அத்தியாயம் இரண்டு: தூண்டிற் புழுவினைப் போல்….
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]
‘என் அவயங்களோ சக்தி குன்றிப் போயின.
என் உதடுகளோ ஈரமிழந்து போயின.
என் உடல் நடுங்குகின்றது.
என் கைகளை விட்டு சக்திமிக்க ஆயுதமும் நழுவிப்
போகின்றது.
என் மனமோ குழம்பிப் போயுள்ளது.
என்னால் நிலையாக நிற்கவே முடியவில்லை.
என் செய்வேன். என் செய்வேன்.
பரந்தாமா!
அனர்த்தங்களால் விளையும் அறிகுறிகள் தெரிகின்றன.
போர்க்களத்தே என் உறவினரை
என் நண்பரை, என் ஆசானைக் கொல்வதால்
என்ன பயன்? என்ன பயன்?
பாதை காட்டுவாய் பரந்தாமா?
பாதை காட்டுவாய்.’ – அருச்சுனன் (பாரதியின் ‘பகவத் கீதை’யிலிருந்து) –
பார்க்கில் சனநடமாட்டம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருந்தது. வழக்கமான அதே மோன நிலையில் ஆழ்ந்த போனபடி, சூழலுக்குள் உறைந்து விட்டவனாக அவன். முழுநிலவின் தண்மையான ஒளிச்சிதறல்கள் இதமாகப் பரவிக் கிடந்தன. மனதை நன்கு ஒரு நிலையில் நிறுத்தியவளாக மெல்ல எழுந்து அவனருகே சென்றாள். அவள் வந்ததையோ, அவனருகே நின்றபடி அவனையே வைத்த கண் வாஙகாது பார்த்தபடி அவள் நிற்பதையோ அவன் கண்டு கொள்ளவேயில்லை.
வெளியிலோ விரிந்து பரந்து கிடந்தது வெளி; பொருளும் சக்தியுமாக வியாபித்து உயிர்த்துடிப்புடன். அவன் உள்ளேயும் விரிந்து பரந்து முடிவற்று நீண்டு கிடந்தது இன்னுமொரு வெளி. அவனுக்கு மட்டுமேயுரிய அந்தரங்கமான இன்னுமொரு தளம். புற உலகின் யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்ட , உணர்வுகளே யதார்த்தங்களாக மாறிவிட்ட இன்னுமொரு உலகம். அந்த உலகத்தை ஆக்கிரமித்தநிலையில் இருப்பது …. அவன்தான் ..எக்ஸ்.. எக்ஸ்… அவனது பால்யகாலத்து நட்பின் விளைவாக உருவானவன். சுருண்ட தலையும், சிரித்த முகமும்… கனவுலகில் திரியும் கண்களும்….
கிராமத்தின் ஒரு கோடியில் நீண்ட காலமாகப் பூட்டிக்கிடந்த ‘எஞ்சினியர்’ வீட்டு வளவுக்குள் ஏறிப்பாய்ந்து சீமைப்பழம், விலாட், கறுத்தக்கொழும்பான் பிடுங்கிக் கவனிப்பாரற்றுக் கிடந்த ‘கராஜி’னுள் வைத்துச் சுவைத்தது…
வயல் வெளியும், குளக்கரையுமாக வளர்ந்து படர்ந்த உறவின் இறுக்கம்…..
திடீரென்று இன்னுமொரு காட்சி மனவெளியில் விரிந்தது. ஆடிப்பாடிச் சிரித்து நின்ற எக்சைக் காணவில்லை. அதற்குப் பதிலாக, முகம் சோர்ந்து, வாடித்துவண்ட நிலையில் , நம்பிக்கையிழந்து, ஒடுங்கிப் போய்க் கிடக்கின்ற எக்ஸின் உருவம்… நீயுமா? பார்வையில் இயலாமை.. ஏமாற்றப்பட்ட ஒருவிதமான உணர்வுகள்… இவ்வுலகின் ஒவ்வொரு துளியின் மீதும் நம்பிக்கையிழந்து விட்ட முகம்… ‘நீயுமா?’ … வேதனை கலந்த உணர்வொன்றின் வெளிப்பாட்டில் அவன் முகத்தில் மெல்லிய கோடொன்று படர்ந்திருக்கும்.
உதடுகளைக் கோணிச் சிலிர்த்துக்கொள்கிறான். அவ்வளவுதான் … காலக் கடலுக்குள் கலந்துவிட்ட துளிகளிலொன்றாக, உணர்வுகளாகிவிட்ட உண்மை…..
“எக்ஸ்கியூஸ் மீ”
இவன் அசைவதாகக் காணோம். மோனநிலையில் உறைந்தவனாயிருக்கின்றான்.
“எக்ஸ்கியூஸ் மீ”
மீண்டும் சற்றுப் பலமாக அவள் அழைக்கின்றாள். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அரைகுறையாக விழிப்பவனின் கண்களைப் போல் … அரைகுறையாகத் திறந்த நிலையில் அவனது பார்வை அவளை நோக்கி வெறித்து நிற்கிறது.
அளவான உயரம். மாநிறம். சேலை கட்டியிருந்தாள். சுருண்ட கூந்தலைப் பிடித்திறுக்கிய கொண்டை போட்டிருந்தாள். மதர்த்து, ஒடுங்கி, விரிந்து கிடந்த உடல்வாகு. அவளது உடலில் கண்கள் மட்டும் மிகவும் முக்கியமானதொன்றாக, ஒருவித சக்தியுடன் மின்னிக் கிடந்தன. இதயத்தைக் கூறுபோட்டு விடும் கண்கள். ஒரு வித மோகத்துடன் முகச் சாயல்.
“எக்ஸ்கியூஸ் மீ” மூன்றாவது முறையாக அவள் அழைத்தாள். அவன் மெல்ல இவ்வுலகுக்கு வரத் தொடங்கினான். தொடங்கியவன் மீண்டும் அரை வழியில் நின்று விட்டான்.
‘இவள் யாராகவிருக்கும்? ஒரு காலத்தில் நல்லூர்த் திருவிழா, சுப்பருடைய ‘டியூசன் கிளா’சென்று ஒருத்திக்குப் பின்னால் அலைந்து திரிந்தது மனதின் அடியிலிருந்து வெளிவந்தது. அந்த ஒருத்தியுடன் எப்பொழுதும் இன்னுமிரண்டு பெண்கள் கூடவே திரிவதும் நினைவில் தெரிந்தது. அந்த இரண்டுபேரில் யாராவது ஒருத்தியாக இருக்குமோ?’
இவளை எங்கேயோ பார்த்தது போல் நெஞ்சு உணர்ந்தது. ‘எங்கே பார்த்திருக்கிறோம்… எங்கே?’ நெஞ்சிற்குப் புரியவில்லை.
“ஆம் ஐ பொதரிங் யூ?” இவ்விதம் கேட்டாள். ஆனால் இம்முறை அவனிடமிருந்து எந்தவிதப் பதிலையும் எதிர்பார்க்கவில்லை. தனக்குள்ளாகவே ஏதோ முடிவு செய்தவளாக அவனருகில் அமர்ந்தாள்.
அவளது அருகாமையில் அவள் உடலிலிருந்து வீசிய நறுமணத்தை அவனால் உணர முடிந்தது. இம்முறை ஏதாவது அவளுக்குப் பதில் கூற விரும்பினான். முடிவு செயவதற்கிடையில் கேள்வி ஒன்றிற்குப் பதில் கூறவேண்டிய கால அவகாசத்தைத் தாண்டிவிட்டதாக உணர்ந்தான். மெளனமாயிருந்தான். அவளுக்குப் பதிலிறுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவனாக ஏதாவது அவளுடன் கதைக்க வேண்டும்போல் பட்டது. அதே சமயம் இதுவோர் முக்கியமான நிகழ்வல்ல என்றும் பட்டது. தொடர்ந்து பேசாமலிருந்தான். இதற்குள் அவளோ அவனை நன்கு விளங்கியவள் போல் எண்ணி அவனையே நோக்கி நின்றாள்.
இப்படித்தான் அவர்களது உறவின் முதல் இழை பின்னப்பட்டது. அன்றிலிருந்து வளரத் தொடங்கிய உறவின் வளர்ச்சி இருவரையும் மேலும் நெருங்கிய நிலைக்குத் தள்ளி விட்டது.
அவளும் அவனது ‘அபார்ட்மென்ட்’டிற்கு அருகிலிருந்த தொடர்மாடியொன்றில்தான் , தனியறை ‘அபார்ட்மென்ட்’ ஒன்றில் தனியாக வசித்திருந்தாள். ‘டவுண்டவுன்’ வங்கியொன்றில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘பார்க்கும்’ , ‘அபார்டெம்ன்ட்’டுமாய் இருந்த அவனின் வாழ்விலுமோர் மாற்றம்.
வழக்கமாக நீண்ட நேரமாக ‘பார்க்கில்’ படுத்திருப்பவன் நன்கு இருண்டதும் அவளுடன் கூடவே அவளது ‘அபார்டெம்ன்ட்’டுக்குச் செல்லத் தொடங்கினான். இரவு நெடுநேரமாக அங்கேயே அவளுடன் தங்கியிருப்பான். இடைக்கிடை டீ அல்லது ‘கோப்பி’ அருந்தியபடி, வீடியோவில் ஏதாவது படம் பார்ப்பார்கள். அல்லது சதுரங்கம் விளையாடுவார்கள். அல்லது ஏதாவதொரு விடயத்தைப் பற்றி உரையாடிக்கொள்வார்கள். ஆனாலும், பெரும்பாலும் அவர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடல்கள் குறைவாகவே இருந்தன. இருவருக்குமே உரையாடல்களின் தேவை மிக அவசியமாகப் படவில்லை. அவன் அமைதியாக, உறைந்தவனாக , சதுரங்கம் விளையாடும்போதும் சரி, வீடியோ பார்க்கும்போதும் சரி, அவள் அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்டதாக எண்ணிக்கொண்டாள். ஆனால் அவனைப் பற்றி எண்ணுகிற அளவுக்கு அவன் அவளைப் பற்றி எண்ணுகிறானா என்றால்……. ஆனால் அவளது நெருக்கத்தின் துணையில், உபசரிப்பில் மனம் ஒருவிதமான இதமான அணைப்பை, தண்மையினை உணர்ந்தது. இனம் புரியாத ஒரு விதமான அமைதி கலந்த உணர்வு இடைக்கிடையே நெஞ்சில் தலை காட்டியது.
இந்தவிதமான இதமான ஒத்தடம் கொடுக்கும் உணர்வலைகளை ஏற்படுத்துவது எது? அவளது அழகான உடல் செழிப்பா? இல்லை, அந்தப் பூவுடலை இயக்கும் அந்தக் கண்களினூடு வெளிப்படுகிறதே ஒருவிதமான அமானுசியமான உணர்வலைகள்.. அந்த உணர்வலைகளா? .. எது? வெறும் அடிப்படைத் துணிக்கைகளினால் ஆன அவளது உடலின் சக்தியா? கண்களினூடு வெளிப்படும் அந்த உணர்வுகளின் வலிமையா? எது எதனை ஆட்டிப் படைத்து வருகின்றது? அந்த உணர்வுகள் ஆக்கப்பட்ட அடிப்படை எதுவோ? இருப்பின் உண்மை.. நேற்று இல்லாத இடத்தில் , நாளை இல்லாத இடத்தில், இன்று இவன் இருக்கின்றானென்றால், விசித்திரமான உணர்வுகள்…. விசித்திரமான உள்வெளி, புறவெளித் தளங்கள்…. பல்வேறு பரிமாணங்களுக்குள் பிரகாசிக்கும் யதார்த்த உலகு…
அதே சமயம் அவள் மிக மிக அழகாகவும் பாடுவாள். பாரதியின் ‘மனதிலுறுதி வேண்டும்’, ‘தூண்டிற் புழுவினைப் போல்’ பாடல்களை மிகவும் இனிமையாக, இதயத்தை உருக்கும் வகையில் பாடவும் செய்வாள்.
‘தூண்டிற் புழுவினைப் போல் வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக எனது
நெஞ்சம் துடித்ததடீ.
கூண்டுக் கிளியினைப் போல்
தனிமை கொண்டு மிகவும்
நொந்தேன்’
அவள் பாடும்போது உண்மையாகவே, உருகி உருகிப் பாடுவதுபோல் அவன் உணர்ந்தான். அந்த அதிர்வுகள் வெளியில் பரப்பிய இனிமையான தொனி நெஞ்சைத் தடவிச் செல்கையில், அப்படியே மோனித்த நிலையில் மூழ்கிக் கிடப்பான்.
‘அவள் யார்? எங்கிருந்து வந்தாள்? ‘ இது பற்றியெல்லாம் அவன் கேட்கவில்லை. அவளும் அவன் பூர்வாசிரமத்தைப் புரிந்து கொள்வதற்கு முயலவில்லை. இருவருமே இருவரதும் நிகழ்கால இருப்புகளை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டதுடன் திருப்தியுற்றவர்களாகத் தெரிந்தார்கள்.
சில வேளைகளில் அவளுடன் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பான். அல்லது வீடியோ பார்த்துக்கொண்டிருப்பான். இடையில் திடீரென வெறித்தவனாக உறைந்து விடுவான். அச்சமயங்களிலெல்லாம் அவனுக்கு மட்டுமேயுரிய அந்த இன்னுமொரு சித்திரமாக உறைந்து கிடப்பான்.
அவனோ … உள்ளே இன்னுமொரு உலகம் மெல்ல மெல்ல விரிந்துகொன்டே செல்கையில், எக்ஸின் வாடிச் சோர்ந்து தொய்ந்துவிட்ட முகம் நம்பிக்கையிழந்து இயலாமையில் வெந்து கிடக்கும். கூடவே ஒரு விதமான சக்திமிக்க தொனியில் குரலொன்று பிறந்து பொசிந்து பரவிச் செல்லும்.
‘இன்பமும் , துன்பமும், வெற்றியும், தோல்வியும், , இலாபமும், நட்டமும் உன்னைத் தீண்டாமலிருகட்டும். ஆயுதம் தரித்து விடு! யுத்தத்திற்குத் தயாராகிவிடு. புனிதமான யுத்தம். தீமையான உணர்வுகள் உன்னைத் தீண்டிட ஒரு போதும் விட்டிடாதே. நானே இப்பிரபஞ்சத்தின் ஆணிவேர். எல்லா உயிரினங்களும் உருவாகக் காரணமான வித்து நானே! சித்தும் அசித்தும் உயிரும் சடமும் நானின்றி வேறில்லை அறிவாய். அளவற்ற எனது தெய்வீக சக்தியினால் , பராக்கிரமத்தால் இப்பிஞ்சத்தை தாங்கி வருகின்றேன். ஆக என் வாக்கை நீ கேட்பாய். மிக அதிகமான சிந்தனையால் உனக்கென்ன இலாபம்? தளர்வை ஒழிப்பாய். வீறு கொண்டெழுவாய். கடமையச் செய்வாய். பலனை என்னிடமே விட்டுவிடுவாய். பின்னுமேன் தயக்கம்… தளர்வு… என்னிலேயே கருத்தை ஒருமித்து வைத்து விடு. பந்தபாசங்களைக் களைந்து விடு. எனக்காக செயற்படுவதொன்றே உனது இயக்கமாக இருக்கட்டும். சோர்வகற்றி எழுந்து விடு. எழுந்து விடு.’
அந்தக் குரலின் வலிமை, உறுதி, கம்பீரம் நெஞ்சைக் கட்டிப் போட்டுவிடும்படியான சக்தி… மறுபுறமோ.. எக்ஸின் இயலாமை கலந்த உருவம்… வாடிய, வதங்கிய, ஒடுங்கிய உருவம்.
மீண்டும் புற உலகின் யதார்த்தத்தைத் தரிசிக்கையிலோ மனது கிடந்து துடித்து நிற்கும். நடந்து விட்ட நிகழ்வுகளுக்குக் காரணம் தேடித் தேடி அலுத்துச் சோர்ந்து கிடக்கும் நெஞ்சினை அவளது இனிய குரல் இதமாகத் தடவிக்கொடுக்கும்.
‘எங்கிருந்து வருகுதோ? ஒலி
யாவர் செய்குவதோ? அடி தோழி!
குன்றினின்றும் வருகுவதோ? மரக்
கொம்பினின்றும் வருகுவதோ? வெளி
மன்றினின்றும் வருகுவதோ? என்றன்
மதி மருண்டிடச் செய்குதடீ’
இந்தத் தழுவலில், இதத்தில், தண்மையில் நிம்மதி நாடியவனாக இருப்பவனின் தலை முடியை மெல்ல அவள் கோதி விடுவாள்.
[தொடரும்]