அத்தியாயம் இரண்டு: காலவெளிக் குழந்தையின் பயணம்!
குருமண்காடுப்பகுதியெங்கும் இருள் கவிந்திருந்தது. மன்னார் வீதியிலிருந்து ஒற்றையடிப்பாதை மட்டுமே காணப்பட்ட அப்பகுதியில் நாலைந்து வீடுகள் மட்டுமே சுற்றிவர அடர்ந்திருந்த கானகச்சூழலின் மத்தியில் காணப்பட்டன. வெளவால்கள் அவ்வப்போது பறந்துகொண்டிருந்தன. இருண்ட வானில் சுடர்கள் சுடர்ந்துகொண்டிருந்தன. எங்கிருந்தோ விட்டு விட்டு நத்தொன்று கத்திக்கொண்டிருந்தது. அப்பா வழக்கம் போல் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தபடி நட்சத்திரங்கள் சுடர்ந்துகொண்டிருந்த இரவு வானத்தைப்பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார். அவருக்கு இயற்கையை இரசிப்பதில், வாசிப்பதில் மிகுந்த விருப்பம். அவரது அந்தக்குணம் கேசவனுக்கும் அப்படியே வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி அவனும் படுத்திருந்தபடி தலைக்கு மேல் கவிந்திருந்த இரவு வானைப்பார்த்துக்கொண்டிருதான். அப்பொழுது அப்பா விண்ணில் எதையோ சுட்டிக் காட்டினார்.
“அதோ பார். அந்த நட்சத்திரத்தை..”
அவர் சுட்டிக் காட்டிய திசையில் நோக்கினான் கேசவன். நட்சத்திரமொன்று ஏனைய நட்சத்திரங்களினூடு விரைந்துகொண்டிருந்தது. ஏனைய நட்சத்திரங்களெல்லாம் இருந்த இடத்தில் இருந்தபடி சுடர்ந்தபடியிருக்க அந்த ஒரு நட்சத்திரம் மட்டும் அவற்றினூடு விரைந்துகொண்டிருந்தது.
“அந்த நட்சத்திரம் ஏனப்பா அப்படி ஓடுது?” என்றான்.
அதற்கவர் கூறினார்: “அது நட்சத்திரமல்ல. செயற்கைக்கோள்”
“செயற்கைக்கோளா? அப்படியென்றால் என்ன அப்பா?”
“நட்சத்திரங்கள் மிகத்தொலைவிலுள்ள சூரியன்கள். செயற்கைக்கோள்கள் அப்படியல்ல. அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் விண்வெளிக்கனுப்பியவை. பூமியின் வானிலை போன்றவற்றை அறிவதற்காக அனுப்பியவை. அவற்றில்படும் சூரிய ஒளிதான் அவற்றையும் ஒளிரச்செய்கின்றன”
இவ்விதமாக அலுக்காமல், சலிக்காமல் அப்பா அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலிறுப்பார். அப்போது நகரில் எம்ஜிஆரின் ‘எங்க வீட்டுப்பிள்ளை’ நியூ இந்திரா டாக்கீஸில் ஓடிக்கொண்டிருந்தது. பாடசாலைக்குச் செல்லும் போதும் வரும்போதும் யாழ் கண்டி வீதியும், ஸ்டேசன் வீதியும் சந்திக்குமிடத்திலிருந்த சினிமா விளம்பரங்களிலொன்றாக எங்க வீட்டுப்பிள்ளையின் விளம்பரமும் இருந்தது. போதாதற்கு நகரில் அடிக்கடி ஆங்காங்கே ‘நான் ஆணையிட்டால்’ பாடல் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது. அவனுடன் வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர் ‘எங்க வீட்டுப்பிள்ளை’யைப் பார்த்து விட்டிருந்தார்கள். அது பற்றி அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார்கள். அதுவரை அவன் திரைப்படமெதனையும் பார்த்திருக்கவில்லை.
“அப்பா..”
“என்ன மகனே!” சில வேளைகளில் அப்பா அவனை மகனே என்பார். குஞ்சு என்பார். செல்லமே என்பார். அவ்வப்போது வாய்க்கு வரும் அன்பு தவழும் சொற்களால் அவனை அழைப்பார்.
“எப்ப எங்களை எங்க வீட்டு பிள்ளைக்குக் கூட்டிப்போகின்றீர்கள்?”
அப்பா அவனை வியப்புடன் பார்த்தார். அன்றுதான் முதல் முறையாக அவன் அவரிடம் திரைப்படம் பற்றிப் பேசியிருக்கின்றான்.
அவர் கூறினார்: “கெதியிலை போகலாம். ஆச்சியிட்ட சொன்னால் உங்கள் எல்லாரையும் கூட்டிச் செல்வார்”
அவர் ஆச்சி என்றது அவர்களது வீட்டுக்கு அருகில் , காடழித்துக் குடிசை கட்டித் தனிமையில் வாழ்ந்துவரும் மலையகத்தைச் சேர்ந்த ஆச்சி பற்றியது.
அவனுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. முதன் முறையாகத் தமிழ்ச்சினிமாப்படம் பார்க்கப்போகின்றான் என்னும் நினைவே இன்பத்தைத்தந்தது. சிறிது நேரம் அவர்களுக்கிடையில் மெளனம் நிலவியது. அப்பா இரவு வானின் எழிலில் தன்னை மறக்கத் தொடங்கினார். அவனது கவனமும் மீண்டும் விரிந்திருந்த இரவு வானின் மீது திரும்பியது. அப்பா வாங்கித் தந்திருந்த ஆங்கில ‘நர்சரி’ப் பாடல்களை உள்ளடக்கிய புத்தகத்தின் நினைவு தோன்றியது. அதிலுள்ள ஒரு பாடல் அவனுக்கு மிகவும் பிடித்த பாடல். அப்பாடலை நினைத்ததுமே அவனது மனக்கண்ணில் சுடரும் நட்சத்திரங்களும், தொலைவு வரை வியாபித்துக்கிடக்கும் உலகும் தோன்றி இன்பத்தைத்தந்தன.
Twinkle twinkle littel star.
How I wonder what you are?
Up above the world so high
Like a diamond in the sky.
இப்பாடலில் வரும் இம்முதல் நான்கு வரிகளைக் கேட்டதுமே அவனது மனம் இன்பத்திலாழ்ந்து விடுவது வழக்கம். அதுவும் Up above the world so high என்னும் வரி ஒருவிதக் கிளுகிளுப்பையும், புதிரொன்றினைத்தாங்கி உயர்ந்து நிற்கும் இவ்வுலகத்தைப்பற்றியதொரு சித்திரத்தையும் அவனது சிந்தையில் ஏற்படுத்துவது வழக்கம். இருண்ட வானினூடு நட்சத்திரங்கள்தாம் எவ்வளவு அழகாகச் சுடர் விடுகின்றன.
“அப்பா! நட்சத்திரங்கள் எல்லாம் எவ்வளவு தூரத்திலிருக்கின்றன?”
அப்பா கூறினார்: ” அவை வெகு தொலைவிலிருக்கின்றன. வெகு தொலைவில்… ரொக்கட்டில் போனாலும் எங்கட காலத்திலை போய்ச்சேர முடியாத தூரத்திலை அவை இருக்கினம்”
அவ்வளவு தொலைவிலா அவை இருக்கின்றன..
“பாவம் அப்பா அவை” என்றான்.
அப்பா கேட்டார்: “ஏன் குஞ்சு?”
அவன் கூறினான்: “அவை இருட்டிலை தனித்துத் தூரத்திலை இருக்கினமே. யாருமே நெருங்க முடியாத தூரத்திலை இருக்கினமே. இல்லையா அப்பா?”
அப்பா சிரித்தார் அவனது வார்த்தைகளைக் கேட்டு. அவனது கற்பனை கூடவெ அவருக்கு இன்பத்தையும் தந்தது.
“மகனே! உன் கற்பனை அற்புதம். நானும் உன்னைப்போல்தான் என் சிறுவயதில் இப்படி நினைப்பது வழக்கம். அவை என்னையும் அப்போது பிரமிப்பில் ஆழ்த்தின மகனே! என்னைப்போல் அவை உன்னையும் இப்போது பிரமிக்க வைத்திருக்கின்றன. இயற்கை அற்புதமானது மகனே!”
அப்பா சிறிது மெளனமாகவிருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்: “மகனே! இயற்கை எவ்வளவு அற்புதமானது. அழகானது. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். எப்பொழுதும்..”
அச்சமயம் விண்ணைக் கோடிழுத்துச் சுடரொன்று கோடு கிழித்தது.
அவனுக்கு ஆச்சரியமாகவிருந்தது. “அப்பா! ” என்றான்.
அப்பா கேட்டார்: “என்ன மகனே?”
அவன் கேட்டான்: “அப்பா! இப்பத்தானே சொன்னனீங்கள் நட்சத்திரங்கள் தூரத்திலை இருக்கு என்று. எப்படி இவ்வளவு கிட்ட வந்து போகின்றன.”
அப்பாவுக்கு அவனது வினாத்தொடுக்கும் ஆளுமை மகிழ்ச்சியைத்தந்தது. அவர் கூறினார்: ” அவை நட்சத்திரங்கள் அல்ல. அவை விண்வெளியிலிருந்து எங்கட பூமியின்ற காற்று மண்டலத்துக்கை வருகின்ற விண்கற்கள் உராஞ்சுவதால் ஏற்படுகின்ற நெருப்பு. “
“விண் கற்களா? அப்படியென்றால் என்ன அப்பா?” அவன் கேட்டான்.
அப்பா கூறினார்: ” விண்வெளியிலை எப்பொழுதும் பல பெரிய பாறைத்துண்டுகள் போன்றவை இருக்கின்றன. அவற்றில் சில துண்டுகள் எங்கட பூமியின்ற காற்று மண்டலத்துக்கை நுழைந்து விடுகின்றன. அப்படி நுழைந்தால் அவை காற்றுடன் உராய்ந்து எரிந்து அழிந்துபோய் விடுகின்றன. அவைதான் இவ்விண்கற்கள். எரிகற்கள். எரி நட்சத்திரங்கள் என்றும் கூறுவினம். ஆனால் அவை நட்சத்திரங்களல்ல. வானில் சுடர்வதால் நட்சத்திரங்களென்று சொன்னாலும் அவை நட்சத்திரங்களல்ல..”
அப்பாவுடன் அவன் கழித்த இரவுகள் அத்தனையும் கேசவனது மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன பசுமரத்தாணிபோல்.
கேசவனின் சுயசரிதை!
இந்த உலகு இந்தப்பிரபஞ்சம் எப்பொழுதும் என்னைப் பிரமிப்பிலாழ்த்துகின்றது. இந்த வயதிலும் என்னை அவை பற்றிய சிந்தனைகள் ஆட்டிப்படைக்கின்றன. இவை பற்றிய தேடல் எப்பொழுதும் நெஞ்சில் இன்பத்தைத்தருகின்றன. அப்பாவின் சாறத்தினுள் படுத்திருந்தபடி அவருடன் உரையாடிய அந்த நாள் நினைவுக:ள் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. படைப்பின் நேர்த்தி எப்பொழுதுமே என்னைப்பிரமிக்க வைக்கின்றன. கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் தொடக்கம், மாபெரும் உயிரினங்கள் வரை இயற்கைதான் எத்துணை அழகு! எத்துணை நேர்த்தியுடன் அறிவுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. முற்றிலும் புரிவதற்கு முடியாத அளவுக்கு எம் அறிவு , எம் இருப்பு முப்பரிமாணச்சிறைகளுக்குள் அடைபடடிருக்கின்றது. இச்சிறையிலிருந்து மீள்வதற்கு வழிகள் எவையுமுண்டா?
என் வெப்ப மண்ணை, மேல் விரியும்
இரவுவானை, சுடரை, நிலவை
நான் நீங்கியது நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.
இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு
மாடுமாகினேன்.
ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கானுயிராயுமாகினேன்.
முடிவற்ற நெடும் பயணம்!
தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!
என்று முடியும்? எங்கு முடியும்?
நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.
வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்களாயின.
பேய்த்தேரெனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.
காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!
அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்.
(தொடரும்)