தமிழக முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் கட்சி பேதமின்றி அவர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டுமென்று வாழ்த்தியிருக்கின்றனர். இது தமிழக அரசியலில் காணாத விடயம். அரசியல் நாகரிகம் இன்னும் சிறிதாவது இருப்பதை எடுத்துக்காட்டும் பண்பு இவ்வாழ்த்துதலில் தெரிகிறது. “மகிழ்ச்சி!”
தமிழக முதல்வர் பற்றிய அரசியல்ரீதியிலான கருத்துகளுக்கு அப்பால் அவர் தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப்பெற்ற வசீகரம் மிக்க தலைவர். அந்த மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ள வேண்டும். அவரை உயிருக்குயிராக விரும்பும் அந்த மக்களுக்காக அவர் விரைவில் பூரண சுகமடைந்து வருவார் என்று எதிர்பார்போம். ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் சுகவீனம் சாதாரணமானதல்ல. அது பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் வெளியில் வராது மறைக்கப்பட்டிருந்தாலும், அவர் கடுமையானரீதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதுதான் அது. ஏதாவது தொற்றுநோயாகக்கூட இருக்கலாம். சவால்களை எதிர்த்து மீண்டு வரும் ஆளுமை மிக்கவர் அவர். இம்முறையும் மீண்டு வருவாரென்று எதிர்பார்ப்போம்.
பெண் சிசுக்கொலையைத்தடுக்க எடுத்த நடவடிக்கை, மாணவர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவும் திட்டங்கள். போன்ற அவரது திட்டங்கள் வறிய மக்களுக்கு மிகவும் உதவும் திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை.
ஒரு பெண்ணாக இருப்பதால் ஆண் தலையெடுத்த சமூகத்தில், அரசியலில் அடைந்த அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் அவர் எதிர்கொண்டு சமாளித்து இன்னும் அரசியலில் நிலைத்து நிற்கின்றாரென்றால் அது அவரது வலிமையான ஆளுமையினால்தான். அந்த வலிய ஆளுமையே அவருக்கு ஆணாதிக்கம் மிக்க சமூகத்திலும், அரசியலிலும் பெரிய எதிர்ப்புகளைக் கொண்டுவந்தன. எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தில் அவருக்கேற்பட்ட அவமானம், தமிழகச் சட்டசபையில் அவருக்கேற்பட்ட அவமானம் இவையெல்லாம் மறக்க முடியாதவை.
அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு திறமையான கலைஞர். நாட்டியத்தாரகை. ‘காவிரி தந்த கலைச்செல்வி’ என்ற அவரது நாட்டிய நாடகம் அறுபதுகளில் புகழ்பெற்ற நாட்டிய நாடகங்களிலொன்று. அவரது நடிப்புத்திறமையினை வெளிப்படுத்தும் வகையில் ‘எங்கிருந்தோ வந்தாள்’ போன்ற ஒரு சில படங்களே வெளியானபோதும் அவர் நல்ல திறமை மிக்க நடிகை. நல்ல எழுத்தாளர்களிலொருவர். ஆங்கிலப்புலமை மிக்கவர். இந்தியாவின் ஏனைய மொழிகள் சிலவற்றிலும் புலமை மிக்கவர். திறமையான ஒருங்கிணைப்பாளர். இல்லாவிட்டால் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியொன்றினை இவ்விதம் தன் ஆதிக்கத்தில் வைக்குமளவுக்குக் கட்டி எழுப்பியிருக்க முடியுமா?
அவர் ஒரு திறமையான பாடகர். திறமையான பத்திரிகையாளர்.
ஜெயலலிதா என்னும் பெயரிலேயே வெற்றி உள்ளது. பல தடவைகள் உலகச்சவால்களை எதிர்கொண்டு ஜெயித்து மீண்டிருக்கின்றார். இம்முறை உடல்ரீதியிலான சவால்களுக்குள் சிக்கியிருக்கின்றார். அவற்றையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று விரைவில் மீண்டு வரட்டும்.
மானுடர்கள் யாவரும் குறைகளும், நிறைகளும் நிறைந்தவர்கள்தாம். ஜெயலலிதாவும் அதற்கு விதிவிலக்கானவரல்லர். அவரது குறைகளுடன், அவரது நிறைகளையும் நினைவிலிருத்தி அவரை எடை போடுவோம் தற்போதுள்ள சூழலில் அவர் உடல் நலிந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார். சக மனிதரென்ற அடிப்படையில் அவர் பூரண உடல் நலம் பெற்று மீண்டு வாழ்க்கையை அதன் சவால்களை எதிர்கொள்ள வேண்டுவோம்.