நீர்கொழும்பில் பண்டிதர் கதிரேசர் மயில்வாகனனார் (1919 – 2019) நூற்றாண்டு விழா

நீர்கொழும்பில் பண்டிதர் கதிரேசர் மயில்வாகனனார் (1919 – 2019) நூற்றாண்டு விழா

வடமேற்கு இலங்கையில் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் 1954 ஆம் ஆண்டு விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது தலைமை ஆசிரியரும் முத்தமிழ் அறிஞரும் பன்னூலாசிரியருமான கதிரேசர் மயில்வாகனனார் (1919 – 2019) அவர்களின் நூற்றாண்டு விழா  09  ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகும். கல்லூரியின் ஸ்தாபகர் ( அமரர் ) எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் மருமகளும் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ( அமரர்) ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் துணைவியாருமான திருமதி யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முன்னாள் தலைவரும் பரிபாலன சபை உறுப்பினருமான திரு. இராஜரட்ணம் சிவநாதன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்துகொள்வர்.

கல்லூரியின் அதிபர்  திரு. ந. புவனேஸ்வர ராஜாவின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில்,  பண்டிதரின் திரு உருவப்படம் கல்லூரி பிரதான வாயிலிருந்து மண்டபம் வரையில் மாணவர் அணிவகுப்பு மற்றும் கல்லூரி பேண்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்படும். கல்லூரி வளாக சித்திவிநாயகர் ஆலயத்தில் நடக்கும் பிரார்த்தனையுடன் தொடங்கும் இவ்விழாவில், மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். கல்லூரியின் முன்னாள் மாணவியும் கல்லூரியின் தற்போதைய ஆசிரியையுமான திருமதி சுசீலகுமாரி நீதிராஜா வரவேற்புரை நிகழ்த்துவார். அதிபர் திரு. ந. புவனேஸ்வர ராஜாவின் தலைமையுரையை தொடர்ந்து, முன்னாள் அதிபர்கள் திருவாளர்கள் நா. கணேசலிங்கம், வீ. நடராஜா மற்றும் பண்டிதருடன் தொடக்க காலத்தில் பணியாற்றிய ஆசிரியை திருமதி திலகமணி தில்லை நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றுவர். பழைய மாணவர் மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினரும் இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளருமான திரு. சு. நவரட்ணராஜா, மற்றும் கல்லூரி அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகளும் உரையாற்றுவர்.

அய்ரோப்பாவில் தயாரிக்கப்பட்ட பண்டிதரின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படமும் திரையிடப்படும். பிரான்ஸில் வெளியிடப்பட்ட பண்டிதர் நூற்றாண்டு மலர் தொடர்பான அறிமுகவுரையை எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் ஜெயகாந்தன் நிகழ்த்துவார். அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு இந்த ஆண்டிற்கான முதற்கட்ட புலமைப்பரிசில் நிதியுதவியும் கல்லூரியின் தொடக்க கால வளர்ச்சியில் ஈடுபட்ட சமூகப்பணியாளர் ( அமரர் ) செல்லையா அவர்களின் ஞாபகார்த்தமாக பிரான்ஸில் வதியும் அன்னாரின் புதல்வி ராணி மலர் செல்லையாவின் ஏற்பாட்டில் மாணவருக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படும்.

நூல்கள் வெளியீடு
இவ்விழாவின் இரண்டாம் அரங்கத்தில் பண்டிதர் மயில்வாகனனார் தலைமை ஆசிரியராக பணியேற்ற 1954 ஆம் ஆண்டு காலத்தில் ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்விக்கப்பட்டு முதல் மாணவராக இணைத்துக்கொள்ளப்பட்ட எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ. முருகபூபதியின் சொல்லத்தவறிய கதைகள் நூலும் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சொல்லவேண்டிய கதைகள் நூலும் வெளியிடப்படும். கல்லூரியின் முன்னாள் மாணவியும் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான செல்வி பாமினி செல்லத்துரை, இலக்கியப்படைப்பாளியும் ஊடகவியலாளருமான திரு. கருணாகரன் ஆகியோர் நூல் மதிப்புரைகளை நிகழ்த்துவர். நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் சமூகப்பணியாளருமான திரு. ஜெயராமன் , இந்து இளைஞர் மன்றத்தின் பொருளாளரும் சமூகப்பணியாளருமான திரு. ஏகாம்பரம் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் சமூகப்பணியாளருமான திரு. ஜெகநாதன் தேவராஜா ஆகியோர் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்வர். பிரான்ஸில் கடந்த ஜனவரி மாதம் நடந்த பண்டிதரின் நூற்றாண்டுவிழாவில் கலந்துகொண்டு தாயகம் திரும்பியிருக்கும் விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான திரு. லெ. முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.

விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி சமூகம் இவ்விழாவை ஒழுங்குசெய்துள்ளது. கல்லூரி முன்னாள் மாணவர்களும் பெற்றோர் – ஆசிரியர்களும் கலை, இலக்கிய ஆர்வலர்களும் அழைக்கப்படுன்றனர்.

letchumananm@gmail.com