வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்!

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்!– இச்சிறுகதை முதலில் உயிர்நிழல் (பிரான்ஸ்) சஞ்சிகையில் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியது. –


யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். ‘பேப்’ வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு ‘திரில்’ இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த ‘யமேய்க்க’ மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். ‘பேப்’ வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். ‘சிறு இந்தியா’ , ‘சிறு இத்தாலி’..இப்படி பல பகுதிகள்.

அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.

‘யன்னல்’. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். ‘சப்பாத்து’ ‘அலுகோசு’ போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் ‘யன்னல்’. ‘யன்னல்’ யன்னலாக நிலைத்து நின்று விட்டது. ‘சாளர’த்தை விட எனக்கு ‘யன்னல்’ என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. ‘மின்ன’லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு ‘யன்னல’ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?

‘பேப்’ வீதியின் தெற்குப் பக்கமாக நோக்கி அவன் வந்து கொண்டிருந்தான். அவன் நிறத்தை வைத்துப் பார்த்தால் அவன் ஒரு கறுப்பு மனிதன். ‘யமேய்க்க’ நாட்டவனாக இருக்கலாம் போல் பட்டது. ஆனால் அதனையும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. பலரை , நைஜீரியாப் பக்கம் இருந்து வந்த பலரை ‘யமேய்க்க’ர்களாக எண்ணி ஏமாந்த அனுபவம் பல உண்டு. அவர்களது உரையாடும் பாங்கினை வைத்துப் பிடித்துக் கொள்ளலாம். நம்மவரிற்கு அவனைக் ‘கறுவல்’ என்று சொல்வதிலொரு அலாதிப் பிரியம். ஏதோ ‘வறுவல்’ என்று சொல்வதைப் போல் ஆசையாகக் ‘கறுவல்’ என்று கூறுவார்கள். ‘கறுவல்’ என்று சொல்வதில் பெரிய தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல்லினை சொல்லும் போது அவர்களையறியாமலேயே தென்படுகின்றதே அந்த இளக்காரத் தொனி.. அது அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது….ஊரிலை கூறுவார்களே….’வடக்கத்தையான் வருகின்றான்’ என்று….அதுமாதிரி இங்கு இந்தக் ‘கறுவல்’…

அந்தக் கறுப்பு மனிதன் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான். பார்ப்பதற்கு ‘ரப்’ இசை வழங்குமொரு பாட்டுக் காரன் போலொரு தோற்றம்…ஒருவிதமான ஆட்டம் அவன் நடையில் தென்பட்டது. கூடவே ஒரு நாய் வந்து கொண்டிருந்தது. கறுப்பு நாய். எந்த வகையான நாய் என்று சொல்வதற்கில்லை. நான் ஒரு நாய் ஆராய்ச்சியாளனல்லன். எனக்குத் தெரிந்த ஒருசில நாய் வகைகளில் அடங்கிய நாயல்ல அது. சாதாரண ஊர் நாய் வகைகளைப் போன்ற தோற்றம். வாலைக் குழைத்துக் கொண்டு நன்றியுடன் அந்தக் கறுப்பு மனிதனைத் தொடர்ந்து கொண்டிருந்தது அந்த வாயில்லா ஜீவன். நாயென்ன வாயில்லா ஜீவனா? அதெப்படி அதற்கு வாய்தானே இருக்கிறதென்று குதர்க்கமாகக் கேட்டு வைத்து விடாதீர்கள். ‘வாய் வங்காளம் மட்டும் போகின்றதே’யென்று நான் உங்களிற்குப் பதிலிறுக்க வேண்டி வந்து விடும். ஏதோ ஒரு பாடலை அவனது வாய் முணுமுணுத்தபடியிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

இதற்கிடையில் எதிர்த் திசையில் , ‘பேப்’ வீதியில் வடக்கு நோக்கி இன்னுமொரு மனிதன் வந்து கொண்டிருந்தான். நிறத்தில் இவன் முன்னவனிற்கு முற்றிலும் எதிரானவன். பார்ப்பதற்கு கிரேக்கனைப் போல் தென்பட்டான். இவனைப் போல் அவனுடன் கூடவே ஒரு நாய்.. அதுவும் அவனைப் போலவே ஒரு வெள்ளை நாய்.. இவனுடைய நாயைப் போலவே சாதாரண ஊர் நாயென்றினைப் போன்றதொரு தோற்றம். அவனது கவனம் எதிர்த்திசையில் சென்று கொண்டிந்த மதமதர்த்த மார்புகளுடன் சென்று கொண்டிருந்த பெண்ணொருத்தியின் மேல் திரும்பியிருந்தது. அதே சமயம் நடந்து கொண்டுமிருந்தான். எதிராகச் சென்று கொண்டிருந்த கறுப்பின மனிதனுடன் மோதி விடுவான் போல் பட்டது. கறுப்பு மனிதனும் எதிரே வருபவன் கவனம் திசைமாறி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் முணுமுணுத்தபடியிருந்த பாட்டிலேயே ஒன்றியிருந்ததாகப் பட்டது. அவனை எச்சரிக்கலாமாயென்று எண்ணி முடிப்பதற்குள்ளேயே மோதல் நிகழ்ந்து விட்டது. ‘சே.. கொஞ்சம் முந்தியிருக்கலாமே’ என்று பட்டது. மோதல் நிகழ்விற்கு இருவரிலும் தவறிருந்தது. ஆனால் அவர்கள் அதனையுணரவில்லையென்பதையே தொடர்ந்த சம்பவம் காட்டியது.

வெள்ளைக்காரன் என்ன கூறினான் என்பது தெரியவில்லை. ஆனால் அவனது வாய் அசைப்பிலிருந்தும், அவன் முகத்தில் வெடித்துக் கொண்டிருந்த ஒருவித அசூயை கலந்த சினத்திலிருந்தும் அவன் தன் தவறினை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று பட்டது. கறுப்பு மனிதனின் ஆத்திரமும் அதிகரித்து விட்டது. இவனிலும் தவறிருந்தது. மோதலைத் தவிர்ப்பதற்கு இவனுக்கும் ஒரு சந்தர்ப்பமிருந்தது. ஆனால் இவனும் அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. பதிலிற்கு இவனும் பலமாகத் தலையினை அசைத்துக் கத்துவதைப் பார்க்க முடிந்தது. இவர்கள் இருவரிற்குமிடையில் ஏற்பட்ட மோதல் பாதசாரிகள் பலரது கவனத்தினை இழுத்து விட்டது. இவர்களைச் சுற்றி வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். ‘உப்புச் சப்பில்’லாததொன்றிற்காக இவர்கள் மோதுவதாக யன்னலிற்கப்பாலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னால் உணர முடிந்தது. ஒருவேளை யன்னலிற்கப்பால் இருந்திருந்தால் நானும் அவர்களைப் போல்தான் மோதியிருப்பேனோ? யன்னலிற்கிப்பாலிருப்பதால் தான் இவ்விதம் எண்ணுகின்றேனோ? இங்கிருந்து பார்க்கும் போது ஏன் தான் அங்கு இவ்விதம் அடிபட்டுச் சாகின்றார்களோ என்று படுவதில்லையா? மிகவும் இலகுவான தீர்விற்கான வழிகள் இருக்கும் போது அவர்கள் ஏன் தான் இவ்விதம் மோதுகின்றார்களோவென்று படுவதில்லையா? அதுபோல் தான் இதுவுமோ?

யன்னலிற்கிப்பாலிருந்து பார்க்கும் போது எல்லாமே தெரிகின்றது. யன்னலிற்கப்பால் ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? கறுப்பு மனிதனும் வெள்ளை மனிதனும் முறுகிக் கொண்டிருந்த நிலையில் பெரிதாக மாற்றமேதுமில்லை. அடிபடாத குறைதான். யாரோ ஒருவர் மோதலைத் தவிர்ப்பதற்கு முன்வந்து முயன்று கொண்டிருந்தார். எனக்குச் சற்றே சுவாரசியம் குறைந்தது. கவனம் நாய்களின் மேல் திரும்பியது. அந்தக் கறுப்பு நாயினதும் வெள்ளை நாயினதும் முகங்களில் தான் எவ்வளவு மகிழ்ச்சி ரேகைகள்! வாலை வாலை ஆட்டியபடி ஒன்றினை ஒன்று முகர்ந்தபடி எவ்வளவு சந்தோசம்! யன்னலிற்கப்பால் சந்தோசப்படுவதற்கும் உயிரினங்கள் இருப்பதை யன்னலிற்கிப்பாலிருந்து பார்க்கையில் ஆனந்தமாகத்தானிருக்கின்றது.

– நன்றி: உயிர் நிழல் ஆகஸ்ட் 2000 –
பதிவுகள், திண்ணை