் காணிகளை தர மறுக்கிறார்கள். இக்காணிகளை யாராவது ஆட்டையப் போட நினைக்கிறாங்களா? சாக்குப்போக்குகள் சந்தேகமாகத்தான் உள்ளன…இச் செய்தியை ஊடகங்களும் ஏனைய வலைத்தளங்களும் பகிர்ந்து கொள்வதன்மூலம் அநாதரவான பெண்களுக்கு உதவமுடியும் நண்பா்களே”
உதவிதான் செய்யவில்லை. உபத்திரவமாவது செய்யாமலிருக்கலாம். பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான். முன்னாள் போராளிகள் அனைவரின் நல்வாழ்வுக்காகத்தானே போராடினார்கள். எல்லாவற்றையும் இழந்து, எல்லாவற்றையும் துறந்து போராடினார்கள். யுத்தம் மெளனிக்கப்பட்டு அவர்கள் அநாதரவாகவிடப்பட்டபோது சமூகம் அவர்களைப்புறக்கணிக்கிறது. இது வருந்தத்தக்கது.
இலங்கையில் பல தமிழ் ஊடகங்களுள்ளன. அவற்றில் சமூகத்தைப்பற்றி, அரசியலைப்பற்றி எழுதும் ஊடகவாதிகள் பலர் இருக்கின்றார்கள். சர்வதேசப்புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களின் கவனம் சமூகத்தால் அலைச்சலுக்குள்ளாக்கப்படும் இந்த முன்னாள் போராளிகள், அவர்கள் குடும்பத்தினர் பக்கம் திரும்புமா?
கையளிக்கப்பட்ட வீடுகளை முறையாகக் கையளிக்க வேண்டிய அரச அதிபர் இவ்விதம் நடந்துகொள்வது உண்மையாகவிருக்கும்பட்சத்தில் கண்டனத்துக்குரியது. விரைவில் இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு வீடுகள் முறையாகக் கையளிக்கப்படுமென்று எதிர்பார்ப்போம்.
2. ஆவணப்பதிவு: மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட நூல்கள் பற்றி….
மங்கை பதிப்பகம் (கனடா), குமரன் பப்ளிஷர்ஸ் (தமிழகம்) மற்றும் ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:
1.மண்ணின் குரல் (கனடாவில் வெளியான முதல் நாவல்) – மங்கை பதிப்பக வெளியீடு.- 1987
2.எழுக அதிமானுடா! (கவிதைகள்) – வ.ந.கிரிதரன் – மங்கை பதிப்பக வெளியீடு.- 1994
3.மண்ணின் குரல் (கணங்களும், குணங்களும், மண்ணின் குரல், வன்னிமண் & அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் ஆகிய நான்கு
நாவல்களின் தொகுப்பு) – மங்கை பதிப்பகம் (கனடா) , குமரன் பப்ளிஷர்ஸ் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நூல்.- 1998
4. வேலிகள் – கடல்புத்திரன் – மங்கை பதிப்பகம் (கனடா) , குமரன் பப்ளிஷர்ஸ் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நூல். – 1998
5. அமெரிக்கா (அமெரிக்கா சிறுநாவல் மற்றும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு) – வ.ந.கிரிதரன் – மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட நூல்.- 1996
6. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு! – வ.ந.கிரிதரன் – மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட நூல். -1996
3. கடல்புத்திரனின் ‘வேலிகள்’
கடல்புத்திரனின் (பாலமுரளி நவரத்தினம்) ‘வேலிகள்’ தொகுப்பினைத் தற்போது நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். ‘வேலிகள்’ தொகுப்பில் ‘வேலிகள்’, ‘வெகுண்ட உள்ளங்கள்’ ஆகிய சிறு நாவல்களும், செல்லாச்சியம்மா, ஏழை ஆகிய சிறுகதைகளும் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் தாயகம் (கனடா)வில் வெளியான படைப்புகள்.
இந்த நாவல் இயக்கங்கள் பலவும் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இலங்கை அரச படைகளின் அடக்குமுறைகள் காரணமாக முக்கியத்துவம்
பெறத்தொடங்கியிருந்த அராலித்துறைக்கும், ஊர்க்காவற்துறைக்குமிடையில் இடம்பெற்ற பயணிகளுக்கான வள்ளமோட்டுதலை இயக்கங்கள்
எடுக்கத்தொடங்கியதை , அக்காலகட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்துகின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றேன். இன்று அராலித்துறைக்கும், ஊர்காவற்துறைக்குமிடையில் பாலம் அமைக்கப்பட்டுவிட்டது.
‘வேலிகள்’ நூலினை முழுமையாக வாசிக்க …: http://noolaham.net/project/23/2290/2290.pdf
இதிலுள்ள ‘வெகுண்ட உள்ளங்கள்’ முக்கியமான நாவல்களிலொன்று. இது பற்றி அறிமுகக்கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளேன். அது ஏற்கனவே ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. அதனைக்கீழுள்ள இணைப்பில் வாசிக்கலாம்.
கடல்புத்திரனின் ‘வெகுண்ட உள்ளங்கள்’ தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு!
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2448;-66-&catid=28;2011-03-07-22-20-27
ngiri2704@rogers.com