(2) எண்பதுகளில் தமிழ் இலக்கியம்!

- வெங்கட் சாமிநாதன் -நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வேலை தேடி பம்பாய் வந்த கதையைச் சொல்கிறார். அதில் தான் சந்திக்க நேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வெளி வேஷங்களையும், சாதி உணர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாகவே எவ்வித தயக்கமின்றி கேலியுடன் தான் எழுதுகிறார். கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை. தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வை, நடை முறையை, மதிப்புகளை, சமூகத்தை அவர் செய்யும் கிண்டல், அதில் அவரது சுய எள்ளலும் சேர்ந்தது, எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் ரகம். இன்றைய தமிழ் சமூகத்தின் மதிப்புகளின் அது எதையெல்லாம் தன் வெற்றியாகக் கருதி வியக்கிறதோ அந்த அலங்கோலங்கள், கீழ்த்தரங்கள், ஆபாசங்களையெல்லாம் மதிப்புகள், வாழ்க்கைத் தர உயர்வு, வெற்றி என்று சொல்லிப் பெருமைப் பட்டூக் கொள்வது, தமிழ் மொழியையே கொச்சைப்படுத்துவதும் ஆபாசமாக்குவதும் ஆகும். கோபிகிருஷ்ணன் தனக்கென தனி ஒரு நடையையும், எழுத்து வடிவையும், உருவாக்கிக்கொண்டுள்ளார், தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் பாணியில் சமூகத்தைக் கிண்டல் செய்வதற்கு. அவர் போல ஒரு நடை, எழுத்து பாணி, கிண்டல், அவரதேயான ஒரு பார்வை கொண்ட இன்னொரு எழுத்தாளர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றிய எதுவும் அவரது தனித்துவத்தையே சொல்லும்.

இப்போது அம்பையின் பக்கம் திரும்பவேண்டும். கோபம் கொப்பளிக்கும் பெண். அவர் தன் கோபத்தை மறைப்பதில்லை. வேறு எதுவாகவும் மறைத்துக் காட்டுவதில்லை. அவர் தன் கோபத்தை, கோபமாகவே அறியப்பட விரும்புகிறவர். அதற்கு ஏதும் அலங்காரங்கள், மூடி மறைப்புகள் இல்லாது தன் கோபத்துக்கு காரணமானவை இரையாக வேண்டும். அச்சீற்றத்தை அனுபவிக்க வேண்டும். செய்வதறியாது நெளியவேண்டும். தன் சீற்றத்தை சீற்றமாகவே கொட்டித்தீர்க்கும் பெண்ணியவாதி. பெண்ணியம் அவருக்கு இன்றைய பெண்குலம் தரிக்கும் ஃபாஷன் அல்ல. கோஷிக்கும் கொள்கை அல்ல. அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்தவர். முதலில் எல்லா பெண்களையும் போல், சம்பிரதாயத்தில் தோய்ந்த எல்லாரும் மெச்சும் மரபு சார்ந்த, செண்டிமெண்டுகளில் மனம் மகிழும் பெண்ணாகத் தொடங்கி, இடது சாரிப் பார்வைகளில் சில காலம் வாழ்ந்து, இப்போது பெண்ணியத்தில் வந்து சேர்ந்துள்ளார். வேஷம் தரித்து உலவும் எல்லா ரகங்களின் உண்மை சொரூபத்தையும் அவரால் பார்க்க முடிந்திருக்கிறது,  வெகு ஜன பத்திரிகை ஒன்று, அவரது சிறு கதை ஒன்றை வெகு சுவாதீனமாகத் தன் பக்கங்களில் பிரசுரித்துக்கொண்டது, அம்பையைப் புகழ்ந்து கூறும் சில வரிகள் அறிமுகத்துடன். அம்பையிடமிருந்து இதற்குப்பதிலாக வந்தது அவரது சீற்றம் தான் ” என்னிடமிருந்து முன் அனுமதி கேட்டுப் பெற்றிராமல் உங்கள் இஷ்டத்துக்கு என் கதையை உங்கள் பத்திரிகையில் பிரசுரித்துக்கொள்ள உங்களுக்கு என்ன தைரியம்?. .அப்படி நீங்கள் என்னைக் கேட்டிருந்தால் கூட என் கதையைப் பிரசுரிக்க உங்கள் பத்திரிகைக்கு சம்மதம் தந்திருக்க மாட்டேன். எனக்கு நீங்கள் உங்கள் ;பத்திரிகையில் என் எழுத்துக்களுக்குத் தந்திருக்கும் ;போலித்தனமான பாராட்டுரைக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஏனெனில், உங்கள் பத்திரிகையின் வெளிச்சொல்லப் பட்டவையோடோ, அல்லது சொல்லப்படாத உள்நோக்கங்களுடனே எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது.

அந்தப் பத்திரிகை தன் பாராட்டுக்கும் இத்தகைய எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்திருக்குமா என்ன? அம்பை அதிகம் எழுதுபவரில்லை. கிட்டத்தட்ட பத்து வருடகால இடைவெளிக்குப் பிறகு “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்று அவரது சிறுகதைகளின் தொகுப்பு வெளிவந்தது. அவரது எழுத்து சிறுகதை என்ற வடிவத்தில் தான் இருக்கும் என்பதில்லை. Fable, tale, அல்லது ஒரு சாதாரண கதையாடல் என்று பல வடிவங்களிலும் அவரது திறமையைக் காட்டும் தொகுப்பு இது. அத்தோடு அவரது பலதரப்பட்ட அனுபவங்களையும், நிகழ்விடங்களையும், அமெரிக்க நகரம் ஒன்றின் லத்தீன் அமெரிக்க குடியிருப்பிலிருந்து, தமிழ் நாட்டின் தென்கோடியில் இருக்கும் ஒரு கிராமம் வரை, காணலாம். இத்தொகுப்பின் கதைகளில் ஒரு கலவையாகத் தான்  நாம் சந்திக்கும் மனிதர்களும். இருப்பார்கள். இன்றைய தமிழில் அம்பை ஒருவர் தான் ஒரு உண்மையான பெண்ணிய எழுத்தாளர். அவருடைய சீற்றம் அவர் உதட்டிலிருந்து உதிர்வதில்லை. அவரது ரத்த நாளங்களில் ஓடும் ஒன்று. அவர் ஒருத்தரிடம்  தான் பெண்ணிய சீற்றம், அனுபவமாக வெளிப்பட்டு  கலையாக மாற்றம் பெற்றுள்ளது.

வெடித்துச் சிதறும் வெப்பத்தைத் தாண்டி ஒரு மென்மையும் சாந்தமுமான வெளிப்பாட்டுக்குத் திரும்பினால், பூமணி அமைதியாக, தன் தீர்மானமான மனதுடனும், தன் நம்பிக்கைகளில் உறுதிப் பாட்டுடனும் இதுகாறும் பேசப்படாத தாழ்த்தப்பட்ட மக்களின் உலகை நம் முன் வைப்பதைக் காணமுடிகிறது. சமூகத்தில் தீண்டத் தகாதவர்களாக இருந்தவர்கள், நிகழ் கால தமிழ் எழுத்துக்களில் கூட தீண்டத் தகாவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த எண்பதுகளில் நம் கவனத்திற்கு வருவது கொலைக் குற்றத்துக்கு ஆளாகி, சட்டத்திலிருந்து தப்பி, காட்டில் பதுங்கியிருக்கும் இருவரின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை வெகு நுணுக்கமாக சித்தரிக்கும் பூமணியின் நாவல் வெக்கை. வெகு இறுக்கமும் அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலும், வாழ்வதற்குப் போராடும் தனக்குத் தானே விதித்துக்கொண்ட துன்பங்களும் நிறைந்த, மிக திறமையுடன் எழுதப்பட்டுள்ள விவரிப்பு என்று சொல்ல வேண்டும். பூமணியின் எழுத்துத் திறனுக்கு ஒரு சான்று.

எண்பதுகளின் எழுத்துக்கள் பற்றிச் சொல்லும் இந்தக் கட்டுரையின் புனைவு இலக்கிய பகுதியின் கடைசியில் மூன்று புத்தகங்கள் பற்றி, முதலில் இரண்டு நாவல்கள், பின் தன் புனைவுகளின் பின்னணி பற்றிய சுயசரித்திரக் குறிப்புகள் பற்றிப் பேசவேண்டும். ஒன்று, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள், பின் இரண்டாவதாக, சம்பத் தின் இடைவெளி என்ற இரு நாவல்கள். மூன்றாவதாக வருவது லா.ச. ராமாமிருதத்தின் பாற்கடல். மூன்றும் மற்றதிலிருந்து வெகுவாக மாறுபட்ட எழுத்துக்களைக் கொண்டவை. எழுத்தின் குணத்திலிருந்து, இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நம்மிடம் எழுப்பும் எதிர்வினை வரை, வேறுபட்டவை. இருப்பினும், ஒவ்வொன்றும், புனைவானாலும், அதன் ஆசிரியரின் ஒரு வகையான சுயசரிதம் என்றே சொல்லத் தோன்றும். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஒரு கற்பனையான எழுத்தாளனைப் பற்றியது. அந்த எழுத்தாளன் ஒரு வகையில் சுந்தர ராமசாமியையே பிரதிபலிப்பவன் என்று சொல்ல வேண்டும். இன்னொரு வகையில் சுந்தர ராமசாமி தான் என்னவாக இருக்க விரும்புகிறாரோ அந்த விருப்பத்தின் பிரதிபலிப்பு என்று சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமி இதை மறுப்பார் தான். தன்னைச் சுற்றியிருக்கும் எழுத்தாளர் உலகத்தைப் பற்றிய அவருடைய சிந்தனைகளைத் தான் மறைமுகமாக இதில் பிரதிபலித்துள்ளார் என்று சொல்ல வேண்டும். சமீப காலத்தில் வேறு எந்த புத்தகமும் இதற்கு எதிராகவும் சார்பாகவும் இவ்வளவு கொந்தளிக்கும் கருத்து மோதலை எதிர் கொண்டுள்ளதா என்பது சந்தேகம் தான். அதில் ஆச்சரியமும் இல்லை தான். சுந்தர ராமசாமி தன் கதை சொல்லும் உத்திகளிலும் எழுத்திலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய உருவையும் நடையையும் கைக்கொள்கிறார் என்பதற்கும் சிறந்த உதாரணம் என்று இந்த நாவலைச் சொல்லவேண்டும்.
சம்பத் தன்  இடைவெளி  நாவலில், தன்னை அறியாதே தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த மரணத்தை எழுதியதாகவே தோன்றுகிறது. மரணத்தைப் பற்றிய தன் அறிவு பூர்மான சிந்தனைகளுக்கு ஒரு இலக்கிய வடிவம் சிருஷ்டித்துக்கொண்டிருக்கும் போது, பல வருடங்களாக தன் மனத்தில் அலையாடிக்கொண்டிருந்த மரண பய பிரமைகளுக்கும் ஒரு உருக்கொடுத்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்நாட்களில், மரணம் பற்றிய சிந்தனைகளும் டாஸ்டாவ்ய்ஸ்கியும் தான் அவர் மனத்தையும் சிந்தனைகளையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. இதன் காரணமாகவே அவர் நண்பர்களிடையே கேலிக்கும் ஆளானார். அது அவருக்குத் தெரிந்தே இருந்தாலும் அவர் அது பற்றிக் கவலைப் பட்டவரில்லை. இடைவெளி நாவலே அந்நாட்களில் அவரது மரணத்தைப் பற்றிய பிரமைகளுக்கும், அறிவார்த்த அலசலுக்கும் ஆன இலக்கியப் பதிவு தான். இந்நாவலின் அச்சுப் பிரதிகளை சரிபார்த்து அனுப்பிய சில நாட்களுக்குள் இரத்தக் கொதிப்பில் மூளை நாளங்கள் வெடித்து மரணமடைந்தார். இடைவெளி தான் அவரது முதலும் கடைசியுமான எழுத்தும், நாவலும்.

லா.ச.ராமாம்ருதம் ஒரு தனி ரகமான எழுத்தாளர். அவருடைய தனக்குள்ளேயே சுருங்கி வாழும் பழம் சம்பிரதாயங்கள் கொண்ட ஹிந்து குடும்பம். மதப் பற்றும், கடவுள் பக்தியும், கொண்ட குடும்பம். அவர்கள் எப்போதும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மன இறுக்கத்துடன் வாழ்பவர்கள். தங்களையும் காயப்படுத்திக்கோண்டு சுற்றி இருப்போரையும் காயப் படுத்தும் குணம் கொண்டவர்கள். கோபம், அன்பு, குடும்பப் பாசம் எல்லாவற்றிலும் அவர்கள் அறிந்தது எப்போதுமே முறுக்கேறிய தீவிரம் தான். அது கொடூரமாக, பயங்கரமாக வெடித்துச் சிதறும் தீவிரம். லா.ச.ராமம்ருதம் நம் காலத்திய நவீன எழுத்தாளர் தானா, அல்லது புராணங்களையும்  மாயைகளையும் சிருஷ்டிப்பவரா என்று திகைக்கத் தோன்றும். பாற்கடல் அவர் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் பாத்திரங்களைப் பற்றிய குறிப்புகளையும் கொண்ட தொகுப்பு தான். அவரது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு நீளும் உறவினரைப் பற்றியவை இந்த சம்பவங்களும் குறிப்புகளும். இதை அவரது சுய சரிதக் கோவை என்றும் சொல்லலாம். அல்லது சிறுகதைத் தொகுப்பு என்றும் சொல்லலாம். அவர் கதைகளாக வெளியிட்டுள்ள வற்றின் சம்பவங்களையும், பாத்திரங்களையும் மனதில்கொண்டு அவற்றின் மூலம் எங்கு என்று தேடிச்சென்றால், அந்த மூலங்களை பாற்கடலில் நாம் சந்திக்கலாம். இம்மனிதர்களும், அவர்கள் குணங்களும் சம்பவங்களும் தான் அவரது கதைகளின் சிருஷ்டிக்கு ஆதார உத்வேகிகளாக இருந்துள்ளனர். ஆக பாற்கடலை அவரது கதைகளுக்கான மூலமாகவும் துணை நூலாகவும் கொள்ளலாம்.

அடுத்து நாடகம் பற்றிச் சொல்லவேண்டும். இதில் நம் கவனத்தை வேண்டுபவை, எழுபதுகளில் பார்த்தவற்றின் தொடர்ச்சியைத் தான் எண்பதுகளிலும் பார்க்கிறோம். இவற்றை நாடகப் பிரதி என்று சொல்வதற்கு பதில் மேடைத் தயாரிப்புக் குறிப்புகள் என்று சொல்ல வேண்டும். எதுவும் அதன் முழுமையில் நாடகப் பிரதியாகக் காணவில்லை. ந. முத்துசாமியின் நற்றுணையப்பன் (அல்லது கடவுள்) சில அடிகள் முன்னெடுத்த ஒன்று. இருப்பினும் தன்னில் முழுமை கொண்ட ஒரு நாடக இலக்கியத்தை மேடையேறும் முன்னே ஒரு அனுபவத்தை வாசகனுக்குத் தரும் ஒன்றை  இனித்தான் நாம் காணவேண்டும்.

கவிதை என்று எடுத்துக்கொண்டால், நிறைய கவிதைகள் எழுதப்படுகின்றன. இந்த மலையென குவிந்துள்ளது நம்மைத் திகைத்து மூச்சு முட்ட வைக்கின்றது. ஆனால் இந்தக் குவியலில் பெரும் பகுதி கவிதை என்ற தகுதி பெறுபவை அல்ல. சொல்ல வந்ததிலும் சொல்லும் முறையிலும், இரண்டிலும் தான். காவி உடை ஒரு மனிதனை சன்னியாசியாகவோ ஞானியாகவோ ஆக்குமானால், துண்டிக்கப்பட்ட வாக்கியங்களும், சிறு சிறு சொற்கூட்ட வரி அடுக்குகளும் நிச்சயம் கவிதைகளாகும் தான். அறுபதுகளின் சிருஷ்டிப் பெருக்கு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.

விமர்சனம் பக்கம் திரும்பினால்,  இப்போது பெரும்பாலோரைப் பிடித்து ஆட்டி வரும், பவிஷும், ஃபாஷ னுமான ஸ்ட்ரக்சுரலிஸ்ம்- போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸம் பற்றித் தான் பேசவேண்டும். இலக்கிய விமர்சனம், எண்பதுகளில் கல்வியாளர்களால் அபகரிக்கப்பட்டு தன் சுய வாழ்வை இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். சில வருஷங்களுக்கு முன் பல்கலைக் கழகங்களில் மொழி இயல் மாணவர்களாகவோ, லெக்சரர்களாகவோ இருந்தவர்கள் எல்லாம் இப்போது மொழீயியல் வல்லுனர்களாக, பேராசிரியர்களாக பதவி பெற்றுவிட்டவர்கள். அவர்கள் சிறிது கால சுய முன்னேற்றப் பயிற்சிக்குப் பிறகோ, மொழியியலில் புழங்கிய காரணத்தாலோ தம்மைத் தாமே ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளாக, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளாக உயர்த்திக்கொண்டு விட்டார்கள். ஆக இப்போது இலக்கிய விமர்சன உலகு, இந்தமொழியியல் வல்லுனர்களின் இறுகிய கைப்பிடியில் அகப்பட்டுக்கொண்டுள்ளது. ஸ்ட்ரக்சுரலிஸ்ட்டுகள். போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் எல்லாம் விமர்சனம் என்று சொல்லிக் கொட்டும் துறைசார்ந்த வார்த்தைகளின் புகைமூட்டத்தால், அது மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இது ஒரு வித இரைச்சல் பெருகி, சூழல்கெட்ட நிலை. (noise pollution) பயங்கர விளைவு தான். முன்னால் தம் இயல்பான அழகுணர்வு பிறப்பித்த விமர்சனம் கிட்டத்தட்ட கடாசி எறியப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த ஸ்ட்ரக்சுரலிஸ்ட் வகையினரின் சித்தாந்த பூர்வமான, பாடபுத்தகப் பாங்கில் எழுதப்பட்ட விளக்க நூல்களும், பழங்கால விருத்தி உரை போன்ற  கட்டுரைகளும்  கொஞ்சம் வெளிவந்துள்ளன. இந்த விளக்க உரைகள்  கிட்டத்தட்ட பத்து வருட காலம் தொடர்ந்து வந்தாலும், ஸ்ட்ரக்சுரலிஸ் மதத்திற்கு புதிதாக தம்மை ஞானஸ்னானம் செய்து கொண்டவர்களின் விளக்கங்களில் புதிதாக மதம் மாறியவர்களின் ஆவேசம் கொதித்துத் தளும்பிய போதிலும் அவற்றில் எதுவும் முன்னர் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றின் இலக்கிய மதிப்பிற்கு ஏதும் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் சேர்க்கை என புதிய பரிமாணத்தையோ மதிப்பையோ தந்துவிடவுமில்லை, தம் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் அலசலால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் அதன் பீடத்திலிருந்து இறக்கிவிடவுமில்லை. எந்த ஒரு புதிய படைப்பின் இலக்கியத் தகுதியையும்  தம் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் அணுகலால் தீர்மானித்து விடவுமில்லை. இவர்களுடைய ஸ்ட்ரக்சுரலிஸ்ட் கணினியிலிருந்து ஏற்கனவே ப்ரொக்ராம் செய்யப்பட்ட கட்டுடைப்புக்குப் பின் கணினி வெளித்தள்ளும்  அலசல் முடிவுகளின் அச்சுப் பிரதி, அந்தப் படைப்பின் அழகியல் மதிப்பிட்டைத் தந்ததுமில்லை. ஆக, இந்த ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் போடும் இரைச்சலும் புகை மூட்டமும் எதற்காக, என்று தெரிவதில்லை.

எனவே இந்த வீணான அயற்சி தரும் வேலையை விட்டு, பொருள் தரும் அர்த்தம் தரும் பக்கம் திரும்பினால், நம் பார்வைக்குப் படுவன இரண்டு முக்கியமான முயற்சிகள். ஒன்று ஞானியின் மார்க்ஸிஸமும் தமிழ் இலக்கியமும், என்னும் இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு. இரண்டாவது எஸ்.வி. ராஜதுரையின் ரஷ்ய புரட்சியின் இலக்கிய சாட்சியம். இரண்டு பேருமே ,பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தாம் கொண்டிருந்த இறுகிய சித்தாந்த நிலைப்பாட்டிலிருந்து விலகி வெகு தூரம் வந்து விட்டனர் ஞானி முந்தைய இலக்கிய வாழ்வில் தாம் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி தயாரித்துத் தந்திருந்த பழம் கம்யூனிஸ்ட் கோட்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக உதறிவிட்டு இப்போது அவ்வப்போது தானே தேவைக்கேற்ப தன் சொந்த தயாரிப்பிலான மார்க்ஸிஸ இலக்கியக் கோட்பாட்டைக் கொண்டுள்ளார். இதற்கு அவரைத்தவிர வேறு எங்கும் அங்கீகாரம் கிடையாது. இதில் அவரது தாராளமனமும் சிந்தையும் செயல் படுவது வாஸ்தவம் தான். அதில் தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப கால பக்தி யுக இலக்கியத்தையும், வேதகாலத்திலிருந்து தொடங்கி, இன்றைய ஜே. கிருஷ்ணமூர்த்திவரை அனைத்து இந்திய சிந்தனை வளம் முழுதையும் அவரது மார்க்ஸீய இலக்கிய பார்வை தன்னுள் அடக்கிக் கொள்கிறது. இதை நான் கேலியாகச் சொல்லவில்லை. நிச்சயமாக இல்லை. அவருடைய மார்க்சிஸமும் தமிழ் இலக்கியமும் என்ற இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பில்  மங்கலான தெளிவற்ற சிந்தனைப் போக்குகளும் உள் முரண்களும் நிறைந்திருக்கக் காணலாம். இச்சிந்தனைகளிலும் பார்வைகளிலும் தெரியும் ஞானியின் தாராளமன சிந்தனைப் போக்கை நான் மதிக்கிறேன். அது தாங்கிவரும் மார்க்ஸிஸ் லேபிளையும் மீறி.

ஆனால் எஸ் வி ராஜதுரை, கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர் என்று எனக்கு நினைப்பு. ஆனால் அவர் கட்சி அலுவலக கட்டிடத்துக்கு வெளியே தான், ஆனால் அதன் சுற்றுச் சுவருக்குள்ளேயே நடை பழகிக்கொண்டிருப்பார். அவ்வப் போது கட்சி அறிவிக்கும்  பார்வைக்கும் நிலைப்பாட்டிற்கும் தன் ஒப்புதலையும் பிரகடனம் செய்துகொண்டிருப்பார். கட்சியின் கோட்டைச் சுவர்கள் சரியத் தொடங்கின. மெதுவாகவும், பின்னர் வேகமாகவும், படிப் படியாகவும். அந்தச் சரிவின் ஒவ்வொரு படிநிலையிலும் ராஜதுரை கட்சியுடனான தன் மாறுபட்ட பார்வையை, தன் தளரும் சிந்தனையை இன்னும் கொஞ்சம் தளரவிட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் சோஷலிஸ் கோட்பாட்டில் தன்க்குள்ள தளரா நம்பிக்கையையும் வெளிப்படுத்துவார். எந்த சமயத்தில் அவர் கட்சிக் கோட்பாட்டைத் தான் சொல்கிறாரா இல்லை தன் விலகிய சிந்தனை நிலையைச் சொல்கிறாரா என்று சொல்வது கடினம். அவருக்கே அது கடினமாகத் தான் இருக்க வேண்டும். ஆக, இருவருக்குமே அவரவரது தமது தீவிர சோஷலிஸ் கொள்கை விஸ்வாசத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் விஸ்வசிப்பதாகச் சொல்லும்  சித்தாந்தமோ அவ்வப்போது மாறும், மாறி இறுகிய நிலை கொள்ளும். . ஆனால் பரிதாபம், அவர்களது போப் தன் பதவியைத் துறந்து விட்டார். வாடிகனோ காலியாகி சிதைந்தும் உருக்குலைந்தும் விட்டது. ஆனால் இப்போதும் ராஜதுரை மிகுந்த உறுதிப்பாட்டுடன் பிரகடனம் செய்வது, மார்க்ஸிஸம் என்றைக்கும் மாறாத அழியா நிரந்த உண்மை என்றும், அதன் போஷகர்கள் தான் அந்த சித்தாந்தத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் என்றும் பிரகடனம் செய்வார். அடுத்தடுத்து வெளிவரும் அவரது புத்தகங்கள் அவரது மாறிவரும் சித்தாந்த பார்வையை பதித்துச் செல்கின்றன். அவரது சமீபத்திய புத்தகமான, ரஷ்ய புரட்சி – இலக்கிய சாட்சியம், கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் அரசுக் கட்டுப்பாட்டை மீறி மாறுபட்ட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் நாடு கடத்தப்பட்டார்கள், அல்லது சிறைபிடிக்கப்பட்டு சைபீரியாவின் வதை முகாம்களில் மிகுந்த காலத்தில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்கள் அல்லது இந்த மண்ணிலிருந்தே நிரந்தரமாக நீக்கப் பட்டார்கள். அவர்களது வாழ்க்கையும் எழுத்துக்களூம் பற்றியது தான் ரஷ்ய புரட்சி – இலக்கிய சாட்சியம். எஸ் வி ராஜதுரை கூரியமதியும், நுட்பமான அலசல் பார்வையும், நிறைந்த படிப்பும்  கொண்டவர் தான் சந்தேகமில்லை. ஆனால் இவை அத்தனையும், மனித சரித்திரத்தின் கால வோட்டத்தில் மார்க்ஸிஸ சிந்தனையும் ஒரு கட்டத்தில் வரம்பு கட்டிய நிலை தான் என்பதை அவருக்கு உணர்த்தத் தவறி விட்டன. இரண்டாவதாக, அவரது ஆளுமையின் அறிவார்த்த பரிமாணத்தின் விசாலத்துக்கு ஈடு சொல்லும் குணத்ததல்ல அவரது ஆளுமையின் தேடிக் காண வேண்டிய அழகுணர்ச்சி. அதோடு அவரது அறிவார்த்த பரிமாணம் செலாவணி அற்றுவிட்ட  பத்தொன்பதாம் நூற்றாண்டு சித்தாந்தம் ஒன்றின் இறுகிய பிடிப்பில் கைகால்களை இழந்து முடமாகியது. ஞானி, எஸ் வி. ராஜதுரை இருவருமே, தமக்கு உண்மையானவர்கள். தம் சிந்தனை நேர்மை கொண்டவர்கள். தாம் நம்பிக்கை கொண்டவற்றுக்கும்  உண்மை யானவர்கள். இவர்கள் காலத்திய ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் போன்றல்ல. ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளோ மாறாக, மற்றவர்களைப் பயமுறுத்த, வியந்து வாய் பிளக்கச் செய்ய சீருடையாக தம் ஸ்ட்ரக்சுரலிஸ் படிப்பை அணிந்து நடை பழகுகிறவர்கள்.

கடைசியாக, இந்த கட்டுரையை முடிக்கும் முன், சுப மங்களா என்று இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு இடைநிலை (இலக்கியச் சிறு பத்திரிகைக்கும் வெகுஜனப் பத்திரிகைக்கும் இடையில்) பத்திரிகையைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் வாசகப் பெருக்கத்தில் அது இடை நிலையில் இருப்பது. அதை கோமல் ஸ்வாமிநாதன் தன் ஆசிரியப் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் முன் Woman & Home போன்ற ஒரு பெண் வாசகர்களைக் கவரும் வகையில் வெளிவந்து கொண்டிருந்த ஒன்று. அப்படி இருந்த ஒன்றை தன் பொறுப்பில் அதை கலை, இலக்கியப் பத்திரிகையாக உருமாற்றி, எந்த இலக்கியச் சிறு பத்திரிகையும் கற்பனையில் கூட நினைத்தும் பார்த்திராத வாசகப் பெருக்கத்தை கொண்ட வெற்றிகரமான மேடையாக ஆக்கித் தந்தது பெரிய நெடுந்தூர சாகஸத் தாவல் தான். ஆக, தன் முயற்சியில் ஒரு சீரிய இலக்கியமும் கலைகளும் சார்ந்த பத்திரிகை கூட பிராபல்யம் பெற்று வணிக ரீதியிலும்  வெற்றியடைவது சாத்தியம் என்றும் நிரூபித்தார் கோமல் ஸ்வாமிநாதன். தமிழில் எந்த சீரிய, கனமான இலக்கியப் பத்திரிகையும் எழுபதுக்கள் வரை அதிக பட்சம் ஒரு சில நூறுகளுக்கும் மேல் வாசகர்களைக் கொண்டதில்லை. ஆனால் கோமல் ஸ்வாமிநாதன்  அந்த வாசகர் தொகையை பத்தாயிரங்களுக்கு கொண்டு சென்றுள்ளார். கோமல் ஸ்வாமிநாதன் சுப மங்களாவின் ஆசிரியப் பொறுப்பை ஏற்று இப்படி ஒரு சாதனையைச் செய்து காட்டும் வரை யாரும் அவரிடம் இத்தகைய ஒரு இலக்கிய தாகமும், அத்தோடு வணிக சாமர்த்தியமும் இணைந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. இந்தப் பெரிய புரட்சி கர மாற்றம் எண்பதுக்களின் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொட்டை எழுத்துக்களில் எழுதப் படவேண்டும். 

vswaminathan.venkat@gmail.com