ஜூன் கவிதைகள் – 2

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

– துவாரகன் –

 துவாரகன் -

துளிர்த்துச் சிலிர்த்துப்
பற்றிப் படர்ந்து
கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம்
எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள்.

அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி.
இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈய்கிறார்
எங்கள் பாரிகள்.

கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை
குலத்துக்காகாது என்றே
கோயிலெல்லாம் சுற்றிப்
பிணி நீக்கினாள்
எங்கள் பாட்டி.
வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம்
உடனே விற்றுவிடு என்றார் அப்பா

உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும்
எங்கள் தனயன்மாரை
நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது?

கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும்
குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும்
குமரியைச் சிதைத்துக் கொல்வதும்
இன்னும் அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும்
எந்தக் குலத்தில் ஐயா எங்களுக்குச் சொல்லித்தந்தார்.

நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம்.
இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே.

kuneswaran@gmail.com


போர்த்திய கற்பனை…. ( கிழமையில் ஒரு நாள் அதிகாலை 6.30 மணிக்குப் பாலர் நிலையம் திறக்கும் நாளின் காட்சி, – கருவாக.)

– வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க் –

வேதா. இலங்காதிலகம்

அதிகாலை அழகு, இனிய மோனத்தில்
குதிநடையோடு வரும் தளிர் வதனங்கள்.
வெள்ளைநிறத் தளிரொன்று நீல விழிகளில்
கொள்ளையிடு மொன்று பசிய விழிகளில்.
கருமை நிறத் தளிரொன்று கரிய விழிகளில்
மஞ்சள் நிறத் தளிரொன்று மண்ணிற விழிகளில்

விழிகளின் அழகிற் பல வேறுபாடு
மொழிகளிலும் எத்தனை பல மாறுபாடு.
நிறங்களிலும் கூட இல்லை ஒருமைப்பாடு
குணங்களிலோ எல்லோரும் ஒன்று – பிள்ளைகள்
பிணங்கிப் பெற்றவரைப் பிரிகிறார் – தாக்கம்
இணங்கியும் பிரியாவிடையிறுக்கிறார் ஊக்கம்.

கோல விழிகளாற் கற்பனையிலென் கேள்விகள்
நீலவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
நீலவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
கருவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
கருவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
மண்ணிறவிழிகளிற்கு வனப்பு மண்ணிற மையிலா!

குற்றால அருவியாகக் காலையிசை முன்னணியில்
கற்பனை வளர்ந்தது வனப்பு விழிகளால்.
வெள்ளை நுதலின் புருவ இடையில்
வெண்ணிலாத் திலகம் ஒன்று இட்டு
வட்ட விழிகளிற்கு வடிவாக மையிட்டுக்
கத்தரித்த கூந்தலிணைத்துக் கருநாகப் பின்னலிடலாம்.

பின்னலிற்குப் பூச்சூடி இடையில் ஒரு
வண்ணச் சேலை அணிந்திட்டால் அவள்
பண்டைத் தமிழ் வாலைக் குமரியே!
ஈர்க்கும் வெள்ளைப் பெண்களை முன்பு
போர்த்திக் கற்பனையால் அலங்கரித்து ரசித்தேன்.
பொற்சிலையாய்! அச்சாயொரு  தமிழ்ப் பெண்ணாய்!

kovaikkavi@gmail.com


அது அப்படித்தன் வரும்

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

அது
நன்றாகத்தான் இருந்தது

நல்ல நிறுவனம்
தயாரித்தது

இன்னும் ஆண்டுகள்பல
ஆகக்கூடும்

அடிக்கடி சலவைசெய்து
அழாகாய் உடுத்தினேன்

புதிதாய் இருக்கக்கண்டுப்
பூரித்தேன்

கவனமாய்ப் பராமரித்தேன்

எப்படி
அந்தக்கம்பிப்பட்டது?

எங்கிருந்தது
அந்தக்கம்பி?

எப்படி என்கண்ணை
ஏமாற்றியது?

நான்பாதி
அதுபாதியாக இருந்தோம்

நேற்று என் மேனியில்
அலங்காரமாய்
ஆபரணமாய்

நானும்கூட
கம்பீரமாய்

இன்றில்லை
அது
என்னுடன்

காலணியைத் துடைக்க
கையில் கிடைப்பதுகண்டு
கலங்கித்தான் போகிறது
நெஞ்சம்

pichinikkaduelango@yahoo.com


அரசியல்  (01.02.2011 முற்கலில் சாரு நிவேதிதா எழுதிய சீரோ டிகிரி படித்துமுடிக்கும் தருவாயில் எழுதிய கவிதை.)

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

எல்லா இடத்திலும்
ஓர் அரசியல்

எல்லார் இடத்திலும்
ஓர் அரசியல்

யாருக்கும் தெரியாது
என்பதே
பலம் எனக்கருதும் பரிதாபம்

தெரிந்துகொண்டவர்கள்
ரகசியமாக நடத்துகிறார்கள்
அரசியலை

அரசியலும் அரசியலும்
மோதும்போதுதான்
சொல்லிக்கொள்ளமுடியாமல்
தவிக்கிறது மனம்

அரசியலை
நடத்துவது வேறு
புரிந்துகொள்வது வேறு

என் எதிர்நோக்கி
அரசியல் வரும்போதுதான்
நான் புரிந்துகொண்ட அரசியலைப்
பயன்படுத்துகிறேன்

அதுவரை
புரிந்துகொண்டவனாகவே
கடத்துகிறேன்

அரசியலைப்
புரிந்துகொள்ளாமல் வாழ்வது
சிரமம்

அரசியல்
இல்லாத வாழ்க்கை
சுகமானது

தன்னிடமிருக்கும்
அரசியல் ஆயுதத்தை
மறைத்துக்கொள்வதில்
ஓர் அரசியல்
இருக்கிறது

அந்த ரகசியம்
அரசியல் என்பது
எனக்கு ரகசியமல்ல

வாழ்க்கையில் அரசியல்
வரும் போகும்

அரசியலை
வாழ்க்கையாகக்கொண்டவர்கள்
வாழ்கிறார்கள் என்பது
மாயை

எனக்கு
அந்த
ரகசியம் புரிகிறது

அது
எல்லா இடத்திலும்
ஓர்
அரசியல் இருக்கிறது
என்பதுதான்

pichinikkaduelango@yahoo.com