சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)

- வெங்கட் சாமிநாதன் -மிகுந்த சாமர்த்திய சாலி என்று நினைத்துக்கொண்டேன். நிர்வாகத்தையும் அவர் புறக்கணிக்க வில்லை. அதே சமயம் தன் வழியில், தன் முறையில் தன் பொறுப்புக்களையும் எதிர் கொண்டார். நிர்வாகத்தோடும் மோதாமல், தனக்களிக்கப்பட்ட பணியையும் சிறப்பாகச் செய்வதற்கும் வழிமுறைகள் தெரிந்திருப்பது சாமர்த்தியம் தானே. பதினெட்டாம் நூற்றாண்டு சாந்தலிங்க சுவாமிகள் யாரா யிருந்தால் என்ன? அவரைப் பற்றி எழுதியுள்ள ஆர். பங்காருசாமி என்பவருக்கு அந்த ஸ்வாமிகள் முக்கியமானவராகத் தெரிந்திருக்கிறார். தெரியாதவரைத் தெரிய வைப்பதும் ஒரு தொண்டு தானே. தமிழ் ஆலோசனைக் குழுவுக்கு இது போன்று பலர் தகுதியுடையவர் களாகப் பட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடன் மணியன், கே. மீனாட்சி சுந்தரம்(?) எழில் முதல்வன், முடியரசன்(?), தண்டாயுதம். சுகி சுப்பிரமணியம், மீ.ப..சோமசுந்தரம், சஹானே(?), மஸ்கரானஸ்(?) (இப்பெயர்கள் உதாரணத்துக்காகச் சொல்லப்படும் சிலரே) போன்றார் இதில் இடம் பெறும் தகுதியை, தமிழ் ஆலோசனைக் குழு தீர்மானித்து சிபாரிசு செய்ய  என்ஸைக்ளோபீடியா வின் அவ்வப்போதைய எடிட்டர் அதன்படி செயலாற்றியிருக்கிறார். இதில் யாரைக் குறை சொல்ல முடியும்? என்ஸைக்ளோபீடியா எடிட்டர் என்ன செய்ய முடியும்? பொறுப்பு ஆலோசனைக் குழுவினரது தான். சரி, ஆலோசனைக் குழுவினரைத் தீர்மானித்தது யார்? இந்தப் பண்டிதர்கள் தான் எல்லாம் வல்ல, அறிந்த ஞானிகளாக பெயர் பெற்றிருக்க, இவர்கள் தான் சாஹித்ய அகாடமியின் கண்களுக்கு தெரிந்திருக்கிறார்கள்.

ஆக, குற்றம் தமிழ் சமூகத்தினது தான். புலவர்/பண்டிதர் பெருமக்கள் நிகழ் காலத்தில் கால் வைக்க மறுக்க, நிகழ் காலத்தினர் பழங்காலத்தைப் பார்க்க மறுக்கிறார்கள். எல்லாரும் எல்லாக் காலத்தையும் அறிந்தவராக இருக்க முடியாது தான். ஆனால் ஒருவர் தான் அறியாத மற்றதை மறுக்க வேண்டாம். அதை அங்கீகரித்து அதற்கு உரிய மரியாதை உணர்வை வளர்த்துக்கொள்ளலாம். உரியதை உரியவரிடம் அளிக்கலாம். தமிழ் சமூகத்தில் அந்த உணர்வு அற்றுப் போய்விட்டது. என்ன செய்ய?

சரி, இருந்துவிட்டுப் போகட்டும். பொறுப்பாளராக இருந்த பண்டித உலகத்துக்கு தெரியவராத, ஆனால் பேசப்பட வேண்டிய பெயர்களைச் சேர்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் போது அதைச் செய்வோம் என்பதே ப்ரொ. மோஹன்லாலினதும் எனதுமான பார்வையும் செயல்பாடாகவுமாக இருந்தது.

ஆனாலும் மோஹன்லால் என்னிடம் பார்வையிட, முழுமை செய்யக் கொடுத்திருந்த பட்டியலில் இருந்த தேர்வுகள் எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கின. தமிழ் நாட்டில் உலவும் பண்டித உலகம், தற்காலத்தை முற்றிலும் புறக்கணித்ததாக, அதிகம் போனால் குற்றாலக் குறவஞ்சியைத் தாண்டாத உலகமாக இருந்தது, வேறு  அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு குழுவும் அதன் பார்வைக்கும் கருத்துக்கும் ஏற்பத் தானே செயல்படும்! முதல் மூன்று பாகங்களில் A யிலிருந்து N வரைக்குமான சேர்க்கைகளில் எந்தெந்த பெயர்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் சேர்க்கப் படவில்லை? மூன்றாவது பாகம் அனேகமாக தயாராகி முடியும் தறுவாயில் தான் நான் டாக்டர் ரவீந்திரன் இடைபுகுந்ததன் காரணமாக நான் அங்கு நுழைய நேர்ந்தது. ஆக N வரையிலான தொகுப்பில் நான் ஏதும் அதிகம் செய்ய முடியாது. எனக்குக் கொடுக்கப்பட்டதைச் செய்து முடிப்பது தவிர.

அது வரை ஆலோசனைக் குழுவினரும் என்சைக்ளோபீடியா தமிழ்ப் பொறுப்பாளரும் செய்யத் தவறி, பின்னர் என் ஆலோசனையின் பேரில் என்னென்ன பெயர்கள், நூல்கள் சொல்லப்பட்டு சேர்க்கப்பட்டன என்று நான் இப்போது பட்டியலிட்டால் அதற்கு நிரூபணம் ஏதும்  இல்லை. ”சும்மானாச்சிக்கும் அளக்காதே” என்னும் அலட்சியக் கைவீசலுக்கு நான் பதிலாக சாட்சியம் தரமுடியாது. ஆனால் முதல் மூன்று பாகங்களில் இப்போதும் இல்லாது சாட்சியம் தரும், கடைசி 6-வது பாகத்தில் விட்டுப் போனவர்கள் என்று சேர்க்கப்பட்டிருக்கும் பெயர்களை, நூலகளைச் சொன்னால் அது என் கட்சியை நிரூபிக்கும். முதல் மூன்று பாகங்களில் விட்டுப் போனவை என்று ஆறாவது பாகத்தில் என் தலையீட்டினால் சேர்க்கப்பட்டுள்ள A முதல் N வரையிலான பெயர்கள் நூல்கள் இதோ:

அம்பை, ஆத்மாநாம், பாகவதம், திலீப்குமார், என் சரித்திரம் (உ.வே.சாவினது), ஞானக் கூத்தன், கோபல்லபுரத்து மக்கள், கோபிகிருஷ்ணன், குரு பரம்பரைப் பிரபாவம், ஜே. ஜே. சில குறிப்புகள், கலாப்ரியா, மானுடம் வெல்லும், சி.எம். முத்து, ந. முத்துசாமி, நம்ஜீயர், நம்பிள்ளை, நாஞ்சில் நாடன் – இவையெல்லாம் ஆங்கில அகர வரிசைப் படி A- யிலிருந்து  N வரை. இவையெல்லாம் நான் எழுதிய கட்டுரைகள். அம்பையையும் என் சரித்திரம், குரு பரம்பரைப் பிரபாவம் போன்றவற்றையும் என்ஸைக்ளோபீடியாவில் சேர்க்கத் தோன்றாத அறிஞர் குழாத்தின் தகைமையை என்ன சொல்வது? நான் ப்ரோ மோஹன்லாலுடன் சில மாதங்கள் பழகி அவர் என்னுடன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தது 1989 கடைசியில் என்று சொல்லலாம். நான் மேலே குறித்துள்ளது நான் எழுதியது. இன்னம் விட்டுப் போனவை மற்றவர்கள் மூலம் எழுதிப்பெற்றது என, அன்பளிப்பு, பிரம்மராஜன், ஞானி, தமிழவன் (எல்லாம் ப.கிருஷ்ணசாமி எழுதியவை),சார்வாகன், கரிச்சான் குஞ்சு, குருதிப்புனல், மோகமுள், பத்மாவதி சரித்திரம், சக்தி வைத்தியம், ஸ்ரீராமானுஜர் (பி.ஸ்ரீ), ஆதவன் பின் (கொஞ்சம் மூச்சை அடக்கிக்கொள்ள வேண்டும்) மு.கருணாநிதி (எல்லாம் சிட்டி எழுதியவை). எல்லாம் முதல் மூன்று நான்கு பாகங்களுக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு ஆலோசனை சொன்னவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. மு. கருணாநிதி கூட தெரியவில்லை. அல்லது அம்பையும் மோகமுள்ளும் வேண்டாம் என்று ஒதுக்கியது போல மு. கருணாநிதியும் அவர்களால் ஒதுக்கப்பட்டுள்ளார். எழில் முதல்வனும் தண்டாயுதமும் பெற்ற தகுதி கூட மு. கருணா நிதிக்குக் கிடைக்கவில்லை. அபிப்ராயங்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால் கருணாநிதியின் பிராபல்யத்தை, பாதிப்பை யாரும் ஒதுக்கிவிட முடியாது. இதைச் சொல்ல நான் சாஹித்ய அகாடமிக்குள் நான் சிபாரிசில் நுழையவேண்டி யிருந்தது.

அது மட்டுமல்ல. என்னால் ஒருவருக்கு நியாயம் செய்ய முடியாது என்று தோன்றினால் அதைச் செய்யக் கூடியவர் இவர் என நான் ஒருவரைச் சுட்டிக்காட்டினால், அவருக்கு அதைக் கொடுப்பதில் மோஹன்லால் தயங்கியதில்லை. இப்படித்தான் கருணாநிதியைப் பற்றி எழுத சிட்டியும் பிரம்மராஜனைப் பற்றி எழுத ப. க்ருஷ்ணசாமியும் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அப்போது என்னைக் கரித்துக்கொட்டிக்கொண்டிருந்த பலர், தமிழவன், தருமு சிவராமு, ஞானக் கூத்தன் எனப் பலர் சில உதாரணங்கள் கொடுத்தால் போதும். எல்லாவற்றையும் முழுப் பட்டியல் இட வேண்டிய அவசியமில்லை. இவர்கள் எல்லாம் இடம்பெற்றார்கள்.

சொந்த விருப்பு வெறுப்புக்கள் அற்று செயல்படுதல், தம் போதாமையை அங்கீகரித்தல், இன்னொருவர் தகுதியை அங்கீகரித்து அவர்களுடன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பன போன்ற சில அடிப்படை தகுதிகள் ஒரு ஸ்தாபனத்தில் பொறுப்பும் அதிகாரமும் பெறுகிறவர்களுக்குத் தேவை. அது நம்மவர்களிடம் இல்லாமலேயே போகிறது.

நான்கு ஐந்து பாகங்களில் தமிழ் பற்றிய பகுதியை எனக்குத் தெரிந்த அளவு முழுமை செய்ய முடிந்தது. காரணம் மோஹன்லால் என்னிடம் வைத்த நம்பிக்கை. ஆனால் அவர் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்வதைச் செய்தார் என்றில்லை. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் தமிழ் இலக்கியத்திற்கு அளித்த பங்கு நம் எல்லோருக்கும் தெரியும். அதை ஒதுக்கி விட்டு தமிழ் இலக்கியம் பற்றிப் பேசமுடியாது. ஆனால் மோஹன்லால் ஒப்புக்கொள்ளத் தயங்கினார்.

“அப்படிப் பார்த்தால் பங்களா தேஷ் வங்க எழுத்துக்கள், பாகிஸ்தானின் பஞ்சாபி, உருது, சிந்தி இலக்கியம் எலலாம் வந்து சேரும். நாம் பார்க்க வேண்டியது இந்திய இலக்கியம் மாத்திரம் (இது Encyclopaedia of Indian Literature)’. என்றார்.

’அது குறைபட்டதாகுமே. நாஸ்ருல் இஸ்லாம், மண்டோ, எல்லாம் எங்கே போவார்கள்?. தாகூரை ஒதுக்கிய, பங்களாதேஷே ஆகட்டும், சாத்தியமா? என்று கேட்டேன்.

கொஞ்ச நேர அமைதி தேவைப்பட்டது அவருக்கு.

“அப்படியானால் Sri Lankan Tamil Literature என்று பொதுவாக எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் அடக்கி எழுதிக்கொடுங்கள் என்றார்.

“கே எஸ் சிவத்தம்பி முக்கால் வாசி நேரம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தான் இருக்கிறார். தருமு சிவராமூவும் தான்.1961 லிருந்து இங்கு தான் எழுத்தும் வாசமும்” என்றேன்.

சரி அவரகள் இரண்டு பேரை மாத்திரம் சேர்த்துக் கொள்ளலாம்”.

விபுலானந்த அடிகள், யாழ் நூல் பற்றி நான் வாதிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆறுமுக நாவலர் ஏற்கனவே முதல் பாகத்தில் சன்னதம் கொண்டிருந்தார்.

பின் வருங்களில், சிவத்தம்பி பற்றி நான் இந்திய சாஹித்ய அகாடமி என்ஸைக்ளோபீடியாவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் என்று கேள்விப்பட்டு ( எப்படித் தெரிந்ததோ?) சிவத் தம்பி மிகவும் சந்தோஷப்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து, ஓவியர் சனாதனன் இங்கு வந்த போது அந்த கட்டுரையை ஒரு காபி Xerox செய்து எடுத்துவரச் சொல்லி அனுப்பியிருந்தார் சிவத்தம்பி   

எனக்கு சந்தோஷமாக இருந்தது. பின் பழகிய பெருமாள் ஜீயர், திருமங்கை ஆழ்வார், வடக்கு வீதிப் பிள்ளை தொடங்கி, விநோத ரச மஞ்சரி, எல்லாம் கடந்து வசன சம்பிரதாயக் கதை, வ.ரா. வண்ணநிலவன் வரை,  ப.சிங்காரம், எஸ்.வி.வி. சுப்பிரமணிய சிவா ச.து.சு. யோகி தொடங்கி தோப்பில் முகம்மது மீரான், பூமணி, யதுகிரி அம்மாள், விட்டல் ராவ், தாமஸ் வந்தார், வெக்கை, வைதீஸ்வரன், வரை யாரும் விட்டுப் போகாது சேர்க்கப் பட்டனர். எழுதப்பட்டனர்.

அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அலுவலகம் செல்வேன். என்னிடம் ப்ரூஃப் பார்க்கக் கொடுப்பார். இடையிடையே வம்பளப்பும் கலக்கும். அவர் எங்கோ தில்லியின் புறநகர் ஒன்றில் வீடு வாங்கியிருந்தார் போலும். அங்கிருந்து பஸ்ஸில் தான் வருவார். எனக்குத் திகைப்பாக இருக்கும். மிக எளிமையானவர். சரி. ஆனால் சில சௌகரியங்களைக் கவனிக்கலாம். எங்கள் அலுவலகத்தில் இருப்பவர் பஸ்ஸில் பயணம் செயபவர் குறைவு. ஒரு லாபரேட்டரி அட்டண்டண்ட் (கடைநிலை ஊழியர்) சில சமயம் தன் காரை எடுத்துக் கொண்டு வருவான் ஆபீசுக்கு. நடை தூரம் தான் அவன் வீடு. இருப்பினும் வாழ்வில் தன் வெற்றியைக் காண்பித்துக்கொள்ளும் ஆசை. மோஹன்லால் அவ்வளவு தூரம் பஸ்ஸில் வருவது வரும்போதும் வீடு சேரும்போதும் அயற்சியூட்டும். இருப்பினும் அவர் பஸ்ஸில் பயணிப்பதில் பிடிவாதமாக இருந்தார்.

சுமார் ஒன்றரை வருடம் நெருங்கி ஒருவரை ஒருவர் புரிந்து, நம்பிக்கை கொண்டு பழகிவிட்டோம். ஒரு நாள்,

”நீங்கள் எப்போது ரிடையர் ஆகப்போகிறீர்கள்? என்று கேட்டார்.

”இன்னம் கொஞ்சம் மாதங்கள் போகணும். 91 மே மாதக் கடைசி தினத்தோடு முடிவடைகிறது.” என்றேன். என்ன விஷயம்? என்று கேட்டேன்.

பின் என்ன செய்வீர்கள்? சென்னைக்குப் போவீர்களா, இல்லை இங்கேயே இருப்பீர்களா? என்று பதில் கேள்வி தான் வந்தது.

“நான் தில்லியில் 45 வருடங்களுக்கு மேலாக இருந்து விட்டேன். எனக்குப் பிடித்துப் போயிற்று. இருந்தாலும் பழம் ஊர் நினைவுகள், அதை நினைத்தும் ஒரு ஏக்கம். முடிந்த வரை இங்கு இருக்கலாமே என்று நினைக்கிறேன்” என்றேன். பேச்சு இப்படியே போய் எங்கோ கழன்றுகொண்டது.

பின் எப்போதோ சில மாதங்கள் கழித்து ஒரு செமினாருக்குப் போயிருந்த போது, நானும் சாஹித்ய அகாடமி செக்ரடரி இந்தர் நாத் சௌதுரியும் அகாடமியின் பாத்ரூமில் ஒருவர் உள்ளே போக இன்னொருவர் வெளியே வர மோதிக்கொள்ள இருந்தோம். சட்டென நின்ற இந்தர் நாத் சௌதுரி, என்னப் பார்த்து, ”உங்கள் bio data வை மோஹன்லாலிடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு பாத் ரூமுக்குள் நுழைந்தார். அவருக்கு அவசரம் அதற்கு மேல் பேசவில்லை.

அடுத்த அலுவலக வேலைநாள் அன்று மோஹன்லாலைப் பார்த்தேன். எடுத்த எடுப்பில்,
 
“நீங்கள் ரிடையர் ஆனதும் இங்கே வந்து விடுங்கள்” என்றார்.
 
”நான் இங்கே தானே இருக்கிறேன். இரண்டு வருஷமாக” என்றேன்.
 
“அப்படியில்லை. On a regular basis. As an employee. உங்கள் bio data-வைக் கொடுங்கள். நான் செக்ரடரியிடம் பேசிவிட்டேன். அவரும் சம்மதித்துவிட்டார்” என்றார்.

”அதெல்லாம் வேண்டாம். இவ்வளவு காலம் காலை 10-லிருந்து மாலை 5.30 வரை பயின்ற ட்ரில், செய்த சிறைவாசம், போதும். இனி என் இஷ்டத்துக்கு நான் வேலை செய்ய விடுங்களேன். 

”அதெப்படி? 5 பாகங்கள் முடிந்தாயிற்று. இனி index, பின் விட்டுப்போனது எல்லாவற்றுக்குமாக  ஒரு  6-வது வால்யூம். பின்னர் அது முடிந்ததும் முழுதையும் revise செய்து இரண்டாம் பதிப்பு கொண்டு வரவேண்டும். நிறைய ப்ளான் இருக்கு. சொன்னதைக் கேளுங்கள். உங்க qualification, publications எல்லாம் குறித்துக் கொடுங்கள்” என்றார்

”என் qualifications ஐ எழுதிக்கொடுத்தால் நீங்கள் வேலை கொடுக்க மாட்டீர்கள். பின் எனக்கு உள்ளதும் போகும்”

என்ன சொல்கிறீர்கள்? அது எப்படிப் போகும்?

”ஆமாம். இங்கு நீங்கள் என்னை வேலைக்கு எடுத்துக்கொள்ளும் தகுதி ஏதும் எனக்குக் கிடையாது. ஒரு சாதாரண காலேஜ் டிகிரி கூட எனக்குக் கிடையாது”.

சிறிது நேரம் பேசாது இருந்தார். பின் அமைதியாக, “சரி இத்தோடு இதை விட்டு விடுவோம். பழையபடியே தொடரலாம். அது தான் சரி.” என்று முடித்தார்.

இதனிடையே, லைப்ரேரியனாக இருந்த விஜயலக்ஷ்மி, ஆங்கில Indian Literature- ஆசிரியராக இருந்த D. சாம்பசிவ ராவ், பின் அவரைத் தொடர்ந்த கே. சச்சிதானந்தம், பாரதீய சம்காலீன் சாஹித்யவின் ஆசிரியராக இருந்த கிர்தர் ராட்டி எல்லோருடனும் பரிச்சயமும் நெருங்கிய சினேகமும் ஏற்பட்டது. எல்லோரும் என் மிகுந்த மதிப்புக்கு உரியவராயினர். அவர்கள் மதிப்பையும் நான் பெற்றிருந்தேன் (கிரிதர் ராட்டி மூலம், எங்கோ போக இருந்த ஒரு பரிசை, தில்லிக்கு வரவழைத்து வண்ணநிலவனுக்கு பெற்றுத் தர முடிந்திருக்கிறது) இவ்வளவு காலம் அனேகமாக இரண்டு தலைமுறைக் காலம் தில்லியில் இருந்து இத்தகைய மனிதர்களின் நட்பையும் மதிப்பையும் இப்போது தான் பெறவேண்டுமென்று விதிக்கப்பட்டிருக்கிறதா? என்று பின்னர் நினைத்துக்கொண்டேன். அப்போது எதுவும் இப்படித் தோன்றவில்லை. எல்லாம் ஒரு பழக்கப்பட்ட அன்றாட நடைமுறையாக மாறினாலும் சந்தோஷமாக, ஒவ்வொரு சந்திப்பும் உற்சாகம் தரும்  அனுபவம் என்று தோன்றும் வகையில் இருந்தது.

ஒரு நாள் பதினொன்று பன்னிரண்டு மணிக்கு உள்ளே போனதும் எதிர்ப்பட்டது லாலாஜி தான்.

“நீங்கள் நேற்று வரவில்லையே. நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நேற்று காலை எதிர்த்தாற்போல் சக்கர் (roundabout) இருக்கில்லையா? எப்போதும் போல அங்கு பஸ் திரும்பும்போது  சாப் இறங்கியிருக்கிறார். ஆனால் எப்படியோ இந்தத் தடவை கால் இடறி கீழே விழுந்து ப்ளாட்ஃபார்த்தில் அவர் தலை மோதி பலத்த காயம். அவ்வளவு தான். சாப் பிழைக்கவில்லை”

என்னிடம் நெருக்கமாக சினேகமாக பழகிய இன்னொருவரையும் நான் இழந்தேன். ஒரு சினேகமான பண்பு நிறைந்த ஒரு உலகம் மறைந்து வெறுமை தான் முன்னின்றது.

ஆறாவது பாகத்திற்கு பரம் அபிசந்தானி என்ற சிந்திக்காரர் வயதில் எல்லோருக்கும் மூத்தவர். மோஹன்லாலின் கீழ் சிந்தி இலக்கிய பகுதிக்கு பொறுப்பேற்றிருந்தவர் மோஹன் லாலின் மறைவுக்குப் பின் அவர் இடத்தில் அமர்த்தப் பட்டார்.  ஆறாவது வால்யூம் அவர் பொறுப்பிற்கு விடப்பட்டது

பாபர் மாதிரி ஹுமாயுன் இல்லை. ஹுமாயூன் மாதிரி அக்பர் இல்லை. கடைசியில் ஔரங்கசேப் முன்னவர் யார் மாதிரியும் இல்லை தானே. பரம் அபிசந்தானி யின் பார்வை வேறு மாதிரித் தான் இருந்தது.

“என்ஸைக்ளோபீடியா என்றால் தகவல் தரவேண்டும். அவ்வளவு தான். பக்கம் பக்கமாக நீண்ட கட்டுரைகள் எல்லாம் தேவையில்லை. அதிகம் போனால் யாராயிருந்தாலும் பத்து பதினைந்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.” என்றார். அங்கு சாஹித்ய அகாடமியி லைப்ரரியில் இருந்த என்சைக்ளோபிடியா பிரிட்டானிக்கா வைப் பார்த்தோரோ இல்லை கலோனிய ஆதிக்கத்தின் எச்ச சொச்சங்களிலிருந்து விடுபடவேண்டும் என்ற தீவிரம்  கொண்டிருந்தாரோ தெரியாது. உ.வே.சா வின் என் சரிதம் பத்து பதினைந்தே வரிகளுக்குள் அடக்கப்பட்டது.

நான் தில்லியை விட்டு சென்னை வந்து கொண்டிருக்கும் போது அப்போதைய செக்ரடரி சச்சிதானந்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. என்ஸைக்ளோபீடியாவின் திருந்திய பதிப்புக்கு நான் தமிழ்ப் பகுதியின் Co-ordinator ஆக இருக்க வேண்டும் என்று சொல்லி அத்துடன் முதல் பதிப்பின் ஆறு வால்யூம்களையும் அனுப்பி வைத்திருந்தார். அவர் விரும்பியும், இடை நின்றவர்கள் அது நடக்க விடவில்லை.

பெற்றது என்சைக்ளோபீடியாவின் முதல் பதிப்பு ஆறு வால்யூம்கள். அப்போது தான் முதல் தடவையாக அவற்றைப் பார்க்கிறேன். இழந்தது மோஹன்லால் என்னும் ஒரு சிறந்த மனிதரை, நண்பரை, ஒரு சிறந்த அறிவாளியை.

vswaminathan.venkat@gmail.com