நெடுங்கவிதை: டி.எஸ்.எலியட்டின் ‘பாழ்நிலம்’ [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)]

2. சதுரங்க விளையாட்டு

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'அவள் வீற்றிருந்த நாற்காலி ஜொலிக்கும் சிம்மாசனம்,
தகதகத்தது பளிங்குத்தரைமேல். நிலைக்கண்ணாடியில்
ஒரு மதுரஸ திராட்சைக்கொத்தின் சித்திரம்
அதில் பொன்னிற கியூபிட் எட்டிப்பார்த்தான்.
(இன்னொரு காதல் தேவன் அவள் விழிகளை சிறகால் மறைக்க)
எழுதினாள் பக்கச்சட்டங்கள் இரட்டிப்பாக்கிய
தூங்காவண்ணமணி விளக்குச்சுடரில் பட்டுத்தெறித்தது
மேஜையும் அவள் வெல்வெட்டுப் பேழை ஆபரணங்களும்.
அள்ளிவீசிய் வெண்கிரணங்களில் ஐக்கியமான ஒளி ஜாலங்கள்
திறந்திருந்த தங்கச்சிமிழ்கள் வர்ணக்குப்பிகள் அகத்தே
திரவம், பொடி, குழம்பென்று டப்பிகளில் நெளிய
வண்ண வண்ண செயற்கை வாசனாதி திரவியங்கள்
சிந்தையை மயக்கி செயலிழந்து ஊசலாடச் செய்யும்.
வீசும் சாளரத்தென்றலில் மெழுகுத் தீபங்கள் நடனமாடும்
சித்திர விதானத்தில் எழில் கோலங்களை
புகைமண்டலங்கள் எழுப்பும் பாங்கில்
கடல்கட்டைகள் எரியும் தாமிர அடுப்பில்
கணப்பு ஆரஞ்சு நிறத்தொல் தகிரும்.
அதன் சுவரில் திமிங்கிலம் நீந்தும் மாடத்தில் ஓர் அடர்வனம்.
மங்கிய நிலவொளியில்  ஒருநெஞ்சை உருக்கும் ஓவியம்.
அதில் ஒரு புராணக் காட்சி
கொடூர டார்க்குஸ் மன்னன்தன் கொழுந்தியாள்
பிலோமிலாளை கடூரமாய் கற்பழித்து
அவள் குயிலாகச் சபிக்கப்பட்டதில் இன்றும் அவள்
கானகத்தில் தன் ஊமைச் சோகத்தை கூவித்திரிகிறான்.
‘ஜக், ஜக்’ என்று இன்னும் அவள் புலம்புவது
இன்றைய ஜடக்காதுகளுக்கு கேட்காது. இப்படி எத்தனையோ சித்திரங்கள் பேசின.
அவைகளில் வெறித்த உருவங்கள் விரக்தியால்
காலத்தால் கருகிய தங்கள் கதைகளைச் சொல்லின.
அறையின் அமைதி கிழித்து அந்நேரம் மாடியில் யாரோ ஏறும்
காலடி ஓசையில் ஒய்யாரமாய் வளைந்து திரும்பினாள்
கணப்பின் கதகதப்பில் சிங்காரியின் கேஸங்கள்
ஐந்தாய் வகிந்திடும் ஜாலத்தில்
காதல் மொழிகள் பொங்கி உதிர்ந்தன.

‘இன்றிரவு என்னுடன் தங்காவிட்டால் செத்தொழிவேன்.
என் தேகம் நடுங்குகிறது. மகாமோசமானது என் உடல்நிலை.
பேசுங்கள் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள். பேசுகிறீர்களா இல்லையா இப்போது
என்ன யோசனை, என்ன சிந்தனை ‘என்ன’ தான் என்று சொல்லுங்கள்.
உங்கள் நினைப்பு எனக்கு ஒரு போதும் விளங்கவில்லை. சிந்தனை

செத்தவர்களின் எலும்பைக்கூட விடாது கடித்துத் தின்னும்
எலிவளைக்குள் நாம் ஜீவிக்கிறோம் என்பது என் நினைப்பு.

‘அது என்ன சப்தம்?’

 கதவடியில் வீசும் காற்று
இப்போது என்ன சத்தம்? என் செய்கிறது காற்று?’
ஒன்றுமில்லை மீண்டும் ஒன்றுமில்லை.
   – செய்யுங்கள்’
‘உங்களுக்கு ஒன்றுந்தெரியாதா? நீ எதையும் பார்ப்பதில்லையா?
ஏன், எதையும் நினைப்பது கூட இல்லை? அப்படித்தானே?’
 நான் நினைத்துப் பார்க்கிறேன்
அந்த முத்துகள் அவன் கண்களே தான்.
‘நீ உயிரோடுதான் உலவுகிறாயா (அ) செத்துவிட்டாயா? உன் மண்டை என்ன மரக்கட்டையா?’
     ஆனால்
ஓ-ஓ-ஓ-ஓ- என்றொலிக்கும் அந்த ஷேக்ஸ்பியரின் நடன இசை
ஆஹா என்ன அருமை அது.
எப்படியெல்லாம் மதியை மயக்குகிறது. எத்துணை அறிவு செறிந்தது.
‘அய்யோ, இப்போது நான் என்ன செய்வேன், என்ன செய்வேன்?’
‘இப்படியே தலைவிரிகோலமாய் நடுத்தெருவில் ஓடப்போகிறேன்’
‘சரி, நாளைய பொழுதை எப்படிக் கழிப்போம்? சொல்லுங்கள்,
நமது தினசரி ஜோலிதான் என்ன?
பத்து மணிக்கு சுடுநீரில குளித்து,
மழை பெய்யின் , மாலை நாலு மணிக்கு மூடியகாரில்
நகர்வலம் போய் தூக்கம் இமைகளை சொருகும் வரை
ஒரு சுற்று சதுரங்கம் ஆடி யாராவது
கதவை தட்டும் வரை காத்திருப்பதுதான்.
வில்லியின் வீட்டுக்காரன் சேனையிலிருந்து திரும்பியதும்
சுற்றி வளைக்காமல் நேரில் சொல்லிவிட்டேன்.

நேரமாகிறது தயவு செய்து சீக்கிரம்
ஆல்பர்ட் வந்துவிட்டான். இனியாவது கொஞ்சம் லஷணமாக இரு.
பல்வாங்க கொடுத்த பணத்தை என்ன செய்தாய் என்று கேட்பான்.
அதஇ கொடுக்கும்போது நானும் கூட இருந்தேன். உடனடியாக சொத்தைப் பற்களை
பிடுங்கி நல்லசெட் கட்டிக்கொள் பார்க்க சகிக்கவில்லை எனக்குக்கூட என்றாள்.
பாவம் ஆல்பர்ட் நாலு வருஷம் பட்டாளத்தில் கழித்துவிட்டு
இனியாவது சந்தோஷமாக இருக்கலாம் என்று வருகிறான்.
அவனை உன்னால் திருப்திப்படுத்த முடியாவிட்டால்
எத்தனையோ யுவதிகள் இருக்கிறார்கள் என்றேன். ஓ, அப்படியா சமாச்சாரம் என்றாள். ஆம்.
அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளேன் என்றேன்.
இது எவளின் ஜாலம் தெரியும் என்றவள் என்னைப் பார்த்து கருவினாள்.

நேரமாகிறது தயவு செய்து சீக்கிரம்
உனக்கு இஷட்டமில்லையென்றால் விட்டுவிடு.
எத்தனையோபேர் காத்திருக்கிறார்கள் எடுத்துக்கொள்ள
ஆல்பர்ட் வந்தபின் முன்பே சொல்லவில்லை என்றுந் நினைக்கக்கூடாது
இப்படி மூதாட்டி போல் காட்சியளிக்க எனக்கு வெட்கமாயில்லை.
(அவளுக்கு பிராயம் முப்பத்தி ஒன்றுதான்)
முகத்தை தூக்கிப்பிடித்து நான் என்ன செய்வது
கலைப்பதற்கு சாப்பிட்ட மாத்திரைகளின் பக்கவிளைவு இது.
(ஏற்கனவே அவளுக்கு ஐந்து குழந்தைகள். கடைசியாள் ஜார்ஜ் பிரசவத்தில் செத்துப்பிழைத்தாள்.)
எல்லாம் சரியாகிவிடும் என்று மருத்துவர் சொல்லியும் குணமாகாமல் அப்படியேதான் இருக்கிறது.
சரியான முட்டாள் நீ என்றேன் ஆல்பர்ட். உன்னை சும்மாவிடாவிட்டால்
அப்போது என்ன செய்வது பிள்ளைகள் வேண்டாமென்றாள் கல்யாணம்தான் எதற்கு?

நேரமாகிறது தயவுசெய்து – சீக்கிரம்
அந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்பார்ட் வீடுவந்ததும் கொதிக்கும் மாமிசக்
குழம்பு விருந்து இன்னும் சூடுபறக்க என்னையும் அழைத்தார்கள்.

நேரமாகிறது தயவுசெய்து – சீக்கிரம்
நேரமாகிறது தயவு செய்து சீக்கிரம்
இரவு வணக்கம் பில் இரவு வணக்கம் லியோ இரவு வணக்கம் மே
எல்லோருக்கும் போய் வருகிறோம் டா, டா. இரவு வணக்கம், இரவு வணக்கம்.
போய் வாருங்கள் பெண்மணிகளே, போய் வாருங்கள்.
இனிய ஸ்திரீகளே – எல்லோரும் போய் வருவோம்.

[அடுத்த இதழில் அத்தியாம் மூன்று, ‘அக்னி உபதேசம்’,  பிரசுரமாகும்.]

ngiri2704@rogers.com