அயராமல் இயங்கிய ஆளுமைக்கு அஞ்சலிக்குறிப்பு: ஈழத்து இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரி ‘குறமகள்’ வள்ளிநாயகி ( 1933 – 2016)

குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்)இரண்டு  வயதில்  வாசிக்கத்தொடங்கி,  நான்கு வயதில் கட்டுரை எழுதி, பதினேழு வயதில் சLateKuramagalிறுகதை படைத்து, உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து, ஆசிரியராகி, வெளிவாரி பட்டப்படிப்புடன் நாடகத்துறையிலும் பயின்று,  எழுத்தாளராக, பெண்ணிய ஆளுமையாக, சமூகச்செயற்பாட்டளராக, பேச்சாளராக பரிமளித்து அயற்சியின்றி  இயங்கி,   கனடாவில்  மௌனமாக  விடைபெற்ற  ஈழத்தின்  மூத்த எழுத்தாளர் பற்றி அறிந்திருக்கிறீர்களா…? அவர்தான் வள்ளிநாயகி என்ற இயற்பெயருடனும் குறமகள் என்ற புனைபெயருடனும்  வாழ்ந்து தமது 83 ஆவது வயதில்  இம்மாதம் 15 ஆம் திகதி கனடா ரொரண்டோவில் மறைந்த இலக்கியவாதி.

இலங்கையின் வடபுலத்தில் 1933 ஆம் ஆண்டு ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்த வள்ளிநாயகியையும் அன்றைய சமூக அமைப்புத்தான் ஒரு படைப்பாளியாக்கியிருக்கிறது. ” வாழ்வின் தரிசனங்களே தாம் எழுதும் படைப்புகள் ” என்றுதான் எழுத்தாளர்கள் சொல்வார்கள். வள்ளிநாயகியும்  இதற்கு விதிவிலக்கல்ல.  அவருக்கு  பன்னிரண்டு வயதிருக்கும்போது அவர் வீட்டுக்கு   அயலில்  ஒரு  குடும்பத்தில்  நிகழ்ந்த  மனதை  உருக்கும் சம்பவத்தால்  மனதளவில்  பெரிதும்  பாதிப்படைந்திருந்து  ஐந்து ஆண்டுகள்  கடந்தும்  அந்தச்சம்பவம்  தந்த  அழுத்தத்தினால் தமது  17 வயதில் அவர்  எழுதிய  முதலாவது  சிறுகதைதான்  போலி கௌரவம். அந்நாளில் வடக்கில் வெளிவந்த  ஈழகேசரியில் பதிவாகியது.

ஒரே  குடும்பத்தைச்சேர்ந்த  ஒரு  அண்ணனும்  தங்கையும்  திருமணச் சீதனப்பிரச்சினையால் அடுத்தடுத்து   தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்பொழுது அந்தத்தங்கை நிறைமாதக்கர்ப்பிணி. சீதனம் கேட்டு தொல்லை தந்த அவள் கணவனால் அந்தக்குடும்பத்தில் நேர்ந்த பேரவலம் 12 வயதுச்சிறுமியான வள்ளிநாயகியை பாதித்திருக்கிறது. சமூகம் இப்படித்தான் இருக்கும். ஆனால்,  சமூகம் எப்படிருக்கவேண்டும் என்பதை அந்த இளம்வயதிலேயே சிந்தித்து,  அவர் எழுதிய  முதல்கதையில் சீதனப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் கொடுத்ததை வாங்கிக்கொள்ளும் நாயகனை அவர் படைத்துக்காண்பித்திருக்கிறார்.  பின்னர் சீதன முறையை ஆதரிக்கும்  சமூகச்சீர்கேட்டுக்கு  எதிராக  தனது  எழுத்துக்களை போர்க்குரல் ஆக்கியிருக்கிறார்.

தந்தையும்,  தந்தைக்குபின்னர்  வாழ்க்கைத்துணைவராக  வந்தவரும்  வள்ளிநாயகிக்கு  ஆதர்சமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பார் என்ற வார்த்தை பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், வள்ளிநாயகியின் வாழ்வில்  தந்தையும் தாரமும் அவரிடத்தில் ஆளுமையை வளர்த்திருக்கிறார்கள் என்பதை அவர் அருண்மொழிவர்மனுக்கு வழங்கியிருக்கும்  பேட்டியிலிருந்து  தெரிகிறது. கல்வி, சமூகச்சிந்தனை, ஆசிரியப்பணி,  தொடர்ச்சியான வாசிப்பு, இலக்கிய நேசிப்பு, எழுத்தார்வம், நாடகத்துறையிலும் பாட்டிசைத்தலிலுமிருந்த ஈடுபாடு, பேச்சாற்றல் என்பன அவரை முழுமையான ஆளுமைப்பெண்ணாகவே உருவாக்கியிருக்கிறது. இந்து, கத்தோலிக்க, முஸ்லிம் பாடசாலைகளில் அவர் கற்றிருக்கிறார், ஆசிரியப்பணியாற்றியிருக்கிறார். படித்த  பாடசாலைகளிலும்  பணியாற்றிய கலாசாலைகளிலும்  நாடகங்களில் நடித்திருக்கிறார். குரல்வளத்துடன் பாடியிருக்கிறார். தானும் வளர்ந்து மற்றவர்களையும் வளர்த்துவிட்டிருக்கிறார். அவர் எழுதத்தொடங்கிய காலத்தில் பெண்கள்   ஈழத்தில் இலக்கியப்படைப்புத்துறைக்கு   கணிசமான அளவில் வந்திருக்கவில்லை.  அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு ?  தொழில் எதற்கு ?  என்று மகளிரை அடுப்பங்கரையிலும் படுக்கையறையிலும்   ஒதுக்கியிருந்த கால கட்டத்தில்  வள்ளிநாயகி எழுதத்தொடங்கியவர்.   தான்   நேசித்த  கல்வித்துறையில் பணியாற்றவந்தவர்.

மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை படைப்பு இலக்கியத்தில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர். ஒரு  ஆக்க இலக்கியப் படைப்பை  ஒருவர்  எழுதுவதுதான் வழக்கம்.  கூட்டுச்சேர்ந்து திட்டமிட்டு  எழுத முடியுமா…? என்ற முயற்சியில் அவர் ஈடுபட்டு வெற்றிகண்டதுடன் பின்னாளில் அவ்வாறு பலரையும் இணைந்து எழுதத்தூண்டியவர். எஸ்.பொ, கனகசெந்திநாதன், நாகராஜன், ஆகியோருடன் இணைந்து மத்தாப்பு என்ற குறுநாவலில் ஒரு அங்கத்தை எழுதியவர்தான் வள்ளிநாயகி. பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுதத்தொடங்கியதனால் தமக்கென புனைபெயரையும் தனது இயற்பெயருக்குப் பொருத்தமாகவே சூட்டிக்கொண்டார். அவ்வாறுதான்  வள்ளிநாயகி குறமகள் ஆனார். அவர் ஆரம்பத்தில் கற்ற பாடசாலையான நடேஸ்வராக்கல்லூரி வளாகம்  போர்க்காலத்தில் பாதுகாப்பு  வலயமாகி  இராணுவத்தின் வசம்  சென்று  சமீபத்தில்தான் மீண்டிருக்கிறது. ஆனால், ஈழப்போர்க்களம் சென்ற அவருடைய புதல்வி  மேஜர் குகபாலிகா  மீண்டு வராமலேயே அவர் நினைவுகளில் வாழ்ந்தார்.

குறமகள் படைப்பு இலக்கியத்துடன் தன்னை வரையறுத்துக்கொள்ளாமல்   வடமாகாண பெண்களின் கல்வி பற்றியும் தீவிரமாக சிந்தித்து எழுதியவர். பேராசிரியர் கா. சிவத்தம்பியின் வழிகாட்டலில் தனது முதுமாணிப்பட்டத்திற்காக அவர் எழுதிய ஆய்வு: யாழ்ப்பாணச்சமூகத்தில் பெண்கள் கல்வி. அந்த ஆய்வில் அவர் ஈடுபடும்பொழுது குழந்தைகளின் தாயாக இருந்தவர்.  தனது கணவர் அச்சமயம் ஒரு தாயுமானவராக  இயங்கி   குழந்தைகளை பார்த்துக்கொண்டதாக நன்றியோடு   சொல்லியிருக்கிறார்.  குறமகளின் வாழ்வும்  பணிகளும் முன்னுதாரணமானவை என்பதை அவர் பற்றிய  ஒரு  முழுமையான  நூல்   வருமாயின் தெரிந்துகொள்ள முடியும்.

அவர் குறித்த ஒரு ஆவணப்படத்தை எவரும்  எடுக்கவில்லையா… ? எடுத்திருப்பின் பரவலாகச்செல்லவில்லையா ? என்ற  மனக்குறை  தவிர்க்கமுடியாதிருக்கிறது. இலங்கை  வடபுலத்தில்  அந்நாட்களில்   இலக்கியக்கூட்டங்களுக்கு   பெண்கள்  வருவது  குறைவு என்றும், ஆனால்,  குறமகள் யாழ்ப்பாணத்தில் நடக்கும் பெரும்பாலான இலக்கியக்கூட்டங்களிலும்  கலந்துகொள்வதுடன்  நடக்கும்  விவாதங்களிலும் ஈடுபடுவார். கூட்ட முடிவில்  இலக்கிய  நண்பர்கள்  அவரை  ஊருக்கு பஸ்  ஏற்றிவிடுவோம் என்று எஸ்.பொ. சொல்லியிருக்கிறார்.

இலங்கையில்  இளம்பிறை ரஹ்மானின் அரசு வெளியீடாக மத்தாப்பு  வெளியானது. பின்னாளில் எஸ்.பொ.வின் சென்னை மித்ர வெளியீடாக  அதன்  இரண்டாவது  பதிப்பு வந்திருக்கிறது. குறமகள்  எமக்கு  வரவாக்கியிருக்கும்  இதர நூல்கள்:  குறமகள் கதைகள் – உள்ளக்கமலமடி – இராமபாணம் – ஈழத்து றோஜா -குருமோகன் பாலர் பாடல்கள் மாலை சூட்டும் நாள். இன்று   திங்கட்கிழமை  கனடாவில்  இறுதியாத்திரைக்குத் தயாராகும்   எங்கள்  ஈழத்து  இலக்கியக்குடும்பத்தின்  மூத்த சகோதரிக்கு  அஞ்சலி  செலுத்தும்  இந்தப்பதிவை எழுதும் வேளையில்,  அன்னாரின்   மூத்தமகள்   மருத்துவர்   திருமதி சசிகலா   அவர்களிடம்  தொலைபேசி   ஊடாக  எமது ஆழ்ந்த அனுதாபங்களை   தெரிவித்துக்கொண்டோம். குறமகள்   குறித்த  நினைவுப்பகிர்வுகளை    எழுதுவதன்   ஊடாக அவர்   பற்றிய   செய்திகளை புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும்   வாசகர்களுக்கும்  வழங்குவதன்  மூலம் அவரை  வாசிக்கத்தூண்டலாம். அவர்   இலங்கையில்  வாழ்ந்த   காலத்தில்   இருந்த  சமூகம் இன்றில்லை.   ஆயினும்   அதன்   எச்சங்கள்   தொடரும் புலம்பெயர்வாழ்வையும்   அவர்  கடந்து   சென்றிருக்கிறார்.

letchumananm@gmail.com