ஊடக அறிக்கை – தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) –
இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக் கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள் இனப்படுகொலை நாள் (Holacaust) என ஆண்டுதோறும் அனுட்டித்து வருகிறார்கள். அதனை ஒத்த ஒரு இனப்படுகொலை (Genocide) முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்தேறியது. அய்.நா வல்லுநர் குழு அறிக்கையின்படி இந்த கால கட்டத்தில் 40,000 மக்கள் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சு, செல்லடி காரணமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இதேபோலவே முள்ளிவாய்க்காலிலும் எமது மக்களை சிறீலங்கா இராணுவம் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தது. மக்களைப் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லுமாறு அறிவித்துவிட்டு அதே இலக்கை நோக்கி பன்னாட்டு சமூகத்தால் தடைசெய்யப்பட்ட தீமுறிக் குண்டுகளையும் (phosphorous) கொத்துக் குண்டுகளையும் (cluster bombs) சரமாரியாக ஏவி முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என எல்லோரையும் கொன்றொழித்தது.
எனவே இந்த இனவழிப்பு நாளான மே 18 யை தேசிய துக்க நாளாக அனுட்டிக்குமாறு தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் மடிந்த மக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்துவதோடு கனடிய மையநீரோட்ட மக்களின் கவனத்துக்கும் கொண்டு வரலாம்.
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்டது ஒரு போர்க்குற்றாகும். சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுத்தல் வேண்டும். இது தொடர்பாக கடந்த மார்ச்சு 22 இல் ஜெனிவாவில் நடந்த அய்.நா. மனித உரிமை அவையில் அமெரிக்க அரசால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது. போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப் பட வேண்டும் என இத்தீர்மானம் சிறிலங்கா அரசைக் கேட்டுள்ளது. விசாரணை முடிக்க அடுத்த ஆண்டு மார்ச்சு மாதம்வரை கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் போக உயிர் தப்பிய 3 இலட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தறப்பாள் குடிசைகளில் ஏழ்மையில் வாழ்கிறார்கள். இந்த மக்களை அவர்களது சொந்தக் காணி பூமிகளில் மீள்குடியமர்த்த சிங்கள அரசு மறுக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இவர்களது காணிகள் சிங்கள இராணுவத்துக்குப் பாரிய படைமுகாம்கள் அமைக்கவும் இராணுவத்தினருக்கு குடியிருப்புக்கள் கட்டிக் கொடுக்கவும் உல்லாச உணவுவிடுதிகள் அமைக்கவும் சிங்கள அரசு பயன்படுத்தியதாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மூன்றில் ஒரு பங்கு நிலம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டுள்ளது.
எனவே மே 18 தேசிய துக்க நாள் அன்று மாலை இராணி பூங்காவில் ஒன்று கூடி மரணித்த மக்கள், போராளிகள் எல்லோருக்கும் எமது கண்ணீர் வணக்கத்தை செலுத்துமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். இந்த நாளில் எமது மண்ணையும் மக்களையும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடிக்குள் இருந்து மீட்போம் என்ற உறுதி மொழியையும் எடுத்துக் கொள்வோம்.
காலங்கள் மாறலாம் கனவுகள் மாறலாம்
நெஞ்சங்கள் மாறலாம் நினைவுகள் மாறலாம்
உங்கள் நினைவு மட்டும் என்றும் மாறாது!
தொடர்பு – 416 281 1165, 416 708 6813, 416 893 9545
Head Office
TCWA
56 Littles Road
Scarborough, ON
M1B 5C5
416-281-1165