வாசிப்பும், யோசிப்பும் 176: அ.யேசுராசாவின் ‘தெரிதலும்’ , புரிதலும். மற்றும் வெகுசனப்படைப்புகளும்!

வாசிப்பும், யோசிப்பும்ழகரம் 5 இதழ் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் தனது ‘தெரிதல்’ என்னும் செய்திக்கடித வடிவமைப்பில் கடந்த பல வருடங்களாக வெளியாகி வரும் சிற்றிதழினைத்தந்தார். ‘இளைய தலைமுறைக்கான இரு திங்கள் கலை, இலக்கிய இதழ்’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ் ‘தெரிதல்’.


‘தெரிதல்’ மூலம் பல கலை, இலக்கிய விடயங்களை தெரிந்துகொள்ள முடிகின்றது என்பதை இதழைப்புரட்டியபோதுதான் புரிந்தது. 12 பக்கங்களில் எவ்வளவு விடயங்களைத் தர முடியுமோ அவ்வளவு விடயங்களையும் தருகின்றது ‘தெரிதல்’. உதாரணத்துக்கு நிகழ்வில் யேசுராசா அவர்கள் வழங்கிய தெரிதல் வைகாடி- ஆனி 2016 இற்குரிய இதழ். மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை: 12. இதழில் மூன்று கவிதைகள் (மஞ்சுளா வெடிவர்த்தனாவின் ‘சப்பாத்து’ என்னும் சிங்களக் கவிதை எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில், லதுரு மதுசாங்க லியனாராய்ச்சியின் ‘நண்பா..’ லறீனா அப்துல் ஹைக் மொழிபெயர்ப்பில், மற்றும் தீபிகாவின் ‘நகரம்’ ஆகியவை வெளியாகியுள்ளன.


இவை தவிர இதழிலுள்ள முக்கியமான படைப்புகள் பற்றிய விபரங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன:


1. நயநீக்கப் புனைவால் திரவநேர அழகியல் – இ.சு.முரளிதரன் –

2. மிக்கயீல் ஷோலக்கவ் – சோ.பத்மநாதன்

3. சீறி ஓயாத வருங்கால மனிதநதி – சோலைக்களி

4. எஸ்.பொ. என்னும் ஆளுமை: இலக்கிய ஆய்வரங்கு – இறமணன் –

5. சிறுகதை: நிழல் தேடி – பைந்தமிழ்க்குமரன் –

6. சிறுகதை: ஒளி – மருதூர்க்கொத்தன் –

7. எழுகையும் – நா.நவராஜ்

8. அறிதலுக்கான புதியதோர் வாசல்: இலங்கை சமகால கலை, கட்டட வடிவமைப்பு – கிருபாலினி பாக்கியநாதன்

9. தகவற் களம் : பல கலை, இலக்கியத்தகவல்களின் சுருங்கிய வடிவிலான தொகுப்பு


செய்திக்கடிதமளவில் தரமான கலை, இலக்கிய விடயங்களைத்தாங்கி வெளிவந்திருக்கும் ‘தெரிதல்’ நிச்சயம் நம் ;புரிதலை’ அறிதலை அதிகரிக்கவே செய்யுமென்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை. கீழுள்ள இணைய இணைப்பில் ஏனைய இதுவரை வெளிவந்த இதழ்களைப் படிக்கலாம்:


மிகவும் குறைந்த அளவிலான பக்கங்களில் பயனுள்ள பல ஆக்கங்களை உள்ளடக்கி, கடந்த பல வருடங்களாக வெளியாகும் இதழ்: ‘தெரிதல்’. இளைய தலைமுறைக்கு நவீனக்கலை, இலக்கியம் சம்பந்தமான படைப்புகளைத்தரவேண்டுமென்று இரு மாதங்களுக்கு ஒரு முறையாக வெளியிட்டு வரும் யேசுராசா அவர்களின் சேவை பாராட்டுக்கும் , நன்றிக்குமுரியது.


நூலகத்தளத்தில் ‘தெரிதல்’ இதழின் ஆரம்ப காலத்து இதழ்கள் பல, வாசிக்கக் கிடைத்தன. ”இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள்.’ என்னும் ச.இராகவனின் கட்டுரைத்தொடர் கண்களில் பட்டது. பாலகுமாரன், சுஜாதா, ராஜேஸ்குமார், ரமணி சந்திரன் என்று நவகாலத்து ஜனரஞ்சக எழுத்தாளர்கள் அனைவரையும் கிழி கிழியென்று கிழித்துள்ளார் கட்டுரையாளர். உதாரணத்துக்கு ராஜேஸ்குமார் பற்றிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:


“ராஜேஸ்குமாரின் எழுத்துகள் ஏற்படுத்தும் ஆபத்தான விளைவுகள் என்று இரண்டு: ஒன்று மோசமான கற்பனா உலகினுள் வாசகனை உள்ளிழுப்பதன் மூலம் அவன் தீவிர நல்ல இலக்கியங்களின் பால் நாட்டங்கொள்ள விடாமல் தடுக்கிறது.”


என் வாசிப்பனுபவத்தைப்பொறுத்தவரையில்,என்னால் இந்தக் கூற்றினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், அகிலன், கல்கி, மீ.பா. சோமசுந்தரம் , சாண்டில்யன் போன்ற வெகுசன எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை வாசித்ததால் எனக்கு ச.ராகவன் குறிப்பிடுவது போன்று ஆபத்தான் விளைவுகள் எவையும் ஏற்படவில்லை. தீவிர நல்ல இலக்கியங்கள் பால் நாட்டங்கொள்ள விடாமல் தடுக்கவில்லை.


மேலும் ஒரு சமயத்தில் மேதாவி, சிரஞ்சீவி, தமிழ்வாணன், கெளசிகன் என்று பலரின் துப்பறியும் மர்ம நாவல்களை வாசித்து மகிழ்ந்திருக்கின்றேன். அவற்றை வாசித்த காலத்தில் அவை தந்த வாசிப்பு இன்பத்தை என்னால் மறக்க முடியாது. இன்றும் அவை அழியாத கோலங்களாகவே இதயத்தின் ஆழத்தே கிடக்கின்றன்.


என்னைப்பொறுத்தவரையில் வணிக ரீதியிலான வெகுசனப் படைப்புகளுக்கு ஆரோக்கியமானதொரு பக்கமுமுள்ளது. அதனைக் கட்டுரையாளர் ச.இராகவன் கவனத்திலெடுக்கத் தவறி விட்டார். என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது பல்வேறு படிகளைக் கொண்ட ஒன்று. குழந்தை இலக்கியம், இளைஞர் இலக்கியம், வெகுசன இலக்கியம், தீவிர இலக்கியம் என்று இலக்கியத்தில் பல படிகளுள்ளன. ஒரு குழந்தை தவழ்ந்து , வளர்ந்து, எழுந்துதான் பின்னர் நடக்கத்தொடங்குகிறது. அதற்காக நடக்கும் குழந்தையைப்பார்த்து தவழ்ந்தது சரியில்லை என்று கூற முடியுமா? உண்மையில் வெகுசன எழுத்தானது ஒருவருக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது. அவரை அடுத்த படி நிலைக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. இது வெகு சன இலக்கியத்தின் ஆரோக்கிய அம்சமாக நான் கருதுகின்றேன்.


நான் அறிந்த வரையில் சுந்தர ராமசாமி ஒருவரைத்தவிர அனைத்து ஆளுமைகளும் (ஜெயமோகனுட்பட) தமிழின் வணிக எழுத்தான வெகுசன எழுத்தினூடாகவேதான் வளர்ந்தவர்கள். சு,ரா ஒருவர்தான் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவுடனேயே தீவிர இலக்கியத்தினுள் புகுந்தவர். இதனை அவரே தனது கட்டுரையொன்றில் கூறியிருக்கின்றார்.


மேலும் ஒருவரால் எப்பொழுதுமே தீவிர எழுத்தை மட்டுமே வாசித்துக்கொண்டிருக்க முடியாது. அ.ந.கந்தசாமி அழகாக இதனைத்தனது ‘நான் ஏன் எழுதுகிறேன்’ என்னும் கட்டுரையொன்றில் கூறியிருப்பார்:


“பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் ‘கண்ணன் என் காதலனை’யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா? எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான். பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?”


எந்த நேரமும் நாம் ஆழமான , தீவிர கலைப்படைப்புகளை மட்டுமே நுகர்ந்துகொண்டிருக்க முடியாது. அவ்வப்போது மேலோட்டமான ஆழங்குறைந்த வாசிப்பும் தேவைதான். இதனால்தான் ஜெயமோகன் போன்ற படைப்பாளிகள் பலர் தமது நவீனத்தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய கட்டுரைகளில் தமிழின் வணிக எழுத்தின் ஆரோக்கியமான அம்சங்களையும் எடுத்துரைத்து , அதற்குமோர் உரிய இடத்தைக்கொடுக்கின்றார்கள். இது எனக்கும் சம்மதமே.


அம்புலிமாமாவில் ‘மண்டுக்கோட்டை’, ‘கானகச்சிறுவன் கந்தன்’ வாசிக்கத்தொடங்கி, கல்கியின் ‘பொன்னியின் செல்வனி’ல் திளைத்து, ‘கடல்புறா’, ‘பத்தினிக்கோட்டம்’, ‘குறிஞ்சி மலர்’, ‘பாவை விளக்கு’, ‘பொன் விலங்கு’ என இன்புற்று அதன் பின்னர் தான் காப்காவின் ‘உருமாற்றம்’, ‘விசாரணை’, தத்யயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘க்ரமசாவ் சகோதரர்கள்’, , ‘அசடன்’, டேர்க்னேவின் ‘தந்தையும், தனயர்களும்’, வாசுதேவன் நாயரின் ‘காலம்’, எஸ்.கே.பொற்றேகாட்டின் ‘ஒரு கிராமத்தின் கதை’, ஹெமிங்வேயின் ‘கடலும், கிழவனும்’ என்று வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர முடிந்தது. அவ்விதம் நகர்ந்தாலும் சில சமயங்களில் அழியாத கோலங்களாக நெஞ்சில் நிலைத்து நிற்கும் நாம் ஒரு காலத்தில் படித்துச் சுகித்த வெகுசனப் படைப்புகளை எடுத்து ஓரிரு வரிகளாவது படிக்கத் தவறுவதேயில்லை.
ngiri2704@rogers.com