வாசிப்பும், யோசிப்பும் 183: மணி வேலுப்பிள்ளையின் ‘மொழியினால் அமைந்த வீடு’

மணி வேலுப்பிள்ளைஎழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை தற்போது டொராண்டோவில் வசித்து வருகின்றார். எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை நல்லதொரு மொழிபெயர்ப்பாளரும், கட்டுரையாளருமாவார். சிலிய ஜனாதிபதி அலந்தே, டெங் சியாவோ பிங், அம்மாவின் காதலன் மாயாகோவஸ்கி மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு..) பற்றிய மொழிபெயரியல்பு, மொழியினால் அமைந்த வீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, விபுலானந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள் போன்ற கட்டுரைகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.


மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழிபெயர்ப்புகளுடன் நின்று விடுகையில், இவர் மொழிபெயர்ப்பு பற்றிய ஆழமான கட்டுரைகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இவை படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு பயன் மிக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.


ஆழமான கட்டுரைகளைச் சுவையாக எழுதுவதில் வல்லவர் இவர். உதாரணத்துக்கு ‘மொழியினால் அமைந்த வீடு’ கட்டுரை கீழுள்ளவாறு முடிவதைப்பாருங்கள்:


“உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒரு போதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும், அரசியல்வாதிகளும் , விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகின்றார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகின்றார்கள்.”


குறிப்பாகக் ‘காலச்சுவடு’ பதிப்பக வெளியீடாக வெளிவந்த இவரது கட்டுரைத்தொகுதியான ‘நாங்கள் – அவர்கள்’ நூலிலுள்ள கட்டுரைகளிலொன்றான ‘மொழிபெயரியல்பு‘ கட்டுரையினைப் படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரையாகப்பரிந்துரைப்பதில் எனக்கு எவ்விதத்தயக்கமுமில்லை. நல்லதொரு கட்டுரை. இந்தக் கட்டுரையிலிருந்து மொழி பெயர்ப்பு பற்றிக் குறிப்பிடப்படும் சில கூற்றுகளை இங்கு தொகுத்துத்தருகின்றேன்:


“…வெறும் சொற்களை விடுத்து வசனங்களைக் கருத்தில் கொண்டு , மறைகுறிப்பாய் விளங்கும் பொருளில் கருத்தூன்றி மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பே சிறக்கும்.” (பக்கம் 118)


ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏதியன் தோலே (Etienne Dolet 1509-1546) என்னும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறியதையும் நூலாசிரியர் பட்டியலிட்டுள்ளார். அவை வருமாறு:


“மூலகர்த்தா எடுத்துரைக்கும் பொருளையும், அதன் விளக்கத்தையும் மொழிபெயர்ப்பாளர் செவ்வனே புரிந்து கொள்ள வேண்டும்….மொழிபெயர்ப்பாளருக்கு இரு மொழிகளிலும் புலமை வேண்டும். …. ஒவ்வொரு மொழிக்கும் சொந்தச்சிறப்புகள் (நடை, பாணி, நயம்) உள்ளன. அத்தகைய சிறப்புகள் குன்றாது மொழிபெயர்க்க வேண்டும்…. மொழிபெயர்ப்பாளர் சொல்லுக்குச்சொல்லாக மொழிபெயர்க்கும் முறைக்குக் கட்டுண்டிருக்கலாகாது…. சிறந்த மொழிபெயர்ப்பாளர் சொல்லொழுங்கினை விடுத்து, வசனஒழுங்கிலேயே கருத்தூன்றுவர்….மொழிபெயர்ப்பாளர் பொது வழக்கிலுள்ள சொற்களையே எடுத்தாள வேண்டும். …மொழிபெயர்ப்பு அணி இலக்கணத்துக்கு அமைய வேண்டும். மொழியமைதி கெடா வண்ணம், உள்ளம் உவக்கும் வண்ணம், காதில் இனிக்கும் வண்ணம் சொற்களைத்தொகுக்க வேண்டும்.” {பக்கம் 118 & 119; நூல்: ‘நாங்கள் – அவர்கள்)


“ஒரு தமிழாக்கத்தில் அதன் பொருள்வளத்துக்கு நிகரான இடம் அதன் மொழிவளத்துக்கும் உண்டு. அந்த வகையில் அது இன்னொரு வழமையான படைப்பாக அமைய வேண்டும். பொருள்வளத்தைப்பொறுத்தவரையில் மொழிபெயர்ப்பாளர் மூலகர்த்தாவுக்குக் கடமைப்பட்டவர். மொழிவளத்தைப்பொறுத்தவரையில் அவர் மூலகர்த்தாவுக்குக் கடமைப்பட முடியாது. ஆகவே ரொஉ மொழிபெயர்ப்பு ஓங்கவில்லை என்றால், அது மொழிவளத்தால் ஓங்கவில்லை என்பதே பொருள். மொழிவளத்தால் ஓங்கிய ஒரு தமிழாக்கம் அதன் முழுமுதற் படைப்புக்கு நிகரான இடத்தைப் பெறும். பொருள்வளமும், மொழிவளமும் சேர்ந்ததே இலக்கியவளம். அத்தகைய தமிழாக்கமே தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும்.” (பக்கம் 120 & 121; நூல்: ‘நாங்கள் – அவர்கள்’)


மணி வேலுப்பிள்ளையின் ‘அன்னம்’ வெளியீடாக வெளிவந்த ‘மொழியினால் அமைந்த வீடு‘ நூலினை ‘நூலகம்’ இணையத்தளத்தில் வாசிக்கலாம்.


மொழியினால் அமைந்த வீடு \


உள்ளடக்கம்

ஆங்கில நடையில் தமிழ்

தமிழும் பெண்மைக்கு நெகிழும்

ஆளுமை

மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன்

மொழியினால் அமைந்த வீடு

தமிழோசை

சோக்கிரட்டீஸ் ஒரு மீள் நோக்கு

மாயக்கோவஸ்கி

அலந்தே

டெங்சியாவோபிங்