அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடந்த இவ்விழ, மண்டபத்தின் வெளியரங்கில் இடம்பெற்ற கண்காட்சிகளுடன் தொடங்கியது. பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தென்கிழக்காசிய நாடுகளின் அமைப்புகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சாபாஷ் சவுத்ரி கண்காட்சிகளை திறந்துவைத்தார். விக்ரோரியா பல்தேசிய கலாசார ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. சிதம்பரம் ஶ்ரீநிவாசன் விழா நிகழ்ச்சிகளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளாக கண்காட்சிகள் இடம்பெற்றன. ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி, விமல் அரவிந்தனின் இயற்கை எழிலை சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சி மற்றும் மறைந்த தமிழ் வளர்த்த முன்னோர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்புகளுடன் அவர்களின் ஒளிப்படங்களின் காட்சி மற்றும் அவுஸ்திரேலியாவில் இதுவரையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான தமிழ் இதழ்கள் – பத்திரிகைகள் – நூல்களின் கண்காட்சி என்பன இடம்பெற்றன.
வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வை உட்பட பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், ரகுநாதன், அகிலன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, முதல் இலங்கையைச்சேர்ந்த இலங்கையர்கோன், அ.ந. கந்தசாமி, மஹாகவி, கனகசெந்தி நாதன், டானியல், மு. தளையசிங்கம் உட்பட அண்மையில் மறைந்த பல எழுத்தாளர்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கொல்லப்பட்ட , காணாமலாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் – எழுத்தாளர்களின் படங்களின் வரிசையில் ரஜனி திராணகம, செல்வி, தராக்கி சிவராம், காவலூர் ஜெகநாதன், நெல்லை நடேஸ், நிமலராஜன், அஷ்ரப் ஆகியோர் உட்பட பலருடைய ஒளிப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் புகலிட நாடுகளில் ( கனடா, அவுஸ்திரேலியா, அய்ரோப்பா) மறைந்த இலக்கிய ஆளுமைகளின் ஒளிப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நூறுக்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மறைந்தவர்கள் பற்றிய குறிப்புகளும் படங்களின் கீழே பதிவுசெய்யப்பட்டிருந்தது. மண்பத்தின் உள்ளரங்கத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகள், சங்கத்தின் துணைத்தலைவர் மருத்துவர் – திருமதி வஜ்னா ரஃபீக் அவர்களின் வரவேற்புரையுடனும் சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியனின் தொடக்கவுரையுடனும் ஆரம்பமாகியது. அண்மையில் தமிழகத்தில் மறைந்த கலைஞரும் எழுத்தாளருமான “கூத்துப்பட்டறை” ந. முத்துசாமி – இதழாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஒளிப்படக்கலைஞருமான “யுகமாயினி” சித்தன், இலங்கையில் மறைந்த எழுத்தாளர்கள் கெக்கிராவ ஸஹானா மற்றும் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் ஆகியோரும் நினைவுகூரப்பட்டனர். இவர்கள் தொடர்பான இரங்கலுரைகளை மருத்துவர் நடேசன், சட்டத்தரணி ( திருமதி) மரியம் நளிமுடீன் மற்றும் முருகபூபதி ஆகியோர் நிகழ்த்தினர்.
கவிஞர் சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா தலைமையில் நடைபெறும் கவிஞர்கள் அரங்கில் கல்லோடைக்கரன் , முஜிபுர் ரஹ்மான், பொன்னரசு சிங்காரம் , அறவேந்தன், ஶ்ரீ கௌரிசங்கர், நளிமுடீன் ஆகியோர் பங்குபற்றினர்..
மருத்துவர் நடேசன் தலைமையில் நடைபெற்ற நாவல் இலக்கியக்கருத்தரங்கில், சாந்தி சிவக்குமார் , கலாதேவி பால சண்முகன், தெய்வீகன் ஆகியோர் ஈழத்து – தமிழக நாவல்கள் குறித்தும் புகலிட நாவல்கள் பற்றியும் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சிகளையடுத்து கண்ணன் விக்னேஸ்வரனின் மெல்பன் ஆலாபணா இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கங்களில் விழா நிகழ்ச்சிகளை திருமதி பானு ஶ்ரீகௌரி சங்கர், சங்கர் தொகுத்து அறிவித்தார்.
Murugapoopathy <letchumananm@gmail.com>