(முகநூற் குறிப்புகள் ) அவர் குரல் அழியுமோ ? டி .எம்..சௌந்தரராஜன் : சில நினைவுக் குறிப்புகள் (1922- 25.05. 2013 )

– பாடகர் டி.எம்.எஸ் (டி.எம்.செளந்தரராஜன்) அவர்களின் நினைவு தினம் மே25. அதனையொட்டிய நினைவு பகிர்தல் –

எழுத்தாளர் உமா வரதராஜன் & டி.எம்.எஸ்

பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மறைந்து இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகின்றன.. ஒருவரின் மரணத்தை அவன் இறந்த நாளிலிருந்து கணிப்பதுதான் வழமை. ஆனால் ஒரு கலைஞனின் மரணம் வேறு விதமாகவும் நிகழ்ந்து விடுவதுண்டு . புகழ் வெளிச்சம் தன்னை விட்டு மெல்ல மெல்ல அகலத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து அவன் தனக்குள் சிறிது சிறிதாக மரிக்கத் தொடங்குகின்றான். அப்படி ஒரு சூழ் நிலையில்தான் டி.எம்.எஸ். அவர்களை நான் சந்தித்தேன். நான் அவரை சந்தித்த போது அவருக்கு எண்பத்தொன்பது வயது.

உரையாடல் சுவாரஸ்யம் கொண்ட ஒரு கட்டத்தில் ”வா … என் அறைக்குள்ளயே உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம் ” என த் தன்னுடைய அறைக்குள் என்னை அழைத்துச் சென்று விட்டார் .
‘புகழின் வெளிச்சத்தில்’ வாழ்ந்து பழக்கப் பட்ட ஒரு கலைஞனின் அந்திம காலத்து தனிமையின் இருளையும் ,துயரத்தையும் அவருடன் கழித்த அன்றையப் பகல் பொழுதில் உணர்ந்தேன்.

”தில்லையம்பல நடராஜா ”,’தாழையாம் பூ முடிச்சு..’,ஒரே ஒரு ஊரிலே ..’ பாடல்களை எல்லாம் பெட்டி மொடல் பிலிப்ஸ் ரேடியோவில் நான் ஆர்வத்துடன் கேட்ட அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தேன். அப்போது சின்னப் பையனாக அறியாப் பருவத்தில் இருந்த நான் வானொலிப் பெட்டியின் பின்புற துவாரம் வழியாக அவற்றைப் பாடிய டி.எம்.எஸ்.ஸை தேடிய கதையையும் கூறினேன். …எம்.ஜி.ஆர்.,சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் . போன்றோர்கள் திரையில் தோன்றி வெளிப்படுத்திய குணச்சித்திரங்களை திரைக்குப் பின்னால் குரல் வழியாக நடிப்புடன் பாடிய அவருடைய அபூர்வ ஆற்றலைப் பற்றி நான் சொல்லிக் கொண்டே போனேன். என் சிறு வயதில் பிரியத்துக்குரிய நடிகர் எம்.ஜி.ஆர். தன் பாடல்களில் அவர் முன் வைத்த கருத்துகளால் உலகத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் வரப் போகிறது என நான் நூறு வீதம் நம்பியதையும் ,அவற்றை இருநூறு வீத நம்பிக்கையுடன் டி.எம்.எஸ். பாடிய தொனியையும் சிலாகித்துக் கூறினேன்.

இறந்த காலங்கள் பற்றிய பேச்சைத் தவிர்த்து ,எதிர் காலம் பற்றிய கனவுகளையே அவர் வெளிப் படுத்த முயன்று கொண்டிருந்தார்..நான் அவரை அவ்வப்போது நிகழ் காலத்துக்கு கொணர மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன்..அசாத்தியமான எதிர்கால ஆசைகளுக்கும் , ஒளியின் கனவாகிப் போன இறந்தகாலத்துக்கும் ,தனிமையின் துயரும்,இருளும் படிந்த நிகழ்காலத்துக்கும் நடுவே மாறி மாறி அவருடைய ஊஞ்சல் பயணித்துக் கொண்டிருந்தது. சில வேளைகளில் தூக்கக் கலக்கத்தில் பேசுவது போல் அவர் வார்த்தைகள் வெளிவந்தன .

”ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய தண்டனை என்ன தெரியுமா? தனிமை… இதோ பார்..இந்த வீட்டில் என் மனைவியும் நானுந்தான் இப்போது இருக்கிறோம். அவளுக்கும் உடம்பு முடிவதில்லை…ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? என்னுடைய அப்போதைய சம்பாத்தியத்தில் இந்த சென்னையின் அரை வாசிப் பகுதியையே வாங்கியிருக்கலாம் … ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.ஜாலியாக வாழ்ந்து விட்டேன்…. இப்போது யாருமில்லை… உன்னைப் போல் எங்கிருந்தோ ,எவனோ ஒருவன் ரசிகன் என்று சொல்லிக் கொண்டு வருகின்றான்…அதுதான் நான் தேடிய பெரிய சொத்து….”

டி.எம்.எஸ். ஸிடம் விடை பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்த போது அவர் பாடிய இரண்டு பாடல்களின் வரிகள் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டேயிருந்தன.

‘உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் ,உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலுங் கூட மிதிக்கும். ‘

‘ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா
தர்மதேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா -மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா !’

டி.எம்.எஸ்

தமிழ் சினிமா ரசிகர்கள் – நடிப்பாகட்டும்,பாடல்களாகட்டும், வசனங்களாகட்டும் இசையாகட்டும் -சற்று உரத்த தொனியை விரும்புபவர்கள். நாகரீகப் பாங்கும்,மிகை வெளிப்பாடும் கொண்ட சிவாஜி கணேசன் ஒரு புறம் , சாகச நாயகன் எம்.ஜி.ராமச்சந்திரன் மறுபுறம் .இந்த இரண்டு நட்சத்திர நடிகர்களுக்கும் ஈடு கொடுத்த சமாந்தரப் பயணம் டி.எம்.எஸ். ஸினுடையது . தெளிவான உச்சரிப்பு, உரத்த தொனி ,கம்பீரம் , திரைப் படப் பாடல்கலுக்கு உயிரூட்டும் ‘குரலின் நடிப்பு ‘ ஆகியவை டி .எம்.எஸ். ஸின் பிரத்தியேகப் பலங்கள் . அடிப்படையில் அவர் எம்.கே..தியாகராஜ பாகவதர் பரம்பரையைச் சேர்ந்த பாடகரேதான். ஆனால் திரையிசையில் நிகழ்ந்த மாற்றங்கள் – முக்கியமாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களின் கர்நாடக- மேற்கத்திய கலப்பிசைப் பாணியில் உறவான மெல்லிசைக் கோலங்கள் அவரைப் புதிய திசைக்கு இட்டுச் சென்றன. எம்.ஜி.ஆர்.,சிவாஜி என்ற இரு முக்கிய நட்சத்திரங்களுக்குமான தவிர்க்க முடியாத ஒரு பாடகராக குறிப்பிட்ட காலம் வரை அவர் மாறியிருந்தார். இரண்டு நாயகர்களும் இள வயது நாயகிகளை நாடிச் சென்ற போது கூடவே அவர்களுக்கு இளைய குரல்களும் தேவைப் பட்டன . டி .எம்.எஸ். மெல்ல மெல்ல ஓரங் கட்டப் பட்டார்.

அன்பின் பரவச நிலையையும், முதிர்ச்சியின் பக்குவத்தையும், தத்துவ சாரத்தையும் ,நவரசங்களையும் அவர் அநாயசமாகத் தன் பாடல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் சிலவேளைகளில் உச்சத் ஸ்தாயியில் பாடும் பொழுது ,திமிறும் குதிரையாகும் தனது குரலைக் கடிவாளத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறி இருக்கிறார் .என்றாலும் அவரைப் பிரதியீடு செய்யும் உரத்த குரல் பாடகரைக் காண்பதென்பது முடியாத காரியமே.

டி .எம்.எஸ். தமிழ் மனங்களுடன் கலந்து விட்ட இன்னொரு பிரதேசம் உண்டு. எத்தனை இசைப் புயல்களும் ,சுனாமிகளும் வந்து தாக்கினாலும் கூட நெருங்க முடியாத இடம் அது.. கோயில்களுடன் ஒட்டிய கொண்டாட்டங்கள் வரும் வரை ஒவ்வொரு ஒலி பெருக்கிகளினுள்ளும் அந்தப் பாடல்கள் ஒளிந்திருக்கின்றன .

‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’

‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..’

‘முருகா, நீ வர வேண்டும்’

‘கற்பனை என்றாலும் ‘

‘மண்ணானாலும் திருச்செந்தூரில் ‘

‘உனைப் பாடும் தொழிலின்றி ‘

‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ‘