நேர்காணல்: மார்கிரட் அட்வூட்டுடன் ….

பதிவுகளில் அன்று: பதிவுகள், ஜூன் 2006; இதழ் 78.

நேர்காணல்: மார்கிரட் அட்வூட்! தண்ணீர் பெண்!

கிரேக்க புராணத்தில் ஒரு கதை உண்டு. இந்தக் கதைதான் திரோஜன் போர் நடப்பதற்கு காரணமாக அமைந்தது. ஒரு நாள் எல்லாக் கடவுள்களும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள். மரணக் கடவுளான எரிஸ் அழைக்கப்படவில்லை. திடிரென்று அவள் நடுவில் தோன்றி விருந்து மேசையிலே ஒரு தங்க அப்பிளை உருட்டிவிட்டாள். அதிலே ‘அழகில் சிறந்த தேவதைக்கு’ என்று எழுதியிருந்தது. உடனேயே அங்கே சண்டை மூண்டது. அதீனா, ஹீரா, அஃப்ரோடைற் – இவர்கள் மூவரும் தாங்களே அழகில் சிறந்தவர் என்று தங்க அப்பிளுக்கு போட்டியிட்டார்கள். போட்டியை தீர்ப்பதற்கு பூமியில் இடையனாக வாழ்ந்துவரும் பாரிஸ் என்பவனிடம் வருகிறார்கள். பாரிஸ் திரோய் அரசனின் மகன். இளவரசன். அவனால் அந்த நகரம் முற்றிலும் அழிந்துபோகும் என்று சோதிடம் சொன்னதால் அவனை ஒரு இடையனிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியிருந்தார்கள்.

பாரிஸ் மூன்று தேவதைகளுக்கும் நீதிபதியாக இருப்பதற்கு சம்மதிக்கிறான். அவர்கள் ஆடைகளை களையச் சொல்கிறான். அப்படியே செய்கிறார்கள். அதீனா தேவதை தன்னை தேர்வு செய்யச்சொல்லி கேட்கிறாள். அப்படிச் செய்தால் அவனுக்கு அளவற்ற கல்வியும், ஞானமும் தருவதாக ஆசை காட்டுகிறள். ஹீரா தேவதை அவனுக்கு பெரும் செல்வமும், பலமும் தருவதாகச் சொல்கிறள். அஃப்ரோடைற் என்ற காதல் தேவதை அவனுக்கு உலகிலேயே சிறந்த அழகியான ஹெலனைத் தருவதாக வாக்குக் கொடுக்கிறாள். அப்படியே பாரிசும் அவளை தேர்வு செய்கிறான். இந்தச் சம்பவமே பின்னாளில் திரோஜன் போர் நிகழ்வதற்கு காரணமாக அமைந்தது.

இந்தக் கதையை ஏன் கூறினேன் என்றால் பரிசு என்று சொன்னாலே சில எதிரிகள் முளைத்து விடுகிறார்கள். ஒன்று கொடுத்தால்தான் ஒன்று கிடைக்கும். உண்மையான தகுதிக்கு கிடைப்பதென்பது நிச்சயமில்லை. நோபல் பரிசும் அப்படித்தான்.’ இப்படிக் கூறியது வேறு யாருமில்லை. மார்கிரட் அட்வூட்தான். நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலாகத்தான் இதைக் கூறினார். என்னுடைய கேள்வி இதுதான். ‘கனடாவில் இலக்கியதுக்கான நோபல் பரிசு இதுவரை ஒருவருக்கும் கிடைக்கவில்லை. கனடிய எழுத்தாளர் ரொபர்ட்ஸன் டேவிசுக்கு கிடைக்கும் என்றார்கள். அவர் இறந்துபோனார். இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’

மார்கிரட் அட்வூட் இன்று ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களில் முன்னணியில் இருக்கிறார். நாவல்கள் 12, கவிதை தொகுப்பு 15, சிறுகதை தொகுப்பு 9, சிறுவர் இலக்கியம் 4, கட்டுரை தொகுப்பு 4 இப்படி 40 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். எண்ணமுடியாத இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இவருக்கு கிடைத்திருக்கின்றன; கனடாவில் கொடுக்கப்படும் ஆளுநர் பரிசை இவர் இரண்டு தடவை பெற்றிருக்கிறார். அதி உயர்ந்த இலக்கியப் பரிசான கில்லெர் பரிசு 1996ல் இவருடைய Alias Grace நாவலுக்கு கிடைத்தது. The Blind Assassin என்ற இவருடைய நாவல் 2000 ண்டில் புக்கர் பரிசைப் பெற்றது. இந்த நாவல் உலகத்து சிறந்த 100 நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

உலகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவருக்கு கௌரவ டொக்ரர் பட்டங்கள் வழங்கியிருக்கின்றன. இவருடைய எழுத்து பெண்ணியம் சார்ந்தது. அதில் தீவிரமாக இருக்கிறார். அலங்காரம் இல்லாத நேரடி நடையில் மெல்லிய நகைச் சுவையும், எள்ளலும் கலந்திருக்கும். படிக்கும்போது வாசகருடைய முழுக்கவனத்தையும் இழுத்துப் பிடிக்கும் எழுத்து. எனவே சோர்வு தட்டாது. சந்தர்ப்பங்களில் திடீரென்று ஒருவித முன்னறிவித்தலும் இல்லாமல் ழமான ஒரு கருத்தைச் சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு நகர்வார். நட்டு நட்டு வைத்ததுபோல கவிதை வரிகள் வந்து விழும். பொதுவாக இன்பமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.

கனடாவில் எந்த ஓர் எழுத்தாளருக்கும் இதுவரை இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்கு தகுதியான ஒரே படைப்பாளி இவர்தான் என்றும் சொல்கிறார்கள். இந்தக் கட்டுரை வெளியாவதற்கு முன் அவருக்கு அது கிடைத்தாலும் கிடைக்கலாம்.

இவருடைய Penelopiad என்ற நாவல் 2005 ஆண்டு இறுதியில் வெளிவந்தது. நான் புத்தகத்தை வாங்கி உடனேயே படித்துவிட்டதால், ரொறொன்ரோவில் ஒரு வாசிப்பு கூட்டத்துக்கு வந்திருந்த அவரை அணுகி பெனிலோப்பியட் பற்றி சில கேள்விகளை அவரிடம் கேட்கலாமா என்று விசாரித்தேன். அவர் காரியதரிசிபோல தோன்றிய ஒரு பெண்ணை திரும்பிப் பார்த்தார். எனக்கு 25 நிமிடங்கள் ஒதுக்கினார். அது என்ன கணக்கோ, 25 நிமிடம் காட்சி, ஐந்து நிமிடம் விளம்பரம் என்பதுபோல. என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன, என்றாலும் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை விட்டுவிடவும் மனமில்லை. மார்கிரட் அட்வூட் ஐந்து அடி உயரத்தில் பார்ப்பதற்கு சிறுபெண் போலவே தோற்றமளித்தார். வயது 66. அடிக்கடி சிரிக்கிறார். எந்தக் கேள்வியையும் நிதானமாக உள்வாங்கிய பிறகு நிறுத்தி, நிறுத்தி பதில் கூறுகிறார். சில சமயம் இரண்டாவது கேள்வியை நான் ஆரம்பித்த பிறகு முதல் கேள்வியின் மீதி பதிலை தருகிறார்.

பெனிலோப்பியட் ஒரு வகையில் ஒடிசி காவியத்தின் மீள்பதிப்பு. ஒடிசியில் அதிகம் பேசப்படாத பாத்திரம் பெனிலோப்பே. அவளைப் பற்றிய கதை இது. புராணங்களின் மறுவாசிப்பு என்பது தமிழில் அடிக்கடி பரிச்சயமான நிகழ்ச்சி. ஜெயமோகனுடைய விஷ்ணுபுரம் ஒரு வகையில் எங்கள் புராண மரபுகளை திரும்பவும் அலசிப் பார்க்கும் முயற்சிதான். எஸ். ராமகிருஷ்ணனுடைய உப பாண்டவம், தேவகாந்தனுடைய கதாகாலம்கூட அந்த வகைதான். புராணங்கள் சொல்லாமல் விட்ட இடைவெளியை நிரப்புவதும், சொன்ன சம்பவங்களை மீள ஆராய்வதும், புது விளக்கம் தருவதும்தான் நோக்கம்.

ஹோமருடைய முதலாவது காவியம் இலியட். இது திரோஜன் போரைப் பற்றிக் கூறுவது. பேரழகி ஹெலென் ஸ்பாட்டா அரசன் மெனெலஸ்சின் மனைவி. அவள் திரோஜன் ராஜகுமாரன் பாரிசின் அழகில் மயங்கி அவனுடைய கப்பலில் திரோய் நகருக்கு ஓடிவிடுகிறாள். அவளை மீட்பதற்கு பெரும்படை புறப்படுகிறது. மெனெலஸ், அகமெனன், ஒடீசியஸ் என்று பல அரசர்கள். ஒடீசியஸ் மூளைசாலி, பெரும் தந்திரசாலி என்று பேர் வாங்கியவன். இவனுடைய சூழ்ச்சியினால்தான் மரக்குதிரையில் மறைந்து போர் வீரர்கள் திரோய் நகரத்துக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றி நாசம் செய்கிறார்கள். பத்து வருடப் போர் முடிவுக்கு வருகிறது. இதுதான் இலியட்.
போருக்கு பின் ஒடீசியஸ் தன் நாட்டுக்கு திரும்புவதையும், அவனுடைய வீரசாகசங்களையும் சொல்கிறது ஒடிசி காவியம். புயல் காற்றினால் கப்பல் திசைமாறி அவன் திரும்புவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் எடுக்கின்றன. அவனுடைய மனைவி பெனிலோப்பே இதாக்கா ராச்சியத்தை தனியாகப் பரிபாலிக்கிறாள். ஒடீசியசை நினைந்து அழுவதும், புலம்புவதும், பிரார்த்திப்பதுமாக காலத்தைக் கடத்துகிறாள். பல ஆடவர்கள் அவளை மணமுடிக்க வற்புறுத்துகிறார்கள். இருபது வருட இறுதியில் பெனிலோப்பே ஒரு போட்டி வைக்கிறாள். ஒடீசியசின் வில்லை வளைத்து நாண் ஏற்றி 12 கோடரி தலைகளை துளைத்து அம்பு செலுத்தவேண்டும். அப்படி செய்பவனை அவள் மணமுடிப்பாள். அது ஒடீசியசின் வில். அவன் ஒருவனே அதை வளைத்து நாண் பூட்ட வல்லவன்.

அரசகுமாரர்கள் போட்டியில் தோற்றுப் போகிறார்கள். பிச்சைக்கார வேடத்தில் நுழைந்த ஒடீசியஸ் எய்த அம்பு கோடரிகளை துளைக்கிறது. திருமணத்துக்கு வந்த ராசகுமாரர்களை வெட்டிச் சாய்க்கிறான். பெனிலோப்பேயும் ஒடீசியசும் ஒன்று சேர்கிறார்கள்.

நீங்கள் Penelopiad எழுதவேண்டி வந்த பின்னணியைப் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா?

மார்கிரட் அட்வூட்: பழைய புராணங்களை மீள வாசித்து புதிய பார்வையில் ஒன்றை தரவேண்டும் என்று Canongate பதிப்பாளர்கள் கேட்டுக்கொண்டார்கள். நானும் இன்னும் சில எழுத்தாளர்களும் இந்த புரஜக்டில் பங்கு பற்றி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு புராணத்தை கையாளவேண்டும் என்பது தீர்மானம். அப்படித்தான் பெனிலோப்பியட் பிறந்தது.

ஓர் எழுத்தாளர் இப்படி பதிப்பாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு எழுதும்போது நல்ல இலக்கியம் படைக்க முடியுமா?

மார்கிரட் அட்வூட்: பொதுவாக எனக்கு அப்படியான நிர்ப்பந்தத்தில் எழுதுவது பிடிக்காது. நல்ல இலக்கியமும் படைக்க முடியாது. இன்னும் சிலபேர் இரண்டு அத்தியாயங்களை எழுதி பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். முன்பணம் பெற்று ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டபிறகு எழுதத் தொடங்குவார்கள். இது எப்படி முடியும்? நாவல் எங்கே போகும் என்று அவர்களுக்கு தெரியுமா? நிச்சயமாக என்னால் அப்படி எழுதமுடியாது. ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அது அவர்களுக்கு வேலை செய்கிறது. ஆனால் என்னால் முடியாது.

ஆரம்பத்தில் சிரமப்பட்டு எழுதமுடியாமல் தவித்ததாகக் கூறியிருக்கிறீர்களே? அந்த தடங்கலை எப்படி கடந்தீர்கள்?

மார்கிரட் அட்வூட்: தடங்கல் ஏற்பட்டது Penelopiad எழுதும்போது அல்ல. நான் ஒடிசியை முதலில் நினைக்கவில்லை. கனடிய ஆதிவாசிகள் புராணம் நிறைய இருக்கிறது. அதை வைத்து எழுதலாம் என்று திட்டமிட்டேன். அது சரியாகப் போகவில்லை. இன்னும் வேறு புராணக்கதையை யோசித்தேன். எதுவும் உந்துதல் கொடுக்கவில்லை. அதற்கு பிறகுதான் ஒடிசியஸ் ஞாபகம் வந்தது. உடனேயே எனக்கு ஒரு பிடி கிடைத்தது.

பெனிலோப்பே ஒடிசியில் ஒரு சாதாரண பாத்திரம். அவளை முதன்மையாக வைத்து எழுதவேண்டும் என்று எப்படித் தோன்றியது?

மார்கிரட் அட்வூட்:  உங்களுக்கு ஒடிசி காவியம் பற்றி தெரிந்திருக்கும். நான் பள்ளியில் இருக்கும்போது படித்திருக்கிறேன். ஒடீசியஸ்தான் மரக்குதிரை தந்திரம் செய்து திரோஜன் போர் வெற்றிக்கு காரணமாயிருந்தவன். அவன் மணமுடித்து சில வருடங்களிலேயே போருக்கு புறப்படுகிறான். அவனுடைய மனைவி பெயர் பெனிலோப்பே. அவனுக்காக அவள் ராச்சியத்தை பரிபாலித்துக்கொண்டு இருபது வருடங்கள் காத்திருக்கிறாள்.  போர் முடிந்து திரும்பிய ஒடீசியஸ் மனைவி மேல் சந்தேகப்பட்டு மாறுவேடத்தில் வருகிறான். பெனிலோப்பேயுக்கு பன்னிரெண்டு அந்தரங்க தோழியர். அவர்கள்மேல் அவள் உயிராக இருக்கிறாள். மனைவிமேல் மாத்திரமல்ல அந்த தோழியரிலும் அவனுக்கு சந்தேகம். பன்னிரெண்டு தோழியரையும் தூக்கிலே போடுகிறான். ஒரு குற்றமும் அறியாத அந்த தாதியரின் கொலை என் உள்ளத்தில் அந்த வயதிலேயே பதிந்துவிட்டது. இந்த அநீதி பேசப்படாமலேயே காவியம் மேலே செல்கிறது. இந்தப் பொறிதான் நாவலுக்கு தொடக்கப் புள்ளி. அப்படி தொடங்கிய பிறகு நாவல் தன்னைத்தானே எழுதிக்கொண்டது.

எழுத்து தடங்கல் உங்களுக்கு முன்பும் ஏற்பட்டிருக்கிறதா?

மார்கிரட் அட்வூட்:  ஏன் இல்லை. எழுத்தாளர்களுடன் கூடப் பிறந்தது அது. எழுத்தும் அதுவும் இரட்டையர்கள். The Blind Assassin நாவலை மூன்று தடவை திருப்பி திருப்பி தொடங்கவேண்டி இருந்தது. பல பக்கங்கள் எழுதிய பிறகுதான் பிழையான பாதையில் நாவல் போவது எனக்கு தெரிந்தது. உடனேயே நாவலை நிறுத்தி மீண்டும் ஆரம்பித்தேன். இது பெரிய விசயமே இல்லை. எல்லா படைப்பாளிகளுக்கும் நடப்பதுதான். ஒரு முறை 200 பக்கம் எழுதிய நாவலை நிறுத்த வேண்டிவந்தது.

எழுதியதை என்ன செய்வீர்கள்? உண்மையிலேயே தூர வீசுவீர்களா? 200 பக்க எழுத்து வீணாகிவிடுமே?

மார்கிரட் அட்வூட்:  நான் வறுமையான குடும்பத்தில் பிறந்தவள். போர்க் காலங்களை அனுபவித்த நான் எந்த ஒரு பொருளையும் வீணாக்கக்கூடாது என்பதை சிறு வயதிலேயே கற்றிருந்தேன். அந்த 200 பக்கங்களையும் அப்படியே பாதுகாத்து அதிலிருந்து இரண்டு சிறுகதைகளை உருவாக்கி விற்றுவிட்டேன்.

உங்கள் எழுத்து மிகவும் இயற்கையானது. ஆடம்பரம் இல்லை. ஹெலெனுக்கும், பெனிலோப்பேயுக்கும் இடையில் ஏற்படும் பிணக்கு சுவாரஸ்யமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அதை இன்னும் நீட்டியிருக்கலாம் என்று பட்டதே?

மார்கிரட் அட்வூட்:  நன்றி. அப்படிச் செய்தால் அதுவே ஒரு ஒடிசியாகிவிடும். பதிப்பாளர் இவ்வளவு வார்த்தைகளுக்குள் முடிக்கவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தார். அதை மீறி நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். இன்னும் ஆழமாக எழுதியிருந்தால் கதை திசை திரும்பியிருக்கும்.

ஹோமரின் ஒடிசியில் வரும் பெனிலோப்பே அதிகம் பேசப்படவில்லை. ஹெலெனைப் பற்றியே எல்லோரும் பேசினார்கள். பெனிலோப்பே ஒடீசியசை நினைத்து அழுதுகொண்டிருப்பாள்; அல்லது பிரார்த்தனை செய்வாள். அவள் உச்சபட்சமாகச் செய்தது காத்திருப்பது ஒன்றைத்தான். தன் அழகில் கர்வம் பிடித்த பெண் ஹெலென். ஸ்பாட்டா அரசன் மெனெலெசை மணக்கிறாள், ஆனால் பாரிசுடன் திரோய் நகருக்கு ஒடிப்போகிறாள். அவளை மீட்பதற்கு நடந்த பத்து வருடப் போரில் பாரிஸ் மடிந்துவிட அவனுடைய சகோதரனை மணக்கிறாள். ஆனால் அவள் அவனுக்கு விசுவாசமாக இல்லை, போர் தோற்கும் சூழ்நிலையில் அவனுக்கு துரோகம் செய்ய, அவனும் இறக்கிறான். வாளை உருவி வெட்டப்போன அவளுடைய கணவன் மெனெலெஸ் ஒரு கணம் தயங்குகிறான். அவள் தனது ஒரு மார்பைக் காட்டுகிறாள். உடனேயே உருகி அவள் அழகில் மயங்கி காலிலே விழுகிறான். மறுபடியும் ஸ்பாட்டாவுக்கு திரும்பி கணவனுடன் வாழ்கிறாள். அவள் ஒருவருக்கும் உண்மையாக இருக்கவில்லை. அவளுக்காக போரில் லட்சக் கணக்கானோர் மடிகின்றனர். திரோய் நகரம் பற்றி எரிகிறது. ஆனால் அவளுக்கு கிடைத்தது நல் வாழ்க்கை. இருபது வருடங்கள் ஒடீசியசை நினைத்துக்கொண்டு பெனிலோப்பே வாழ்ந்தாள். திரும்பி வந்த ஒடீசியஸ் அவளை சந்தேகித்ததுடன் அவளுடைய உயிருக்குயிரான தாதியரையும் கொல்கிறான். பெனிலோப்பே ஒன்றுமே பேசவில்லை. மௌனமாக தன் விதியை ஏற்கிறாள்.

தோழிப் பெண்களை தூக்கிலிட்ட சம்பவம் உங்கள் வர்ணனையில் வருகிறது. இது ஹோமருடைய ஒடிசியிலிருந்து எப்படி மாறுபடுகிறது?

மார்கிரட் அட்வூட்:  ஒடீசியஸ் 20 வருடங்களாகத் திரும்பாததால் பெனிலோப்பேயை பல ஆடவர்கள் சூழ்ந்துகொண்டு மணக்கும்படி வற்புறுத்தினார்கள். அவளும் பல சாக்குகள் சொல்லி நாட்களைக் கடத்திக்கொண்டே வருகிறாள். ஒரு கட்டத்தில் இவர்கள் சூழ்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்கள். பெனிலோப்பேயுக்கு அவள் தோழியர்கள் மட்டுமே துணை. தன் தோழியரை, தன்னைச் சுற்றி வட்டம்போடும் ஆடவருடன் சிநேகிதமாக இருக்கும்படி பெனிலோப்பே பணித்தாள்; உளவறிவதற்காக பயன்படுத்தினாள். பல சதித்திட்டங்களை இப்படி முறியடித்தாள். எல்லாம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிதான். தோழியர் குற்றமற்றவர்கள். பெனிலோப்பேயின் ஏவலை அவர்கள் செய்து முடித்தார்கள். இது என்னுடைய ஊகம், ஹோமர் சொல்லவில்லை.  ஆனால் ஒடீசியஸ் திரும்பியபோது தோழிகள் சல்லாபமாக இருந்ததைக் கண்டு சிறிதும் யோசிக்காமல், தீர விசாரிக்காமல் அவர்களை தூக்கிலே தொங்கவிட்டான். குருட்டுக் கவி ஹோமர் இப்படி சொல்கிறார்:

வலையிலே அகப்பட நீண்டவால் குருவிகள்,
அல்லது புறாக்கள்போல
அவர்கள் தலைகள் ஒரு நிரையிலே
கழுத்திலே மாட்டிய சுருக்குடன்
அவலமான முடிவை எட்டின.
கால்கள் துடித்தன,
ஆனால் வெகுநேரம் இல்லை.

எதற்காக பெனிலோப்பே மௌனம் சாதித்தாள். அவள் குறுக்கிட்டு ஒடீசியசைத் தடுத்திருக்கலாமே?

மார்கிரட் அட்வூட்:  அவள் அடைக்கப்பட்டுக் கிடந்தாள். மேலும், ஒடீசியசின் கோபத்துக்கு அஞ்சினாள். அவளுடைய தோழியர் அவளுடைய வற்புறுத்தலின் பேரில்தான் அவளை மணக்க சூழ்ந்த ஆடவர்களிடம் உறவு கொண்டார்கள் என்பதை எப்படிச் சொல்வாள். அது கிட்டத்தட்ட அவளும் உறவு கொண்டது போலத்தானே. இருபது வருடங்கள் கழித்து ஒடீசியஸ் வருகிறான். ஏற்கனவே சந்தேகப்பட்டிருக்கிறான். போதாதற்கு மகனும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டான். இதையும் சொன்னால் கயிற்றின் நுனியில் அவளும் தொங்குவாள், ஆகவே மௌனமாக இருந்துவிட்டாள். ஆனால் அவளுடைய குற்ற உணர்வு இறந்தபிறகும்கூட அவளை தொடருகிறது.

டெலிமாக்கஸ் எப்படி இருபது வருடம் வளர்த்த தாயை உதாசீனம் செய்துவிட்டு தகப்பன் பக்கம் சேர்ந்துகொள்வான்?

மார்கிரட் அட்வூட்:  ஒடீசியஸ் போருக்கு புறப்பட்டபோது டெலிமாக்கசுக்கு ஒரு வயது. ஒடீசியஸ் பெனிலோப்பேயிடம் சொல்கிறான்,’நான் போர் முடிந்து எப்போது திரும்புவேனோ தெரியாது. ஆனால் உனக்கு டெலிமாக்கஸ் இருக்கிறான். அவனுக்கு மீசை முளைக்கும்போது நான் திரும்பாவிட்டால் நீ வேறு மணம் செய்துகொள்.’ முதலில் டெலிமாக்கஸ் தாய்க்கு அடங்கிய பிள்ளையாகத்தான் வளர்கிறான். ஆனால் வாலிப வயது அடைந்ததும் தாயை மணப்பதற்கு தயாராக சூழ்ந்திருக்கும் ஆடவர் கும்பலில் எரிச்சல் படுகிறான். அவர்களோ இவனைக் கொல்ல சதி செய்கிறார்கள். தாய் எவ்வளவோ தடுத்தும் தகப்பனைத் தேடிச்செல்கிறான். ஒடீசியஸ் திரும்பியதும் அவன் பிச்சைக்கார வேடம் தரிப்பதற்கு உதவுகிறான். எதற்காக உதவவேண்டும். அவனும் தாயை சந்தேகிக்கிறானா? முற்றிலும் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாகத்தான் நாம் அவனைக் காணவேண்டும். தகப்பன், தோழியரை ‘வெட்டிப்போடு’ என்று கட்டளையிடுகிறான். அந்த தாதியர் டெலிமாக்கசுடைய பிராயத்தவர்கள்; இவனோடு விளையாடியவர்கள். ஒருவித தயக்கமும் காட்டாமல் பன்னிரெண்டு தாதிகளையும் ஒரே கயிற்றில், துணி தொங்கவிடுவதுபோல, தொங்கவிடுகிறான்.

ஒடீசியஸ் சந்தேகப்பட்டதுபோல பெனிலோப்பேயும் ஒடீசியஸ்மீது சந்தேகப்பட்டாள் அல்லவா?

மார்கிரட் அட்வூட்:  அது வேறுவிதமானது. மாறுவேடத்தில் வந்த ஒடீசியசை அவள் சந்தேகப்படுவதுபோல நடிக்கிறாள். அவனுக்கு தெரியாமல் ஒரு பரீட்சை வைக்கிறாள். ஒடீசியசிடம் ஒரு புதுமையான கட்டில் உண்டு, அதற்கு மூன்று சாதாரணமான கால்கள். நாலாவது கால் ஓர் உயிர் மரத்தினால் ஆனது. இந்தக் கட்டில் விசயம் இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகஸ்யம். தாதிகளுக்குகூட தெரியாது.

ஒடீசியஸ் திரும்பிய அன்று பெனிலோப்பே ஒரு கிழத் தாதியிடம் படுக்கையை வெளியே இழுத்துப் போடும்படி பணிக்கிறாள். அசைக்க முடியாத கட்டிலை எப்படி இழுப்பது. ஒடீசியசின் எதிர்வினை எப்படியென்பதை கவனிக்கத்தான் அப்படி சொன்னாள். ஒடீசியஸ் கோபம் கொண்டு வாளை உருவுகிறான். அப்போது பெனிலோப்பேயுக்கு தெரிகிறது இவன்தான் உண்மையான ஒடீசியஸ் என்று.

உங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது துக்கம் இருக்கிறதா? உதாரணமாக நாலு வருடம் ஹார்வார்டில் படித்தபிறகு டொக்ரர் பட்டம் கிடைக்காதது பற்றி?

மார்கிரட் அட்வூட்:  அதிலே என்ன துக்கம். அந்த நாலு வருடங்களும் என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியானவை. என்னுடைய பேராசிரியருக்குத்தான் துக்கம், நான் ஆய்வேட்டை சமர்பிக்கவில்லை என்று. காரணம் நான் அப்பொழுதே மும்முரமாக எழுதத் தொடங்கிவிட்டேன். அச்சிலும் அவை வந்தன. எழுத்தில் கிடைக்கும் பணமும் எனக்கு முக்கியமானதாக இருந்தது. என் படிப்பில் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை, ஆனால் நான் கற்றதை விட படைப்பதில் நிறையப் பெற்றேன்.

கடைசியாக ஒரு கேள்வி, பெனிலோப்பியட் சம்பந்தமில்லாதது. உங்கள் தலை முடி பற்றியது. நான் உங்கள் இளவயது படங்களை பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரை உங்கள் தலை முடி ஸ்டைல் பிரபலமானது. இதற்கு விசேஷமாக ஏதாவது கவனிப்பு இருக்கிறதா?

மார்கிரட் அட்வூட்:  (சிரிக்கிறார்) நீங்கள் கடைசியாகக் கேட்கிறீர்கள். வழக்கத்தில் இதுவே முதல் கேள்வியாக இருக்கும். என்னுடைய முடி ஐரிஷ் மூதாதையர் மரபில் வந்தது. சுருண்டு சுருண்டு இருக்கும். நான் என் முடிக்காக சிரமப்பட்டு ஒன்றும் செய்ததில்லை. அதன் வளர்ச்சியில் நான் குறுக்கிடாமல் இருக்கிறேன். அவ்வளவுதான். நீங்கள் என் எழுத்து இயற்கையானது என்று சொல்கிறீர்கள். என் முடியும் அப்படியே. இயற்கையானது.

நான் ஒடிசி முழு நூலையும் படித்தது கிடையாது. ஆனால் Penelopiad ஐ படித்து முடிக்கும்போது ஒடிசியை படித்த நிறைவும், புது வெளிச்சமும் கிடைத்தது. பெனிலோப்பேயை கிரேக்க கண்ணகி என்று சொல்லலாம். கோவலன் வருகைக்காக கண்ணகி காத்திருந்ததுபோல இவளும் ஒடீசியஸ் திரும்பி வரும் நேரத்திற்காக காத்திருந்தாள். கண்ணகி கணவனுக்கு நீதி கேட்டு பொங்கி எழுந்தாள். பெனிலோப்பேயோ தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக்கூட கண்டுகொள்ளவில்லை. மௌனமாக சகித்துக்கொள்கிறாள்

இன்னொரு உதாரணமாக ராமாயணத்து சீதையை சொல்லலாம். சீதை ராமனுக்காக அசோகவனத்தில் 18 மாதங்கள் தவம் கிடந்தாள். ராமன் சீதைமீது சந்தேகப்பட்டான். ஒடீசியசும் பெனிலோப்பேமேல் சந்தேகப்பட்டு அவளைப் பிடிப்பதற்கு மாறுவேடத்தில் வந்தான். ராமன் ‘இந்த இப்பிறவியில் இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று சொன்னான். ஒடீசீயஸ் தன் நீண்ட பயணத்தில் பல தேவதைகளுடன் சல்லாபம் செய்த பிறகுதான் திரும்புகிறான். அதிலும் கலிப்ஸோ என்ற தேவதையுடன் ஏழு வருடங்கள் தொடர்ந்து சம்போகம் செய்தவன்.

பெனிலோப்பே இருபது வருடங்களை தனிமையில் கழித்தாள். ஒடீசியஸ் திரும்பிய பிறகு தன்னை சந்தேகித்தது அவளுக்கு விசனத்தை எழுப்பவில்லை. அவளுடைய நேசத்துக்குரிய தாதியரை தூக்கிலே தொங்கவிட்டபோதும் அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவள் தாயாரின் புத்திமதியை எப்பவும் நினைத்துக்கொள்வாள்.

ஒடீசியசை மணமுடித்த அன்று பெனிலோப்பேயின் தாயார், தண்ணீர் தேவதை, அவளுக்கு சில புத்திமதிகள் சொன்னாள். ‘நீ ஒரு தண்ணீர் பெண், அதை ஞாபகத்தில் இருத்திக்கொள். தண்ணீர் எதிர்ப்பதில்லை, உன்னுடைய கையை அதற்குள் விட்டால் அது தழுவிக்கொள்ளும். அது சுவர் அல்ல, உன்னை தடுக்காது. தண்ணீர் எங்கே போகவேண்டுமோ, அது அங்கே போகும். தடங்கல் ஏற்பட்டால் அதைச் சுற்றிப் போகும். தண்ணீர் பொறுமையானது. சொட்டுப் போடும் தண்ணீர் ஒரு கல்லைக்கூட துளைத்துவிடும்.’

பெனிலோப்பே வாழ்நாள் முழுக்க தண்ணீர் போலவே வாழ்ந்தாள். பொறுமையானவளாக, அரவணைப்பவளாக, தடங்கல்களை தாண்டுபவளாக. ‘தண்ணீர் மூழ்கடிக்கும்’ என்பதை அவளுடைய தாயார் சொல்லித்தரவில்லை. அது தெரிந்திருந்தால் ஒடிசி காவியம் வேறு மாதிரி அல்லவா முடிந்திருக்கும்.

Appadurai Muttulingam
amuttu@rogers.com

பதிவுகளில் அன்று: பதிவுகள், ஜூன் 2006; இதழ் 78.