ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;
இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய்
அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்;
இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை
ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே!
பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப்
பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச்
சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ்
சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று
நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை
தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம்
பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து
பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்!
மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற
காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த
பேரிடிபோல் வந்ததையோ! அன்னை யாரின்
பிரிவுதனை என்னசொல்வேன்; காந்தியாரின்
சீரினிய பத்தினியே! சிறப்பின் மிக்க
கஸ்த்தூரி யன்னாய்! எம் கருத்தே! கண்ணே!
பாரினிலே யெமைவிட்டும் சென்றாய்! இஃதோ
பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்போ?
சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்! நல்
மாதரசே! மாதர்களை முன்னே வைத்தாய்
உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?
– ஈழகேசரியில் வெளிவந்த அன்னை கஸ்தூரிபாய் பற்றிய நினைவுக் கவிதை. –
அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள்!
ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கியத்திறனாய்வு மற்றும் நாடகம் என அனைத்துப் பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து சாதனை புரிந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். அவர் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுபவர். அ.ந.கந்தசாமி அவர்களின் கவிதைப் பங்களிப்பை எடுத்துரைப்பதற்காக எம்மிடமுள்ள அவரது கவிதைகள் ஒவ்வொன்றாகப் பிரசுரமாகும். கவிதைகள் சில தட்டச்சு செய்த நிலையில் கிடைத்தன. அவற்றில் சில எழுத்துப்பிழைகள் இருக்கலாம். எனவே அவ்வப்போது மூலப்பிரதிகள் கிடைக்கும்போது அவை ஒப்பு நோக்கப்பட்டுத் திருத்தப்படும். அ.ந.க எத்தனை கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்பது சரியாகத்தெரியவில்லை. ஆனால் இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எமக்குக் கிடைத்த கவிதைகள் இங்கு பிரசுரமாகும். அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் பற்றி அறிந்தவர்கள் அறியத்தரவும். ஈழத்தில் அவர் காலத்தில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றைத்தேடிப்பார்ப்பதன் மூலமே அவர் எழுதிய கவிதைகள் பற்றிய மேலதிக விபரங்களைப்பெற முடியும்.