மற்றவர்கள்,கட்டிடக்கூலிவேலைகள் தொட்டு…எந்த வேலைகளும் செய்ய பஞ்சி படாதவர்கள். வீட்டிலேயும், கெளரவம் பார்க்கிறது, தடுக்கிறது… எல்லாம் இருக்கவில்லை. வாப்பா பிரயாசைப்பட்டு ரேடியோ திருத்துறதை பழகிவிட முயல்கிறான். கற்றுக்குட்டிதான்.ஆனால் பாடாத ரேடியோவை, ஒரு கிழமை அல்லது நீள எடுத்து எப்படியும் பிழையைக் கண்டு பிடித்து திருத்தி விடுவான்.அதை விட லயன்ஸ் கிளப்பில் வகுப்புகள் எடுத்து வீடுகளிற்கு வயரிங், பிளமிங்… செய்கிறதுக்கு தெரிந்து வைத்திருக்கிறான். குஞ்சனின் அண்ணர் குகன் வீட்டுப்பெயின்றர். குஞ்சனும் மேசன் வேலையோடு,வீட்டுக்கு பெயின்ற் அடிக்கிறதைச் செய்கிறவன். நண்பர்கள்,அவனோடு இழுபட்டதால்… ஆதரவாளர்கள். அவனுடைய தாமரை இயக்கமும் கடைசியாக கழுகால் தடை செய்யப்பட… அவனும் அநாதரவாக நிற்கிற மாஜி தோழனாகி விட்டான் “சிந்திக்கிறதை எவரால் தடை செய்து விட முடியும்?” வீம்பு மட்டும் அவர்களிற்கு குறையவில்லை.
“ஒரு கிழமை அரசியல் மாறும் என்று நினைத்தால், இந்தியனாமி வந்த பிறகும் அப்படியே கிடக்கிறதடா?”என்றான் சலிப்புடன் நகுலன் .ஒவ்வொரு கிழமையும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து மிரட்டுவதைத்தான் அப்படி குறிப்பிட்டான். ஒன்றில் கழுகு மிரட்டும்,அல்லது இலங்கை ராணுவம் படுகொலைகள் புரிந்து நிற்கும். இந்தியனாமி வந்த பிறகும் பதற்றமான செய்திகளே கேட்கிறார்கள். பெரிய நாடுகளின் கொளுவல்களிற்காக சிறிலங்காவில் வன்முறை செறிவாக்கப் படுகிறது தான். முழு இலங்கையையும் சிங்கள பெளத்த நாடாக்க வேண்டும் என்ற வெறி பிடித்து அலையும் இவர்கள், “ இந்த நாட்டையும் கம்போடியா, வியட்னாம் போல …இயற்கை வளங்களை பாழ்படுத்தி அழித்தும்,, மக்களை வலது குறைந்தவர்களாக்கியும், வெடி குண்டுகள் விதைக்கப்பட்ட நாடாக்கி விட்டிருக்கிறார்கள்” இதன் விளைவுகள், சிங்களவர்களையும் கூட விட்டு வைக்காது என்பதை புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். “அடுத்தவனை நேசிக்கத் தெரிந்தவனாலே தன் மக்களையும் நேசிக்க முடியும்”என்பது எவ்வளவு உண்மை. புத்தசமயம் அதைத் தானே போதிக்கிறது. உலக நாடுகள் ,தரமானதாக மாறாத வரையில் ….’ஜக்கிய நாடுகள் சபை’யும் அநியாயங்களை தட்டிக் கேட்கிற, சீரான… அமைப்பாக இயங்கப் போவதில்லை. இவ்வாறு சிக்குப்பட்டுக் கிடக்காமல் விலகி,எல்லா நாடுகளிலும் ஏற்படுற அவலங்களை கட்டுப்படுத்துற ஒரு புரட்சிகர அமைப்பாக மாற வேண்டும் என்பதே எல்லாரின் கனவாக எதிர்பார்பாக கிடக்கின்றன. இலங்கையில், ஏற்கனவே ‘தமிழர்ருக்கும் சிங்களவருக்கும் தனித் தனி நாடுகள் இருந்தன என்பது மறுக்க முடியாத, தூசி பிடித்து, மக்கிப் போன ஒரு வரலாற்று உண்மை. இதை, ஓரளவில் ஏற்றுக் கொண்டவர்களாக சிங்கள அரசியல்வாதிகளும், இந்த இலங்கைப் படையினரும் இருக்கிறார்கள் என்பதும் ஆச்சரியம் தான். அது உண்மை!.ஆனால்,சட்டரீதியாக ஏற்கவில்லை, என்பதால் பிரயோசனமாக இருக்கவில்லை. கலவர காலங்களில் தமிழர்களை அவர்களது நாட்டுக்கு தான் (வடக்கு.., கிழக்குக்கே) துரத்தினார்கள், கிழக்குப் பகுதியில், வன்னியில் படையினரை விடுதலைக்குழுக்கள் தாக்கி விட்டால் அங்கிருக்கும் மக்கள் கொல்லப்படுவது மட்டுமில்லை, வட பகுதியில் உள்ளோரும் சேர்த்துக் கொல்லப்படுவார்கள். அது, ஒரு நாடு என்பதாலே அப்படிச் செய்தார்கள் .முன்பெல்லாம், ஏன்? வடக்கில் ,இப்படி திடீர் திடீரென படுகொலைகள் நடக்கின்றன …என்பதை அறிய முடியாது நகுலன் செட் குழம்புறது … நிறைய இருந்தன.பிறகு தான் அந்தக் கால அரசர்களைப் போல பலி எடுக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களுக்கு தமிழர்களின் நாடு இருப்பதை .வெளிப்படையாய்ச் சொன்னால்… தம் (இஸ்ரேலின், கொள்கை போல ) நலன்களை வறுக முடியாமல் போய் விடும் என்பதற்காக “ஒற்றையாட்சி”,”தமிழ்நாடு என்பது கிடையவே கிடையாது “என்றெல்லாம் அடிமட்டச் சிங்களவர்களிற்கு சொல்லி தமிழ்ப்பகுதிகளில்… இராணுவத்தை குவித்துக் கொண்டே இருக்கிறார்கள் .
நீண்ட காலத்திற்கு முன்னர் முந்தைய சோழர் காலத்தில் ஆட்சி செய்ததாக சொல்லப்படுகிறது.அது கிருஸ்துக்கு முன், பின் …போல சரியான தகவல்களைக் கொண்டதில்லை. ஒரு காலத்தில்,தமிழ் அரசர்கள் சிங்களப் பெரு நகரங்களை அடக்கி ஆண்டதிற்கான பழி வாங்கும் படலம் .சோழ மன்னர்கள் அநுராதபுரம், பொலநறுவையை என சிங்கள நகரங்களை நீண்டகாலம் தலைநகராக்கிக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள்.அப்ப, கைமுனு ,”எங்கட நாட்டை எல்லாம் அவர்கள் பிடித்து விட்டார்கள். இங்கே, காலை நீட்டி தூங்க இடம் இல்லையே”என்று சொல்லி குடங்கியே நித்திரை கொள்வானாம். (பைபிளின் பழைய பதிப்பை வைத்துக் கொண்டு இஸ்ரேல் அட்டகாசம் செய்வது போல….) இந்த புத்தபிக்குமார்களும் இதைச் சொல்லி சொல்லியே ஊதி, ஊதி துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். அது தான், இப்ப, தமிழரின் நகரங்களை பிடித்து ஆள பெரும் முனைப்பு காட்டுகிறார்கள். சமாதானம்,அமைதி, அகிம்ஸையை போதிக்க வேண்டியவர்கள்..கொலைவெறியை போதித்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு காலம் தான் நாம் ரத்தம் சிந்தப் போறோமோ தெரியவில்லை. தர்மம் தமிழர் பக்கமே கிடக்கிறது. தர்மமே கடைசியில் வெல்லப் போகிறது. அதனால், கழுகு இயக்கம் சிங்கள நாட்டுக்குள் (பகுதியில்) புகுந்தும் தனித்தவராக மாட்டும் படையினரை பதுங்கி இருந்து வேட்டையாடி… அவர்களுள் ஓர் உளவியல் பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. “உங்க நகரத்தையே திரும்ப பிடித்து விடுவோம்”என்று கழுகினர் சிங்கள பகுதிகளினுள் புகுந்து தாக்குதல்கள் நடத்தி சீண்டுகிறார்கள்.
“எமக்கெதிராக செயல்பட்டாலும்,பதிலுக்கு பழிவாங்கலில் இறங்காதே, தர்ம நியாயங்களை பேசுவதை யும் பயந்து விட்டு விடாதே” “என்பது தான் புத்தரின், காந்தியின் அறிவுரைகள். இந்தியனாமி வந்த பிறகும் இந்த நிலமைகள் ஒட்டுமொத்தமாக மாறும் என்று நினைத்தார்கள். மாறுதலாக சிங்களப்படையினரின் தனகல்கள் கணிசமாக அதிகரிப்பதும், புதிதாய் வந்தவர்களோடு அவர்களும் கைகோர்த்துப் பழகிறதைப் பார்க்கிற போது மெல்ல மெல்ல பழைய நிலைக்கே போய் விடுமோ எனவும் பயமாக இருக்கிறது. புதிதாக ஏற்பட்டிருக்கிற இந்த இந்தியனாமி மோதல் நல்லதுக்கில்லை என்றே அவர்களுக்குப் படுகிறது. நகுலனுக்கு, அரசியலை விட இயற்கையை ரசிக்கலாம் என்றிருந்தது..வயல்களில் மத்தியில் பார்த்த .தூர் வாறப்படாது மண் மூடிக் கொண்டுப் போகிற குளங்கள்; பல்லவர்கள் சமைத்தது போல ஆச்சரியப்பபட வைக்கிற சிறிய கோவில்கள் எல்லாம் ஞாபகம் வந்தன.
சில குடும்பங்களிற்கு மாத்திரம் சொந்தமானதாக இருக்கிற கோவில்களில் இப்பவும் கூட இரண்டு,மூன்று நாட்கள் திருவிழாகள் நடக்கின்றன போலும் . பெற்றோர்கள் சாக .. பிள்ளைகள் .கவனிக்காது விடப்பட்டவை பாழடைந்து போகின்றவையாய் இருக்கலாம். அதில், நிறைய அழகிய சிறு சிறு விக்கிரங்களும், கூட நெளியும் பாம்புகளும்,… ம்! இனி, யார் கவனிக்கப் போறார்கள்? அவனையும் மீறி பெருமூச்சுகளே வருகின்றன. ஒருவேளை, ஒரு காலத்தில், செழிப்பான வேற மாதிரி கிராமமாக அராலி இருந்திருக்குமோ? அதை, அன்னியர்கள் வந்து சீரழித்து பிறகு மெல்ல மெல்ல இப்ப நாம் இருக்கிற கிராமமாக தாழ விட்டிருப்பார்களோ?
அண்மைக்காலத்தில் சிறிலங்காப் படைகள் யாழ்ப்பாணத்தில் செல்களை கொட்டியதையும் பரல் குண்டுகளை போட்டதையும் பார்த்தபோது, இந்த அராலி, தப்பிப் பிழைக்குமா என நினைத்திருக்கிறான். முழு தமிழர் பகுதிகளையும் வேற மாதிரி கீறி விடவே துடிக்கிறார்களே என்ன மனிதர்கள் இவர்கள் ? இந்தியன் ஆமியே எங்களோட சண்டை பிடிக்கிறதால் இந்திய,இலங்கை சமாதான ஒப்பந்ததை பொறுப்பாக நின்று நிறைவேற்றப் போவதில்லை என தெரிகிறது, கழுகை இந்திய ஆமி இப்படி அடிக்க கிளம்பியது பெரிய …பிழை! அதே மாதிரி கழுகும், இலங்கையோடு எதிர் கொள்ளுறமாதிரி எதிர் கொள்றதும் பிழை. கழுகிற்கு வீரம் இருந்தளவிற்கு விவேகம் வளரவில்லை. மற்றைய இயக்கங்களில் அது வீரம் காட்டியதும் சகோதரப் படுகொலைகளே. அவையும், உட்கொலைகள் தான் ! தனியான இயக்கத்தினுள் நடந்த உட்கொலைகளிற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள எல்லாருக்குமே இன்னொரு மூளை வேண்டும். அழிவுகள் தொடர்கதை எனத் தெரிகிறது!
ஒரு மாநதியாய் போக வேண்டிய விடுதலைப் போராட்டம்,கிளைகளாக பிரிந்து பிரிந்து எங்கையோய்க் கொண்டிருக்கிறது. கழுகால், ஒவ்வொரு இயக்கங்களும் இரண்டு இரண்டாக உடைந்திருந்ததாலே இலகுவாக தடைசெய்யவும் முடிந்தது. பதவி மோகம் பிடித்ததால் தம் ஒட்டு மொத்த இயக்கத்தையும் பறி கொடுத்து விட்டு நிற்கிறார்கள். தாமரையின் ஆயுதங்களைத்தான் இந்தியா கைப்பற்றி விட்டது.ஆனால், மற்ற இரண்டு இயக்கங்களின் ஆயுதங்கள் சேர்ந்திருந்தால்,அதற்கெதிராக கழுகால் ஒரு துரும்பைக் கூட அசைத்திருக்க முடியாது. அவற்றின் உள்ளே இருந்த தளபதிகள் குழம்பியதால் அங்கிருந்த தோழர்களின் அணி வகுப்பு சரிவர அமையவில்லை. விட்டில் பூச்சிகளைப் போல சாவைத் தழுவியது பெரும் துயரம்.
நகுலனுக்கு, குளங்கள் பராமறிக்கப் பட்டும்,வழுக்கியாற்றை பெரிய கால்வாய்யாக பெருப்பித்து,அதில் சிறிய படகுகளில் பயணிக்கிறது … என்று அவ்விடங்களில் கால் வைக்கிற போதெல்லாம் என்னென்னவோ நினைப்புக்கள் எல்லாம் சிறகடித்துப் பறக்கும். என்னவாகப்போகிறதோ? என்றது பெரிய கவலையாக தலையைப் பிடித்து ஆட்டுகிறது. முதலில் உட்குத்துக்கள் ஓய்ய வேண்டும். நடக்குமா? நடக்கும், ஒருநாள் நிச்சியம் நடக்கும் .என நம்ப வேண்டும்.நம்பிக்கை இழப்பவன் செத்த மனிதன்.அவனுள் எழும் அலைகள் ஒரு காலத்திலும் ஓய்யப் போவதில்லை .
எமக்கென்று உண்மையான சுய ஆட்சி ,சமஸ்டியாக மாகாணவரசு கிடைத்து விடும் என்றால் ; செயல்படுமென்றால்… நினைக்க எவ்வளவு நல்லாய்யிருக்கிறது. நம் கப்பல்கள், நம் கடலில் நங்கூரமிட்டு அல்லவா, நிற்கும். நாம் எங்கையோ போய் இருப்போமே!,உடம்பு சிலிர்த்துக் கொள்கிறது. வர்த்தகம் சிறப்படைந்து …எம்முடைய பொருளாதார ம் கூட சிறிலங்காவின் பொருளாதாரத்தை தலை நிமிர வைத்திருக்குமே. வல்லைமக்கள் கடலில் கப்பல் ஓட்டியது போல எங்களுடைய அராலிக் கடலில் நாமும் கப்பல்கள் ஓட்டுவோமே, நினைக்க, நினைக்க நல்லாவே இருக்கிறது !
இந்திய மீனவர்களை பலி எடுக்கிற கச்சதீவு ,வடபகுதி மாகாணவரசுக்கே உரியது. மத்திய அரசு, அதில் நிறைய பொய்களை பேசி தனதாக்கிக் கொள்ள முயல்கிறது .அதை, பலாத்காரமாகஅனுபவிக்கவும் முயல்கிறது. இந்தியனாமி இருந்த காலத்தில் கச்சதீவுக் கடலில் மீனவர்ப் பிரச்சனை அடங்கி இருந்ததா? பதிலைத் தேட வேண்டும். இதற்குத் தான்பெற்றோர் ‘கல்கி,சாண்டில்யன் எழுதிய சரித்திரக் கதைகளை ‘எல்லாம் வாசிக்கக் கூடாது என்கிறார்களோ?. “வீட்டிலே, பழைய பேப்பர்கள் இருந்தால் தரித்திரம்!”என்ற பழமொழி வேற !. யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப் படுறதுக்கு முன்னமே,பல வீடுகளில் இருந்த குட்டி,குட்டி நூலகங்கள் எல்லாம் குப்பையில் தூக்கி எறியப்பட்டு இருக்கின்றன. சிறிலங்கா அரசிற்கு,மட்டுமல்ல, நம் பெண் தெய்வங்களிற்கும் கூட படிப்பறிவின் அவசியம் தெரியவில்லை என்பது …துரதிஸ்டம் தான் ! புத்தகங்கள், சதா போராட்ட உணர்வை பற்றி எரிய வைத்துக் கொண்டேயிருக்கும் என்று பயப்படுகிறார்கள்.
நம் எதிர்கால அரசில் பெண்கள் உட்பட அனைவருக்குமே படிப்பு அவசியமாக்கப்படுவதோடு,மட்டும் நின்று விடாது,வேலை வாய்ப்புகளும் அவர்கள் எல்லாருக்கும் வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். வேலைகளில் இல்லாதலாலே சுய மரியாதைகளை இழந்தவர்களாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில், சிங்கள அரசு தமிழரின் நிலவளத்தையும் பாழ்ப்படுத்த ‘இப்பிலிப்பிலி’ என்ற மோசமான களையின் விதைகளையும் வேறு தூவப் போறார்கள்,அவை,ஜெயமோகனின் குறுநாவல் ஒன்றில் வந்த மரம் ஒன்றைப் போல வெட்ட வெட்ட அழிக்க முடியாது போல வளரப் போகிறது என்பது எல்லாம் அவர்களிற்கு இப்ப தெரிந்திருக்கவில்லை.
இந்தியாவின் தவப்புதல்வர், கடைசிக்கட்டமாக வடக்கு,கிழக்கை ஒரு இந்திய மாநிலங்களைப் போலாக்கி ஈழத்தமிழர்க்க்ச் சுயாட்சியை பெற்றுக் கொடுத்திருக்கலாமே ! இறைமை, மண்ணாங்கட்டி ! , கொலை செய்வது எந்த இறைமையில் சேர்த்தி ?அப்படி செய்திருந்தால் இந்தியாவிற்கும் ஒரு தலையிடி குறைந்திருக்குமே. தாய்க்குப்புரிந்த அரசியல் மகனுக்குப் புரியவில்லை’ சிலவிசயங்கள் நடப்பதற்கு கடவுளின் அருளும் காலமும் கனிய வேண்டுமோ, என்னவோ ?
“சிங்கள அரசுக்கு ஜனநாயகம்,சமஸ்டி எல்லாம் புரியிற சமாச்சாரங்கள் இல்லை.இந்த உடன்படிக்கையும் கடைசிலே நீர்த்துப்போகப் போகிறதோ?”கவலையுடன் குஞ்சன் கேட்டான்..வாப்பாவிடம் தான் ஊடுருவிப் அலசுற பார்வை இருக்கிறது.இந்த பாட்டுக்காரனும் கூட அப்படியே யோசிக்கிறான்.பரவாயில்லை .
“கழுகு, மற்ற இயக்கங்களோடு மோதிய மாதிரியே போய் இந்தியனாமியோடும் மோதுகிறது. இந்த மோதல் தேவையற்ற ஒன்று என்பதை அவர்களிற்கு யார் புரிய வைப் பார்கள் ? விதி வழியே செல்ல வேண்டியது தான்” குஞ்சன் களைப்பாகச் சொன்னவன் . “நானும் தேவையில்லாமல் கல்யாணம் கட்டி விட்டேன். வேலைக்கு வேற போக வேண்டும். ஆனால்,இங்கே வேலை இல்லாமல் கிடக்கிறது.மாமா, அவர்ர தம்பி, லோகன்ர குடும்பம் நீர்கொழும்பிலே இருக்கினம். அங்கே போய் வேலை செய்யச் சொல்கிறார். குழப்புறார். போற தாய் இருந்தால் நீயும் வாயன்” என்று நகுலனைக் கேட்டான். “கொழும்புக்கு போறது எப்படி என்று நானும் யோசித்துக் கொண்டு தானிருக்கிறேன். பார்ப்போம்”என்று அவன் பதிலளிக்க,வாப்பா “அப்பனே,வரலாறு விட்டு வைத்தால்…’என்றதை சொல்ல மறந்து விட்டாயே”என்று சொல்லிச் சிரித்தான். தொடர்ந்து,.”என்னை தனிய விட்டுப் போகப் பார்க்கிறீர்கள்.பரவாய்யில்லை பிறகு, ,நானும் வரப் பார்க்கிறேன்”என்றான்.
மேலும் இருள இப்படியே அலட்டி விட்டு குஞ்சன் நடையைக்கட்ட, நகுலன், வாப்பாட சைக்கிளிலே தொற்றிக் கிளம்பினான். நகுலனிடமும் சைக்கிள் இருக்கிறது. சிலவேளை,உழக்கப் பஞ்சியிலே அதை வீட்டிலே விட்டு விட்டு ஒன்றிலே மட்டும் உழக்குவார்கள்.வாப்பாட வழியிலே தான் இவனுடைய வீடு இருக்கிறது ,இறக்கி விட்டு அப்படியே அவன் குலனைக்குப் போவான்.
இவர்கள் குறிப்பிடுற இந்தியனாமிக்கும்,கழுகிற்குமிடையிலான மோதல் எவ்வாறு ஏற்பட்டது?யார் முதலில் தொடங்கினார்கள்? என்பதற்கெல்லாம் பதில்கள் தேடுவது கஸ்டம். ஆனால், சிறிலங்காவரசு இப்படி ஒரு மோதல் ஏற்படுவதை எதிர்பார்த்து தான் காத்திருந்தது என்பது மட்டும் உண்மை. வடக்கு, கிழக்கு ஈழத்தமிழரின் தாயகம்.எதிர்காலத்தில் இரண்டும் இணைந்து ஒரு மாநில அரசாக இயங்குறதுக்கு ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டிருந்தது. சிறிலங்காவோட மேற்கொள்கிற எந்த பேரமும் நீர் மேல் உள்ள எழுத்து தான்!ஆனால், இதிலே இந்தியா வல்லவன், வலியவன்.இருந்து தான் பார்ப்போமே. முந்தி எழுதப்பட்டவை எல்லாம் அமுலாக்கப்படாது விடப்பட்டவையே இதுவும். அதில் ஒன்றான செல்வா,பண்டாரநாயக்கா ஒப்பந்தத்தின் மறுவாசிப்பே இவ்வரசுக்கு ‘சமஸ்டி முறை’ பிடிக்காத விசயம். அவ்வரசு, இந்தியனாமி வந்த பிறகும், இங்கிருக்கும் ராணுவத்தினரை சிங்களப்பகுதிகளிற்கு வரவழைத்துக் கொள்ளாது வடக்கு,கிழக்கிலே தங்க வைத்துக் கொண்டிருந்தது . அதனாலே ,ராணுவம் இரண்டு மடங்காக ஊதிப் போய்யிருந்தது. ஆயுதம் தாங்கிய இந்தியனாமி ஒரு புறம். ஆயுதம் தரித்திருந்தாலும் அதை பயன்படுத்த அனுமதி இல்லாத இவர்கள். கூட்டம் இன்னொரு புறம். சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை ஒன்றும் சிறிய தொகை இல்லை.,அது, ஒரு பெரும் தொகை.! ஒரு மாகாணத்தின் மக்கள் தொகை. வேலைவெட்டியில்லாத இவர்களிற்கு வீணே சம்பளத்தையும் அழுது கொண்டுமிருந்தது. இவர்கள் தான்.பிரச்சனையை திசை மாற்றியவர்கள். இலங்கை ராணுவத்திற்கு எல்லா இயக்கங்களும் எதிரி. கழுகிற்கு மற்றைய இயக்கங்களும் எதிரி, இலங்கை ராணுவமும் எதிரி. துரத்தப்பட்ட இயக்கங்கள் இந்தியனாமியோடு சேர்ந்து இயங்கின. இலங்கை ராணுவமும் தேவையில்லாமல் கழுகோடு தனகிக் கொண்டே இருந்தது. இருவருக்குமிடையில் மத்தியஸ்தம் வகிப்பதில் இந்திய தரப்பில் கெளரவமும் குறுக்கிட்டது. அது ,தன் பேச்சிற்கு,மறுபேச்சில்லாமல் கழுகு நடக்க வேண்டும் என எதிர்பார்த்தது, நடக்கவில்லை. இலங்கை ராணுவம் கடலில் பயணித்த கழுகின் பிரதேசத் தலைவர்கள் சிலரை ,வேணுமென்றே கைது செய்து விட்டது. ஒப்பந்தப்படி அவர்களைக்கைது செய்ய அவர்க ளிற்கு அதிகாரம் கிடையாது.,. அதிலே பழிக்குப் பழியாக சிங்கள மக்களைக் கொன்றவர்கள், படையினரை அச்சமில்லாது வேட்டை ஆடியவர்கள் என குறிப்பிட்ட சிலர் இருந்த தால் விடுதலை செய்ய இந்திய தரப்பு கேட்ட போதும், “மாட்டேன்” என மறுத்து விட்டது. அது மட்டுமின்றி அவர்களை வலுக்கட்டாயமாக கொழும்பிற்கு கொண்டு செல்லவும் முயன்றது. சிலவேளைகளில், இந்தியா, அசமந்தப் போக்குகளையும் கடை பிடிப்பதும் உண்டு.அது ஆபத்தில் கொண்டு போய் விடுவது தான் வழமையானது. இந்தியா, காந்தியத் தலைவர்கள் பலரைக் கண்ட நாடு. சிலநேரங்களில், அவர்கள் ஆட்சிக்கு வந்த போதே, வில்லன்களாய் கிடக்கிற இறுகி துருப்பிடித்துப் போய்க் கிடக்கிற அரசியல் சட்டங்களை மாற்றியமைத்து மக்களைக் காப்பாற்றியவர்கள். சிலவேளை, அசமந்தங்களும் குருட்டாம் போக்கில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.. ஆனால், சயனைற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு திரிகிறவர்கள் ‘பாம்பைப் போன்றவர்கள்’!தப்புக் கணக்குப் போட்டு விட்டார்கள். அவர்கள் கெடு வைத்திருந்த கால கெடுவைக் கடக்க, ‘இந்தியா,சிறிலங்காவோடு தான் நடை போடும் என்று சந்தேகம் கொண்ட அவ்வியக்கம் பிடிபட்டவர்களிற்கு சயனைற்றை கடித்து செய்தியாகும்படி கட்டளை இட்டு விட்டது. மகா சூசைட்.! பிடிக்கப்பட்டவர்களில் இரண்டொருவரைத் தவிர மற்ற அனைவருமே இறந்து விட்டார்கள் .
கழுகிற்கு, படையினர் மேலிருந்த கோபம் ஓரேயடியாக இந்தியனாமியின் பக்கமாக திரும்பி விட்டது. பிறகு,எல்லாமே மளமளவென்று நடக்கின்றன. சந்தைப்பகுதிக்கு வந்த இரண்டு இந்தியனாமியை கழுகு, பிடித்து விட்டது. பிடிபட்ட இருவருமே மெற்றாஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வர,அன்று மாலையே விட்டு விட்டார்கள். பெடியளிடமிருக்கிற ஆயுதங்களை ,எல்லாம் களைய’ இரண்டு மூன்று கிழமையே போதும் என ஏகதாளமாக பேசி வந்த இந்தியனாமியை அச்சம்பவம் சிறிது சுட்டு விட்டதாகவே படுகிறது. மெற்றாஸ்ரெஜிமெண்ட்டைச் சேர்ந்தவர்களை இந்தியாவிற்கு உடனடியாகதிரும்பி அழைக்கப்பட்டு, அவர்களிற்குப் பதிலாக கூர்க்காஸும், சீக்கியர்களும் அனுப்பி வைக்கப் பட்டார்கள். எழுத்தாளர் ஜெயமோகன், இந்த பிரிவைச் சேர்ந்தவர்களை சந்தித்து இருக்கலாம். பிறகு, பண்ணைப்பாலம் வழியே நின்ற தமிழ் இந்தியனாமியை காணக்கூடியதாக இருக்கவில்லை.எல்லாரும் புதிய முகங்கள்.இந்தியனாமியால், கழுகுப் பெருந்தலைவரை கைது செய்வதற்குப்… ஒரு பெரும் முன்னெடுப்பு எடுக்கப்பட்டது.பராதுருப்பினர் – சீக்கியர்கள்… வானிலிருந்து குதித்தார்கள். அத்தனை பேரையும் ஹெலிகளிலிருந்து…கீழே இறங்க இறங்க கழுகினர் சுட்டுக் கொன்று விட்டார்கள்.
ஜெ,ஆர் தொடங்கி விட்ட மரபு, அக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களையும் துணிச்சலாக எடுத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கிறது…! இவர்கள், பராதுருப்பினர்களின் உடல்களை எடுத்து, விரைவாக சிறிதர் தியேற்றருக்கு பக்கத்திலிருந்த ஆரியக்குளவீதியில் பார்வைக்கு வைத்தனர். அவற்றை நகுலனுக்கும் பார்த்த ஞாபகமும் இருக்கிறது.பெரும்பாலும் இறந்தவர்கள் சீக்கியர்களே! நகுலன், ஒரு சந்தர்ப்பத்தில் இதை புதிய நண்பர்களிற்கு தெரிவித்த போது, “அப்படி ஒரு கண்காட்சியே நடக்கவில்லை”என கூறிக் குழப்பி விட்டார்கள். இச்சம்பவம் அக்காலத்திலிருந்த கழுகு தோழர்களிற்கு நிச்சியம் தெரிந்தே இருக்கும். இதற்குத் தான் கழுகைச் சேர்ந்தவர்களும் அவர்கள் வரலாற்றை யும் ஆவணப்படுத்த வேண்டியது அவசியம் என சொல்கிறோம். எவருமே, மரண விளையாட்டில் வீணே இறங்கக் கூடாது. இறங்கினால்… மரணமே தொடரும் ! ஆட்சி செய்கிற இலங்கையர்கள் வரலாற்றிலிருந்து எந்த பாடமும் படிக்கிறவர்கள் இல்லை. இந்தியனாமியின் செயற்பாடுளும் ,குழம்பி, திரிந்து போய் பழிவாங்கலாக மாறிப் போய்க் கிடந்தன.
திரை இயக்குனர் செல்வராகவன்,ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில்,இந்தியனாமியின் செயற்பாட்டை உரிச்சுக் காட்டுவது போல துணிச்சலாகக் படக்கதையில் பின்னிக் காட்டுறார்..ஒரு கற்பனைக் கதையில் சோழராணியை இந்தியனாமி சூழ்ந்து கொள்கிற போது, கண்களில் எல்லாம் நீர் வந்து விடுகிறது. இந்திய ராணுவம், பழங்குடியினர் மத்தியிலும் அப்படித் தான் இருக்கிறது;சமாதானம் எனச் செல்கிற இடங்களிலும் அப்படித் தான் …இருக்கிறது.காஸ்மீரிலும் அப்படித் தான் இருக்கிறது. அசாமிலும் அப்படித் தான் இருக்கிறது, இந்திய அரசியல்வாதிகள், ‘காந்திய தலைவர்’களாக மாறாமல் ராணுவத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது தான் .கழுகின் தலைவரை அவர்களால் பிடிக்க முடியவில்லை.
அன்றைய நாட்களிலே ஒரு நாள், இந்தியனாமி, கழுகுத் தலைவரை தேடிய இடத்திற்கருகில் ‘டெக் உப அதிபரும்; நகுலனுக்கு கணிதம் படிப்பித்தவரும், விருப்பமானவருமான சிவலோகநாதன் மாஸ்ரை வீட்டிலேயிருந்து வெளியே இழுத்து வீதியில் வைத்து சுட்டுக் கொன்று விட்டார்கள். அவர் மீசை வைப்பரில்லை. ஒட்ட வழித்திருப்பார் அவருக்கு மீசைப் பகுதியிலே புள்ளி என்றில்லாமல் இருந்த சிறிய வட்ட கறுப்பு மச்சத்தால்,..பேசுற போது ‘ஒரு சிரிச்ச களை’’முகத்தில் எப்பவும் இருக்கும்..அரசியல் ஈடுபாடு எல்லாம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை. சிலவேளைகளில், அவருடைய சிறுபிள்ளைகளில் ஒன்று பின் சீட்டிலிருந்து அவரைக் கட்டிப் பிடிக்க, மற்றது முன்னால் நிற்க… ஸ்கூட்டரில் டெக் வீதியால் செல்வதை நகுலன் பார்த்திருக்கிறான். அவனை மட்டுமில்லை வகுப்பில் படிக்கிற எந்த மாணவனைக் கடந்து போனாலும் பார்த்து சிரித்துக் கொண்டே போவார். சொவ்ட்டானவர்.சிறிலங்காவின் டிப்பிக்கல் தமிழ் குடிமகன். .’ஐடியல் குடும்பம். அவரைப் போய் கொன்றிருக்கிறார்களே? ராணுவத்திடம் ஈரம் இருப்பதில்லை. அரசியலே வேண்டாம் என்கிறவர்களை எல்லாம் தேடித் தேடிக் கொல்கிறார்களே,இதை கலிகாலம் என்று தான் சொல்ல வேண்டும்.நகுலனிற்கு அவரை நினைக்கிற போதெல்லாம் நெஞ்சு கனத்துப் போகிறது. இவரின் படத்தை கொக்குவில் டெக் அதிபர் அறையின் சுவரில் மாட்டி மரியாதை செய்கிறார்கள்.. புதிதாய் படிக்கப் போற பெடியள்களிற்கெல்லாம் இவரை தெரிய வருமா…? அறியயாவது ஆவலுடையவர்களாக இருப்பார்களா ? தெரியவில்லை.
வெறும் வரலாற்றுப் பதிவுகள் மாத்திரம் இருந்தால் போதாது, அவை உயிர்ப்பானவையாயும் இருக்க வேண்டும். என்பதையே நிலமைகள் புலப்படுத்துகிறன.. உள்நாட்டிலே அடுத்தடுத்த சந்ததிகளிற்கு,அதாவது வாரிசுகளிற்கு இப்ப நடக்கிற போராட்டம் பழைய வரலாறு, புலம் பெயர்ந்தவர்களின் சந்ததிகளிற்கு சுயமொழியே தெரியப் போவதில்லை. பேச்சுமொழியே வாழ கொஞ்சம் சாத்தியம் இருக்கின்றது. புலம் பெயர்ந்த நாடுகளிலிருக்கிற தமிழ் வானொலி,தொலைகாட்சிகள், இயக்கங்களைப் போலவே சீரழியிறதாகவிருந்தாலும் கூட, சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இயங்க வல்லவை.. அவற்றிற்கு பதிவுகளை ‘கலைத் தயாரிப்புக்களாக’ தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றன.? என்ன தான் நம்மவர்கள் எல்லாருக்கும் பிரச்சனை?….புத்தர் சொன்னது போல ஆசை, பொருளாசை, புகழாசைகள்தான் இங்கேயும் காரணங்களா? எங்கை போனாலும் ஒற்றுமையை ‘மருந்துக்கும்’ காணப்படுவதில்லையே. ஏன் தான் ஒன்று பட்டு செயற்படுவது வேப்பங்காய் போல கசக்கிறதோ? இதை எல்லாம் சீர் செய்வதற்காக பாடசாலைகளில் ‘ஊடகவியல்’ என்ற பாடத்தையும் சேர்த்துக் கொள்வதைப் பற்றி மாகாண முதலமைச்சர்கள் கவனத்தில் எடுப்பார்களா?
.
இந்தியனாமிக்கும்,கழுகிற்குமிடையிலான மோதல் ஒபிசலாகவே தொடங்கி விட்டது. இந்தியனாமி வந்த பிறகு கழுகும் சுதாரித்துக் கொண்டு பல இடங்களிலும் தன்னை பழையபடி பலப்படுத்திக் கொண்டு ஆயுதங்களுடன் வாகனங்களில் திரிந்து கொண்டிருந்தது.இந்தியனாமி,ஐம்பது,அறுபது பேர் கொண்ட அணிகளாக அங்க,இங்க…என இறக்கப்பட்ட போதும், கழுகினருடனான மோதல்கள் லேசுபட்டதாக இருக்கவில்லை, இழப்புகளை எதிர் கொண்டன. ஒரே சமயத்தில் இந்தியனாமி பல இடங்களிலிருந்து வெளிக்கிட்டதால் கழுகும் திணறியது. இவர்கள் இயக்கங்களை தாக்கி அழிக்க முதல், பல இயக்கங்களிலும் தாக்குதல் குழுக்கள் இருந்தன.ஒருத்தருகொருத்தர் ஒற்றுமையின்மை, நம்பகத்தன்மை இல்லாத போதிலும் கூட வெளியேறுகிற இலங்கை ஆமியை எதிர்த்து ஏதோ ஒன்றின் தாக்குதற் குழு பதில்தாக்குதலைச் செய்தது. ஏன் சிறிய அமைப்புக்களில் ,தம்பாப்பிள்ளையின் அணி,பெரிய இயக்கங்களைப் போல ஈடுபட்டது. அது சிலதோழர்களை , மோட்டர் பரல் சூடேற வெடித்த விபத்திலே பரிதாபகரமாகவும் பறிகொடுத்திருக்கின்றது. ஜெகனின் அணி, தாக்குதலில் ஈடுபட முயற்சித்து தயாரிப்புகளில் இறங்கி இருந்தது. அந்த ஜெகனை கழுகின் தோழர்கள் தேவையில்லாமல் சுட்டுக் கொன்று விட்டார்கள். அங்கிருக்கிற கழுகின் தோழர்களும் தம் ஆயுதங்களுடன் நிலையெடுத்து எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் தாக்குதல் அணி விரைவாக சென்று தாக்குதலைப் பொறுப்பேற்று விடும். ,அப்ப, கழுகு , எல்லாவற்றையும் களத்திலிருந்து அகற்றி விட்ட, துமன்றி, களையெடுப்புகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டிருந்ததால் … இலங்கையாமிக்கு வேற எதிர்ப்பு இயக்கங்களே இல்லாமல் போய் விட்டன. கழுகின் போராட்டம் வெற்றிகரமாக அமையவில்லை..இப்படியான தருணத்திலே, அவர்கள் “,ஒபரேசன் லிபரேசன் “என்ற தாக்குதலை யாழ்ப்பாணத்தை மீட்க வென வெறித்தனமாக மேற்கொண்ட போது கழுகுத் தோழர்களால் தாக்குப் பிடிக்கவே முடியவில்லை. அதனாலே, அப்பாவித் தமிழீழக் குடும்பங்கள் பல பதுங்கு குழிகளில் இறங்கி ஒளிய, பலர், இரக்கமற்ற ராணுவம் அதனுள் கிளிப்பைக் கழற்றி விட்டு கிரனைற்றுகளை எறிய, பரிதாபகரமாக இறந்தனர் . “இத்தாக்குதல்களை “கடும் இனவாத்துடனும்,இனதுவேசத்துடனும் புரிகிறார்கள்’” எனக் கூறி தடுத்து நிறுத்துவதற்காகவே இந்தியனாமி,’ பூமாலைத் தாகுதல்’என்று கூறிக் கொண்டு ஈழத்தமிழ் வான் எல்லையினுள் பிரவேசித்தது.. இப்ப, கழுகை சரிவர கையாளத்தெரியாத, புரிந்து கொள்ளத் தவறிய இந்தியத் தரப்பும் வடக்கில் சுயாதினமாக நடமாடுவதை உறுதிப்படுத்த…இலங்கைப்படையினர் எடுத்த எல்லா முகாம்களிலிருந்தும் ஓரே நேரத்தில் வெளியேறி யாழ்க்கோட்டை முகாமை சென்றடைதல்.” என்கிற ஒபரேசன் லிபரேசன், ” போன்ற படை நகர்வையே இவர்களும் எடுக்கின்றனர். “ஒபரேசன், லிபரேசன் 2 ! “
வெளிக்கிட முதல், முகாம்களிலிருந்து செல்களை குடிமனைகள் மீது விழும்படி அடிக்கத் தொடங்க, கறுப்பு முதலை என்கிற இந்திய ஹெலிகொப்டரும் மேலே ‘சடசடவென’ப் பறக்கிறது. அதனுள் இருக்கிற ‘மெசின் கன்’னிலிருந்து பறக்கிற தீப்பொறிகள் விழுந்து சிலபேர் தைத்து இறக்க,பலருக்கு, தலைக்கு மேலால் ‘விண்’கூவிக் கொண்டு பறக்க,வேர்க்க விருவிருக்க பனை மரங்களிற்குப் பின்னால் ஓடி ஒளிந்த அனுபவங்கள் இருக்கின்றன நகுலன்,.”காதை விட்டு இன்னமும் அந்த ‘உய்ங்’’ சத்தம் போகிதில்லை” எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறான். ஆனால், விழுந்த செல்லுகள், உயிர் சேதங்களை ஏற்படுத்த யாழ்ப்பாணத்து எல்லாப் பகுதிகளுமே கலகலத்துப் போயின.,இலங்கை ராணுவத்தைப் போலவே அடிக்கப் போறார்கள் என்ற பயத்தில் மக்கள் பெயர்ந்து அகதிகளாக அலையத் தொடங்கி விட்டார்கள். மேலே, வாடகைக்கு அமர்த்தப் பட்டிருக்கிற இஸ்ரேல் ஓட்டிகள் ‘ கிபி ரில் பருந்து போல பறந்து , வானில் வட்டமிட்டு ‘எட்டு’ போட்டு நிறை கூடிய குண்டுகளைப் போடவில்லை என்றதே இலங்கை ராணுவம் அடிக்கவில்லை என்பதைச் சொல்கிறது. பலாலி முகாமிலிருந்து மயிலிட்டி வயல்களில் செல்லுகள் வந்து விழுந்து வெடிக்க, 3,4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் (ஒரு சிறுபகுதி மக்கள்) “இனி இங்கே இருக்க முடியாது”..என்ற பதற்றத்தில் எதை எடுக்கிறது எதை விடுறது எனத் தெரியாமல் உடைகள்,உணவுப் பொருட்கள்,பாத்திரங்கள் என அகப்பட்டதை எடுத்து ஆண் தரப்பிடம் கொடுக்க, அவர்கள் ….சைக்கிள் கான்டிலில்,கரியரில் கொளுவி, நடக்க முடியாத சிறுவர்களை சீட்டிலே, பாரிலே தலையாணியை சுற்றி வைத்துக் கட்டி அதன் மேல் ஏற்றுகிறார்கள்.
அராலியை நோக்கி பொட்டுப்பாதையால் வருகிறார்கள்.இந்த வழி மக்களால் இலங்கை ராணுவத்தின் காலத்திலேயே ஏற்படுத்தப் பட்ட கள்ளப்பாதை.முகாமிலிருந்து கணிசமான தூரத்தில் புதர்களின் மத்தியில் கிடந்தது.இதாலே வந்து வயல் வரம்புகளில் எறி நடந்து வீதியில் ஏறும். இலங்கை ஆமி அடிக்கிற போது செல்லுகள் இப்பாதையின் மேலாலே விண்கூவிக் கொண்டு பறந்து போகும்.அவற்றின் வீச்செல்லை கூடியவை என்பதால் தப்புகிறார்கள். அபாயகரமான பாதை தான்.இலங்கை ஆமி வெளியில் வந்திருந்தால் இப்பாதையை நிச்சியமாக அறிந்திருப்பார்கள். ஆனால், இந்தியனாமியின் கதை வேறு!.அவர்கள் வெளிய வந்து படுத்தும் ஒளிந்திருப்பார்கள்.. அதைப் பற்றியெல்லாம் யோசிக்கிற மனநிலையில் யாரும் இல்லை .எம்ஜிஆர் அண்ணை,… அவர் குடும்பத்தையும், வேலண்ணைக் குடும்பத்தையும், தங்கச்சி கமலம் குடும்பத்தையும். நீண்ட நெடும் தூரத்தில் கிடக்கிற கிராமத்திற்கு கால்நடையாக கூட்டிச் செல்கிறார். ஏன், அராலியைத் தெரிந்தார் . வீச்செல்லை கூடிய செல்கள் என்பதால் தூரமாக செல்வதே நல்லதென…யோசித்தாரா?தெரியவில்லை. குஞ்சனின் மாமி முறையான சித்திரா அக்கா தான் எம்.ஜி.ஆர் அண்ணையின் மனைவி. அங்கே, ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் அவரைக் காண குஞ்சன், நகுலனை இழுத்துக் கொண்டு சைக்கிளில் அந்தப் பொட்டுப் பாதையாலே மையிலிட்டி போய்யிருக்கிறான். குஞ்சனுக்கு அவர்களை நிரம்பவே பிடிக்கும். எம்.ஜி.ஆர் அண்ணை புரவெசனல் சினிமா பாட்டுக்காரர். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பக்தர், ஆனாலும்,டி.எம்.எஸ்ஸின் …பிரபலமான தனிப்பாடல்களையும் கேட்பவருக்காக பாடுவார். அந்த காலத்தில் என்னவோ தெரியவில்லை,எல்லா (சின்னன் தொட்டு) பெடியள்களிற்கும் எம்.ஜி.ஆரின் டூசூம்,டூசூம் …சண்டைகளும், அவருடைய பாட்டுகளும் தான் பிடித்திருந்தன. பெடியள்கள் தான் அவரை “எம்.ஜி.ஆரண்ணை”எனக் கூப்பிடத் தொடங்கி..அதே அவருடைய பெயராகி விட்டது.
சித்திரா அக்காவையும் பாட வைத்திருக்கிறார். கட்டுத் தறியும் பாடும் போல… அவர்களின் மகனான எட்டு வயசு விமல், மழழைக்குரலில் கலக்கி எறிகிறான்.. விமலை விட மூன்று,நாலு வயசு குறைவான சிறுமிக்கு பாட வரவில்லை.வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் முளிகள் அழகானவை. மாலை போல திரும்பியவர்களிற்கு அந்த பயணம் மறக்க முடியாது இருக்கிறது. அகதியாய் வரும் அவர்கள் அராலியை அடைந்த போது சாமம் ஒன்றரை, இரண்டு மணி இருக்கலாம். எம்.ஜி.ஆரண்ணை, சொந்தங்களை நகுலனின் வீட்டுக்கு முன்னால் இருந்த சிறிய கிராமசபை மண்டபத்தில் விட்டு விட்டு சித்திராவின் அக்கா வீட்டை போய்யிருக்கிறார்.அந்த கட்டிடம் ஒரு அடைத்த ஒபிஸ் அறையையும்,அரைச் சுவருடன் திறந்த மண்டபத்தையும் கொண்டிருந்தது.சனசமூக வாசிகசாலைப் போன்ற அமைப்பு.அதிலே முந்தி சாருதா ரீச்சர் நேஸரி வகுப்பை நடத்தி இருந்தார். பெண்களும் சின்னப் பிள்ளைகளும் தூங்கி விட,ஆண் தரப்பிற்கு நித்திரை வராது கதைத்துக் கொண்டிருந்தார்கள். நகுலன்,விடியற்காலை ஐந்து மணி போல இயற்கை உபாதை கழிக்க வெளிய வந்த போது, பேசுறது கேட்க… புரியவில்லை.தென்னை மரத்திற்கு பெய்து விட்டு ,படலையை திறந்து கொண்டு வந்து “அண்ணை யார் நீங்கள்?”என க் கேட்டான்.. “மயிலிட்டி ஆட்கள், அங்கே செல்லடிக்கிறாங்கள் தம்பி”என்றவயள், அவர்களிற்கு தேத்தண்ணீர் வைக்க நீர் தேவையாய்யும் இருந்தது.”எங்கே நல்ல தண்ணீர் எடுக்கலாம்”எனக் கேட்டார்கள். அவர்கள், பைப்பிலிருந்து தான் தண்ணீர் எடுத்தார்கள். அதெல்லாம் ஒரு காலம், ஆறு மணிக்கெல்லாம் தண்ணீர் பைப்பை திறந்து விடுவார்கள்.இந்த ஒழுங்கையால் நேரப் போக அந்தச் சந்தியிலே ஒரு பைப் இருக்கிறது.இங்கே இருக்கிற வீடுகளில் எல்லாம் நல்ல தண்ணீர் கிடையாது. ஒன்றில் உவரும், நகுலன் வீட்டிலே பாசிமணம்,சில வீட்டிலே எண்ணெய் கலந்திருக்கிறது போல இருக்கிறது..எல்லாக் கிராமங்களிலும் இதே கதை தான். அவ்விடத்தில், இரண்டொரு நல்ல தண்ணீர்க் கிணறுகள் இருக்கின்றன. இருக்கிற ஒரு நல்ல தண்ணீர் கிணற்றடியில்,கிணறுக்கு சீமேந்தால் செய்யப்பட்ட மூடி போட்டு, பெரிய நீர்த்தாங்கி ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள்.அங்கே இருந்து நாகேந்திரமடப் பகுதியி லும் குலனையிலும் தான் சந்திக்கு சந்தி பைப்புகளை கட்டி வைத்திருக்கிறார்கள். மற்றது வயல் புறத்தில் இருக்கிற குடவைக் கிணறு. மின்சாரம் இல்லை என்றால் தண்ணீர் நின்று விடும்.அப்ப எல்லாரும் குடவைக் கிணறுக்கே படை எடுப்பார்கள்.
[ தொடரும் ]
balamuraly@sympatico.ca