இர.மணிமேகலை (கோவை) கவிதைகளிரண்டு!
1. அவன்
மகிழ்வுந்துகள் பரபரத்த சாலையோரம்
அழகுப்பொருட்களை
அள்ளிச்சேர்த்த அங்காடிகள்
உயர்ந்து நின்ற வணிக வளாகத்தின் ஓரத்தில்
அவன்
முன்னே கோட்டோவியச்சிறுமி
கண்களில் உயிர்ப்பு
சில நிமிடங்களில் உருவங்கள்
சித்திரத்தில் சிறைப்படுகின்றன
நிமிடங்களுக்காய் விலைபேசும்
அவனது தூரிகை
இறுதியாய்
சிவப்பிரகாசம் எனப் பொறித்து நிமிர்கிறது
அதில் பாணர்களின்
யாழிசை வழிகிறது
கூடவே
எரிகிறது
பசியின் அமிலம்.
2. புதல்வன் தாய்
1
நாற்றங்கால்களை நீர் தழுவிநிற்கிறது
க்ரக்…. க்ரக்…. க்ரக்… க்ரக்
இணையை அழைக்கும்
தவளையின் ஒலி
சந்திரன் விகசித்திருக்கிறது
அன்பின் தொட்டில் அசைகிறது
மெதுவாக
காற்றில் அலையும் கூந்தல்
மஞ்சள் முகத்தில் படிகிறது
இறுதியாக
2
கண்ணிகளைச் சூடிய பட்டங்கள்
விண்ணில் தலையசைகின்றன
ஆரஞ்சு பூசிய மாலையில்
பூச்சூடிய கொண்டையுடன்
அவளது வருகை நிகழ்கிறது
பள்ளிச்சிறார்கள் அன்பளித்த
வண்ண பலூன்கள்
சிறு விரல்களுக்குப் பெயர்கின்றன
மலர்ந்த கண்களில் நட்சத்திரங்கள்
3
கடல்நுரையின் வெண்மையென கூந்தல்
மலர்கள் மறைந்திருந்தன
கரம் பற்றியழைக்கிறது வளைக்கரச்சேய்
மறுதலிக்கிறாள்
தேன் கூடாய் அவன் அகம்
நினைவில் சுழல்கிறது
4
மகள் வயிற்றுச்சிசுவின் கொடி படர்ந்திருக்கிறது
இதயப்பெருஞ்சிறையோ
வாழைக்குலைக்கு ஏங்கியிருக்கிறது
5
ஆண்டின் முகை அரும்பியிருக்கிறது
காணும் பொங்கலில்
கொண்டைச் சேவலின் கூடாரத்தில்
சுவடாகிப்போனாள்
மின் மயானமெங்கும்
‘எங்கம்மா என்ன விட்டுட்டுச் சாப்பிடது’
அலறல் நிறைகிறது
காற்றில் கரைந்து போனாள்
புதல்வன் ‘தாய்’.
தலைப்பில்லாதது
துவாரகன்
இனி எந்தப் பிஞ்சுக் குழந்தை
உன் விரல் பிடித்து நடந்து வரும்?
இனி எந்தக் குமரி உன்னைப் பார்த்துக்
கண்சிமிட்டிக் கதை பேசுவாள்?
என் சின்னப் பெண்ணை
என் சகோதரியை
என் மனைவியை
என் அம்மாவை
என் பாட்டியை
இனி எந்த நம்பிக்கையுடன்
குறிகள் மட்டுமே உள்ள
உனக்கருகில் தனியே விட்டுச் செல்வேன்?
நான் வெளியேறி மீண்டுவரும்போதெல்லாம்
என் கால்விரல் நக்கி
அன்பைச் சொல்லும்
என்வீட்டுச் சின்ன நாய்க்குட்டியிடம்
இருக்கும் ஈரம்கூட;
உன் உலகத்தில் இருந்து
நழுவிக்கொண்டிருக்கிறது.
கனவிலும் நனவிலும் திடுக்கிட்டு விழித்து
‘எங்கே என் சின்னப்பெண்’ எனத் தவிக்கும்
ஈரவிழிகளின் உலகத்தில் தான்;
இன்னமும்
குறிகள் மட்டுமே உள்ளவர்
மனிதரென வாழ்கிறார்.
kuneswaran@gmail.com
02/2012
சுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்
– மன்னார் அமுதன்
காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்
கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்
கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது
கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை
ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை
தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை
வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்
எப்படி?
முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி)
என்னம்மா
ஆடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
மாடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
நாய் வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
கோழி வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தாள்!
கிளி வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
பூனை வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
இப்படி
எல்லா உயிர்களின்மேலும்
அன்பை வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தவள்
உன்மேல் மட்டும்
காதலை வளர்க்கச்
சொல்லிக் கொடுக்கவில்லையே!
பிறகெப்படிடி
உன்மீது என்மனதில்
வளர்ந்தது காதல்?
munaivendri.naa.sureshkumar@gmail.com
மூடிக் கிடக்கட்டும்
மெய்யன் நடராஜ் (இலங்கை)
அநியாயங்களை
நியாயப்படுத்துவதற்க்காக
நியாயங்களை
காயப்படுத்திவிட்டு
தாயம் விளையாடும்
என் தாரகையே…
தலையில் பாரத்தை
தூக்கி வைத்துவிட்டு
வழிகளில் முட்களைத் தூவி
நடக்கச் சொன்னபோது
உனக்காக வலிகள் தாங்கி
பூக்கள் கொண்டு வந்தேன்
பூக்களை வாங்கிக்கொண்டு
விழிகளைப் பிடுங்கிவிட்டு
உறங்கவைப்பதற்காக
தாலாட்டும் உன்
ஒப்பாரி கேட்டு
இறந்து போனது என் மனசு
தலையை தடவிக் கொடுத்து
கழுத்தில் கத்தி வீசும்
கசாப்புக் கடைக்காரனுக்கும்
வார்த்தைகளால்
அன்பு ஒத்தடம் இட்டு
சலனமின்றி
உயிருக்கு சமாதி சமைத்த
உனக்கும் அதிகம்
வித்தியாசமில்லை
ஆனாலும் அவனின்
கத்திக்கு பலியான
உயிரின் துடிப்பு சிலநிமிடம்
உன் புத்திக்கு
பலியான உயிரின்
துடிப்போ ஆயுள்வரை
முடவர்களின் இசையில்
ஊமைகள் பாடிய பாடலை
செவிடர்கள் கேட்டு
ரசித்ததாக
குருடர்கள் பார்த்து
சொன்னதை கேட்டவனாய்
என் மௌனத்தின் மௌனம்
திசைகள் தொலைத்து
துருவங்களாய் பிரிந்த
புரிதல்கள் இல்லாத
வாழ்க்கையின் அர்த்தங்கள்
புரியாதுபோனது
புரிந்து போனதும்
பிரிந்து போனது
நீயும் நானுமல்ல
நம் காதலும் தான்
இனி மூடியே கிடக்கட்டும்
கண்கள் இல்லாத
நீ வாசிக்க நானெழுதிய
காவியங்கள் எனக்கானதான
எனக்குமட்டுமேயாக
எனக்குள்ளேயே இருக்கட்டும்
இனி அதை ஒரு
நேசிக்க தெரியாத எவரேனும்
வாசித்து நேசித்து விடாமல்
இருக்கவேனும்
அது மூடியே கிடக்கட்டும்.
ஜுமானா ஜுனைட் (இலங்கை) கவிதைகள்!
1.காலம் ஒரு கணந்தான்….! பகுதி(4)
ஒளியிலே தேடு
நிஜங்களை…
ஒளிவுமறைவின்றி
உண்மை பேசு..
படகு செல்ல
அருவியாய் நில்லு…
காலம் உணர்த்த
நட்சத்திரமாய் மின்னு…
வழிகாட்டும்
கலங்கரை விளக்காகு…
ஒளியூட்டும்
இரத்தினக் கல்லாகு..
பாறையில் மோதிடும்
நீரலை உடையினும்
நீரதில் குறைவுகள்
உண்டாவதில்லை…
பாரினில் சூழ்நிலைக்கு
நீரலையாய் உழை…
காலமோ மின்னல் போல் –
அதிலும்
வாழ்க்கையோ ஒரு துளி..
எதிலும் சோர்ந்திடாமல் துணி…
முயன்றால்
ஆயுள் நீளும்
ஆனால்
உயிரோ எமைவிட்டு
பிரிந்தே தீரும்…
இதை உணர்ந்தால்
எம் வாழ்வு முன்னேறும்;…!
2.ஏது பண்ணுவாய்…?!
பலமுறை கண்களில் பட்டதனால்
நெஞ்சம்
“தீ”யென ஆகிப்பற்றியதே…,
நல்லவர் என்னும் போர்வையினுள்ளே
தீயோர்
வாழ்வதை எண்ணிப் பாடுகிறேன்…
ஒரு முறைதான் இவ்வுலகென்று தெரிந்தும்
பாவிகள்
பல முறை பாவங்கள் செய்வது ஏனோ?
தொழுவது கூட சுமையென எண்ணி
வாழ்வதும் ஒரு சுகமா…?
தர்மத்திலேது சுகந்தமென்று
இரு கரங்களை மூடுதல் ஞாயமா?
வறுமைக்குப் பயந்தாய்
தருமத்தை மறந்தாய்…
மறுமையில் ஏது பண்ணிடுவாய்…?,
மனிதா!
மார்க்கத்தை மறந்தாய்
கடமையைத் துறந்தாய்
சொர்க்கத்தை அடைதல் இலகென நினைத்தாயோ?
சொகுசினில் மிதந்தாய்
கருணையைத் தொலைத்தாய்
கொடுமைகள் இழைத்தாய்…
மானுட மதிப்பென்ன அறியாயோ?
உண்மையை மறைத்தாய்
உயர் மார்க்கத்தை மறந்தாய்
இப்படியே (நீ) இறந்தால்
மறுமையில் ஏது பண்ணிடுவாய்…?
3.கனவுகள்
அழகான சிறகு முளைத்து
இதயம்
அண்டவெளியில் பறக்கும்…
அருகே ஒரு வானம் உருவாகும்,
உனக்கும் அது பிடிக்கும்…
இந்த வெளிகளெல்லாம் கடந்து
காட்சிகள் புலனாகும்…
மொத்தத்தில்
மனம் தூய்மையாகும்…
காலம் அல்லாத காலம் உருவாகும்…
காகிதமில்லாமல்
புத்தகம் உண்டாகும்…
மரம் செடி கொடிகளில்லாமல்,
உனக்காய் காற்றுக் கூட வரும்
சுவாசிக்க…
உடல் நொந்திடாமல்
தென்றல் வீசிடும்
இதமாக…
மனிதரில் பல ரகம்,
உனக்காய் தனியொரு கிரகம்
உருவாகும்…
உள்ளம் தனி உருவமாக
வெளியே வந்து தோன்றிடுமே…
மொத்தத்தில்
தொல்லையில்லா உலகு ஒன்று
உனக்காய்
தோன்றி வந்திடுமே…