அக்டோபர் கவிதைகள் -2

அக்டோபர் கவிதைகள் -2

1. ஊழிப்பெருமழையில் தப்பிப் பிழைத்தவனின் பாடல்
 
– துவாரகன்

கண்ணிருந்தும்
கள்ளிப்பால் பட்டவர்போல்
குருடாயிருந்து கொன்றவரும்
சுட்டுவிரல் காட்டி இன்னும் கொல்பவரும்
இந்தத் தீவின்
சீழ்கொண்ட மானிடர் என்பேன்.

இழிந்தவரை…
நெடிக்கு நெடி சபித்துக்கொண்டே இருப்பேன்.
ஆனாலும்
இன்னும் இன்னும் தோத்திரமும் செய்வேன்.

ஆகப்பெரிய தண்டனை தந்த
ஊழிப்பெருமழையில்
எங்கள் உயிரும் உடலும் காத்த உறவுகளை
எப்படி மறப்பேன்.

தூக்கிய துவக்கைத் தாழ்த்தி
போவென்று விட்டானே ஒருவன்
முகந்தெரியா அவன் இதயம் வாழ்க.

துண்டங்களாய் தொங்கிய உடலத்தை
பிரித்துப் பொருத்தி உயிர்காத்தானே
ஒரு மருத்துவன்
அவன் பாதங்கள் என்றும் வாழ்க.

சுமந்து வந்த சுற்றம்
கூட இருந்த நட்பு
உயிர் காத்த உறவு
எப்படி மறக்கமுடியும்?

இந்தத் தேசத்தின் நன்னீர்ஓடைகள் நீங்கள்
உங்களுக்கு ஆயிரம் தடவை தோத்திரம்.
10/2012

kuneswaran@gmail.com


2. வெளிநடப்பு

– சு.துரைக்குமரன் –

சிறு அசைவைக்கூட
சுவையும் குதூகலமும்
நிறைந்து ததும்பும் நிகழ்வாக்கிவிடும்
குழந்தைமையைப் போல
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
தேடித் தெளியச் செய்தது காதல்
தீராத விளையாட்டுகளால் பிள்ளைகளானோம்
கொதித்தடங்கிய
பாலில் படியும்
ஆடையைப் போல
நம் கொண்டாட்டங்களில் படிந்து
கொண்டிருந்தது
அடிபட்ட ஆளுமையின் விசும்பல்கள்
நிலைநிறுத்த எத்தனித்த
தனித்தன்மையால்
பின்னப்பட்டு தனித்தனியானோம்
உன் நொய்மை உண்டாக்கிய
வெறுப்பும் தனிமையும்
வெளியேறிக் கொண்டிருந்த
குழந்தைமையின் மீது
வெளிச்சத்தை வாரியிறைத்துத் தளர்ந்தன
தொலைந்த முகவரிதேடி
அல்லாடிக்கொண்டிருந்தது காதல்.
    
duraikkumaran@gmail.com


3. அவர்கள்!

– தங்கம்மூர்த்தி –

வந்தார்கள்
அமர்ந்தார்கள்
தேநீர் அருந்தினார்கள்.

இல்லாததையெல்லாம்
சேர்த்தும்
கோர்த்தும்
அவனை ஏராளம் புகழ்ந்து
புல்லரிக்க வைத்தார்கள்.

ஒவ்வொரு புகழ்ச்சியிலும்
அவன் சிரிப்பை
நிறுத்துப் பார்த்தார்கள்.

எடை குறைந்திருந்தால்
புதுப்புது உத்திகளைக்
கையாண்டு
புகழுரைகளில்
புதுமை படைத்தார்கள்.

அவர்கள் புகழ்ச்சியின்
நீள அகல ஆழம் அளந்து
அவனும் அவர்களுக்குச்
செய்ய வேண்டியன செய்து
அவர்களை
மகிழ்வித்தான்.

விடைபெறும் முன்
இன்னொரு முறை
உச்சத்திற்குப்
புகழ்ந்து வைத்தார்கள்.

அவனைக் கடந்தவுடன்
அவர்கள்
ஒருவரை ஒருவர் பார்த்து
அவர்களுக்குள்
சிரித்துக்கொண்;டார்கள்.

அவர்களை நினைத்து
அவனும்
சிரித்துக்கொண்டான்.
  
அனுப்பியவர்: duraikkumaran@gmail.com


4. உன் கையில்…

– செண்பக ஜெகதீசன் –

காலம் நம் இளமையைக்
களவாடிச் சென்றாலும்,
அதன்
காலடித் தடங்களாய்
இதயத்தில் பல
அனுபவ விதைகளை
ஆழப் பதித்துத்தான் செல்கிறது..

வாழ்வு வயலின் ஈரப்பதத்தில்
முளைத்தெழும்
அவற்றின் முளைகளை
ஆலமரமாய்த் தழைக்க வைப்பதும்
ஆரைக்கீரையாய் வாடவைப்பதும்
அன்பு நண்பனே,
உன் கையில்தானிருக்கிறது…!

vsnjag@gmail.com