வாசிப்பும், யோசிப்பும் – 2: இலக்கியமென்றால் என்ன?

வாசிப்பும் யோசிப்பும்!ஜெயமோகனின் ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலின் அண்மைய பதிப்பினை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். அதில் மூன்றாவது அத்தியாயமான ‘இலக்கியத்தை எதிர்கொள்ள’லின் இறுதியில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்: “இலக்கியம் கருத்தைச் சொல்வது என்று எண்ணும் வாசகர்கள் செய்யும் தவறு என்ன? எளிமையாகக் கூறப்போனால் அவர்கள் இலக்கியத்தை அறிவுத் துறைகளில் ஒன்றாகக் கருதுகின்றார்கள். பல சமயம் தத்துவம், ஒழுக்கவியல், மதம், அரசியல் முதலிய  பிற துறைகளைச் சார்ந்து  இயங்கக் கூடிய ஓர் உப- அறிவுத்துறையாகக் கருதுகின்றார்கள். இது பெரும் பிழை. இலக்கியம் என்பது ஒரு கலை.” ஜெயமோகனின் இக்கூற்றினை வாசித்தபொழுது என் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகள் இலக்கியம் பற்றிச் சிறகடித்துப் பறந்தன. இலக்கியத்தை வெறும் கலையாகக் கருதும் ஜெயமோகன் இலக்கியத்தைத் தனியாகப் பிரித்து வைக்கின்றார். இலக்கியம் ஒரு கலை. ஆனால் அதே சமயம் அந்தக் கலை ஒரு போதுமே தனித்து இயங்க முடியாது. ஏனைய துறைகளெல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் இலக்கியம். பொதுவாக இலக்கியமென்றதும் பலர் அதனைக் கதை, கவிதை, நாடகம் போன்ற புனைவுகளை உள்ளடக்கியதாக மட்டுமே கருதிக்கொண்டு விடுகின்றார்கள். அந்தத் தவறினைத்தான் ஜெயமோகனும் செய்திருப்பதாக எனக்குப் படுகின்றது. இதனை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பதற்கு இலக்கியமென்றால் என்ன என்பது பற்றிச் சிந்தனையினைச் சிறிது திசை திருப்புவது நன்மை பயக்கும்.

இலக்கியமென்றால் என்ன?  இலக்கியமென்பது பல்வேறு அர்த்தங்களில் பாவிக்கப்படலாம். நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய, கலைத்துவம் மிக்க படைப்புகளை நல்ல இலக்கியமென்று பலர் விதந்தோதுவதைக் கேட்கின்றோம். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட துறையினைப் பற்றி அல்லது குறிப்பிட்ட பொருளினைப் பற்றி எழுதப்படும் படைப்புகளையும் இலக்கிய வகைகளிலொன்றாகத்தான் குறிப்பிடுகின்றோம். உதாரணத்திற்கு பிரயாண இலக்கியம் என்கின்றோம். தமிழில் இதற்கு நல்லதோர் உதாரணமாக சிட்டி/ தி.ஜானகிராமன் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’யினைக் கூறலாம். இது ஒரு புனைவு அல்ல; அபுனைவு. இங்கு பயணித்தலினூடு காவேரியின் வரலாறு ஆராயப்படுகின்றது. இதனை நல்லதொரு இலக்கியப் படைப்பாகக் கூறலாம். இதனை ஆக்கிய எழுத்தாளர்களின் அனுபவங்கள், இங்கு கையாளப்படும் மொழி, நடை இவையெல்லாம் சேர்ந்து இந்த அபுனைவினை நல்லதொரு கலைத்துவம் மிக்க பிரதியாக மாற்றி விடுகின்றன. இன்னுமொரு படைப்பினையும் இச்சமயத்தில் நினைவு கூரலாம். அதுதான் உலகப் புகழ்பெற்ற ‘ஆன் ஃபிராங்கின் நாட்குறிப்பு’ (The Diary of Anne Frank). இதுவுமொரு அபுனைவு. இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் , நாசிகளிடமிருந்த தப்புவதற்காகப் பெற்றாருடன் ஒளிந்திருந்த காலகட்டத்தில் யூதச் சிறுமியான ஆன் ஃபிராங்கினால் எழுதப்பட்ட நாட்குறிப்பு பின்னாளில் உலகப்புகழ்பெற்ற இலக்கியங்களிலொன்றாக வைத்து மதிப்பிடப்படுகின்றது. இதன் வெற்றிக்கு அந்த நாட்குறிப்புகளில் விரவிக்கிடக்கும் சிறுமியொருத்தியின் உணர்வுகளின் அனுபவச் செறிவும், அதனை விபரிக்கும் மொழிச் சிறப்பும், குறிப்பிட்ட காலகட்டமொன்றினைப் பிரதிபலிக்கும் ஆவணமாக விளங்கும் அதன் தன்மையும் முக்கியமான காரணிகள். இவையெல்லாம் சேர்ந்து அந்த அபுனைவினை நல்லதொரு யுத்தகாலத்து இலக்கியப் படைப்புகளிலொன்றாக மாற்றிவிட்டன. கிறித்தவர்களின் புனித நூலான விவிலிய நூலினை எடுத்துக்கொள்வோம். அந்நூலில் கூறப்படும் கதைகள், அதில் பாவிக்கப்படும் மொழி, நடை இவற்றுக்காக அதனைக்கூட இலக்கியப்படைப்பாகத்தான் கருதுகின்றார்கள்.

சில படைப்பாளிகள் பைபிளில் பாவிக்கப்பட்டுள்ள நடையினைப் பாவித்து புனைவுகளைப் படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘பைபிள் இலக்கியப் பிரிவி’னில் பணியாற்றும் பேராசிரியர்கள் அநேகர். தமிழில் கூட கம்பரின், வால்மிகியின் இராமாயணம், வியாசரின் மகாபாரதம் இவையெல்லாம் ஒரு விதத்தில் சமய நூல்கள். இன்னுமொரு வகையில் பெருங்காவியங்கள். அப்பர், சம்பந்தர், சுந்தரர் , மணிவாசகரென்று பலர் படைத்த சமய இலக்கியங்கள் பக்தி இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. தொல்காப்பியம் ஒரு புனைவல்ல. ஆனால் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான நூலது.

‘ஜோன் டொன்’ (John Donne) இன் சமயச் சொற்பொழிவுகள், ‘பன்ய’னின் (Bunyan) ஆன்மீகச் சுயசரிதை, ஃபிரான்சிஸ் பேகனின் (Francis Bacon) கட்டுரைகள், டெஸ்கார்டே மற்றும் பஸ்காலின் தத்துவங்கள் இவையெல்லாம் இலக்கியங்களாகத்தாம் கருதப்படுகின்றன. பல எழுத்தாளர்கள், அரசியல்வாதிகளின் கடிதங்கள் குறிப்பாக புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள், நேரு சிறைகளிலிருந்து மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் இவையெல்லாம் இலக்கியங்களாகத்தான் கருதப்படுகின்றன. இதனால்தான் டெரி ஈகிள்டன் தனது புகழ்பெற்ற கட்டுரைகளிலொன்றான ‘அறிமுகம்: இலக்கியமென்றால் என்ன?’ என்னும் கட்டுரையில் பின்வருமாறு கேட்டிருப்பார்: ‘படைப்புத்திறன் அல்லது கற்பனைத்திறன் மிக்க எழுத்துதான் இலக்கியமென்றால் இது வரலாறு, தத்துவம் அத்துடன் இயற்கை விஞ்ஞானம் பற்றிய எழுத்துகளெல்லாம் படைப்புத்திறனற்ற, கற்பனைத்திறனற்ற எழுத்துகளென்பதைக் குறிக்கின்றதா?’ இது மிகவும் முக்கியமான கேள்வி. இன்று பிரபல வான் மற்றும் இயற்பியல் விஞ்ஞானிகள் பலர் சாதாரண வாசகர்களுக்காக மொழிச்சிறப்பும், நடைச் சிறப்பும் மிக்க நூல்கள பலவற்றைப் படைத்திருக்கின்றார்கள். ஸ்டீபன் ஹார்கிங்கின் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ பிரயன் கிறீனின் மற்றும் மிஷியோ ஹகு போன்றோரின் அறிவியல் நூல்களெல்லாம் அபுனைவுகளே ஆனாலும் ஆங்கில இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே அவை விளங்குகின்றன.

எனவே இலக்கியமென்பது வெறும் கலையென்பதுடன் மட்டும் நின்றுவிடாது அனைத்துத் துறைகளிலுமுள்ள புனைவு, அபுனைவுகளையெல்லாம் உள்ளடக்கியதாகவிருக்குமென்பதே சரியானதொரு நிலைப்பாடு. அதன் இலக்கியத் தன்மையினை நிர்ணயிப்பவையாக அப்படைப்பில் பாவிக்கப்படும் மொழி,ஆசிரியரின் அனுபவப்பதிவுகள் போன்றவையும் படைப்புத்திறன், கற்பனைத்திறன் (புனைவுகளாகவிருக்கும் பட்சத்தில்) ஆகியவையும் விளங்கும். மேலும் எல்லாத்துறைகளையும் உள்ளடக்கியதொன்றாகவுமிருக்கும்.