பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50: குவாண்டப் புளுகுகள்!

பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50: குவாண்ட புளுகுகள்! [ சக இணையச் சஞ்சிகையான ‘திண்ணை’ நமது நட்புக்கும் மதிப்புக்குமுரியது. ரோஸாவசந்தின் இக்கட்டுரை ஆரோக்கியமானதொரு விவாதத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் கருதியும், கருத்துச் சுதந்திரம் கருதியும் [அதற்காகப் பதிவுகள் நூற்றுக்கு நூறு வீதம் கருத்துச் சுதந்திரமான சஞ்சிகை என்று மார் தட்டிக் கொள்ள நாம் வரவில்லை] பதிவுகளில் பிரசுரமாகின்றது. திண்ணையைப் பொறுத்தவரையில் இணையத் தமிழ் சஞ்சிகைகளில் முதலாவதாக வெளிவந்த/ வெளிவருகின்ற ஆரோக்கியமான, காத்திரமான தமிழ் இணையச் சஞ்சிகை என்ற பெருமை அதற்குண்டு. இணைய விவாதப் பக்கம் எம்மை நாட வைத்ததே திண்ணையின் விவாதத் தளம்தான். இக்கட்டுரையினை இங்கு பிரசுரிப்பதன் மூலம் திண்ணையையோ அல்லது அதன் படைப்பாளிகளையோ (நானும் அவர்களிலொருவன் தான்) அவதூறு செய்யும் நோக்கம் எமக்குக் கிடையாது என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். – ஆசிரியர் -]

-3. எழுத மிகவும் அலுப்பாக இருக்கிறது. ஒரே மாதிரியான விஷயங்களை, அதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை எத்தனை முறை சொல்வது! எனது பால், ஜாதி, சமூக நிலை காரணமாய் எனக்கு கிடைத்த எந்த சலுகையையும் விட்டுவிடாமல் அனுபவித்துகொண்டு, அதனால் விளைந்த ஒரு திமிரும் ஏதோ ஒருவகையில் கலந்துதான் ஒவ்வொருவார்த்தையும் என்னிடமிருந்து பிறக்கின்றன. இதில் என் குரல் திண்ணையில் அமுக்கபட்டது குறித்து ஒப்பாரி வைப்பது போன்ற ஆபாசம் கிடையாது என்று எனக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் என் எழுத்து திண்ணையில் தடை செய்யபட்டது குறித்து, என் பொருட்டு யாரும் இரங்கல் தெரிவிக்க நியாயமான காரணங்கள் இல்லை. இந்த கட்டுரையுடன் தொடர்புள்ள ‘விவாதம்’, மற்றும் திண்ணை என்ற பத்திரிகை, அதில் உள்ள ‘கருத்து சுதந்திரம்’, அதன் ‘நாட்டாமை’, குறித்து பலருக்கு இருக்கும் பிம்பம் இவற்றை மனதில் வைத்து சில தகவல்களை மட்டும் குறிப்பாய் கீழே தருகிறேன். 

-2. கீழே தொடரும் கட்டுரை என்ற ஒன்று திண்ணைக்கு அனுப்பபட்டு வெளிவரவில்லை. வெளிவராது என்ற தகவல் கூட எனக்கு தெரிவிக்கபடவில்லை. தொடர்ந்து இது குறித்து எழுதபட்ட மின்னஞ்சல்களுக்கு பதில் வராமல், கடைசியாய் ஒற்றை வரி காரணம் மட்டும் தரபட்டது. அது ‘திண்ணை அவர்களுக்கு கிடைக்கபெற்ற எல்லாவற்றையும் வெளியிடுவதில்லை, குறிப்பாக திண்ணை எழுத்தாளர்கள் மீதான வசைகளை வெளியிடுவதில்லை’ என்பதுதான். ஆகையால் கட்டுரையில் உள்ள வசைகளை அவரவர் படித்து கண்டுபிடிக்கும் வகையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 

என் சிற்றறிவிற்கு எட்டியவகையில் கட்டுரையில் ஆட்சேபிக்க கூடிய விஷயமாக ஒருவர் கருத வாய்ப்புள்ளதாக, ஒரே ஒரு விஷயம்தான் இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. அது ஹாரிசனுடனான தனிபட்ட மின்னஞ்சல் தொடர்பு குறித்து குறிப்பிட்டிருப்பது மட்டுமே. கட்டுரை எழுத தொடங்கும் முன்பே திண்ணைக்கு இது குறித்து அறிவுரை கேட்டு, திண்ணையிடமிருந்து கிடைத்த ஆலோசனைகளை கணக்கில் கொண்டே அது எழுதபட்டுள்ளது. குறிப்பாக ‘ நீலகண்டன், ஹாரிசன் சொல்வதில் திரித்தல்கள், தவறுகள் இருப்பதாக நான் நினைக்கும் விஷயங்களை தனிகட்டுரையாக எழுதலாம்’ என்று திண்ணையின் ஆலோசனை அடங்கிய மின்னஞ்சல் இன்னும் என்னிடம் உள்ளது. இதே விவாதத்தில் என்னுடைய பழைய கட்டுரைகளில் வசைகள் வெளிபடுவதாக யாராவது சொன்னால் என்னால் அதை புரிந்துகொள்ள முடியும். முழுக்க விஷயம் குறித்து மட்டுமே பேசியுள்ளதாக நினைக்கும் இந்த கட்டுரையை வசையாக நினைக்க கற்பனை வளம் அதிகம் வேண்டும் என்று தோன்றுகிறது–ஏதேனும் ஒரு அராஜக வைரஸ் வந்து கட்டுரையை மாற்றி இருந்தால் ஒழிய.

மற்றபடி சொல்ல என்ன இருக்கிறது? இனி திண்ணை போன்ற பத்திரிகைகள் படித்து ரத்த அழுத்தம் ஏறவிடமாட்டேன் என்பதில் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது. நீலகண்டன் எழுதியதில் இன்னும் உள்ள பிரச்சனைகள், ‘இந்த தத்துவ இணைகள்’ குறித்து எனக்கு இருக்கும் கருத்துக்கள் (நீலகண்டன் போட்ட முடிச்சை மட்டுமே எதிர்கிறேனே ஒழிய, இது குறித்து இன்னும் என் கருத்தை சொல்லவில்லை), கணிதம் என்ற தர்க்கத்தின் மொழியின் அடிப்படைகள் குறித்து திண்ணையில் பிறகு எழுத நினைத்தது எழுதபடமாட்டாது. ஆனால் நிச்சயம் சமஸ்கிருதத்தை முன்வைத்து அவிழ்த்துவிடப்படும் குவாண்ட புளுகுகள் குறித்து பின்னால் எங்காவது எழுதபடும்.

நீலகண்டன் இதற்கு பதில் என்று எதையாவது நிச்சயம் தருவார் என்று தெரியும். திண்ணை எனக்கு செய்தது போல் இல்லாமல், பதிவுகள்அதையும் வெளியிடவேண்டும். ஆனால் அதை நான் இப்போதைக்கு படிக்கமாட்டேன். இனி பழைய கட்டுரை தொடர்கிறது.

-1. எழுதபோவதாய் சொன்ன விஷயங்கள் குறித்து எழுதாமலும், எழுதமாட்டேன் என்று சொன்ன விஷயங்கள் குறித்து எழுதிகொண்டிருப்பதற்கும், படிப்பவர்கள் மிகவும் மன்னிக்கவும். கருத்து வேறுபாடாய் தொடங்கி செய்யப்படும் ஒரு விவாதத்தில், தன் தரப்பு தர்கத்தை வலுபடுத்தும் விதமாய் வெளிப்படும் புளுகை புரிந்துகொள்ளலாம். புறக்கணிக்கவும் செய்யலாம். கருத்து வேறுபாடாய் இல்லாமல், அறிவியல் குறித்தும், கணிதம் குறித்தும் புளுகுவதாலும் திரிப்பதாலுமே, இதை மீண்டும் எழுதவேண்டியுள்ளது. (தவறு/பொய் என்று தன் மனதிற்கு நன்றாய் தெரிந்தும், பொதுகளத்தில் அதை சொல்வதை புளுகு என்கிறேன். குவாண்ட புளுகு குறித்த விளக்கம் கீழே வருகிறது.)

0. நீலகண்டன் மற்றவர் மூலமாக அறிந்த ஒரு தகவலையோ, கருத்தையோ பொதுகளத்தில் முன்வைக்கும்போது, அந்த மற்றவரை குறிப்பிடுவது நல்லது. இதை ஏதோ அறிவு ஒழுக்கம் என்று கருதி செய்யவேண்டிய ஒன்றாக சொல்லவில்லை. சொன்ன தகவல்/கருத்து தவறாக, அபத்தமாக, முட்டாள்தனமாக இருக்கும் பட்சத்தில், அதற்கான பழி நீலகண்டன் தலையில் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். உதாரணமாக dirac delta funtion குறித்து ஹாரிசன் சொல்லி, அதை திண்ணையில் நீலகண்டன் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதை சொல்வது முறையாக இருக்கும். அனாவசியமாக ஹாரிசனுக்கு போகவேண்டிய பழி, நீலகண்டன் மேல் விழாது.

1. இந்த அபத்தமான வெட்டி விவாதத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாய் நேரடியாய் ஹாரிசனுக்கே அவர் எழுதியதின் அபத்தத்தை விளக்கி எழுதினேன். (ஹாரிசனே ஒப்புகொண்டால் கூட நீலகண்டன் தொடர்ந்து ஹாரிசன் சொன்னதை நியாயபடுத்துவார் என்றாலும் நீலகண்டனைவிட ஹாரிசனுக்கு இந்த விஷயத்தை விளக்குவது எளிது என்று தோன்றியதால் எழுதினேன்.) ஹாரிசன் அதற்கு அளித்த பதில் நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருந்தது. நீலகண்டன் (ஹாரிசனை நம்பி!) குறிப்பிட்டிருந்த ‘Dirac Delta function கணித தர்கத்தை மீறி செயல்படுவது’ உட்பட, கணிதம் குறித்த பல அபத்தமான வாதங்களால் நிறைந்திருந்தது. ஹாரிசன் எழுதியவற்றின் அபத்தங்களை எல்லாம் விரிவாய் விளக்கி அவருக்கு பதில் எழுதிய என் இரண்டு கடைசி மின்னஞ்சல்களுக்கு கடந்த பத்து (இப்போது 17) நாட்களாய் பதில் வரவில்லை. ரோஸாவசந்த் எழுதியதெற்கெல்லாம் பதில் எழுதாமல் இருப்பதுதான் அறிவுஜீவி நேர்மை என்று இங்கே சிலர் நினைக்ககூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் ரோஸவசந்தாய் இல்லாமல், ஹாரிசன் உட்கார்ந்திருப்பதைவிட உலகில் பெயர்பெற்ற, உலகின் முக்கியமான கணித மேதைகள் உலவும் ஒரு கல்வி நிலயத்திலிருந்து, ஒரு கணிதவியலாளனாய், ரோஸாவசந்தின் ஒரிஜினலாய் அந்த அஞ்சலை எழுதினேன். 

2. ஹாரிசனுடனான மின்னஞ்சல் தொடர்பு தனிபட்டமுறையில் இருந்ததால் அதை மேற்கோள்காட்டி பேச விரும்பவில்லை (ஹாரிசனை கன்வின்ஸ் செய்தபின், அவர் அனுமதியுடன் திண்ணையில் எழுதுவதுதான் எனது நோக்கமாக இருந்தாலும், அவர் என் கடைசி இரண்டு மெயில்களுக்கு பதில் எழுதாமல் போன நிலையில், அவரை அதிகம் தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், அந்த பணியை நீலகண்டனுக்கே விட்டுவிட்டு இதை எழுதுகிறேன்.) ஆனால் ஹாரிசன் ஒரு முக்கிய அறிவியலாளர் என்பதாய் பாவனை செய்யபட்டு, அதனடிப்படையில்-அதனடிப்படையில் மட்டும்- நீலகண்டன் ஹாரிசன் சொன்னதை கொஞ்சம் திரித்து, “பலவிதங்களில் பிரபஞ்ச தரிசனத்தில் சாங்கியமும் பௌத்தமும் கொண்டிருந்த வேறுபாட்டினையும் இது குறித்து ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தில் நடந்த வாதங்களையும், ஸ்க்ராட்டிஞ்சரின் க்வாண்டம் இயற்பியல் மறுப்பும், ஹெய்ஸன்பர்க்கின் க்வாண்டம் வாதங்களும் மிகவும் ஒத்திருந்ததாக கூறுகிறார் இயற்பியலாளர் டேவிட் ஹாரிஸன்” என்று எழுதியிருந்தார். தொடர்ந்து நான் இது குறித்து மீண்டும், மீண்டும் பேசி provoke செய்த பிறகும் கூட நீலகண்டன் இந்த சாங்கிய vs பௌத்தம் —- ஷ்ரோடிங்கர் vs ஹெய்சன்பர்க் விஷயத்திற்கான தொடர்பு குறித்ததற்கான ஆதாரமாய், உருபடியாய் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. இன்னும் அதற்கான ஒரே ஆதாரமாய் இருக்கும் ஒரே விஷயம் ஹாரிசன் தனது ‘கணித பரிச்சயம் இல்லாத, அதைகண்டு பயப்படும்’ மாணவர்களுக்கு எழுதியுள்ள பாடத்தில் உள்ள மொட்டையான ஒரு வரிதான். அதனால் சொல்லவேண்டியுள்ளது.

ஹாரிசன் எழுதிய பல விஷயங்கள் அவருக்கு கடந்த 60வருட கணிதம் மட்டுமில்லாமல், குவாண்டம் இயற்பியலில் நடந்துள்ள முன்னேற்றங்களில் கூட பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. நீலகண்டன் முன்வைத்த ‘Dirac Delta Function’ கணித தர்கத்தில் வராது என்ற அதே தவறான தகவலை அவரும் தந்திருந்தார். அதே போன்ற வேறு சில உதாரணங்களையும் தந்துள்ளார். நான் போன இதழில் சொன்னபடி ஒரு ‘distribution’ என்பதாய் அதை வரையரை செய்வது ஒரு புறமிருக்க, ஒரு ‘measure’ என்ற அளவில் அது ஒரு கறாரான கணித விஷயம், அது ஒரு நூற்றாண்டாகவே உள்ள ஒரு விஷயம் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. நிச்சயமாய் முதலில் இயற்பியலில் பயன்படுத்தபட்ட போது கூட அது கணித தர்கத்தில் வராத ஒரு கருத்தாக்கமாக பயன்படுத்தபடவில்லை.

அறிவுரீதியான அத்தனை துறைகளிலும் சென்ற நூற்றாண்டில் ஒரு புரட்சியே நடந்தது என்று சொல்லலாம். அதில் ஒன்று குவாண்டம் இயற்பியல். இதன் காரணமாய் கணிதத்தில் உருவான புதிய துறைகளும், கருத்தாக்கங்களும் பட்டியலில் அடங்காதவை. இந்த பல துறைகள் தனிபட்ட கணித துறையாய் பரிணமித்தபோதும், அவ்வாறு மட்டும் இயங்காமல், இயற்பியலின் ஓவ்வொரு புதிய கருத்தாக்கத்துடன் இயைந்தே வளர்ந்து வருகிறது. 

பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50: குவாண்ட புளுகுகள்! கணிதம் அதன் தர்க்க வரையரையை மீறி இயற்பியலில் ஒரு மொழியாக செயல்படுகிறது என்று சொல்வது போன்ற, விஷயம் புரியாமல் ஒளரும், நகைப்பிற்குரிய கருத்து கிடையாது. இயற்பியலில் ஒரு விஷயம் கணிதத்தின் தர்கத்தை பயன்படுத்தாமல், குண்ட்ஸாக உருவானால், அது நீலகண்டன்/ஹாரிசன் சொல்வது போல் கணிதம் தன் “தர்க்க அமைப்பியல் சார்ந்த எல்லைகளை மீறி அல்லது அவை தகர்ந்த நிலையிலும் கணிதம் மொழியாக செயல்படுவ”தாக அதற்கு பொருள் கிடையாது. இயற்பியலில் அது குண்ட்ஸாக மட்டும் ஒரு கருத்தக்கமாக மட்டும் உள்ளது என்றுதான் பொருள். இன்னும் கணிதரீதியாய் கறாராய் (with rigour) அது வரையரை செய்யபடவில்லை என்றுதான் அர்த்தம். பொதுவாக ஒரு பத்தாண்டுகளிலேயே அதற்கு கணிதரீதியாய் கறாரான வரையரை வந்தும் விடுகிறது. பொதுவாக அதை இயற்பியல்வாதிகளே செய்தும் விடுகின்றனர். அவ்வாறு செய்யதொடங்கி கணிதவியலாளராய் மாறியவர்கள் பலர்உண்டு. அந்த வகையில் இயற்பியலும், கணிதமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாமல் உள்ளது. இத்தகைய எந்த முன்னேற்றம் குறித்து தகவல் ரீதியாய் கூட ஹாரிசனுக்கு தெரிந்திராமல் இருந்தது மிகுந்த ஆச்சரியமளித்தது. ( நீலகண்டனுக்கு தெரியாதது ஆச்சரியமல்ல.) டோரண்டொ பல்கலை கழகம் போன்ற இடத்தில், ஒவ்வோரு வாரமும், யாராவது ஒரு உலகின் முக்கிய பெரிய தலை வந்து சொற்பொழிவாற்றுவது வழக்கமாய் இருக்கும். அப்படிபட்ட இடத்தில் இருந்துகொண்டு கூட மிக சாதாரணமான விஷயங்கள் கூட தெரியாதது வியப்பளிக்கிறது. அவர் கணித வரையரைக்குள் வராது என்று சொன்ன எல்லாமே மிக கறாராய் அதன் வரையரைக்குள் வரகூடிய விஷயம். (சொல்லபோனால் அப்படி வராத வரையரை பிரச்சனை குறைந்து 50 ஆண்டுகள் முந்தயது.) 

3. மீண்டும் சொல்லவேண்டியுள்ளது. ஹாரிசனின் கணிதம் குறித்த ஓளரலை நியாயபடுத்தும் விதமாய் நீலகண்டன் எழுதியது போன்ற ஒரு ஆபாசமான தர்கத்தை நான் சமீபத்தில் படித்ததில்லை. தவறான ஒன்றை நியாயபடுத்தும் விதமாய் எப்படி எல்லாம் ஒருவர் தர்கம் செய்யமுடியும், நீலகண்டனை விட்டால், அவர் என்னவெல்லாம் செய்யும் ‘சாமர்த்தியம்’ படைத்தவர் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துகாட்டாய் அது இருந்தது. 

அ.தி.மு.க. வும் காங்கிரஸ¤ம் கூட்டு சேர்ந்தது குறித்து ஒரு 15வருடம் முன்னால் கலைஞர் சொன்னார், ” இரண்டும், இரண்டும் நான்காகவும் இருக்கலாம், சைபராகவும் இருக்கலாம்”. நடைமுறையில் அது எப்படி நிகழ்ந்தாலும், இது +ஐயும், -ஐயும் முன்வைத்த ஒரு வார்த்தைவிளையாட்டு. இதை துக்ளக் தனது வழக்கமான பார்பனிய திமிருடன் கிண்டலடித்திருந்தது. கலைஞர் சொன்னதாவது ‘கழித்தலும் ஒருவகை கூட்டலே’ என்ற அளவில் சூழலுடன் பொருத்தி அர்த்தம் காணகூடிய சாத்தியமுள்ளது. மேலும் அவர் கணிதம் குறித்து, கணிதரீதியாய் எதுவும் சொல்லவில்லை. திண்ணை அறிஞர் நீலகண்டன் கேட்கிறார் ” கணித பதங்களான + அல்லது – தன்னளவில் என்ன பொருளுடையவை?” கேட்டுவிட்டு பதிலை காணும். என்ன பொருளுடையவை, அதில் என்ன குழப்பம் என்று சொல்லவேண்டாமோ? ஒரு B. Sc. கணிதம் (ஒழுங்காய் புரிந்து) படித்த ஒரு மாணவனுக்கு இவை எல்லாம் கறாரான axioms கொண்டு, வரையரை செய்யபட்ட விஷயம் என்பது தெரிந்திருக்கும். நீலகண்டனுக்கு தெரியாவிட்டால் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இப்படி எதையோ ஒரு தத்துவம் போல் ஒளரிகொட்டி விட்டு, தன்னை எல்லாம் அறிந்த மேதாவியாய் நினைத்துகொண்டு, மற்றவர் சொல்வதை ‘மடத்தனம்’ என்றும் சொல்வது ஆபாசமில்லையா? 

நீலகண்டனின் எழுத்தில்தான் எவ்வளவு நடிப்பு! ஏதோ கணிதம் குறித்த ஆயிரம் கால வரலாற்றையே கரைத்து குடித்தது போல் எழுதுகிறார். 

“ஒரே விஷயத்தை இரு கவிஞர்கள் இருவிதமாக பாடியுள்ளார்கள் என வைத்துக்கொள்வோம். அக்கவிதைகளை தத்தம் அழகியலைச் சார்ந்து இருவர் ஒன்றை வெறுத்து மற்றொன்றை விரும்பலாம். இத்தகைய ஒரு சூழல் கணிதத்திற்கு ஏற்பட முடியாதென்பதே க்வாண்டம் இயற்பியலின் எழுச்சிக்கு முன்பு வரையிருந்த நிலை. ஆனால் ஒரே க்வாண்டம் நிகழ்வுகளை குறித்து ஸ்க்ராட்டிஞ்சரும் ஹெய்ஸன்பர்க்கும் வெவ்வேறு கணித அமைப்புகளை முன்வைத்தபோது அவர்களுக்கு மற்றவரின் கணித அமைப்பு விரும்பத்தகாததாக மாறியதற்கு தர்க்கம் சார்ந்த அல்லது தற்சார்பற்ற objective காரணிகளை விட அழகியல் சார்ந்த மற்றும் தத்துவ தரிசனம் சார்ந்த காரணிகளே காரணமாயிருந்தது. கணித மொழியின் அழகியல் சார்ந்து ஒரு வித கணித பகர்தலை மற்றொரு கணித பகர்தலுக்கு மாற்றாக ஒரு அறிவியலாளர் தேர்ந்தெடுப்பதென்பதை வௌ¤க்காட்டும் பின்புலத்தில் ஹாரிஸனின் எடுத்துக்காட்டு மிகச்சிறந்த எளிமையான ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.”

‘குவாண்டம் எழுச்சி’க்கு முன்னால் கணிதம் பற்றி அப்படி நினைத்துகொண்டிருந்தார்களாம், அதற்கு பிறகு நிலமை மாறிவிட்டதாம். என்ன ஒரு பாசாங்குடன் கூடிய புளுகு! ஸோக்கலின் பகடி கட்டுரையில் கூட இப்படி ஒரு பாசாங்கு இல்லை. கணிதம் என்பது காலம் காலமாகவே ஒரு ‘கணக்கிடும்’ (ஒரு விரிந்த அர்த்ததில்) சாமாச்சாரமாய் பார்த்த பார்வை போய், எல்லா அறிவுதுறைக்கும் ஒரு கறாரான தர்கத்தை(rigour) தரும் சமாச்சாரமாய் மாறியதே போன நூற்றாண்டுதான். எப்படி தனக்கு எந்த விதத்திலும் புரியாத ஒரு விஷயம் குறித்து ஒரு புளுகை, ரொம்ப சாமர்தியமாய் நம்பகதன்மையுடன் தரமுடிகிறது பாருங்கள்!

கணிதத்தில் தோன்றிய பிரச்சனைக்கும் குவாண்டம் இயற்பியலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கணிதத்தை கறாராய் கணகோட்பாட்டின் அடிப்படையில் வரையரை செய்யபோன ரஸ்ஸல், Russel’s paradox என்று அழைக்கபடும் தனது பிரபல முரணியலை வந்தடைந்தார். அதை அவரே சமாளித்து, நவீன கணிதத்தின் அஸ்திவாரத்தை அமைத்து, தனது Principia Mathematicaவையும் எழுதினார். இன்றும் கணிதத்தின் பிரச்சனை கோடல் தேற்றத்தில் (அதை ஒத்த அல்லது அதற்கு சமமான சமாச்சாரங்களில்)தான் உள்ளது. இதை எல்லாம் விலாவாரியாய் எழுத தொடங்கி என்னால் தொடரமுடியவில்லை. திண்ணையும் ஒரு தொடர்சி இல்லாமல் வெளியிட தயாராய் இல்லை. மார்சிற்கு பிறகு இதை எழுத முயற்சிக்கிறேன்.

இப்போதும் ஒன்று சொல்லவேண்டியுள்ளது. கணிதம்கூட எப்போதும் உண்மை சம்பந்தமானது என்று சொல்லமுடியாது. இன்றுவரை முரண்பாடற்றது, consistentஆனது என்றுதான் சொல்லமுடியும். நாளையே ஒருவர் இன்னோரு முரணியலை கண்டுபிடித்தால்(அது சாத்தியமில்லை என்று சொல்லமுடியாது) திரும்பவும் எல்லாவற்றையும் மீள்axiomatise செய்யவேண்டியதுதான். ஆனால் ஹாரிசன் சொன்னவிஷயம் தவறானது, முட்டாள்தனமானது. அதை ‘மிகச்சிறந்த எளிமையான ஒரு எடுத்துக்காட்டு’ என்று, நான் விளக்கிய பிறகும் நீலகண்டன் சொல்வது மிக மிக ஆபாசமானது. அது குறித்து ஏற்கனவே சொன்னாலும் ஹாரிசனுக்கு எழுதியதையே மீண்டும் சொல்கிறேன். 

பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50: குவாண்ட புளுகுகள்! அவர் சொலவது போல் ஒரு கணிதவாக்கியத்தில் வரும் புள்ளியை The meaning of the dot is ambiguous என்பது முட்டாள்தனமானது. The meaning of the dot will NEVER be ambiguous . It will always be very verry ….. well-defined. கணிதத்தில் ஒவ்வோரு கட்டத்திலும் ஒன்றை வரையருக்கும்போது செய்யபடும் ஒரு விஷயம் என்னவெனில், வரையருக்கபட்ட விஷயம் ‘well-defined’ஆக இருக்கிறதா என்று சரிபார்பது. அவ்வாறு ‘well-defined’ஆக வரையரை செய்யபட்ட ஒரு விஷயத்திற்கு எந்த ambigutyயும் எந்த கட்டத்திலும் இருக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து ஹாரிசன் சொன்னது எந்தவிதத்திலும் எளிய உதாரணம் இல்லை, தவறான முட்டாள்தனமான உதாரணம். (சொல்ல போனால் இது உதாரணமே இல்லை.) இதை சொல்லி தான் ஏதோ demontsrate செய்ததாய் ஒரு முடிவுக்கு வந்து, “In this view, then, the strong positions of Heisenberg and Schrய்dinger on the worldview of Quantum Mechanics is similar to an argument between two scholars of literary criticism on the meaning of a T.S. Eliot poem. “என்று அவர் சொலவது அபத்தத்தின் உச்சம். மீண்டும் அதை ஒரு ‘விவாதம்தான்’ என்று நீலகண்டன் சொல்லி சமாளிக்க பார்பது இன்னோரு பம்மாத்து.

ஒரே தேற்றம் கணித மொழிகொண்டு இரு விதமாய் நிறுவபடலாம். இதன் பொருள் அந்த தேற்றத்திற்கு இரு வாசிப்பு இருப்பதாக கொள்ளமுடியாது. வேவ்வேறுவிதமாய் நிறுவுதல் என்று மட்டுமே கூறமுடியும்.(சொல்லபோனால் proof theory என்ற mathematical logicஇன் துறை அந்த இரண்டுமே ‘அடிப்படையில்’ ஒன்றுதான் என்று கூறகூடும்.) இதில் அழகியல் என்பது இருக்கலாம். ஆனால் அதை ‘தர்க்கம் சார்ந்த அல்லது தற்சார்பற்ற objective காரணிகளை விட அழகியல் சார்ந்த மற்றும் தத்துவ தரிசனம் சார்ந்த காரணிகளே’ என்று நீலகண்டன் சொலவது (தனக்கு புரியாத விஷயத்தை) இட்டிகட்டி சொல்லும் புளுகு. 

இணையத்தில் இது பற்றி எல்லாம் விலாவாரியாய் விவரிக்கும் எத்தனையோ விஷயபூர்வமான கட்டுரைகள் இருந்தாலும், தெளிவில்லாமல் எதையோ பேசும் ஒரு கட்டுரையில், ஒரு வரியை மொழிபெயர்த்து கொடுக்கிறார். யார் அந்த ஜான் கஸ்டி, மீண்டும் மொட்டையாய் ‘அவரே சொல்கிறார்’ என்று சொல்லும் அளவிற்கு அவர் என்ன செய்தார் ( நான் அதுகுறித்து சிறிய துப்பறியும் வேலைகூட செய்யவில்லை), இங்கே semantics என்று எதை குறிப்பிடுகிறார், என்று ஒரு விளக்கமில்லை. தனக்கு ஆதரவாய் இருப்பது போல் தோற்றத்தை அவரே உருவாக்கி, ஒற்றைவரியை மொழிபெயர்த்து ஒரு வாதமாய் முன்வைக்கிறார். இந்த லட்சணத்தில் URL piling prodigy என்று ரவியை கிண்டலடிக்கிறார். 

மீண்டும் சொல்கிறேன். இன்று வரை கன்ஸிஸ்டன்டாக இருக்கும் கணிதத்தின் சட்டகம் மீண்டும் ஒரு முரணியலை சந்திக்காது என்று உறுதியுடன் சொல்ல ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அதன் தளம் மிக ஆழத்தில் இருக்கும். குவாண்டம் இயற்பியலுக்கு rigour கொடுக்க உருவான எந்த கருத்தாக்கத்திலும் இது தோன்ற வாய்பில்லை. அதன் வரையரைகள் அத்தனையும் அந்த அளவு ‘well-defined’ஆன உண்மை. ‘விபத்து நிகழ வாய்பில்லை’ என்று ஒரு பொறியியலாளர் சொல்வது போன்ற ஒரு உறுதிமொழி இல்லை இது. ‘கடவுளால் கூட மாற்ற’முடியாத வகையில் நிறுவபட்ட விஷயங்கள் இவை.

4. அறிவியல் பங்களிப்பு என்ற விதத்தில் எதுவும் இல்லாத நிலையில், கற்பித்தலில் ஹாரிசனுக்கு வழங்கபட்ட விருது குறித்து மீண்டும் சொல்கிறார். திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பிற்கு கணிதம் சொல்லிகொடுக்கும் ஒரு வாத்தியார் உண்டு. திருநெல்வேலி முழுக்கவே இன்று கூட அவர் ரொம்ப பிரபலம். கணிதம் என்பதை எப்படி சொல்லிகொடுக்க கூடாது என்று இன்று நான் நினைக்கிறேனோ, அத்தகைய ஒரு வழிமுறையில், ஒரு ட்ரில் மாஸ்டர் பாணியில் கணிதம் சொல்லிகொடுப்பார். ஆனால் அவரின் வழிமுறை மிகுந்த பலனளிக்கும். அவரிடம் டியூஷன் படித்து தேர்வில் 100 வாங்காத மாணவர்களை எண்ணிவிடலாம். (கணிதபாடத்தில் 100 வாங்கும் மாணவன்தான் மிக பெரிய முட்டாள் என்று இன்னோரு வாத்தியார் சொல்லுவார்.) அவருக்கு பள்ளி நிர்வாகம் விருது கூட கொடுக்கலாம். அதற்காக அவருடைய கற்பிக்கும் வழிமுறையை நான் பாராட்டமுடியுமா? ஹாரிசனின் கற்பிக்கும் திறமை குறித்து எனக்கு எதுவும் தெரியாதுதான். நான் சொல்வதெல்லாம், அதை நிச்சயமாய் சில விருதுகள் கொண்டு அளக்கமுடியாது. இப்படி ஒரு தவறான ஒரு உதாரணம் கொண்டு, தவறான விஷயத்தை ‘demonstrate’ செய்பவரை எந்தவிதத்திலும் நல்ல ஆசிரியராகவும் பார்க்கமுடியாது. ( ஹாரிசனை முன்வைத்துமட்டுமே நீலகண்டன் சில விஷயத்தை பேசியுள்ளதாலும், அதை தொடர்ந்து நியாயபடுத்தியதாலும் மட்டும் இதை எல்லாம் சொல்லவேண்டியுள்ளது. ஒரே ஒருமுறை அதுவும் குறிப்பிட்ட சந்தர்பத்தில் ‘A மேல் புள்ளி வைத்ததை இஷ்டத்திற்கு அர்த்தம் செய்வது’ பற்றி சொல்லும்போது ‘அரைலூஸ¤’ என்பதாக, அதாவது அவ்வாறு அர்தபடுத்துவது அரைலூஸ¤த்தனம் என்பதாக சொல்லியிருந்தேன். அந்த கருத்தில் இப்போதும் மாற்றமில்லை (அதாவது அவ்வாறு பொருள்கொள்வது அரைலூஸ¤த்தனம் என்ற அளவில்.) ஆனால் நீலகண்டன் அதை மீண்டும், மீண்டும் எடுத்துகாட்டி(அதுவும் சொதப்பலான விளக்கங்களுடன்), எனக்கு எதிராய் பயன்படுத்துவதாய் நினைத்து ஹாரிசனை மிகவும் கேவலப்படுத்தியுள்ளார். எல்லாவற்றிற்கும் ஹாரிசனிடம் மன்னிப்பு! — அவர் குறித்து சொன்ன விஷயங்கள்-விமர்சனங்கள் அப்படியே உள்ளன. தேவையில்லாமல் அவர் குறித்து பேச நேர்ந்ததற்கும், முதல் தடவை அவர் குறித்து பேசும்போது பொறுமையுடனும், கவனத்துடனும் கையாளாததற்கு மட்டுமே மன்னிப்பு!) 

5. இது இப்படி இருக்க, இந்த தருணம் வரை, நான் பலமுறை சுட்டிகாட்டியும், இந்த சாங்கிய/பௌத்த திற்கும் குவாண்டத்திற்கும் சந்தடி சாக்கில் போட்ட முடிச்சு குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு, ஒரு வார்த்தை கூட விளக்கமாய் வராததை மீண்டும் சுட்டிகாட்ட விரும்புகிறேன். இவர்களுடய அறிவு நேர்மை இந்த லட்சணத்தில் இருக்கிறது. ஆனால் நீலகண்டன் இது குறித்து காட்டிய டான்ஸ், பிலிம் எல்லாவற்றையும் பார்பவர் ஏதோ ஆயிரம் அறிவியல் ஆதாரங்களை அவர் அடுக்கிவிட்டது போல் தோற்றமளிக்கும். இந்த நிலையிலேயே சூர்யா வந்து சான்றிதழும் கொடுத்தாகிவிட்டது. இதுதான் குவாண்ட புளுகு! அண்டபுளுகு, ஆகாசபுளுகு அதை எல்லாம் மிஞ்சும் அண்டகாச புளுகு இது குறித்தெல்லாம் கேள்விபட்டிருக்ககூடும். குவாண்ட புளுகு என்பது இந்த நூற்றாண்டில் இந்துத்வம் பிரசார துறைக்கு அளித்த மிக பெரிய கொடை என்று சொல்லலாம். 

கணணிக்கு தேவையான bit குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த பிட் 0 அல்லது 1 என்ற இரு நிலைகளில் எதாவது ஒரு நிலையில் இருக்கும். இன்னும் நடைமுறையில் முழுமையாய் சாத்தியமாகாத குவாண்டம் கணணி, இந்த bitற்கு பதில் quantum bit, அல்லது qubit என்பதனால் அமைக்கபட்டிருக்கும். இந்த குவாண்டம் பிட் எப்படி எனில், அது ஒரு superpositionஇல் இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் 0வாகவும், 1ஆகவும் இருக்கும். இரண்டிற்கும் இடையில் அல்ல, இரண்டாகவும் இருக்கும். (ஆனால் அளக்கபடும்போது இரண்டில் ஒரு நிலையில் மட்டுமே இருக்கும்.) அது போலத்தான் இந்த குவாண்ட புளுகும். அண்டபுளுகு போல் இதை அத்தனை எளிதாக அடையாளம் காணமுடியாது. இது ஒரே நேரத்தில் உண்மை என்ற நிலையிலும், பொய் என்ற நிலையிலும் இருக்கும். (பாதி பொய், பாதி உண்மை என்று அல்ல, உண்மையாகவும் பொய்யாகவும் ஒரே நேரத்தில் இருக்கும். ) ஹாரிசனின் ஒளரலை நியாபடுத்தும்விதமாய் நீலகண்டன் நீலகண்டன் அளித்த வாதங்கள் அந்த வகையை சாரும். உதாரணமாய் கணிதத்தில் ஒரு குறியீட்டின் பொருள் சூழலுக்கு ஏற்பவே இருக்கும் என்று விளக்கியதை சொல்லலாம். அவர் சொல்வதை தனியாய் பார்த்தால் ஒரு பக்கம் அது உண்மை. இன்னொரு பக்கம் ஹாரிசன் சொன்னதை நியாயபடுத்தும் வாதம் என்ற வகையில் அது புளுகு. இதை q-புளுகு என்று அழகாய் அழைக்கலாம். புளுகு என்ற நிலையில் இல்லாமலேயே, அவ்வாறு தோற்றமளிகாமலேயே, புளுகாய் இயங்கும் பண்பு உடைய ஒரு புளுகு. நீலகண்டன், சூர்யா இந்த வகை குவாண்டப்புளுகு புளுகுவதில் நன்றாகவே தேர்ச்சி பெற்றிருப்பதாய் தெரிகிறது.

6. அடுத்து இந்த பிரம்மா, சிவா, விஷ்ணு விவகாரத்திற்கு வருவோம். 

முதலில் கொஞ்சம் விஷயத்தையும் பார்போம். கைவசம் ஒரு பல துகள்கள் அமைப்பு (many-particle system) இருக்கிறது என்று வைத்துகொள்வோம். (அதாவது இந்த பிரபஞ்சத்தை போன்று. இந்த பிரபஞ்சம் ப்ரோட்டான்களாலும், எலெக்ட்ரான்களாலும், போட்டான்களாலும் ஆனது போல்.) கைவசம் ஒரே ஒரு துகள் இருக்கும்போது, அது தொடர்பான அமைப்பின் பரிணாம மாற்றங்களை அறிய ஷ்ரோடிங்கர் தந்த சமன்பாட்டை வைத்துகொண்டு சமாளித்துவிடலாம். ஆனால் பல துகள்களின் இயக்கம் ரொம்பவும் குழப்பமயமாகிவிடுகிறது. இதை குழப்பங்களை ‘fockspace’ என்று வரையரை செய்யபட்ட ஒரு வெளியை(vector space) வைத்துகொண்டு புரிந்து கொள்ள முயற்சித்தனர். இந்த fockspaceஇல் உள்ள ஒரு உறுப்பினர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான துகள்களின் பிரதிநிதியாக இருப்பார். 

உதாரணமாய் இந்த அகிலத்தில் மொத்தம் மூன்று துகள்கள்தான் இருகின்றன என்று சும்மானாச்சுக்கும் வைத்துகொள்வோம். ஒரு தமாசுக்கு அதை ரோஸா, நீலகண்டன், திண்ணை என்று குறிப்போம் (சூழலுக்கு ஏற்ப அர்தம்தான்!) இதில் பல நிலைகள் (states) சாத்தியமாகும். அதை கொஞ்சம் விவரிப்போம். துகள்களே இல்லாத வெற்று நிலையாய் |0>.ஒரு துகள் நிலையில் மூன்று சாத்தியங்கள் |ரோஸா>, |நீலகண்டன்>, |திண்ணை>.இரு துகள்கள் நிலையில் மூன்று சாத்தியங்கள் |ரோஸா,நீலகண்டன்>, |ரோஸா,திண்ணை>, |நீலகண்டன், திண்ணை>.மூன்று துகள்கள் நிலையில் ஒரே ஒரு சாத்தியம் |ரோஸா,நீலகண்டன்,திண்ணை>வேறு சாத்தியங்கள் இல்லை. இந்த fockspaceஇன் உள்ளே மேலே விவரித்தது போன்ற உறுப்பினர்களே அமர்ந்திருப்பர். 

என்ன வகை துகள்கள் நம் கரிசனத்துக்கு ஆட்படுகின்றன என்பதை பொறுத்து அதனிடையேயான உறவுகளும் மாறும். உதாரணமாய் அது boson எனப்படும் துகள்கள் எனில் அதற்கு ‘symmetric fock space’, fermion எனில் அதற்கென ‘anti-symmetric fock space’ என வெளி மாறும். இது இன்னும் குழப்பத்திற்கு இட்டு செல்வதால் குண்ட்ஸாகவே பார்போம். என்ன செய்துள்ளோம் எனில் சில நிலைகளின் ‘wave function’ஐ மேலுள்ளவாறு குறித்துள்ளோம். இங்கேதான் இந்த creation, preservation, annihilation என்று மூன்று அபரேட்டர்கள் வருகிறது. உதாரணமாய் a_{ரோஸா} என்ற ஆபரேட்டர்காரன் என்ன செய்வான் எனில் |0>வை கொண்டுபோய் |ரோஸா>வில் போடுவான். |நீலகண்டன்>ஐ கொண்டுபோய் |ரோஸா,நீலகண்டன்>இல் போடுவான். |நீலகண்டன், திண்ணை>ஐ கொண்டுபோய் |ரோஸா,நீலகண்டன்,திண்ணை>இல் போடுவான். இதே போன்ற வேலையையே a_{நீலகண்டன்} மற்றும் a_{திண்ணை} என்ற மற்ற இரண்டு பண்பட்ட ஆபரேட்டர்களும் செய்வார்கள். இருக்கும் நிலையிலிருந்து இந்த ஆபரேட்டர்கள் ஒரு துகளை சேர்கின்றன. அதனால் இது creation ஆப்பரேட்டர். இதற்கு நேர் எதிராக a^*_{ரோஸா},என்ற அராஜக ஆபரேட்டர்காரன் என்ன செய்வானெனில், |ரோஸா>வை கொண்டு போய் |0>வில் தள்ளுவான். |ரோஸா,நீலகண்டன்>ஐ கொண்டுபோய் |நீலகண்டன்>இல் தள்ளுவான். |ரோஸா,நீலகண்டன்,திண்ணை>ஐ கொண்டுபோய் |நீலகண்டன், திண்ணை>இல் தள்ளுவான். மற்றதை நேயர்களே ஊகித்துகொள்ளவும். இது ஒரு அழித்தல்வேலை. ஒவ்வொரு நிலையிலும் ‘ரோஸா>வை இந்த ஆபரேட்டர் காலி பண்ணுவதால் இது annihilation. இன்னோரு ஆபரேட்டர் ஒன்றும் செய்யாமல் (ஒரு எண்ணால் பெருக்க மட்டும் செய்துவிட்டு) அதை அதை அந்தந்த நிலையிலேயே விட்டு செல்லும். அது preservation சமாச்சாரம்.(காத்தல்-protection அல்ல!) மேலே சொன்னது குண்ட்ஸான ஒரு விவரிப்பு. கணிதத்தில் இது இன்னும் கறாராய் வரையரை செய்யபட்டிருக்கும். 

நமது பெருமை மிகு பாரம்பரியம் தந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் சமாச்சாரத்திற்கும் மேற்கண்ட ஆபரேட்டர்களுக்கும் (இங்கே கணக்கில் அடங்காத ‘பிரம்மனும், சிவனும்’ உள்ளார்கள்), ஒரு தத்துவ அடிப்படையில் கூட, எந்த தொடர்பும் (இணையும்) கிடையாது என்பது தெளிவு. உதாரணமாய் நமது உடலில் ஒரு குறிபிட்ட கால இடைவெளியில் கண்காணித்தோம் என்றால், சில செல்கள் உருவாகும், சில அழிக்கப்படும், சில அப்படியே இருக்கும். இந்த நிகழ்வுக்கும், பிரம்மா, விஷ்ணு, சிவன் சமாச்சாரத்திற்கும் தத்துவ அடிப்படையில் கூட ஒத்திருத்தல்/இணை என்று எதுவும் கிடையாது. அது போலவே இதுவும். குவாண்டம் ஸ்டொக்காஸ்டிக் கால்குலஸின் பல அடிப்படைகளை அமைத்த பார்த்தசாரதி, அது குறித்த தனது புத்தகத்தின் தொடக்கத்தில், ப்ரம்மா( The creator), விஷ்ணு, (The protector), சிவா (The annihilator), இவர்களுக்கு புத்தகத்தை அர்பணிப்பதாய் குறிப்பிட்டிருந்தார். படிக்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு முடிச்சு இருப்பதாக தோன்றவைக்கலாம். இதற்கு பிறகு பார்த்தசாரதியின் மிக நெருங்கிய நண்பரும், அவருடன் இணைந்து பல பங்களிப்புகள் தந்த மார்டின் லின்ட்ஸே என்பவர் (எனக்கு தெரிந்து) ஒருமுறை, ஒரு சந்தர்பத்தில் இந்த ஆபரேட்டர்களை சிவா, பிரம்மா, விஷ்ணு என்று பெயர்போட்டு அழைத்திருந்தார். இந்தியர்களுக்கு இது ஒரு ‘சும்மா’ முடிச்சு என்று தெரியும். ஆனால் சில வெளி நாட்டுகாரர்கள் அதில் ஏதோ ஆழ்ந்த பொருளுடன் செய்யபட்ட விஷயமாக எடுத்துகொண்டார்கள். என்னிடம் கூட அது குறித்து சிலர் விசாரித்தார்கள். இதைதான் நான் குறிப்பிட்டிருந்தேன். புஷ்பக விமானத்தையும், கண்டதையும் அறிவியலுடன் இணைக்கும் நம்ம ஊர் இந்துத்வா கும்பலுக்கு இது தெரிய வந்தால், இதை எடுத்துகொண்டு ஜல்லியடிக்க கூடும் என்று எழுதியிருந்தேன். இனி நீலகண்டன் சொல்வதற்கு வருவோம்.

இந்த விஷயத்தை அவர் ‘கேள்விபட்டிருக்க வாய்ப்பிருக்காது என்று நினைக்கிறேன்’ என்று சொன்னதை அவர் சாதியை மனதில் வைத்துதான் என்று குற்றம் சாட்டியவர் அவர்தான். நான் எதுவும் சொல்லாத நிலையிலேயே, குவாண்டம் ஸ்டோக்காஸ்டிக் கால்குலஸ் குறித்து அவருக்கும் எதுவும் தெரியாத நிலையிலேயே, அப்படி தெரிந்ததாக பாவனை செய்தபடி, அவர் சாதிகாரணமாகத்தான் அவருக்கு தெரியாது என்று நான் நினைப்பதாக அவர்தான் சொன்னார். இப்போது கேட்கிறார், ‘இதனை QSCஐ நான் தெரிந்து வைத்திருப்பது எப்படி ரோசாவசந்த்தின் சாதியத்தன்மைக்கு நிகரான உயர்வு மனப்பான்மைக்கு சான்றாகும் என்பதும் தெரியவில்லை.’ என்று உல்டா செய்து என்னிடம் கேட்கிறார். அதற்கு ஏற்றார் போல் ‘இதன் நீட்சியாகவே’ என்ற அவரது வார்த்தையை மட்டும் விட்டுவிட்டு மற்றதை வெட்டி ஒட்டுகிறார். என்ன இந்துத்வ அறிவு நேர்மையோ! ஒன்றும் புரியவில்லை. 

ஒருவர் ஒரு குறிபிட்ட சந்தர்பத்தில் பெயர் போட்டு அழைப்பதற்கும், பெயரிடப்படுவதற்கும் என்ன வேறுபாட்டை உணர்த்த விரும்பினேன் என்று ஒருவேளை புரிந்திருக்கலாம். நீலகண்டன் அது ‘பெயரிடபட்டிருப்பதாய்’ குறிபிட்டதாலேயே அது குறித்த விவரத்தை அடுத்த திண்ணையில் தரும்படி கேட்டிருந்தேன். ஒரு சர்வே கட்டுரை எழுதுவது போல் நீலகண்டன் வாசகர்களுடன் ‘பகிர்ந்துகொண்ட’ விவரத்தை பார்போம். 

நீல்கண்டன் சொல்கிறார். “1967 தான் எழுதிய பாடநூலில் இந்த ஆபரேட்டர்களுக்கு இப்பெயர்களை அளித்தவர், வெள்ளைக்காரருமல்ல, இந்தியருமல்ல. அந்த இயற்பியலாளரின் பெயர் சகுராய்.” இப்படி தொடங்கி வழக்கம்போல், இந்தமுறை ஒரு ஆவண விஞ்ஞானியாய் அவதாரம் எடுத்து, விஷயங்களை அடுக்கிகொண்டு போகிறார். நான் இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்டது பார்த்தசாரதி, மற்றும் லிண்ட்ஸே விஷயத்தைதான். ஸகுராய் புத்தகத்தை பார்திருந்தும் (அதாவது அதன் இருப்பை அறிந்திருந்தும்) இந்த விஷயத்தை படிக்கவில்லை. முதலில் ‘நான் கேள்விபட்டிருக்க வாய்பில்லை’ என்று சொன்ன விஷயம் சரிதான். ஆனாலும் ஒரு ஆவண விஞ்ஞானி போல் நீலகண்டன், இதுவரை குவாண்டம் இயற்பியல் குறித்து எழுதபட்ட புத்தகங்களில் கட்டுரைகளில், ஒரு குறிபிட்ட விஷயம் குறித்து பேசப்பட்டவைகள் எல்லாவற்றையும் தொகுத்து தருவது கொஞ்சம் நகைச்சுவைதான். உலகின் மிக பெரிய கணணி கூட அந்த காரியத்தை செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ( அவருக்கு மேட்டர் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை.) 

இது இப்படி இருக்க, இதை வைத்து ‘ஏனெனில் ஒரு புராண பெயர்களை சில அறிவியல் விஷயங்களுக்கு கொடுப்பதற்கும் அதனால் ஒரு தத்துவ இணைத்தன்மையை கண்டு ‘ஜல்லியடிப்பதற்குமான’ வேறுபாட்டினை ‘ஜல்லியடிப்பவர்கள்’ உணர்ந்திருந்ததே காரணமாம். ஒருவிதத்தில் திரு.ரோசா வசந்த் கொடுத்த உதாரணம் மிகத்தௌ¤வாக தத்துவ இணைத்தன்மையை கண்டு ‘ஜல்லியடிப்பர்கள்’ எவ்வித விஷயங்களை தங்கள் ‘ஜல்லியடிப்பில்’ கலக்கவில்லை என்பதை தௌ¤வாக காட்ட உதவியுள்ளது.’ என்று முடிவுகளுக்கு வருவது வழக்கமான நீலகண்டன் பாணி.

முதலில் ஸகுராய் ‘அந்த ஆபரேட்டர்களுக்கு இப்பெயர்களை அளித்தார்’ என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை? ஸகுராய் சொன்னது, “We might say that the three operators … correspond respectively to the Creator(Brahma), the Destroyer(Siva) and the Preserver(Vishnu) in Hindu mythology.” என்று சகுராய் சொல்லியிருப்பதை ‘அப்பெயர்களை அளித்ததாய்’ எடுத்துகொள்ளமுடியுமா? ஏனெனில் இந்த புத்தகம் மட்டுமில்லாது, அவர் எழுதிய மற்ற புத்தகங்கள், கட்டுரைகள் எங்கும், இந்த ஆபரேட்டர்களை இந்த பெயர் போட்டு அழைக்கவில்லை. இங்கே ஒரு சும்மா ‘ஒப்பிடல்’ செய்கிறார். அதாவது சரியாய் சொல்லவேண்டுமெனில் இந்த இடத்தில் ஒரு ஒப்பீடு செய்து ஜல்லியடிக்கிறார். ஆனால் ‘சாங்ய/பௌத்த’ விவகாரம் குறித்து ஹாரிசன் அடித்த ஜல்லியைவிட ஒரளவு ஒப்புமையுடன், கொஞ்சமாவது விஷயத்துடன் ஸகுராய் ஜல்லியடிக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். நீலகண்டன் ஆவணபடுத்தியது போல் அல்லாமல், அதற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து லிண்ட்ஸே என்பவர் மீண்டும் ஒரு ஜல்லியடித்திருக்கிறார். அதை சிலர் ஸீரியஸாய் எடுத்துகொண்ட விஷயத்தைதான் நானும் சொன்னேன். (இது தவிர இன்னும் சில இந்தியர்கள் ஜல்லியடித்திருப்பதாக கேள்விபடுகிறேன், முழுவிவரம் கையில் இல்லை. ) நான் ‘பரவலாய் தெரியவில்லை’ என்று சொன்னதும், ”தத்துவ இணைத்தனமை’யை வைத்து ஜல்லி அடிப்பவர்களை’ மனதில் வைத்து அல்ல, குவாண்ட புளுகுகளை அவிழ்த்துவிடும் நீலகண்டன் போன்றவர்களையும். மற்றும் நேரடியாகவே அண்டபுளுகுகளை அவிழ்த்துவிடும் மற்ற இந்துத்வ கும்பலையும் மனதில் வைத்துதான். என்னகாரணத்திற்காக ஸகுராயும், லிண்ட்ஸேயும், இன்னும் ஹாரிசனும் (அதற்கு விளக்கம் தராதவரை அப்படித்தான் அழைக்கவேண்டும்) ஜல்லியடிக்கிறார்கள் என்ற விஷயத்தினுள் போகவில்லை. இவர்கள் ஜல்லியடித்துவிட்டார்கள் என்பதற்காக மட்டும் அதற்கு எந்த மதிப்பும் கொடுக்கமுடியாது என்பதுதான் நான் சொன்னது. உலகத்திற்கே முக்கிய இயற்பியலாளரான ஸகுராய், மற்றும் முக்கிய கணிதவியலாளரான லிண்ட்ஸேக்கும் அது பொருந்தும். சூர்யாவிற்கும், நீலகண்டனுக்கும் மட்டும் முக்கியமான இயற்பியலாளரான ஹாரிசனுக்கும் அது பொருந்தும். 

இது இப்படி இருக்க குவாண்டம் இயற்பியலுக்கும் அல்லது அதன் தத்துவ உள்ளீட்டிற்கும், இந்தியதத்துவத்திற்குமான, இணைதன்மையை ‘விளக்கி’ நீலகண்டன் எழுதியுள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை வாசகர்கள் மீண்டும் படித்து பார்கவும். எங்காவது ஒரு இடத்தில் ஒரு தெளிவான ஒப்பீடு, உதாரணமாய் குண்ட்ஸாகவாவது இந்த பிரம்ம, விஷ்ணு, சிவா விவாகாரத்தில் எந்த இணைதன்மை கூட கிடையாது என்று நான் சொன்னதுபோல, எங்கேயாவது விரிவாய் நீலகண்டன் விளக்கியிருக்கிறாரா என்று படித்து பார்த்து முடிவுக்கு வரவும். ஓபன்ஹெய்மர் சொன்னார், ‘ காலடியில் நிலம் நழுவி போவதாய்’ எய்ன்ஸ்டீன் சொன்னார் அப்படி இப்படி போகிறதே தவிர, உருப்படியாய் எதாவது ஒரு வரி இருக்கிறதா? இத்தனைக்கும் கையில் கனம் கனமாய் புத்தகங்களை வைத்துகொண்டு அதை எல்லாம் அளிக்கிறார். சில விஷயங்களை ஆவணபடுத்தி வறலாற்றையே முன்வைக்கிறார். ஆனால் விஷயபூரவமாய் எதையும் காணோம். இதற்கு பெயர்தான் குவாண்ட புளுகு!

7. நீலகண்டன்தான் எழுதினார், “பாணினியின் சமஸ்கிருத இலக்கணத்தின் அடிப்படையில் பல தீர்வுமுறைகள் (algorithms) உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, முனைவர். P.இராமானுஜன் (Centre for Development of Advanced Computing) அவர்களால்.” என்று. இவ்வாறு எழுதுபவர் என்ன அல்காரிதம், அது எதற்கானது, அது குறித்த தகவல் எங்கே கிடைக்கும் என்று குறைந்த பட்சமாய் விளக்கவாவது தயாராய் இருக்கவேண்டும். நான் அந்த ஆய்வுதாள் எங்கே கிடைக்கும் என்றோ, குறைந்தபட்சம் ராமானுஜனின் மின்னஞ்சல் முகவரியோ கேட்டால், “கணினி ஆராய்ச்சி மையத்திடம் கிடைக்கும் விஷயத்திற்கு ‘நாகர்கோவில் இருந்து கொண்டிருக்கிற நபரிடம்’ கேட்கிற ஆராய்ச்சி நேர்மை இருக்கிறது பாருங்கள்! வாசிக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” என்கிறார். என்ன ஒரு அசட்டுத்தனம்!

அல்காரிதம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட அர்தம் கணிதத்தில் இருக்கிறது. அந்த அர்த்தப்படி, சமஸ்கிருத இலக்கண அடிப்படையில் உருவாக்கபட்ட இந்த ‘அல்காரித’ விஷயம் ஒரு புருடா என்றுதான் இப்போழுதும் நினைக்கிறேன், படிக்காமலே இப்படி நினைக்க நிச்சயம் காரணமுள்ளது. இவர்கள் தரும் ( இந்த ரிக் ப்ரிக்ஸீன் AI கட்டுரை உட்பட) பல உதாரணங்களை படித்தபின் இந்த எண்ணம் உறுதிபட்டுதான் வருகிறது. நீலகண்டன் ராமனுஜனை தொடர்பு கொள்ள அளித்த முகவரிக்கும் இந்த ‘குறிப்பிட்ட கட்டுரை’ குறித்து கேட்டு ஒரு வாரம் ஆகியும் (இப்போது இரண்டுவாரம் ஆகியும்) இன்னும் எனக்கு பதில் வரவில்லை. (மீண்டும் எழுதி கேட்டது ரோஸாவசந்த் இல்லை!) முதலில் நீலகண்டன் சொன்னது போல் ஒரு கட்டுரை இருக்கிறதா என்று தெரிந்தபின்தான், அது புருடாவா என்பது குறித்து யோசிக்க முடியும். 

ஆனாலும் நீலகண்டனின் தர்க்கம் அசட்டுதனத்தின் எல்லா பரிமாணங்களையும் கொண்டிருப்பது புதியதல்ல. அவருடைய பழைய கட்டுரைகளில் உள்ள விஷயம்தான். காங்கிரஸ் என்ற பா.ஜ.க. விலிருந்து பெரிதாய் வேறுபடாத ஒரு கட்சி, சொல்லபோனால் பா.ஜ.க.வின் எல்லாவகை வளர்சிக்கும் வித்திட்ட, அதற்கு விதையும் உரமும் அளித்த ஒரு கட்சி, அரை நூற்றாண்டிற்கு மேலாய் சமஸ்கிருதமயமாக்கலுக்கும், அதன் ‘வளர்சிக்கும்’ எல்லவகையிலும் உறுதுணையாய் இருந்து வருகிறது. இதில் ஒரு .01%கூட இன்னொரு செம்மொழியான தமிழுக்கு கிட்டியதில்லை. இப்படியிருக்க நீலகணடன் மாபெரும் பாயிண்டாய் “RSS-பார்ப்பன ‘புருடா’ வேலைகள் அக்மார்க் மதச்சார்பற்ற காலங்களிலேயே தொடங்கி ஜாம்ஜாமென நடக்கிறதாக தெரிகிறது.” என்று அசடு வழிகிறார். கொடுமை!

8. ரிக் ப்ரிக்ஸின் ‘ஆய்வுதாள்’ குறித்து பேசும்போது, ‘ஒரு ஆய்வுத்தாள் 18 வருடங்களாக யாராலும் கவனிக்கப்படாததால் அது குப்பை என்கிற ரீதியில்’ என்று நான் சொல்லாவிட்டாலும் திரித்து வாசிக்க நீலகண்டனுக்கு சொல்லியா தரவேண்டும். ‘எந்த கணணி அறிஞரும் கேள்வி எழுப்பவில்லையே?’ என்று அபத்தமாக (அதாவது ரிக் குண்ட்ஸாக போட்ட ஒரு முடிச்சுக்கு, சமஸ்கிருதம் படித்து, ரிக் போட்ட முடிச்சையும் ஆரய்ந்து அது குறித்து யாரும் கேள்வி எழுப்பாதது குறித்து) நீலகண்டன் கேட்டதற்கு பதிலாகவே அதை எழுதியிருந்தேன். யாரும் கேள்வி எழுப்பாதது எதையும் நிருபிக்கவில்லை, யாரும் ஸீரியஸாய் ஏன் எடுத்துகொள்ளவில்லை என்பதுதான் முக்கியமான கேள்வி என்றுதான் கேட்டிருந்தேன். 

மற்றவருக்கு பயன்படுத்தும் ஒரு தர்க்கத்தை கொஞ்சம் கூட தனக்கு பொருத்தி பார்க்க தயாரயில்லாத மனிதராய் எனக்கு நீலகண்டன்தான் தெரிகிறார். ரவி ‘peer reviewed journal’ குறித்து பேசியதற்கே அத்தனை ஆத்திரத்தை கக்கியவர், மீண்டும் மீண்டும் ஒரு AI இதழில் ரிக்கின் கட்டுரை வந்ததை பெரிய விஷயமாய் வலியுறுத்தி சொல்லிகொள்கிறார். (அங்கே என்னவகை peer review என்று தெளிவாகவும் இல்லை. உதாரணமாய் ரிக்கின் கட்டுரையை சமஸ்கிருதம், செயற்கை அறிவு இரண்டும் அறிந்த அறிஞர்கள் கூடி review செய்தபின்தான் பிரசுரமானது என்று நம்ப எந்த முகாந்திரமும் இல்லை.) ரோஸாவசந்துக்கு AIயில் வந்தாலும், new ageஇல் வந்தாலும், விகடனில் வந்தாலும் உள்ளிருக்கும் விஷயம்தான் முக்கியம். 

முன்பே சொன்னது போல, ரிக்கின் கட்டுரை நீலகண்டன் சொலவ்துபோல நிச்சயமாய் எதையும் நிறுவவில்லை. நிறுவுவதற்கு கணிதரீதியான அல்லது அதற்கு சமமான rigour தேவை. ரிக் செய்வது மிக மிக குண்ட்ஸான முறையில் ஒரு ‘நிகழ்துதல்'(demonstration) மட்டுமே! அதையும் எப்படி செய்திருக்கிறார், என்ன செய்திருக்கிறார் என்று பார்போம்! ரிக் ப்ரிக்ஸ் கட்டுரையின் தொடக்கத்தில் அறிமுகபடுத்தும் semantic net என்பதன் விளக்கமே மிகவும் குண்ட்ஸாக இருக்கிறது. எந்த விதத்திலும் `well-defined’ வரையரையாக அது விளக்கபடவில்லை. உதாரணமாய் ரிக் கட்டுரையில் சில வாக்கியங்களுக்கு `semantic net’ என்று சொல்லி படம் தந்து பாகங்களை குறிக்கிறார். இதை படித்து வேறு ஒரு வாக்கியத்திற்கு நானும், நீலகண்டனும் வேறு வேறு இடத்தில் உட்கார்ந்துகொண்டு, ஒரே விதமான ‘semantic net’ஐ உருவாக்கும் வகையில் அது வரையரை செய்யபடவில்லை. அதன் வரையரையே மிக மிக குண்ட்ஸாக இருக்கிறது. மேலும் ரிக் சொல்கிறார் ( நீலகண்டனும் குறிப்பிட்டுள்ளது போல).

“The degree to which a smantic net (or any unambiguous, nonsyntactic representation) is cumbersome and odd- sounding in natural language is the degree to which that language is “natural” and deviates from the precise or “artificial”. As we shall see, there was a language spoken among an ancient scientific community that has a deviation zero.”

அதாவது ஒரு மொழியின் செயற்கை தன்மையை அளக்க இந்த semantic netகளை பயன் படுத்துகிறார். சரி, அதாவது ஒரு மொழியை கொடுத்தால், அதை வைத்து அதன் வாக்கியங்களுக்கு semantic netகளை உருவாக்கி அது எவ்வளவு ‘இடியாப்ப குழப்பமாக’ உள்ளது என்று பார்த்து அதன் அடிப்படையில் அதன் இயற்கை/செயற்கை தன்மை குறித்து முடிவுக்கு வருவது குறித்துதான் சொல்கிறார். கட்டுரையின் இறுதியில் ‘ஒரு புராதன அறிவியல் சமூகத்தினர்’ பேசிய ஒரு மொழி (அதாவது சமஸ்கிருதம்) எவ்வாறு zero deviationஉடன்’ இருந்தது குறித்து காட்டபோவதாகவும் சொல்கிறார். ரிக் செய்திருக்க வேண்டியது என்னவெனில், கணிதம் போல் கறாராக இல்லாவிட்டாலும், கொஞ்சம் குண்ட்ஸாகவாவது semantic netஐ வரையரை செய்து, deviation என்பதை அளக்க ஒரு வழிமுறையும் பரிந்துரைத்திருக்க வேண்டும். மனிதர் மேலே உள்ள ஒற்றை வரியை தவிர, கட்டுரை முழுக்க எங்கேயும் இந்த deviation என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை. எப்படி சமஸ்கிருதம் zero deviation உள்ள ஒரு மொழி என்று குண்ட்ஸாக கூட (தொடக்கத்தில் உறுதிமொழி அளித்தபடி) demonstrate செய்யவில்லை. முதலில் சொல்லிவிட்டதோடு சரி, அதற்கு பிறகு அது குறித்த பேச்சே இல்லை. அது மட்டுமில்லாமல் அவர் சொன்னபடி சமஸ்கிருத வாக்கியத்தை வைத்து மேற்சொன்னபடி semantic netகளை உருவாக்கி அதனடிப்படையில் ஏதாவது சொல்கிறாரா என்றால் அதுவுமில்லை. அப்படி எதுவுமே செய்யவில்லை. சமஸ்கிருத வாக்கியங்களை, அதற்கு இலக்கணம் எழுதியவர்கள் ‘அலசியதாக’ சில விஷயங்களை சொல்லி, அதற்கும் மேலே சொன்ன semantic netsற்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார். இது நிச்சயமாய் சமஸ்கிருதம் என்ற மொழியின் செயற்கை தனமை குறித்து demonstrate செய்யும் காரியம் அல்ல. கட்டுரையின் தொடக்கத்தில் மொழியின் இயற்கை/செயற்கைதன்மை குறித்து சொல்லி, செய்யபோவதாக அவர் சொன்னதும் இதை அல்ல. அப்படி இப்படி குண்ட்ஸாக சில ‘பொருத்தங்களை’ (அதுவும் சரியான citation, சமஸ்கிருத வாக்கியங்கள், இலக்கண ரீதியான வரையரை என்று எதுவும் கறாராய் இல்லாமல்) பொத்தாம் பொதுவாக செய்கிறார், இப்படி எதையோ செய்துவிட்டு பழங்கால சமஸ்கிருத அறிஞர்களை hardware இல்லாத கணணி விஞ்ஞானிகள் என்று பட்டமும் தருகிறார். கட்டுரையின் நடுநடுவே இஷடத்திற்கு சமஸ்கிதம் குறித்து பீலாக்களையும் விடுகிறார். அதற்கான ஆதாரங்கள் முட்டை. அதை எல்லாம் அவர் மொழி அறிஞராய் சொல்கிறாரா, அல்லது நாசா அறிவியலளராகவோ, அல்லது ஒரு செயற்கை அறிவு ஆய்வாளராக சொல்கிறாரா, ஒன்றும் தெளிவில்லை. சரியான விதத்தில் citation கிடையாது. சமஸ்கிருத வாக்கியங்களை எடுக்கும்போதும், அதற்கான இலக்கண சமாச்சாரத்தை மேற்கோள் காட்டும் போதும் எந்த தெளிவும் கிடையாது. எல்லாமே குண்ட்ஸாக செய்யபடுகிறது. மற்ற ஒரு மொழிக்கு இது பொருந்தாது என்று சொல்ல குண்ட்ஸான ஒரு கோடிட்டுகாட்டல் கூட கிடையாது. தொல்காப்பியத்தை முன்வைத்து (சொல்லபோனால் அது கூட தேவையில்லை, தேவநேயபாவாணரின் ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி) சமஸ்கிருதம் இருக்கும் இடத்தில் தமிழை வைத்து இதே போல ஒரு கட்டுரை எழுதுவது எந்த விதத்திலும் கடினமல்ல. நீலகண்டன் கொஞ்சம் காத்திருக்கணும்.

பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50: குவாண்ட புளுகுகள்! ரிக்கின் கட்டுரை ஒரு மாபெரும் விஷயத்தை ஆழமாக ஆராய்ந்து பேசுவது போல், நீலகண்டன் பேசுவது இன்னொரு பம்மாத்து அவ்வளவுதான். நிச்சயம் இது குறித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் எல்லாவித விரிவுடன் நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் சொல்கிறேன். ரிக் ப்ரிக்ஸின் ‘ஆய்வுதாள்’ குண்ட்ஸாக, குண்ட்ஸான கருத்தாக்கங்களை மட்டும் வைத்து, மிக மிக குண்ட்ஸான முறையில் ஏமாற்றகூடிய எல்லாசாத்தியங்களுடன் எழுதபட்ட ஒரு கட்டுரை. எனக்கு இந்த மொத்த `ஆய்வுதாளுமே’ இன்னொரு குவாண்டம் புளுகாகத்தான் தெரிகிறது. அதாவது ‘demontrate’ செய்யும் விதமாய் சொன்ன சில விஷயங்களில் உண்மை இருக்கலாம். ஆனால் demonsrate செய்ததாய் சொன்னது அண்டபுளுகு. இது எப்படி AI இதழில் வெளிவந்தது, ரிக் ஏன் இதை எழுதினார் என்ற கேள்விகளுக்குள் போகாமல், கட்டுரையின் உள்ளடகத்தை மட்டும் வைத்து எழுதியுள்ளேன். நிச்சயம் இது குறித்து இன்னும் விரிவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதத்தான் போகிறேன். நீலகண்டனுக்கு AI இதழில் கட்டுரை வெளிவந்த ஒரே காரணத்தால் அது மிக முக்கியமானது. எனக்கு அதில் இருக்கும் உள்ளடகத்தை மட்டும் வைத்து அது ஒரு குப்பை. இந்த குப்பை AIஇதழில் வெளிவரும் சாத்தியத்தை வைத்து வேறு கேள்விகள் எழலாம், அவ்வளவுதான். இன்னும் விரிவாக மார்சிற்கு பிறகு வருகிறேன். வாசகர்கள் தாங்களாகவே படித்து ஒரு முடிவுக்கு வரலாம். http://www.aaai.org/Library/Magazine/Vol06/06-01/vol06-01.html 

கடைசியாக நீலகண்டன் URL தந்துள்ள அனுஸாரகாவின் பக்கத்திலும் சரி இந்த ரிக்கின் கட்டுரையிலும் சரி இந்த ‘இந்திய பண்டய அறிவியல் விஷயங்களை மேற்கு மறுகண்டுபிடிப்பு செய்வதாய்’ சொல்லும் ஜோஷி (இது குவாண்ட புளுகு இல்லை, நேரடியான அண்ட) புளுகு வெளிபடுவதை பார்க்கவேண்டும். இப்படி எல்லாம் சொல்லாமல் சூர்யா போல், நீலகண்டன் போல் குவாண்ட புளுகு மட்டும் புளுகினால் ஒரு குறைந்த பட்ச நம்பகதன்மை கிடைக்கலாம்.

What is the significance of this activity from the shastric tradition viewpoint?

Ans : Generally, once something is discovered in the west, we claim to find an evidence for it in the shastras also. Anusaaraka is an attempt to demonstrate the application of shastric ideas from the shastras before they are rediscovered in the west. 

9. கடைசியாய் திருமாவளவன் ‘மூளைசலவை’ செய்யபட்ட விஷயம். கணிதத்தையும், அறிவியலையுமே திரிக்க தெரிந்தவருக்கு இதை எல்லாம் திரித்து சாமர்தியமாய் பேச சொல்லியா தரவேண்டும். ஒருவர் வந்து வெளிப்படையாய் ‘திருமாவளவன் தலித், அதனால் அவருக்கு சிந்திக்க தெரியாது’ என்று சொன்னால்தான் அதை ஆதிக்கசாதி உளவியலாய் ஒப்புகொள்வாராம். அதை எல்லாம் நீலகண்டனும், மணிமாறனும் வீட்டில்தான் சொல்லிகொள்ளவேண்டும். இதை வெளிப்படையாய் சொல்லும் நிலையில் நாடு இன்று இல்லை. (ஆனால் நான்மட்டும் இவருக்கு QSC தெரிந்திருக்காது என்று நினைத்தால் கூட அது குறித்து அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என்ன ஒரு நடுநிலமை!) நான் கேட்ட விஷயம் தெளிவானது என்றாலும் அதை கண்டுகொள்ள இவருக்கு என்ன தலையெழுத்தா? 

நான் தெளிவாகவே மீண்டும் மீண்டும், திருமாவளவனை விமர்சிக்க கூடாது என்றோ, அவர் கருத்தை விமர்சிப்பது குறித்தோ பேசவில்லை என்று சொல்லியாகிவிட்டது. திருமாவளவன் கருத்தை மணிமாறன் விமர்சித்திருந்தால் அதை மட்டும் வைத்து (அதிலும் ஆதிக்க ஜாதி உளவியல் இருக்கலாம், விமர்சிப்பதை மட்டும் வைத்து) ஆதிக்கஜாதி உளவியல் என்று நான் நிச்சயாமாய் சொல்லவில்லை. திருமாவளவன் கம்யூனிஸ்டுகளையும், திராவிட இயக்கத்தவரையும் மிக கடுமையாய் விமர்சித்து வருபவர். எதிர்த்து அரசியலும் நடத்தி வருபவர். அப்படி இருக்கையில் அவரை, மேற்கண்டவர்களால் மூளைசலவை செய்யபட்டதாய் சொல்வது அபத்தமில்லையா? உதாரணமாய் ஒரே விஷயத்தை பேசுவதற்காக கம்யூனிஸ்டுகளையும், திகவினரையும் திருமாவளவனால் மூளை சலவை செய்யபட்டதாய் சொல்லமுடியுமா? திருமாவளவன் சொன்ன அதே கருத்தை வேறு யாராவது சொன்னால் அவரையும் அந்த கருத்துக்களுக்காக மட்டும் brain washed என்று சொல்வாரா? இவ்வாறு அபத்தமாய் சொல்வதன் பின்னுள்ள அடிப்படை திருமாவளவனுக்கு சொந்தமாய் சிந்திக்க தெரியாது என்ற கருத்து அல்லவா? உதாரணமாய் நீலகண்டன் RSSஆல் மூளைசலவை செய்யபட்டவர் என்று நான் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் உண்டு. தனது உடல், பொருள், ஆவி, அறிவு, மூளை எல்லாவற்றையும் RSSற்கு அர்பணித்தவர் அவர். திருமாவளவனால் கடுமையாய் விமர்சிக்கபடுபவர்களால் அவர் மூளைசலவை செய்யபட்டதாய் சொல்வது ஆதிக்கஜாதி உளவியல் அல்லாமல் வேறு என்ன என்பதுதான் நான் கேட்டது. இதை ஏற்கனவே பலமுறை விளக்கி சொல்லியாகிவிட்டது. புத்திசாலியான நீலகண்டனுக்கு நிச்சயம் அது புரிந்திருக்கும். ஆனாலும் குவாண்ட புளுகருக்கு இதை மாற்றி, மறைத்து, திரித்து சாமர்த்தியமாய் தர்கம் செய்ய சொல்லியா தரவேண்டும்!

10. மீண்டும் சொல்கிறேன். இந்துத்வவாதிகள் எந்த தர்கத்தையும் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திகொள்ள, அண்டபுளுகு, குவாண்ட புளுகு என்று எதை வேண்டுமானாலும் பயன்படுத்த தயங்கமாட்டார்கள். மீண்டும் அதை நீலகண்டன் உறுதிபடுத்தியுள்ளார். தமிழகத்திற்கு ஏற்றாற்போல் இங்கு பார்பனிய எதிர்ப்பு கூட பேசுவார்(மற்ற மாநிலத்தில் வாய் திறக்கமுடியுமோ!) அம்பேத்காரையும் அவ்யப்போது தேவைக்கேற்ப கருவேப்பிலை போல் தொட்டுகொள்வார்கள். காந்தியை கொன்றது மட்டுமில்லாமல், இன்றும் அது குறித்து ஒரு நியாயபடுத்தும் வாதத்தை ஒவ்வோரு RSS காரனும் கொண்டிருப்பான். என்றாலும் இவர் ‘மகாத்மா’ என்பார். காலத்திற்கு ஏற்ப ஹிட்லர் ஆதரவையும் இப்போது வெளிப்படையாய் பேசுவதில்லை. யூத இனவெறிக்கு மட்டுமே வெளிப்படையான ஆதரவு. லூபென்னுக்கும், ஹிட்லருக்கும் இத்தகைய சாமர்த்தியங்கள் இருந்திருந்தால் எங்கேயோ போயிருப்பார்களே!

11. அவ்வளவுதான். இனி நீலகண்டன் குவாண்ட புளுகு, அண்ட புளுகு, குவாண்டகாச புளுகு என்று என்ன புளுகினாலும் மார்ச் இறுதிவரை இந்த பக்கம் வரமாட்டேன். திண்ணை படிக்ககூடமாட்டேன். வந்தனம்! ஒரு RSS மனநிலையை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள மீண்டும் ஒரு வாய்பளித்ததற்கு, நீலகண்டனுக்கு நன்றி!

rksvasanth@yahoo.com
பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50