கவிஞர் மருதூர்க்கனி (1942 – 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!

கவிஞர் மருதூர்க்கனி (1942 - 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!( இம்மாதம் 24 ஆம் திகதி கல்முனையில் கவிஞர் மருதூர்கனியின் ஞாபகார்த்தமாக நடைபெறும் நிகழ்வை முன்னிட்டு எழுதப்படும் பதிவு)

1960 களில் ஈழத்தில் அலையடித்த கவித்துவ வெள்ளத்தின் கிழக்கிலங்கை ஊற்றுக்களில் மருதூர்க்கனியும் ஒருவர். மருதூர்க்கனியின் கவித்துவம் கற்பனைகளின் இரசனைக்கூடாரமாக அமையவில்லை. அது சமத்துவமான ஒரு சமூகத்தேடலுக்கான ஒரு ஆயுதமாக அமைந்தது என்று சொல்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. முற்போக்கு இலக்கிய சித்தாந்தத்தின் இலட்சிய வாதத்தினால் ஈர்க்கப்பட்ட மருதூர்க்கனி தனது பிரதேசத்தில் தனது மருதமுனைக்கிராமத்தில் தான் கண்ட ஏழை மக்களை நெசவாளிகளை – மீனவர்களை – பாய்பின்னிப்பிழைத்தாலும் சுயகௌரவத்துடன் வாழ்கின்ற பெண்களை தனது கதைகள் ஊடாக இனம் காட்டுகிறார். அவர்கள் பக்கம் நின்று குரல் கொடுக்கிறார். என்று சொல்கிறார் பேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுரு. இளம் பருவத்திலிருந்தே நாடகப்பிரியர் மருதூர்க்கனி. மனித இயக்கத்தை அவரது கண்கள் நாடகமாகக் கண்டன. மனிதர்களின் குணாதிசயங்கள் – ஆளுமை – துலங்கித்தெரியும் குணப்பாங்கு – என்பனவற்றை இதனால் வெகு நுணுக்கமாக அவர் கவனிக்கலானார். என்று எழுத்தாளர் செ. யோகநாதன் தெரிவித்துள்ளார். மருதூர்க்கனி – காணும்தோறும் பேசும்தோறும் உள்நெக்க நின்று உருகும் மனிதனாக இலக்கிய உலகில் தன்னை இனங்காட்டி வந்தவர். இவரை அரசியலிருந்து பிரித்து கவிஞனாக மட்டும் காண முடியாது. இவர் ஒரு தேசிய அரசியற் கலாசாரத்தின் மூலவிசை என்கிறார் வீரகேசரி – தினக்குரல் நாளேடுகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன். புலவர்நாயகம் மருதூர்க்கனியின் கவித்துவத்தை உரைத்துப்பார்க்க எந்த ஓர் உரைகல்லும் தேவையில்லை. அவர் எப்போதோ அங்கீகரிக்கப்பட்டுவிட்டார். அவரே ஒரு கவிதைதான் என்று எம். எச். எம். அஷ்ரப் சொல்லியிருக்கிறார். மகா கவிகளான இக்பாலும் பாரதியும் காட்டிய பாதையிலே பயணம் மேற்கொள்ளவிழையும் மருதூர்க்கனி மானிட மேம்பாட்டுக்காகத் தன்னுடைய எழுத்தாற்றல் பயன்படும் என்ற வேட்கை மீதூரப்பெற்றவராகவும் காணப்படுகிறார் – என்று பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பதிவு செய்கிறார். முஸ்லிம்கள் மத்தியில் முன் என்றும் இல்லாத அளவு இனத்துவ உணர்வு மேலோங்கி எழுந்தவேளையில் அதன் ஸ்தாபன வெளிப்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாகி இக்கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதனுடன் இணைந்து செயற்பட்டு – அதன் மூத்த துணைத்தலைவரானவர் மருதூர்க்கனி என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். இங்கே நான் மருதூர்க்கனி பற்றி முக்கியமான ஏழு ஆளுமைகள் தெரிவித்த கருத்துக்களைத்தான் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.

மருதூர்க்கனி தொழில் ரீதியாக ஒரு பாடசாலை ஆசிரியர். அத்துடன் கவிஞர். நாடகாசிரியர். சிறுகதை எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல் இயக்கம் ஒன்றின் ஸ்தாபகத்தலைவர். இவ்வாறு பன்முகத்தோற்றம் மிக்க ஒருவர் இன்று எம்மத்தியில் இல்லை. எனினும் அவரது நினைவுகள் எம்முடன் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது இலக்கிய வாரிசுகள் இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவரது குடும்ப வாரிசுகள் இன்றும் அவரது நினைவாக அவரது படைப்புகளை அச்சிலே பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப்பலனை வரம் என்றும் சொல்லலாம். அவருடைய அன்புத்துணைவியாரும் பிள்ளைகளும் மருமக்களும் மருதூர்க்கனிக்கு கிட்டிய பெரும் பேறு.

மருதூர்க்கனி ஒரு மரதன் ஓட்டத்தை கிழக்கிலங்கையில் மருதமுனையில் அழகிய பால் வெண்ணிலவு சுடரும் கடற்கரையோரக்கிராமத்தில் தொடக்கிவைத்தார். அந்த மரதன் ஓட்டம் இந்த கடல் சூழ்ந்த கண்டம் அவுஸ்திரேலியா வரையில் வந்து தொடர்ந்தது. அந்தப்பாதையில் ஒரு மைல்கல்லில் நானும் இங்கே நின்றேன் என்பது எனக்குப்பெருமிதம்தான்.  ஆம்… மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவை அவருடைய துணைவியாரும் குடும்ப வாரிசுகளும் மெல்பனில் ஒழுங்குசெய்தபொழுது அதற்கு தலைமைதாங்க என்னை அழைத்தார்கள்.

1983 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு விழா இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடந்தபொழுது எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த மூத்த இலக்கிய ஆளுமை சிதம்பர ரகுநாதனுடன் கிழக்கிழங்கை பாரதி விழாக்களுக்கு சென்றிருந்தபொழுது எம்மை தமது மருதமுனை இல்லத்தில் தங்கவைத்து உபசரித்தவர் நண்பர் மருதூர்க்கனி. அப்பொழுது குழந்தையாக நான் கண்ட அவரது மகள் வஜ்னா தற்பொழுது அவுஸ்திரேலியா மெல்பனில் மருத்துவராக பணியாற்றுகிறார். அவரும் அவரது கணவர் ரஃபீக்கும் இலக்கிய ஆர்வலர்கள். பல சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்கள். மருதூர்க்கனி இலங்கையின் மூத்த கவிஞர். எமக்கெல்லாம் மூத்தவர்.

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பங்கேற்றவர்கள் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் மற்றும் மலையகத்தில் இருந்தும் ஆரோக்கியமாக பங்களித்தார்கள். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு – ஆரையம்பதி – நீலாவணை – குருக்கள் மடம் – ஒலுவில் – களுவாஞ்சிக்குடி – காத்தான்குடி – ஓட்டமாவடி – கல்முனை – மருதமுனை – பாண்டிருப்பு முதலான பிரதேசங்களில் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் கவிஞர்களாகத்தான் விளங்கினார்கள். குறிப்பாக கல்முனை மருதமுனை பகுதிகள் பற்றி நான் இலக்கிய உலகில் பிரவேசித்த 1970  காலப்பகுதியில் ஒரு சுவாரஸ்யம் சொல்வார்கள். இந்தப்பகுதிகளில் தெருவில் செல்லும்பொழுது தடுக்கி விழுந்தாலும் யாரோ ஒரு கவிஞர் வீட்டின் வாசலில்தான் விழுவீர்கள். ஆனால் எனக்கு அந்தப்பாக்கியம் கிடைக்கவில்லை. எனினும் மருதமுனையில் மருதூர்க்கொத்தன் – மருதூர்க்கனி உட்பட பல இலக்கியவாதிகளை சந்தித்து உரையாடும் பாக்கியம் 1983 இல் கிட்டியது.

கவிஞர் மருதூர்க்கனி (1942 - 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!

அன்றைய கிழக்கிலங்கைப் பயணத்தில் நானும் எனக்கு இலக்கிய உலகில் ஒரு தந்தையாக விளங்கிய இளங்கீரன் மற்றும் என்னைப்பெற்ற தந்தை வழி உறவினரான தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பிரபல பாரதி இயல் ஆய்வாளருமான சிதம்பர ரகுநாதனும் கொழும்பிலிருந்து ஒருநாள் இரவு ரயிலில் கிழக்கு மாகாணத்துக்கு – மட்டக்களப்புக்கு பயணமானோம். மறுநாள் காலை மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் மருதூர்க்கனியும் மருதூர்க்கொத்தனும் பூமாலைகள் சகிதம் வந்து அங்கே காத்து நிற்கின்றனர். யாரோ பெரிய அரசியல் பிரமுகர் ரயிலில் வருகிறாராக்கும் என்ற ஆவலுடன் அங்கே மக்கள் குழுமியிருந்தார்கள். வந்தது இலக்கியவாதிகள்தான் என்பது அந்த மக்களுக்கு சற்று ஏமாற்றம்தான். இதனை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் – மருதூர்க்கனியும் மருதூர்க்கொத்தனும் எவ்வளவு தூரம் இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் நேசித்தார்கள் என்பதை சுட்டிக்காண்பிப்பதற்காகத்தான்.

தமிழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் -ராஜம் கிருஷ்ணன் – சிதம்பர ரகுநாதன் ஆகியோர் இலங்கையில் பல பாகங்களிலும் நடந்த பாரதி நூற்றாண்டு விழாக்களில் கலந்து கொண்டார்கள். நான் – இளங்கீரன் மற்றும் சிதம்பர ரகுநாதனுடன் கிழக்கிழங்கையில் மட்டக்களப்பு – அட்டாளைச்சேனை – கல்முனை நிகழ்ச்சிகளுக்கு சென்றேன். கிழக்கில் மருதூர்க்கனியும் மருதூர்க்கொத்தனும் அன்புமணியும்தான் நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று முன்னின்று நடத்தியவர்கள். இதுபற்றி ஏற்கனவே பல பத்திகளில் பதிவுசெய்துள்ளேன். மருதூர்க்கனியின் இல்லத்திற்கு அருகேயிருந்த கடற்கரையில் அந்த நிலா முற்றத்தில் இயற்கையின் விருந்தைப்பருகினோம்.

தொடர்பாடலின் சிறப்பு – வலிமை – ஆரோக்கியம் என்பன அன்று அவ்வாறு இருந்தமையினால்தான் நீண்ட இடைவெளியின் பின்னர் , மெல்பனில் மருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டில் கலந்துகொள்வதற்கு சாத்தியமானது என்றும் கருதுகின்றேன். இலக்கியவாதிகளிடத்திலான தொடர்பாடல் காலம் கடந்தும் நீடிப்பதும் அபூர்வம்தான். பெரும்பாலும் இலக்கியத்தொடர்பயணத்தில் சிலர் இறங்கிவிடுவார்கள். சிலர் கழற்றிவிடப்பட்டுவிடுவார்கள். 

மருதூர்க்கனியின் மண்பூனைகளும் எலி பிடிக்கும் சிறுகதைத்தொகுதியும் அந்த மழை நாட்களுக்காக கவிதைத்தொகுதியும் ஏற்கனவே 2002 இல் அவரது அன்புத்துணைவியார் திருமதி கமிலா ஹனிபா அவர்களினால் இலங்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் மற்றுமொரு மருதூர்க்கனியின் நூல் 71  கவிதைகள் தொகுப்பு – மருதூர்க்கனி கவிதைகள் – சந்தனப்பெட்டகமும் கிலாபத் கப்பலும் என்ற குறுங்காவியங்கள் தொகுப்பும் – என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் என்ற மற்றுமொரு குறுங்காவியத் தொகுப்பும் ( நான்கு நூல்கள்) அன்று வெளியிடப்பட்டன.

மருதூர்க்கனியின் மருமகன் ரஃபீக் – இக்கூட்டத்தில் நான் அவசியம் பேசவேண்டும் எனச்சொன்னபொழுது – சரி பேசுகின்றேன். என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் என்ற நூலைப்பற்றிப்பேசுகிறேன். ஏனென்றால் எனக்கு அந்த நூலின் தலைப்பு மிகவும் பிடித்துக்கொண்டது என்றேன்.

கவிஞர் மருதூர்க்கனி (1942 - 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!

புகலிட நாட்டில் நாம் வெள்ளை இனத்தவர்களுடன் பழகியதனால் வந்த வழக்கம் ஒன்று இருக்கிறது. சிறிய தவறுகளுக்கும் கூட மன்னிப்புக்கேட்கும் பாங்கு. சொறி… வெரி சொறி. குழந்தைகளிடம் கூட நாம் சொறி சொல்வோம். அது மிகவும் நல்ல பண்பு. பயணங்களில் அருகிலிருப்பவரில் லேசாக உரசிவிட்டால்கூட சொறி என்போம். இங்குள்ள எமது தமிழ் – சிங்கள – முஸ்லிம் சகோதரர்களின் வீடுகளிலும் ஒவ்வொரு நாளும் காற்றில் கலந்துவிடும் சொல் சொறி – மன்னியுங்கள் – சமாவெண்ட. அந்தச்சொல் இணக்கத்தை – நேசத்தை தரக்கூடியது. 

ஒரு அரசியல் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் அதன் ஊடாக தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு நன்மைகள் செய்வதற்காகவும் இணைந்த மருதூர்க்கனிக்கு அவ்வியக்கத்தில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும்பொழுது இயக்கத்தை கட்டி வளர்ப்பதிலும் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக்கொள்வதிலும் தீவிரமான கரிசனை இருக்கும். எவ்வாறு மற்றவர்களை அரவணைப்பது….? மாற்றுக்கருத்துள்ளவர்களை எவ்வாறு வெற்றிகொள்வது…?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு தடவை சொன்னார். நண்பர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். எதிரிகளை மிகவும் நெருக்கமாக வைத்திருங்கள். ஏனென்றால் நண்பர்களை நம்பலாம். எதிரிகளையும் நம்பவேண்டுமென்றால் மிக நெருக்கமான உறவு இருக்கவேண்டும்.  ஆனால் – துரோகிகளை எங்கே வைக்கவேண்டும் என்பதற்கான பதிலை எம்மிடமே விட்டுவிட்டார். மருதூர்க்கனி தனது அரசியல் சகாக்களை அரவணைத்துச்செல்வதற்கு என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் என்று சொல்லிச்சொல்லியே இயக்கத்தை தூய்மைப்படுத்துவதற்கு முயன்றார்.  இன்று இலங்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எத்தனை பிரிவுகளுடன் – பிளவுகளுடன் காட்சி அளிக்கிறது. இதற்காகவா அஷ்ரஃப் மற்றும் மருதூர்க்கனி அன்று அப்படிப்பாடுபட்டு உழைத்தார்கள்;….?

காகித அறிக்கைத்தலைவர்கள் பெருகியுள்ள இக்காலத்தில் – அரசியல் உலகில் கரண்சிகளும் பரிமாறப்படும் யுகத்தையும் காண்கின்றோம். எந்தச்செயலாளர் அடுத்து எங்கே நிற்பார் என்பது மக்களுக்கும் தெரியாது – கட்சித்தொண்டர்களுக்கும் தெரியாது. அவர்கள் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். யார்…யார்… எங்கே இருப்பார்கள் என்பதும் தெரியாமல் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே என்பது போலும் இன்றைய அரசியல் பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டது. இந்தக்கண்கொள்ளாக்காட்சிகளைக் காணாமலேயே அஷ்ரப்பும் மருதூர்க்கனியும் கண்களை மூடி முத்தி நிலை எய்திவிட்டார்கள். பாக்கியசாலிகள்.

மருதூர்க்கனி ஒரு காலகட்டத்தின் தேவை கருதி அரசியலில் ஈடுபட்டார். அவரும் அஷ்ரப்பும் ரவூப் ஹக்கீமும் கவிஞர்கள்தான். ஆனால் – மருதூர்க்கனி நீண்ட காலமாக மருதூர்க்கொத்தன், நுஃமான், சண்முகம் சிவலிங்கம் முதலானோருடனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்துடனும் இணைந்து வந்தவர். 

மருதூர்க்கனியின் சமகாலத்தவர்களான மருதூர்க்கொத்தன் – சண்முகம் சிவலிங்கம் – நுஃமான் முதலானோர் அவரைப்போன்றே ஆசிரியர்களாகவே தமது தொழிலைத்தொடங்கியவர்கள். கொத்தனும் சண்முகம் சிவலிங்கமும் பதவி உயர்வுபெற்று அதிபர்களானார்கள். நுஃமான் பல்கலைக்கழக விரிவுரையாளராகி பேராசிரியரானார்.  மருதூர்க்கொத்தனை ஒரு தமிழ் அரசியல் இயக்கம் தமக்குள் அழைத்து தேர்தலில் நிறுத்த முயன்றது. ஆனால், கொத்தன் மறுத்தார். மருதூர்க்கனி அஷ்ரப்புடன் இணைந்துகொண்டார்.

இறுதியில் என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் என்று பதிவுசெய்து – சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு பயணித்துவிட்டார். அவரது குறிப்பிட்ட நூலை அரசியலாளர்கள் பாலபாடமாகவும் ஏற்கலாம். மருதூர்க்கனியின் என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் என்ற நெடுங்கவிதை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்தளை மாவட்ட மத்திய குழு தேசிய ரீதியில் நடத்திய போட்டியில் முதற்பரிசான தங்கப்பதக்கத்தை வென்றது. இக்கவிதையும் இடம்பெற்ற நூலுக்கு பேராசிரியர் நுஃமான் தமது மதிப்பீட்டுரையை எழுதியுள்ளார்.

1970 இற்குப்பின்னர் இனத்துவவாதம் எவ்வாறு அரசியலில் வேர்கொள்ளத்தொடங்கியது என்பதை நுஃமான் இந்நூலில் விபரிக்கின்றார்.  ஒரு காலகட்டத்தில் மருதூர்க்கனி சீனச்சார்பு இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்தவர். அதேபோன்று புதுவை ரத்தினதுரையும் அந்த நிலைப்பாட்டினை பின்பற்றியவர்தான். காலப்போக்கில் மருதூர்க்கனி முஸ்லிம் காங்கிரஸ் என்ற இனத்துவ அரசியலையும் புதுவை ரத்தினதுரை விடுதலைப்புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலையும் உள்வாங்கினார்கள். பலர் வாழ்வில் இந்த மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன. ஆனால், நுஃமான் இந்நூல் மருதூர்க்கனி சம்பந்தப்பட்டிருப்பதனால் அவரிடத்தில் நேர்ந்த மாற்றங்ளையே நயமுடன் பதிவுசெய்கின்றார்.

கவிஞர் மருதூர்க்கனி (1942 - 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!

என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் தொகுப்பின் இறுதி நெடுங்கவிதையே நூலின் தலைப்பானது. முல்லைக்கு தேர் ஈந்த பாரியை நினைவுபடுத்திவிட்டு – வீட்டில் துளிர்க்கும் பாகற்கொடிக்கு பந்தல் இடுவதற்கு முயலும் கவிஞர் அரசியலை பூடகமாகவும் படிமமாகவும் சித்திரிக்கின்றார். 

என்னால் இயன்ற மட்டும் எருக்கட்டி
அது உக்கி… மண்ணில் கருக்கட்டி
எந்தப்பயிரையும் ஏற்பதற்கு தயாராகி…
அதன் அடையாளமாக
வெள்ளைக்காளான் செழித்து வளர்ந்து…
அது…குடை விரித்து நிழல் தந்து நிற்கின்ற 
அந்தக்காலைக்குள்
உங்களுக்கும் கம்பு நட்டு பந்தலிட்டு
படரவிடுவதற்கு….
காலம் வருமென்று காத்திருக்கும் எனக்கு…
நீங்கள்…
இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தரவேண்டும்…!

– என்று அந்த நெடுங்கவிதையை நிறைவுசெய்கின்றார். 1997 இல் தினகரன் வாரமஞ்சரியில் இக்கவிதையை எழுதியிருக்கும் மருதூர்க்கனி 2004  ஆம் ஆண்டு மறைந்தார். குறிப்பிட்ட ஏழு ஆண்டு காலத்துள் அவரால் பாகற்கொடிக்கு பந்தலிட முடிந்ததா…? என்பது தெரியவில்லை.

பாகற்காய் கசந்தாலும் சத்தானது. ஆனால் – அதன் கசப்பினால்தானோ என்னவோ மருதூர்க்கனி நட்ட அந்த பாகற்கொடியின் பந்தலை பூர்த்திசெய்யாமல் பாகம் பிரித்துச்சென்றனரோ தெரியவில்லை.  மருதூர்க்கனியை இனத்துவ அரசியல் உள்வாங்கியிருந்தாலும் அவரது படைப்பிலக்கியம்தான் எங்களிடம் தங்கிவிட்ட நிரந்தர சொத்து. நிறைவான பொக்கிஷம். கல்முனை – மருதமுனை பிரதேசத்தில் தொடருகின்றனர். அதன் மற்றும் ஒரு அங்கமாக இம்மாதம் 24 ஆம் திகதியும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

letchumananm@gmail.com