அ.யேசுராசாவின் ‘பனிமழை’ (2002) – மொழிபெயர்ப்புக் கவிதைகள்

எழுத்தாளர் அ.யேசுராசாவின் தமிழ் இலக்கியத்துக்கான முக்கிய பங்களிப்புகளாக அவர் வெளியிட்ட அலை சஞ்சிகை, கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், உலக சினிமா பற்றிய கட்டுரைகளைக் குறிப்பிடுவேன். அவரது ‘நல்லம்மாவின் நெருப்புச் சட்டி’ அவரது கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. உண்மையான உணர்வுகளின், அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்த சிறந்ததொரு கவிதை. அண்மையில் அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பான ‘பனிமழை‘ தொகுப்பினை வாசித்தேன். எண்ணிம நூலகமான நூலகம் தளத்திலுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: http://www.noolaham.net/project/01/45/45.htm


நூலின் என்னுரையிலிருந்து அ.யேசுராசவின் ஏனைய புனைபெயர்களையும் அறிய முடிகின்றது. அலை, புதிசு, களனி, திசை, தாயகம், கவிதை ஆகிய இதழ்களில் சொந்தப்பெயரிலும் , கடலோடி, ஜெயசீலன் ஆகிய புனைபெயர்களிலும் வெளியான மொழிபெயர்ப்புக் கவிதைகள் இவை. இவற்றை இந்தியா, இலங்கை, ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா, உருகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பதினான்கு கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்திலருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார் அ.யேசுராசா. அட்டைப்பட ஓவியத்தை ஓவியர் ரமணி வரைந்திருக்கின்றார்.


இந்நூலுக்குச் சிறப்பான முன்னுரையொன்றினை எழுதியிருக்கின்றார் கவிஞர் சோ.பத்மநாதன். அவரும் கூட சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தனது முன்னுரையில் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய கூற்றுகள் என்னைக் கவர்ந்தன. படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எவரும் கவனிக்க வேண்டிய கருத்துகள் அவை. அவற்றில் சிலவற்றை இங்கு தருகின்றேன்:

1. “வேறொரு விதமாகச் சொல்வதானால் மொழிபெயர்ப்பு வெறும் translation ஆக அன்றி transcreation ஆக – மீள் படைப்பாக அமைய வேண்டும். அஃது ஒரு வித்தை; ரஸவாதம், எளிதில் கைவருவதன்று.. கணவன் வீட்டுக்குச் செல்லும் சகுந்தலையை வாழ்த்தி வழியனுப்புகிறார் கண்ணுவர். காளிதாசனின் மூலத்தில் அசரீரியாக வருகிறது ஒரு சுலோகம். “சகுந்தலை செல்லும் வழி நெடுக தாமரைப் பொய்கைகள் நிறைந்து குளிர்மை தருக; நிலமெங்கும் தாமரை மலரின் தாதுக்கள் இறைத்து இதஞ்செய்க; தென்றல் வீசுக” என்பது அதன் பொழிப்பு. பிரசித்தி பெற்ற இச் சுலோகத்தை மறைமலையடிகள், மகாவித்துவான் ரா. ராகவையங்கார், ஈழத்து மஹாலிங்கசிவம் ஆகிய மூவர் மொழிபெயர்த்துள்ளனர். முன்னைய இருவரும் மூலத்தை விட்டு விலகாமல் நிற்க, மஹாலிங்கசிவம், ஒரு புதுக் கற்பனையைப் பொருத்துகிறார்: “சகுந்தலை செல்லும் தூரம் குற்றியலுகரம் போல் குறுகுவதாக!” இது transcreation. தமிழ் வாசகர்கள் மட்டும் சுவைக்கக் கூடியது. மொழிபெயர்ப்பாளர் தரு போனஸ்.”


2. “கவிதை, மொழியின் மிகச் செப்பமானதொரு வடிவம். “The best words in the best order” என்பது எளிமைப்படுத்தப்பட்ட வரைவிலக்கணம் ஆயினும், அதில் உண்மையுண்டு. நல்லதொரு கவிதையின் ஒரு சொல்லைத்தானும் மாற்றவோ குறைக்கவோ முடியாது. கவிஞன், செதுக்கிச் செதுக்கித் தன் படைப்புக்கு இறுதிவடிவம் தருகிறான். அவ்வாறு செம்மை (perfect) ஆன ஒன்றை இன்னொரு மொழிக்கு மாற்றும் போது, அதற்கு ஒரு புதுவடிவம் – ம்றுபிறப்பு – தரப்படுகிறது. அவ்வடிவம் அந்த இலக்குமொழியின் செழுமையை – சூக்குமங்களை – பண்பாட்டுப் படிமங்களை – பயன்படுத்தி உருவாவது. மூலமொழியின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொள்வதொடு, இலக்கு மொழியின் மரபோடு பரிச்சயமும் அநாயாசமான மொழியாட்சியும் வாய்ந்தவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்க வேண்டும்.”


3. “மொழிபெயர்ப்பாளன் எப்படித் தெரிவினை (Selection) மேற்கொள்கிறான்? மூல ஆசிரியனால் – அவன் படைப்பால் – கவரப்பட்டு, அதில் மனம் ஈடுபட்டு, அதைத் தன் வாசகர்களுக்கு வழங்கும் ஆர்வம் காரணமாக இப்பணியில் இறங்குகிறான். இரண்டாவதாக, மூல ஆசிரியனுடைய கருத்தை – நோக்கை – ஏற்றுக்கொண்டே இப்பணியைச் செய்கிறான். இஃது அவசியமான நிபந்தனையாக இல்லாவிடினும், பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வரையறைக்கு உட்படுவது காணலாம். கார்ஸியா லோர்கா வையும் அனா அக்மதோவாவையும் யேசுராசா மொழிபெயர்த்தமைக்குக் காரணம் அவருடைய உணர்வோட்டம். முற்குறிப்பிட்ட அவ்விரு கவிஞர்களுடைய உணர்வோட்டங்களுக்குச் சமாந்தரமாக இருப்பதே என அனுமானிக்கலாம்.”


4.”ரஸனை என்ற எல்லைக்கப்பால், கருத்தியல் நிலையில் ஏற்படும் ஒன்றிப்பு மொழிபெயர்ப்பாளனுடைய தெரிவைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1937இல் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரால் தன் தாய்நாடாம் சீனா சின்னாபின்னப்படுவதையும் குவோமின்டாங் கோழைத்தனமாக மண்டியிடுவதையும் கண்டு சீற்றமடைந்த இளங்கவிஞன் அய் ஜிங், “சீனமண்ணில் பனி பொழிகிறது” (பக்.3) என்ற கவிதையை எழுதினான். சீனாவை வாட்டும் பனி ஜப்பானிய ஆக்கிரமிப்பைக் குறியீடாகச் சுட்டுகிறது. யேசுராசா 1979இல் இதை மொழிபெயர்க்கிறார். அவ்வாண்டு Chinese Literature – 6 இல் ஆங்கில வடிவம் வந்தது நேரடிக் காரணமாய் இருந்தாலும், 1977இன் பின் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ அடக்குமுறை, இன வன்முறை என்பன ஏற்படுத்திய தாக்கம், மொழிபெயர்ப்பாளர் அய் ஜிங்கின் கவிதையை உணர்வுநிலையில் நின்று நோக்க – தமிழ் அநுபவத்தை சீன அநுபவத்தோடு பொருத்திப் பார்க்க – உதவியிருக்கும், மொழிபெயர்க்க உந்தியிருக்கும் என அனுமானித்தல் தவறாகாது.”


நூலுக்கான என்னுரையில் அ.யேசுராசா அவர்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றிக் கூறிய கூற்றுகளும் என்னைக் கவர்ந்தன. உதாரணமாகப் பின்வரும் கூற்றினைக் குறிப்பிடலாம்:


“‘அவ்வப்போது பிறமொழிக் கவிதைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கக் கிடைக்கின்றன. நல்ல மொழிபெயர்ப்பாக அமைந்த கவிதைகள் தரும் அனுபவமும், உள்ளக்கிளர்வும் வித்தியாசமானவை. அவற்றில் வெளிப்படும் தற்புதுமையினை நான் விரும்புகிறேன். தமிழில் சுயமாக எழுதப்படும் கவிதைகளில் அத்தகைய அனுபவங்கள் அபூர்வமாய்த்தான் கிடைக்கின்றன. மாறுபட்ட நிலப்பிரதேசங்கள், காலநிலைகள், பண்பாட்டு மரபுகள், அறிவியல்-தத்துவ வளர்ச்சிச் சூழல்களில் வேர்கொண்டு வெளிப்படும் உணர்வுகள் என்பதால், தம்மளவிலேயே ஒரு நூதனத் தன்மையை அவை கொண்டுள்ளன போலும்! நூதனப்பான்மைகள் மட்டுமல்லாது மனிதப் பொதுமைகளும் அவற்றில் அற்புதமாக வெளிப்படுகின்றன.’ – தூவானம் (பக்கம் 44)”


நானும் மொழிபெயர்ப்புக் கவிதைகளை விரும்பி வாசிப்பவன். அதற்கு முக்கிய காரணங்களிலொன்று: எனக்குக் கவிதை மொழி செறிவு மிகுந்ததாக இருக்க வேண்டும். மிகவும் எளிமையாக, சுருக்கமாக இருந்தால் தேர்ந்தெடுக்கப்படும் சொற்கள் கவிதானுபவத்தைத்தரும் வகையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலான மொழிபெயர்ப்புக் கவிதைகளில் இவை காணப்படுவதால்தாம் அவை என்னை மிகவும் கவர்பவையாகவுள்ளன. தமிழில் இவ்விதமான கவிதைகள் குறைவாக அமைவதற்குக் காரணம் பலரும் தம் அனுபவங்களை , உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்குப் பதிலாக, தமது கவிதைகள் மற்றவர்களைக் கவரவேண்டுமென்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவதுபோல் நான் உணர்வதுண்டு; அதனால்தானென்று கருதுகின்றேன்.  அவ்விதம் எழுதப்படும் கவிதைகள் என்னை ஒருபோதும் கவர்வதில்லை. ஏனென்றால் அவை உண்மையான அனுபவங்களின், உணர்வுகளின் வெளிப்பாடுகளல்ல. செயற்கையானவை. அதனை அவற்றை வாசிக்கும்போதே உணர்ந்துகொள்ள முடியும்.


தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகளை இங்கு தருகின்றேன்:


இங்கு குறிப்பிடப்படுமுயிரினம் திமிங்கிலமாக இருக்கக்கூடும். அல்லது சுறாவாகக்கூட இருக்கக்கூடும். செதில்களும் ,துடுப்புகளும் என்றிருப்பதால் மீன் வகை உயிரினமாகத்தானிருக்க வேண்டும். அவ்வகையான உயிரினமொன்றின் புதைபடிவு (fOSSIL) கவிஞருக்கு ஏற்படுத்திய உணர்வினை விபரிப்பது. வாழ்க்கைக்கு இயக்கத்தின் முக்கியத்தை அப்புதைபடிவு கவிஞருக்கு உணர வைக்கின்றது. அதே சமயத்தில் வாழ்க்கைக்கு முடிவு என்பது , மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் வாழ்வதற்கு நாம் சக்தி அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி அதனை எதிர்கொள்ள வேண்டும். அதனூடு நீச்சலடிக்க வேண்டும். மீனொன்றின் புதைபடிவு இருப்பு பற்றியதோருண்மையைக் கவிஞருக்குப் புரிய வைக்கின்றது. உணர வைக்கின்றது. அவ்வுணர்வுகளே அற்புதமானதொரு கவிதையாக உருவாகியிருக்கின்றது. இவ்விதமான உணர்வுகளை நாம் எப்பொழுதுமே உணர்வதுண்டு. பழைய கட்டடச்சிதைவுகளைக் காண்கையில் , வரலாற்றுச்சின்னங்களைக் காண்கையில் இவ்விதமான உணர்வுகளை நாம் அனுபவிப்பதுண்டு. அதனால்தான் இக்கவிதையும் உடனடியாக எம்மைக் கவர்ந்துவிடுவதற்கான காரணங்களிலொன்றாக அமைந்து விடுவதற்குக் காரணம். என் சொந்த அனுபவத்தில் என் இளமைப்பருவத்தில் ஒருமுறை இதுபோன்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டு நானுமொரு கவிதை எழுதியிருக்கின்றேன். அதன் பெயர் ‘அழிவு’. அது மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க இதழான நுட்பம் இதழிலும், பின்னர் தினகரன் வாரமஞ்சரின் கவிதைச்சோலையிலும் வெளியான கவிதை.


அய் ஜிங் (சீனக்கவிஞர்)


படிவு


உனதசைவுகளில் எத்தகு நளினத்தோடும்

உனது வலிமையில் எத்தகு உயிர்த் துடிப்போடும்

நுரையில் துள்ளி நீ

கடலில் நீந்தியிருப்பாய்!

துரதிர்ஷ்டவசமாய் ஓர் எரிமலை வெடிப்பு

அல்லதொரு பூமி அதிர்ச்சி

உனது சுதந்திரத்தின் விலையானது,

வண்டலில் நீ புதைபட்டாய்.

பத்துலட்சம் வருடங்களின் பிறகு

ஒரு புவிச்சரிதவியற் குழுவினர்

பாறப் படையினில் உன்னைக் கண்டனர்,

பார்ப்பதற்கு இன்னும்நீ உயிருடனேயே.

ஆனால் இப்பொழுது நீ மௌனம்,

பார்வை கூட இல்லாது.

உனது செதிள்களும் துடுப்புகளும் முழுமையாக

ஆனாலும் உன்னால் அசைய முடியாது.

ஆக முழுமையாய் அசைவற்று,

உலகிற்கு எந்த எதிர்ச் செயலுமற்று.

வானையோ தண்ணீரையோ உன்னால பார்க்க முடியாது,

அலைகளின் ஒலியை உன்னால் கேட்க முடியாது.

இந்தப் படிவினைப் பார்க்கையில்

முட்டாள்கூட அதிகம் கற்கலாம்

‘இயக்கம் இன்றி

வாழ்க்கை இல்லை.’

வாழ்விற்காய்ப் போராடுதற்கு

போராட்டத்தில் முன்னணியில் நிற்பதற்கு

ரணங்கூட தவிர்க்க இயலாததாயினும்

சக்தி முழுமையையும் நாங்கள்

பயன் படுத்த வேண்டும்.


– 1978 அலை (ஆடி – புரட்டாதி 1981)


தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதை விமல் திசநாயக்கவின் ‘மெளனம்’. இக்கவிதையை இன்னுமொரு சமயத்தில் படிக்கையில் வேறு விதமான உணர்வினை அடைவோம். ஆனால் கொரொனாப் பேயினால் சுருண்டு கிடக்குமிச்சூழலில் இதனை இன்னுமொரு கோணத்திலுணர்வோம். இக்கவிதையில் வரும் மெளனம் என்னும் சொல்லுக்குப்பதில் கொரோனா என்னும் சொல்லினை வைத்து இக்கவிதையினை ஒருமுறை படித்துப்பாருங்கள். நான் கூறுவதன் அர்த்தத்தைப்புரிந்து கொள்வீர்கள். ஒரு படைப்பினை நாம் அணுகும்போது நாம் அணுகும் சமயத்தில் நிலவும் சமூக, அரசியல், பொருளியற் சூழலும் முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதற்கு இக்கவிதையை இக்காலகட்டத்தில் அணுகும்போது இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதனைத்தான் நூலின் முன்னுரையில் கவிஞர் பொ.பத்மநாதனும் குறிப்பிட்டிருக்கின்றார். சீனக்கவிஞர் அய் ஜிங்கின் கவிதையான ‘பனிமழை’ கவிதையை எழுத்தாளர் அ.யேசுராசா தேர்ந்தெடுத்ததற்கு அக்காலத்து இலங்கைத்தமிழர் நிலையும் காரணமாக இருக்கக் கூடுமென்று அவர் குறிப்பிடுவார் தனது முன்னுரையில்: “1977இன் பின் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ அடக்குமுறை, இன வன்முறை என்பன ஏற்படுத்திய தாக்கம், மொழிபெயர்ப்பாளர் அய் ஜிங்கின் கவிதையை உணர்வுநிலையில் நின்று நோக்க – தமிழ் அநுபவத்தை சீன அநுபவத்தோடு பொருத்திப் பார்க்க – உதவியிருக்கும், மொழிபெயர்க்க உந்தியிருக்கும் என அனுமானித்தல் தவறாகாது.”


2.


விமல் திசநாயக்க (இலங்கை)


மௌனம்


மௌனம்

ஒரு கொடிய பேய்,

கிராமத்தை அது

கைப்பிடியில் வைத்திருக்கிறது.

அச்சத்தில் அசையாமல் உள்ளன இலைகள்,

பூ மொட்டுக்கள்

மூச்சைப் பிடித்தபடி.

ஒற்றையடிப் பாதைகள்

இருளில் மறைந்து விட்டன,

ஓடக்காரனும்

கரத்தில் ஓடிப் போனான்.

மேய்ச்சல் நிலம்

வெறிச்சோடிக் கிடக்கிறது.

குழப்பத்தில் ஒன்றாய் நெருங்கிக்

குடிசைக்குள்…

ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.


-திசை (04.02.1989)


மேலுமிரு கவிதைகள்:


3.


லாங்ஸ்ரன் ஹியூஸ் (அமெரிக்கா)


கறுப்பர்களுக்காய்ப் புலம்பல்

ஒரு காலத்தில் நான்

சிவப்பு மனிதனாய் இருந்தேன்,

ஆனால் வெள்ளை மனிதர்கள் வந்தார்கள்;

கறுப்பு மனிதனாயும் நான் இருந்தேன்,

ஆனால் வெள்ளை மனிதர்கள் வந்தார்கள்.

காட்டிலிருந்து அவர்கள் என்னைத் துரத்தினர்;

வனங்களிலிருந்து என்னை

அவர்கள் எடுத்துச் சென்றனர்.

எனது மரங்களை நான் இழந்தேன்;

எனது வெள்ளி நிலவுகளையும் இழந்தேன்.

நாகரிகமெனும் காட்சிக் கூண்டில்

அவர்கள் என்னை அடைத்தனர் –

இப்போது,

நாகரிகமெனும் காட்சிக் கூண்டில்

அடைக்கப்பட்ட பலரோடும்

மந்தையானேன் நான்!


வெளிச்சம் (தை – மாசி 1992)


முடிவு


சுவரின்மீது அங்கே

மணிக்கூடுகள் இல்லை.

காலமும் இல்லை.

காலை தொடங்கி மாலை வரைக்கும்

தரையின் குறுக்கே நகரும்

நிழல்களும் இல்லை.

கதவின் வெளியே

அங்கு,

இருளும் இல்லை;

ஒளியும் இல்லை.

அங்கு கதவே இல்லை!

ngiri2704@rogers.com