காலச்சுவடு: மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின் –

மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின் - சுனந்த தேசப்ரிய-மே 19, 2009 அன்று கொழும்பில் இருந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. போரின் முடிவையும் பிரபாகரனின் மரணத்தையும் சிங்கள மக்கள் அமோகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் குறித்தோ பேரழிவு குறித்தோ அவர்களில் மிகப் பெரும்பாலானோர்க்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. அன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நிச்சயமின்மையும் புது வகையான பீதியும் இலங்கையைச் சூழ்ந்துகொள்கிற புதிய காலகட்டம் ஒன்றுக்குள் நாங்கள் நுழைவதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. வழமையாக ராவய இதழுக்கு எழுதும் பத்திக்கென அன்று நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘மே, 19’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்ததை இந்தக் கணம் நினைவுகொள்வது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேன். “போர் முடிந்துவிட்டிருக்கலாம்; ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை.” அந்தப் பத்தியின் இறுதிப் பகுதியில் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.

முதலாவது தமிழ் மக்கள் இந்த நாட்டுக்குரியவர்கள் என்பதை சிறிலங்கா அரசும் சிங்களக் கட்சிகள் பலவும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இரண்டாவது, தமிழ் மக்கள் தொடர்பாகச் சர்வதேசச் சமூகம் பெருந்தவறிழைத்துவிட்டது.

மூன்றாவது, எத்தகைய பலம் பொருந்திய மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் இந்தப் பேரழிவைத் தடுத்துநிறுத்த முடியாமல் போய்விட்டது. தமக்கான அரசியல் வழியைத் தமிழ் மக்கள் தாமாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். உணர்வுத் தோழமையுடனும் உணர்வு ஒருமைப்பாட்டுடனும் நாங்கள் அவர்களுக்குத் துணை நிற்போம்.

மே, 19, 2009 அன்று சிங்கள மக்களின் கொண்டாட்டங்களைப் பார்த்தபோதெல்லாம். எத்தகைய பயங்கரமான பின்விளைவுகள் இனி வரப்போகின்றன என்ற எந்த உணர்வுமில்லாமல் அல்லது அவை பற்றிச் சிந்திக்காமல் இந்த வகையான களியாட்டங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்களே என அங்கலாய்த்தேன். ‘முள்ளிவாய்க்கால்’ என்ற சொல்லும் பெயரும் எமது வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாகப் பதியப்படப் போகிறது. இந்த அவலத்திலிருந்து நாங்கள் ஒருவரும் தப்பிவிட முடியாது.

சாதாரணமான, அப்பாவிச் சிங்களப் பொதுமக்களைப் பொறுத்த வரை சிறிலங்கா அரசின் பிரசாரங்களையும் செய்திகளையும் தவிர அவர்களுக்கு வேறெதையும் அறிந்துகொள்கிற செய்திச் சூழல் ஒரு போதுமே இருக்கவில்லை. சிறிலங்கா அரசின் ஊது குழலான ஊடகங்களின் பிரசாரங்களில் – குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில் -மந்திரவசியத்துக்கு ஆட்பட்டவர்களாகவே அவர்கள் இருந்தனர். இது இன்னொரு துயரம்.

சஞ்சலமும் துயரமும் ஆற்றாமையும் ஒன்றாய்ச் சூழ இறுக மூடப்பட்ட வீட்டுக்குள் மௌனமாக அமர்ந்திருந்ததைத் தவிர என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

போருக்குப் பின்னான கடந்த மூன்றாண்டு நிகழ்வுகள் இன்னும் மோசமானவை. பெருமளவிலான சிங்களப் பௌத்தப் பண்பாட்டுப் படையெடுப்பைச் சிறிலங்கா அரசு வடக்கு – கிழக்குத் தமிழர்கள்மீது நிகழ்த்தி வருகிறது. ஏற்கெனவே தீவிரமாக நடைமுறையிலிருக்கும் படைமயமாக்கம் இதற்கு வலுவாகத் துணைசெய்கிறது. படையினரையும் சிங்கள மக்களையும் தமிழ் மக்களுடைய பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேற்றுவதன் மூலமாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பாரிய சனத்தொகை மாற்றத்தைக் கொண்டு வருகிற முயற்சியிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இத்தகைய முயற்சிகளைத் தடுத்துநிறுத்துவதற்குச் சாத்தியமான எல்லா நேச சக்திகளுடனும் ஐக்கிய முன்னணியாக ஒன்றிணைந்து போராட வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கும் அவர்களுடைய அரசியல் செயல்பாட்டாளர்களுக்குமான உடனடித் தேவையாக உள்ளது என்பது என் எண்ணம்.

போரின்போது தான் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கும் மனிதத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். அதற்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்று மெல்ல மெல்லச் சிறிலங்கா அரசைப் பொறிக்குள் வீழ்த்தும் என்றே நான் நம்புகிறேன். சிங்கள மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளும் நல்லாட்சியும் தமிழ் மக்கள்மீதான குரூரமான ஒடுக்குமுறை இருக்கும்வரை சாத்தியமல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

[ சுனந்த தேசப்ரிய ஊடகவியலாளராகவும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் செயல்பாட்டுவாதியாகவும் இடையறாது பணிபுரிந்து வருபவர். இலங்கையின் சுதந்திரமான ஊடகவியலாளர்கள் பலரையும் போலவே சுனந்தவும் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.]

http://kalachuvadu.com/issue-149/page28.asp