முகநூல் குறிப்புகள் – 2

எம்ஜிஆர்முகநூல் குறிப்புகள் - 2புத்தன் யேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?’ பாடல் பதிவுக்கான கருத்து…

அப்துல் மஜீத்: ஒரு சிறுகுழந்தையும் ஒரு கிழவரும் இந்தப்பாட்டில் எம்ஜிஆரிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு என்னை நான் MGR ரசிகனாயிருந்த சிறுவயதிலேயே உறுத்தியிருக்கிறது. பிறகு பலரிடம் சொல்லியுமிருக்கிறேன். does anybody agree?

கிரிதரன்: நண்பரே, அந்த ஆட்டுக்குட்டியை விட்டு விட்டீர்களே 🙂   நிச்சயமாக அந்த ஆட்டுக்குட்டிக்குச் சில வேளைகளில் விருப்பமில்லாமலிருந்திருந்தாலும், மனிதர்களுக்கு வாத்தியாருடன் திரைப்படத்தில் நடிக்கிறோமென்ற சந்தோசம்தான் நிறைந்திருக்குமென்று நினைக்கின்றேன். பாட்டும், டி.எம்.எஸ்ஸின் குரலும், கூறும் பொருளும், வாத்தியாரின் ஆளுமையும்தாம் பார்ப்பவர்கள். கேட்பவர்களுக்கு இருந்திருக்குமென்று நினைக்கின்றேன். மேலும் வாத்தியார் ரசிகனாயிருந்தேன் என்று இறந்த காலத்தில் அடிக்கடி பல ஆளுமைகள் , கலாப்பிரியா முதல், கூறுவதைக் கேட்டு வருகின்றேன். இதன் மூலம் அவர்கள் என்ன கூற வருகிறார்களென்றால்.. தங்கள் அறிவு இப்பொழுது கூடிவிட்டதென்பதை மறைமுகமாக அவர்கள் கூறுவதாகத்தான் நான் உணர்ந்துகொள்கின்றேன். இவ்விதமான கூற்றுகள் எனக்கு எப்பொழுதுமே புன்னைகையினைத்தான் ஏற்படுத்துவது வழக்கம்.

வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல. வாத்தியாரின் செயற்பாடுகளிலுள்ள + கள் மற்றும் – களுடன் அவரை அணுகுவது என் வழக்கம். உதாரணமாக நடிப்பில் மிகுந்த ஆளுமையுடைய கமலகாசன் , சிவாஜி கணேசன் போன்றவர்கள் எவ்வளவு உருக்கமாக ‘இரத்தத்தின் இரத்தமே’ என்று அழைத்தாலும் அசையாத, மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் ‘இரத்தத்தின் இரத்தமே’ என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல. நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில்  அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை. அதற்காக அவர் தவறுகளே செய்யாத மனிதரென்று கூற வரவில்லை. ‘அண்ணாயிசம்’ போன்ற அவரது கோட்பாடுகள் பலருக்குக் கேலிப்பொருளாக இருந்தாலும், அவர் அதனைக் கேலிக்குரியதாகக் கருதிக் கூறவில்லையென்றே நினைக்கின்றேன். மனிதர்கள் அனைவருமே குறை, நிறைகளுடன் பிறந்தவர்கள்தாம். எம்ஜிஆர் மட்டுமென்ன விதிவிலக்கானவரா? அதற்காக எம்ஜிஆரின் இரசிகனாயிருந்ததென்பதற்காக வெட்கப்படுவதென்பது ஒருவரின் ஆளுமையின் சிறப்பினை அதிகரித்துவிடப்போவதில்லையென்பதென் தாழ்மையான கருத்து. எம்ஜிஅரின் இரசினாயிருந்த விடயத்தைப் பெருமையுடன் கூறுவதால் ஒருவரின் ஆளுமையின் சிறப்பு குறைந்து போய்விடப்போவதில்லை. அதே சமயம் அவரது இரசிகனில்லையென்பதால் அவரது ஆளுமையின் சிறப்பு கூடிவிடப்போவதுமில்லை.

ஆனந்த் பிரசாத்: ‎”எம்ஜிஆரின் இரசிகனாயிருந்ததென்பதற்காக வெட்கப்படுவதென்பது ஒருவரின் ஆளுமையின் சிறப்பினை அதிகரித்துவிடப்போவதில்லையென்பதென் தாழ்மையான கருத்து. எம்ஜிஆரின் இரசினாயிருந்த விடயத்தைப் பெருமையுடன் கூறுவதால் ஒருவரின் ஆளுமையின் சிறப்பு குறைந்து போய்விடப்போவதில்லை…”

அப்துல் மஜீத்: அன்பு கிரிதரன், நீண்ட பதிலிட எடுத்த தங்கள் சிரத்தைக்கு நன்றி. எனினும், //தங்கள் அறிவு இப்பொழுது கூடிவிட்டதென்பதை மறைமுகமாக அவர்கள் கூறுவதாகத்தான் நான் உணர்ந்துகொள்கின்றேன்// என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நண்பர் ஆனந்த் பிரசாத் நான் வெட்கப்பட்டதாகவே கூறுகிறார். நான் எங்கே வெட்கினேன்? எதற்கு வெட்க வேண்டும் என்று புரியவில்லை. இன்று சரியென்று தோன்றும் ஒரு விஷயம் நாளை தவறாகப் படுவதும் அதேபோல, இன்று தவறெனத் தோன்றுவது நாளை சரியாகத் தோன்றுவதும் முரண்தான் ஆனால், தமது முரணை சரியாகவும் தைரியமாகவும் ஒப்புக்கொண்டால் தெரிவது மனிதம். சிந்தித்து முடிவெடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இது பொருந்தும். அன்று எனக்கு சரியாகத் தெரிந்த தவறு, இன்று எனக்கு தவறாகவே தோன்றுகிறது. இது நான். எனது சுயம். இதற்கு வெட்க வேண்டிய அவசியம்?. தவிர, எம்ஜிஆரை இப்போது ரசிக்கவில்லை என்று எங்கே சொன்னேன்? நான் // நான் MGR ரசிகனாயிருந்த சிறுவயதிலேயே உறுத்தியிருக்கிறது// என்று சொன்னது சிறுவயதிலும், MGR ரசிகனாயிருந்தும்கூட, அக்குறை அவதானிக்கத் தக்கதாயிருந்தது என்று குறிப்பிடத்தான்.

அன்று கிட்டத்தட்ட கேலிப்பொருளாகவே சித்தரிக்கப்பட்ட காமராஜரை, அப்படியே உணர்ந்து, பிற்பாடு அவரது மேதைமையைத் தானாக உணர்ந்ததும் அதே நான்தான். எனது சுயம்தான் இதற்கும் வெட்க வேண்டிய அவசியம் இல்லையென்றுதான் எனக்கு இப்போதும் தோன்றுகிறது. இதுபோல் இன்னும் பலவும் இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளிலும், எனது அணுகுமுறை மாறுபாடுகள் உண்டுதான். அவைகளுக்கும் நான் வெட்க வேண்டுமா என்ன? தவிரவும், ஒரு ஆளுமையை இல்லையென மறுக்கமுயல்வது மடமை – அறிவேன். மறுக்க எப்போதும் முயன்றிலன். ஆளுமை ஆளுமைதான். எம்ஜிஆர் போலவே அது எப்போதும் நிற்கும் கம்பீரமாக. யார் மறுக்கிலும்.  எம்ஜிஆரை பலவற்றுக்கும் ரசிக்கிறேன் இன்றும்; அவற்றில் சில: முறைப்படி நடனம் கற்காவிட்டாலும் அதில் காட்டிய திறமை; உ.ம்: ஆடலுடன் பாடலைக்கேட்டு பாடலுக்கான நடனம் தான் மக்களால் ஆராதிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்காத காலத்திலேயே தனது சினிமாக்களில் கவனத்தில் எடுத்துக்கொண்ட சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகள்; உ.ம்: புகை, மது தவிர்த்தது. உச்சரிப்பில் சிறிதும் தாய்மொழியான மலையாள பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டது. நடிப்பில் பெரிய உச்சம் தொடாவிட்டாலும் அவ்வப்போது மிரட்டுவது. உ.ம். எங்கள் தங்கம் படத்தின் கதாகாலட்சேபம். எல்லாவற்றையும் விடுங்கள்; அரசகட்டளை போன்ற படங்களில் வெளிப்படும் அந்த தோற்ற அழகை ரசிக்காவிட்டால் வேறு எதை ஒருவனால் ரசிக்க முடியும்? இன்னும் பலப்பல…………….. இதற்கெல்லாம் நான் வெட்கப்பட்டுக்கொண்டா இருக்கமுடியும்?

பிற்பாடு, வயதை எந்த ஒப்பனையும் வெல்ல முடியாதுபோக, அப்போதும் மரத்தைச் சுற்றி ஓடிஓடி பையனாகவே காதலித்துக் கொண்டிருந்ததை செயற்கையாக ரசித்துக் கொண்டிருக்கவில்லை நான். அப்படியே செய்திருந்தாலும், அதற்கும் நான் இப்போது வெட்க வேண்டியது இல்லை. நீங்கள் சொல்வது போலவே, //மனிதர்கள் அனைவருமே குறை, நிறைகளுடன் பிறந்தவர்கள்தாம்// என்பதுவே நான் சொல்ல வருவதும். அவர்களை அவை இரண்டுடன் சேர்த்தே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

குறைகளை வலிந்து தவிர்த்து வந்தால், அது ரசனை அல்ல. தனிமனித ஆராதனை. அதுவும் ஆரோக்கியமாகாது என்பது எனது தாழ்மையான கருத்து. மற்றபடி, தாங்கள் குறிப்பிட்ட //அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை// போன்ற விஷயங்களில் வேறு கருத்துக்களும் சொல்வதற்கு உண்டு. ஆயினும் அந்த மாற்றுக் கருத்துக்கள் அவரது ஆளுமையைத் தாக்க ஒருபோதும் முயலாது என்பதும் உறுதி. அவை வெறும் புரிதலின் மறுபக்கம்தான். மீண்டும் ஒருமுறை நன்றி கிரிதரன்.

கிரிதரன்:  நண்பர் அப்துல் மஜீத் உங்களின் கருத்துகளுக்கு நன்றி. //தங்கள் அறிவு இப்பொழுது கூடிவிட்டதென்பதை மறைமுகமாக அவர்கள் கூறுவதாகத்தான் நான் உணர்ந்துகொள்கின்றேன்// . எம்ஜீஆர் பற்றி , விரிவான ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க அணுகுமுறை அவசியம். அவரது எழுச்சிக்குரிய காரணிகள் போன்றவை சமூக, அரசியல், பொருளியல்ரீதியில் அணுகப்பட வேண்டும். ‘கூத்தாடி’ என்று இகழ்வதோ, ‘மலையாளி’ என்று வைவதோ பயன்தரப் போவதில்லை. அவர் நடிகர் என்பதற்குமேல், தமிழகத்தின் முதல் அமைச்சராக இறுதிவரை இருந்திருக்கின்றார். அவரது அரசியல் பல முரண்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அவரது திரையுலக வாழ்க்கையிலும் பலவேறு வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிடக்கூடிய விடயங்கள் உள்ளன. இவையெல்லாம் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகப்பட வேண்டும். அவரது மரணத்தில்கூட யசீர் அரபாத் மரணத்தில் காணப்படுவதைபோல் சந்தேகங்களைத் தரும் விடயங்களுள்ளன. இவையெல்லாவற்றையும் மீறி , வாழ்க்கையைத் துணிச்சலுடன், விடா முயற்சியுடன் எதிர்கொண்ட மனோபலம், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் பேரன்புக்குப் பாத்திரமாக உருவெடுக்க உதவிய அவரது வசீகர ஆளுமை இவையெல்லாம் முக்கியமானவை.


முகநூல் குறிப்புகள் - 2இளையராஜாவின் இசையில் வெளியான ‘நிலவு தூங்கும் நேரம். நினைவு தூங்கவில்லை’ பாடலுக்கான குறிப்பு.

கிரிதரன்: சில திரைப்படப்பாடல்கள் கூறும் பொருள், இசை, பாடலில் கையாளப்படும் வார்த்தைகள், பாடகர்களின் குரல்களில் வெளிப்படும் உணர்வுகள்….. எனப் பல்வேறு காரணங்களினால் கேட்பவர்கள் உள்ளங்களைக் காந்தம்போல் கவர்ந்திழுத்துவிடும். இது அவ்வகையான திரைப்படப்பாடல்களிலொன்று. ஊர் உறங்கும் இரவினிலும் உறங்காத உள்ளங்களை வைத்துக் கவிஞர்கள் சங்க காலத்திலிருந்தே எழுதிக்கொண்டுதானிருக்கின்றார்கள். இது ஒரு தொடர்கதையாக இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதையே இந்தப் பாடலும் வெளிப்படுத்துகிறது. குறுந்தொகையிலொரு பாடல் வருகிறது. பதுமனார் என்பவரால் எழுதப்பட்ட கவிதை அது. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும்.

நள்ளென்றன்றே, யாமம் சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே
-பதுமனார்

சொல் அவிந்த நள் யாமத்தில் மக்களெல்லாரும் தூங்கி விட்டிருப்பார்கள். அவள் மட்டும் தூக்கமிழந்து விழித்திருப்பாள். இந்தக் குறுந்தொகைக் கவிதைதான் மேற்படி திரைப்படப்பாடலைக் கேட்டதும் முதலில் நினைவுக்கு வந்தது.

‘நிலவு தூங்கும் நேரம்.
நினைவு தூங்கிடாது.
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை.

நிலவும் தூங்கி விட்டது. இரவும் தூங்கி விட்டது. நினைவும் தூங்கவில்லை. உறவும் தூங்கவில்லை. நல்லதொரு பாடல். ஒரு முறை கேட்டால் போதும் நினைவை விட்டு ஒரு போதுமே அகலாத பாடல்களிலொன்று.


முகநூல் குறிப்புகள் - 2ஆனந்த பிரசாத்:  எழுத்தாளர்கள்
.
இவர்களுக்கு இயற்கை
கற்றுக்கொடுத்தது என்ன?
இவர்கள் இயற்கையிலிருந்து
கற்றுக்கொண்டதும் என்ன?
கேள்விக்குறிகளைத் தவிர!
குறிப்பில்லாது எதையெதையோ
குறித்தெழுதும் போதெல்லாம்
ஆச்சர்யக்குறிகள்
அகல விரிகிறது….
பேச்சில்லை….பின்னும்
பிறிதோர் செயலுமில்லை
சுவாசத்தில் எப்போதும்
சிதைந்து போகும் காற்றுக்கு
விசுவாசமாயிருக்கும்
விதியிவர்க்கு வாய்த்ததில்லை
சினைப்படுத்த முடியாத
சிந்தனைகளுக்காக
முனைப்பெடுத்துப்போகும்
முற்போக்குவாதிகளாய்…
யாருக்கு யார்….என்ன வியாபாரம்?
புரிந்தவைகள் தேராநிலையில்
தெளிவு பெறவேண்டி
பாரெங்கும் அலையும்
பைத்தியக்கார்களாய்….
சமூக அலகுகளின்
சிறிய சமன்பாட்டுக்குள்
அகப்படாத ஜீவன்கள்….
அதிகம் புரிந்துகொள்ள
வசப்படாத ஆத்மாக்கள்….
வாழ்க்கை நதிப்போக்கினிலே
இணைந்து போய் யார்க்கும்
இலகுவில் லபிக்காத
பயற்றம் முளைகள்…
புதிய புதியதாய்
உயிர்ப்படைந்து
வெளிக்கிளம்பும்
உற்சாக கருவூலங்கள்…….

கிரிதரன்:

இவர்களுக்கு இயற்கை
கற்றுக்கொடுத்தது என்ன?
இவர்கள் இயற்கையிலிருந்து
கற்றுக்கொண்டதும் என்ன?
கேள்விக்குறிகளைத் தவிர!

நண்பர் ஆனந்த பிரசாத் பொதுவாக ‘எழுத்தாளர்களைப்’ பற்றி இவ்விதம் கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இயற்கை கற்றுக்கொடுத்ததை கற்றுக்கொன்டு மாபெரும் படைப்புகளைத் தந்த பல படைப்பாளிகள் இருக்கிறார்களே! இவர்களது படைப்புகளெல்லாம் புலப்படுத்துவதென்ன? இவர்கள் கற்றுக்கொண்டது கேள்விக்குறிகளை அல்ல, இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான புரிதல்க்ளையல்லவா. இயற்கையைக் கூர்ந்து அவதானித்து (இயற்கை என்று குறிப்பிடும்பொழுது நான் இங்கு நாம் வாழும் இந்த உலகு, பிரபஞ்சம், வாழும் சமூகம்.. என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளேன்) எத்தனை எழுத்தாளர்கள் அரிய படைப்புகளை , புனைவுகளை வழங்கியிருக்கின்றார்கள். இந்நிலையில் எவ்விதம் இவர்கள் கற்றுக்கொண்டது கேள்விக்குறிகளைத் தவிர என்று அறுதியாக, உறுதியாகக் கூற முடியும்?

சினைப்படுத்த முடியாத
சிந்தனைகளுக்காக
முனைப்பெடுத்துப்போகும்
முற்போக்குவாதிகளாய்…

லெனின், காஸ்ட்ரோ, மார்க்ஸ்,மாவோ போன்றவர்களும் எழுத்தாளர்களே. அபுனைவுகளை வழங்கியவர்கள் இவர்கள். மார்க் , லெனின், மாவோ, காஸ்ட்ரோ போன்றவர்கள் முற்போக்குவாதிகள். இவர்களின் சிந்தனைகள் சினைப்படுத்தப்பட முடிந்த சிந்தனைகள். சினைப்படுத்தக் கூடிய சிந்தனைகளுக்காக முனைப்பெடுத்துப் போனவர்கள் இவர்கள். இன்றும் எத்தனையோ படைப்பாளிகள் உலகெங்கும் சினைப்படுத்த முடிந்த தங்கள் சிந்தனைகளால் முனைத்தெழுந்திருக்கின்றார்கள்.

எனவே நண்பர் பொதுவாகக் குறிப்பிடுவதுபோல் தென்பட்டாலும், குறித்த சில நாடுகளில் வாழும் சிலரை மனதில் வைத்தே சொல்லியிருப்பதாகக் கருதுகின்றேன்.

ஆனந்த பிரசாத்:
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்
இதமாக, படைப்பாளியின் ஆத்மாவை
இரணமாக்காது கருத்துப்பகிர்ந்த தங்கள்
உயர்ந்த பண்பை வெகுவாக நேசிக்கிறேன்.