வில்லியம் ஃபாக்னர் நவீன அமெரிக்க நாவலாசிரியர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950ஆம் ஆண்டு ஃபாக்னருக்கு வழங்கப்பட்டது. பத்து நாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். முதல் உலகப் போரின் போது Royal Air Forceஇல் விமான ஓட்டுனராகப் பணியாற்றினார். எழுத்தின் மூலம் பணம் வருவது தட்டுப்பட்ட போது, ஹாலிவுட்டில் எம். ஜி. எம். நிறுவனத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதினார். சினிமாவுகாக அவர் செய்த வேலைகள் அவரது இலக்கியத் தரத்தைப் பாதிக்கவில்லை. விமானம் ஓட்டுதல், வீடுகளுக்கு வாணம் பூசுதல், படகு ஓட்டுதல் போன்ற தொழில்களைச் செய்து, தனக்கு வேண்டிய சிறிது விஸ்கி, புகையிலை, எழுதுதாள்கள், உணவு ஆகியவற்றைப் பெறுவதற்கான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.
ஃபாக்னர், நவீனத்துவ (Modernist)நாவலாசிரியர். நவீனத்துவ இலக்கிய இயக்கம் (Modernism), 1920களில் வளர்ச்சியடைந்த ஒன்று. ரியலிசம்(Realism)நேச்சுரலிசம்(Naturalism)போன்ற நாவல் எழுதும் வகைகள் காலாவதியாகிப் போனதாலும் ஐரிஷ் நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜாய்ஸ் ‘‘நனவோடை உத்தி” (Stream Of Consciousness)யைப் பயன்படுத்தி நாவல் சரித்திரத்தில் புதிய சாதனை படைத்தார். நனவோடை உத்தியைப் வெற்றிகரமாகப் பயன்படுத்திய மற்றொரு நாவலாசிரியர் வர்ஜினியா வுல்ஃப் என்ற பெண் எழுத்தாளர். ஒரு கதாபாத்திரத்தின் மனதில் தன்னிச்சையாய் உருவாகும் எண்ணங்கள், மற்றும் நினைவுகளை தர்க்க ரீதியான ஒழுங்குபடுத்தலின்றி அப்படியே பதிவு செய்வது நனவோடை உத்தியாகும்.
‘‘சீற்றமும் ஓலமும்” 1929ஆம் ஆண்டு ஜோனாதன் கேப் என்ற வெளியீட்டு நிறுவனத்தால் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இதை உலகத்தரத்து நாவல் வரிசையில் வைக்கலாம். மனித வாழ்க்கையானது அடிப்படையில் அர்த்தமற்றது என்பதை நினைவூட்டும் வகையில் ஃபாக்னர் ‘‘சீற்றமும் ஓலமும்” என்றத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் நாடகமான ‘‘மேக்பெத்” (Macbeth)இல், மேக்பெத் இறுதிப் போருக்குப் புறப்படும் தருவாயில் அவன் மனைவியின் இறப்புச் செய்தி வருகிறது. அப்போது மேக்பெத் பேசுகிற வரிகள்:
‘‘வாழ்க்கை. . . ஓலமும் சீற்றமுமாய்
ஒரு மடையனால் சொல்லப்பட்ட
எதையுமே அர்த்தப்படுத்தாத கதையாகும்.”
இந்த நாவலில், காலக்கிரமம் பிரக்ஞைப்பூர்வமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. நாவலை அணுகும் வழிகள் பின்னலிட்டுக்கிடக்கின்றன. ஏப்ரல்எட்டு 1928 என்ற அத்தியாயம் பிறப்பிலேயே மடையனான Benzyயின் பார்வையில் சொல்லப்படுகிறது. பென்ஜிக்கு கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அவனைப் பொருத்தவரை எல்லாமே இந்த க்ஷணத்தில் தான் நடக்கிறது. பென்ஜிக்குப் பேசத் தெரியாது: முனகத் தெரியும்: ஓலமிடத் தெரியும்: சமர்த்தாக இருக்கத் தெரியும். பென்ஜியின் மடையன் பார்வையில் இருந்து கதை சொல்லப்படுவதால் விவரணையில் அறிவார்ந்த ஒழுங்கு காணப்படுவதில்லை. நடக்கும் நிகழ்ச்சிகள் ஏன் நடக்கின்றன என்ற காரணமும் தரப்படுவதில்லை. 33 வயதாகும் பென்ஜிக்குப் பிடித்தவை: அவனது சகோதரி Caddy, நெருப்பு, வெளிச்சம், மற்றும் புல் பரப்புகள். நல்லது கெட்டது தெரியாதவனாய் இருப்பது மட்டுமின்றி, அவற்றிற்கு அப்பாற்பட்டவனாகவும் பென்ஜி சித்தரிக்கப்படுகிறான். அவனது பதிமூன்றாவது வயதில், இனிமேலும் அவனது சகோதரி Caddy யுடன் சேர்ந்து உறங்கக் கூடாது என்று வீட்டுப் பெரியவர்கள் பென்ஜியைத் தனியாக உறங்க வைக்கிறார்கள். Caddyயின் அன்பும், பரிவும் அவனை வெகுவாகப் பாதிக்கன்றன. எப்போதும் மரங்களின் வாசனையுடன் இணைந்தே Caddyயை அவன் உணர்கிறான். முதன் முதலில் சென்ட் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வரும் போது பென்ஜி கத்தி கலவரம் செய்கிறாôன். Caddy தன் உடலை கழுவிக்கொண்டு வந்த பிறகே சமாதானமாகிறான். இன்னொரு முறை வேறு இளைஞனிடம் அவளது கன்னித் தன்மையை இழந்து விட்டு வரும் போது, அவள் மீதிருந்து வரும் வாசனையை வைத்து பென்ஜி கண்டுபிடித்து கத்துகிறான். அவனது தந்தை பெரிய காம்ப்சனின் இறப்பையும் கூட முன்கூட்டியே தனது நாசியால் உணர்ந்து விடுகிறான்.
ஜூன் இரண்டு 1910.
காம்ப்சன் குடும்பத்து மூத்தப் பிள்ளை Quentin பத்தொன்பதாவது வயதில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது தற்கொலை செய்து கொள்கிறான். பென்ஜியைப் போலவே க்வென்டினும் Caddy யுடன் ஆழ்ந்த பிணைப்புக் கொண்டவன். ஆனால் பென்ஜியைப் போலன்றி அறிவுக்கூர்மை வாய்ந்தவன். கடந்து போன நிகழ்ச்சிகளை நடப்பு நிகழ்ச்சிகளுடன் பிணைத்தே க்வென்டினும் பார்க்கிறான். இதன் காரணமாக இவன் கதை சொல்லும் அத்தியாயமும் சிக்கலாகவே இருக்கிறது. க்வென்டின் தற்கொலை செய்து கொள்ளும் நாளில் குறிப்பிடத் தகுந்த நிகழ்ச்சிகள் ஏதும் நடப்பதில்லை என்றாலும் கூட, அவன் நினைவுகளின் ஊடாக காம்ப்சன் குடும்பத்துச் சரித்திரம் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. பெரியவளாகி, கல்யாணமாகி, காம்ப்சன் வீட்டை விட்டு Caddyபோய் விடுவது பென்ஜியை ஒரு வகையில் பாதிக்கிறது. Caddyகண்ட இளைஞர்களுடன் சுற்றுவதை க்வென்டினால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.
அவளது கன்னிமை இழப்பு, காம்ப்சன் குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்பதை விட, க்வென்டினின் ஈகோவின் மீது படிந்து விடுகிற கறையாகி விடிகிறது. Caddy கறைபடுவதை தன்னால் தடுக்க இயலாத குற்ற உணர்வினால் க்வென்டின் தற்கொலை செய்து கொள்கிறான். தன் கைக்கடிகாரத்தின் முட்களை ஒடித்து விட்டு தன் தற்கொலை தினத்தைத் தொடங்கியப் போதிலும், க்வென்டினால் சப்தமற்று ஓடிக்கொண்டிருக்கும் காலத்தை நிறுத்த முடிவதில்லை.
ஏப்ரல் பதினாறு 1928.
இந்த அத்தியாயம் Jason இன் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. காம்ப்சன் குடும்பத்தில் க்வென்டினுக்கு அடுத்தவன் ஜேசன். ஸ்வாதீனமானவன். மனோதிடம் வாய்ந்தவன். எனினும், ஃபாக்னரின் பாத்திரங்களிலேயே மிகக் கீழ்மையான வகையில் சித்தரிக்கப் பட்டிருப்பவன். குடும்ப மானம் கருதி, Caddy காம்ப்சன் வீட்டுக்கு வர தடை விதிக்கப்படுகிறாள். Caddy யின் மகளான மிஸ்.காம்ப்சன் மாத்திரம் இதே வீட்டில் வளர்ந்து வருகிறாள். Caddy யின் முக்கால்வாசி இயல்புகளைக் கொண்டிருக்கிறாள் மிஸ்.காம்ப்சன். மகளுக்காக Caddy ரகசியமாக அனுப்பும் பணத்தை ஜேசன் தானே வைத்துக் கொள்கிறான். ஜேசன் பணிபுரியும் கடையில் பங்குதாரராக ஆகும் பொருட்டு Caddy அனுப்பும் ஆயிரம் டாலர்களை ஏமாற்றி தனக்காக ஒரு கார் வாங்கிக் கொள்கிறான். பங்கு மார்க்கெட்டில் தீவிர ஆர்வம் காட்டுகிறான். மார்க்கெட்டின் விவரங்களை அப்போதைக்கப் போது கவனிப்பதை விட்டுவிட்டு, மிஸ்.காம்ப்சன் எவனுடன் ஊர் சுற்றுகிறாள் என்பதைத் துப்பறிவதில் வீணாய் போகிறான். ஜேசன் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு மிஸ்.காம்ப்சன் வீட்டை விட்டு ஓடிப் போகிறாள். அவளை காரில் துரத்திப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைகிறான் ஜேசன். காம்ப்சன் வீட்டு நீக்ரோ வேலைக்காரியின் மகன், நடமாடும் சர்க்கஸுக்குப் போவதற்கு ஜேசனிடம் சில்லரைக் காசுகள் கேட்கிறான். சர்க்கஸ் செல்ல தான் வைத்திருக்கும் சீசன் டிக்கெட்டை நீக்ரோ பையனிடம் காட்டிவிட்டு, இறக்கமின்றி கிழித்துப் போடுகிறான்.
ஏப்ரல் எட்டு 1928.
அத்தியாயம் Dilsey என்ற வேலைக்காரப் பெண் மூலமாக விவரிக்கப்படுகிறது. முதல் மூன்று அத்தியாயங்களுக்கு மாறாக, கதை வெளியிலிருந்து, ஆசிரியனால் சொல்லப்படுகிறது. காம்ப்சன் குடும்பம் நல்ல ஸ்திதியில் இருந்த காலத்திலும், தற்போதைய சீரழிந்த நிலைமையிலும் அவர்களுக்கு ஊழியம் செய்பவள் டில்சி. ஒரு வகையில் காம்ப்சன் குடும்பத்துக் குழந்தைகள் அனைவருக்குமே ஒரு தாயைப் போன்றவள். பென்ஜி அழும்போது அவனை ஆறுதல் படுத்துகிறவர்களில் Caddy யைத் தவிர, டில்சியும் கூட. நான்கே நாட்களின் நிகழ்ச்சிகளைச் சொல்வது போலத் தோன்றினாலும், காம்ப்சன் குடும்பத்துச் சரித்திரத்தை, நான்கு பாத்திரங்களின் ஞாபகங்களின் வழியாக ஒன்றிணைக்கிறது நாவல். மனித இருப்பின் அபத்தத்தைப் பற்றிய மிக அழுத்தமான சொற்பாடுதான் ஃபாக்னரின் நாவல். ‘‘ஓலமும் சீற்றமும்” நூலுக்கு இரண்டாம் பதிப்பு வந்த பொழுது ஃபாக்னர் எழுதிய குறிப்புகள் மிக உதவிகரமாக இருந்தன. ஒரு சிவப்பிந்தியத் தலைவன், ஒரு சதுர மைல் அளவுள்ள நிலத்தினை காம்ப்சன் குடும்பத்துக்கு இனாமாக எழுதித் தருகிறான். இந்த நிலத்தை இழத்தலுடன் அக்குடும்பத்தின் அழிவு பிணைக்கப் பட்டிருக்கிறது. கோல்ஃப் மைதானம் அமைப்பதற்கு இந்த நிலம் விற்கப்பட்டு, கிடைக்கும் பணம் க்வென்டினின் ஹார்வர்டு படிப்பிற்கு செலவிடப்படுகிறது. மைதானமும், அதைச் சுற்றிலுமான முள் வேலியும் வந்த பிறகு பென்ஜியால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
வருட, கால, ஒழுங்கினை வைத்து மனிதன் தனது இருத்தலுக்கான அர்த்தத்தை உருவாக்குகிறான். ஃபாக்னர் இந்த கால ஒழுங்கினை உடைப்பதன் மூலம் நவீன மனிதனின் பிரக்ஞையை உருவாக்குகிறார். மூன்று முறை படித்த பிறகும் ஃபாக்னரின் எழுத்துக்கள் புரியவில்லை என்ற புகார் வாசர்களிடமிருந்து வந்தபோது ஃபாக்னர் அவரது நாவல்களை நான்காம் முறை படியுங்கள் என்றார்.