பூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி `வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
பூங்காவனத்தின் உள்ளே ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, றாபி எஸ். மப்றாஸ், வஸீலா ஷரீப், பதுளை பாஹிரா, மிஹிந்தலை ஏ. பாரிஸ், எம்.எஸ்.எம். சப்ரி, ஷெல்லிதாசன், எச்.எப். ரிஸ்னா ஆகியோரது ஒன்பது கவிதைகளும் தே. நிரோஷனி, நிலாக்குயில், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரது மூன்று சிறுகதைகளும், கவிஞர் ஏ. இக்பால், பி.ரி. அஸீஸ், கீதா கணேஷ் ஆகியோரது கட்டுரைகளும் காவியன், பீ. ஷைலஜா ஆகியோரது நூல் மதிப்புரைகளுடன் வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்பனவும் இடம்பெற்றுள்ளன.
பழைய மாணவிகளின் சங்கத் தலைவியும், தற்போதைய போஷகியும், முன்னாள் ஆசிரியையுமான பொற்கலசம் நூலாசிரியர் ஹாஜியானி திருமதி. ஆயிஷா இப்றாஹீம் அவர்களை ரிம்ஸா முஹம்மத் நேர்கண்டு பல தகவல்களை வாசகர்களுக்கு அறியப்படுத்தியிருக்கின்றார்.
மாவனல்லை ஹிங்குளோயாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் 1963 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியை ஆரம்பித்து 2002 ஆம் ஆண்டில், தான் ஓய்வு பெறும்வரை சமூகத்துக்கும், தான் கடமையாற்றிய பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார். இவர் மாவனல்லை கிருங்கதெனிய அந்நூர் வித்தியாலயம், கனேதன்னை முஸ்லிம் வித்தியாலயம், மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் தனது ஆசிரியப் பணியை மேற்கொண்டிருந்தார். இறுதியாக சேவையாற்றிய தமது ஊரான ஹிங்குளோயாவின் அகில இலங்கையிலும் புகழ்பெற்ற மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடாலையில் சேவையாற்றும்போது பத்து மாணவிகளை சேர்த்துக்கொண்டு ஷஷபழைய மாணவிகள் சங்கம்’ என்ற பெயரில் ஆரம்பித்த சங்கத்தில் தற்போது பிரபல அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியைகள், பல்வேறு அமைப்புக்களின் தலைமைத்தவ உறுப்பினர்கள் என பல அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்று செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விடயம்.
பஸீஹா, பரீஹா ருஷ்தி, பஹ்மி, பஸ்லி ஆகிய நான்கு பிள்ளைகளின் தாயாக விளங்கும் இவரது தங்கைகள் நால்வரில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியையாகவும், ஏனையவர்கள் கலை, விஞ்ஞானப் பிரிவுகளில் தேறியவர்களாகவும் காணப்படுகின்றனர். இதில் பஸீஹா என்பவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் துறை விரிவுரையாளராக விளங்குகிறார்.
இத்தகைய கல்விக் குடும்பம் ஒன்றில் மூத்தவராக விளங்கும் திருமதி. ஆயிஷா இப்றாஹீம், சமூக சேவைப் பணிகள், பாடசாலைச் செயற்பாடுகளுக்கு மத்தியில் வாசிப்பில் ஆர்வம் காட்டி வருபவராகவும் காணப்படுகின்றார். தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு மறக்க முடியாத ஏதாவதொரு சேவையைச் செய்ய வேண்டும் என்று சிந்தித்ததால் விளைந்த பலன்தான் ஷபொற்கலசம்| என்ற ஊர் பற்றிய வரலாற்ற நூல். இதிலே ஊரின் தோற்றமும், வளர்ச்சியும், கல்வி கலாச்சார பொருளாதார முன்னெடுப்புக்கள் பற்றிய தரவுகள், ஊரில் சேவையாற்றிய அரச ஊழியர்கள் பற்றிய குறிப்புகள் என இன்னோரன்ன விடயதானங்களை உள்ளடக்கியதாக புகைப்படங்களுடன் மிகவும் அழகான முறையிலே எவரும் வைத்துப் பாதுகாக்க வேண்டிய ஆவணப் பொக்கிஷமாக பொற்கலசத்தைத் தந்திருக்கின்றார்.
இலக்கிய அனுபவங்ளை அலசி வரும் கவிஞர் ஏ. இக்பால் இவ்விதழிலும் பழைய படைப்புகளைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கின்றார். 1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி மனக்கண் என்ற நாவலை எழுதியதால் அதிலே ஆங்கில, தமிழ், சிங்கள, முஸ்லிம் வரலாற்றுக் கதைகளில் காணப்படும் கதாபாத்திரங்ககளின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார். அதேபோன்று மணிக்கொடிகால எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்பில் அவர்களது ஆகர்ஷிப்பால் இலங்கையிலும் எழுத்தாளர்கள் சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாத சுந்தரம், சம்பந்தன், இலங்கையர்கோன், நா. சிவஞான சுந்தரம் போன்றோர் சிறந்த படைப்புகளாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றார்.
வாராந்தம் பத்து இலட்சம் இதழ்கள் விற்ற லண்டனில் இருந்து வெளிவந்த ஷடிட்பிட்ஸ்| என்ற பத்திரிகை 103 வருடங்களின் பின் 1984 ஆம் ஆண்டு நின்றுபோன தகவலையும், அதனைப் பின்பற்றி தினகரனில் உதவி ஆசிரியராகவிருந்த ஸெயினுல் ஹூசைன் துணுக்குகளைத் தந்த சுவாசியமான செய்தியையும் தந்திருக்கின்றார். அத்தோடு ஆர்.எம். நௌசாத்தின் தூது, தமிழ் நாட்டின் நடை ஏடு பற்றிய தகவல்கள், கர்நாடக தேசிய விருதுப் படமான ஷதபரானா கதா| மகாகவி மில்டன் பற்றிய தகவல்கள் யாவும் மிக மிக அரிதானவை.
திருமணம் முடித்தும் பிள்ளைச் செல்வம் இல்லாத வீடு பாழ் வீட்டை ஒத்தது. அந்த வீட்டுக்கு ஒளி பரவச் செய்ய வேண்டுமெனில் வேறு திருமணம் முடித்து பிள்ளைச் செல்வத்தைப் பெற முயற்சிக்க வேண்டும் அல்லது அநாதை இல்லத்திலிருந்து ஒரு ஒரு பிள்ளையை எடுத்து வளரக்க வேண்டும். அத்தகைய ஒரு சம்பவத்தை பின்னணியாகக்கொண்டே ஹட்டன் தே. நிரோஷனியின் உறவுகள் என்ற சிறுகதை விளக்குகின்றது.
நிலாக்குயில் தந்திருக்கும் பிஞ்சு மனம் என்ற சிறுகதை குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை ஒன்றுபோல் கவனிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிள்ளைகளின் மனதில் விரோதமும் குரோதமும் ஏற்படுகின்றது. இதனால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்பட அது காரணமாகிறது. ஏனெனில் ஒரு பிள்ளைக்கு ஒரு பொருளை வாங்கும்போது மற்றவர்களுக்கும் அதை வாங்க வேண்டும். அதேபோன்று பிள்ளைகளின் முன்னிலையில் ஒப்புவமை கூறக்கூடாது. தவறினால் நிம்மதியற்ற குடும்பமாக அது மாறிவிடும் என்பதை விளக்குகின்றது.
அதே போன்று என்னதான் பெரிய அதிகாரியாக இருந்தாலும் தவறுசெய்து மாட்டிக்கொண்டால் அத்தவறுக்கான தண்டனை பெற வேண்டும் என்பது நியதி. தனது பலத்தைக் காட்ட முயன்ற ராமநாதன் தனது தவறை மறைக்க சந்திரனைப் பயன்படுத்தி செய்த முயற்சி தோல்விலேயே முடிந்தது. முடிவில் தன் தவறை உணர்ந்த ராமநாதன், சந்திரன் செய்ததாகக் கருதப்படும் குற்றத்தை மன்னித்துவிடுகின்றார். சிங்கம் முயலாகின்றது என்பதற்கு எஸ்.ஆர். பாலசந்திரனின் சிறுகதை நல்லதொரு உதாரணமாகும்.
நூல் மதிப்பீடுகளை காவியனும், பீ. ஷைலஜாவும் தந்திருக்கின்றார்கள். நுணாவிலூர் கா. விசயரத்தினம் பல்வேறு பயன்களைத் தரும் பனைமரம் என்ற நூல் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து காவியன் தந்திருக்கின்றார். இது தவிர தடம் தொலைத்த தடயங்கள் கவிதைத் தொகுதிக்கான மதிப்பீட்டைத் தந்திருக்கும் ஷைலஜா தற்காலத்தில் இளம் கவிஞர்கள் காதலைச் சொல்லிச் சொல்லியே கனவு கண்டுகொண்டிருக்கும் காதல் பாடல்களைப் படைக்கின்றனர். அதைவிட கவிஞர் பிரகாசக்கவி இந்நூலில் சமுதாய நோக்குடைய கவிதைகளை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
கீதை கணேஷ் தந்துள்ள சிறுவர்களும் சிறுவர் இலக்கியமும் என்ற கட்டுரை சிறுவர்களின் மனிதப் பண்புகள் வளர்வதற்கான பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது. வாழும் சூழல், வளர்க்கும் பெற்றோர், கல்வி போதிக்கும் ஆசிரியர்கள், கற்கும் நூல்கள் என பலதரப்பட்ட கூறுகளுடன் சிறுவர்களுக்கான இலக்கியங்கள் உதவுகின்றது. அவை சிறுவர்களுக்கு விளங்கும் வகையில் இலகு மொழியில் படைக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைத்திருக்கின்றார்.
உணர்வூட்டும் கிராமியச் சுவைகள் என்ற தலைப்பில் கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் சிறந்ததொரு கட்டுரையைத் தந்திருக்கின்றார். அத்தோடு வாசகர் கடிதங்களும், நூலகப் பூங்காவில் 18 நூல்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றிருக்கின்றமை சிறப்புக்குரியது.
சஞ்சிகை – பூங்காவனம்
பிரதம ஆசிரியர் – ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி – 0775009222
மின்னஞ்சல் – poongavanam100@gmail.com
வெளியீடு – பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை – 100 ரூபாய
poetrimza@gmail.com