பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் தமிழ், ஆங்கில மொழிகள் மூலமான 2009 வரை இலக்கிய முயற்சிகள் பற்றிய சிறு பதிவாக இக் கட்டுரை அமைகின்றது.
கோபன் மகாதேவா 05.01.1934 அன்று, ஈழத்து யாழ்ப்பாணச் சாவகச்சேரி மட்டுவிலில் பிறந்தவர். தனது 14ஆவது வயதில், பாடசாலை நாட்களிலேயே, 1948 ஜனவரியில் மகாத்மா காந்தி பற்றி ஆங்கிலக் கவிதை ஒன்றையும், விண்வெளி ஆராய்ச்சி என்ற தலைப்பில் தமிழ்க் கட்டுரை ஒன்றை வீரகேசரியிலும் எழுதி இலக்கிய உலகில் கால் பதித்தவர்.
தொடர்ந்து Perennialis Schoolis (1949), A Childhood Visitor (1950) போன்ற ஆங்கிலக் கவிதைகளை எழுதித் தன் இலக்கியப் புலமையை வளர்த்து 2009 அளவில் ஆங்கிலத்திலும், ஓரளவு தமிழிலும் கவிதைகளை எழுதி வருபவர்.
முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆரம்பக் கல்வியை தமிழில் மேற்கொண்டு இருந்தாலும், பின்னாளில் பல்கலைக் கழகம் புகும் வரை ஆங்கிலமூலம் தனது இடைநிலை, உயர் கல்வியை மேற்கொண்டதால் இவரது ஆங்கில இலக்கியப் பரப்பு விரிவு கண்டது என்று கருதலாம்.
கோபன் மகாதேவாவின் கவிதைகளின் கரு, காலத்துடன் ஒத்தியைவதாக இருப்பதைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. இவர் தனது வாழ்வின் முற்பகுதியை 1961வரையும், பின்னர் இடைப்பட்ட கால கட்டத்தை 1966 முதல் 1978 வரையிலுமாக இலங்கையில் கழித்தவர். எஞ்சிய காலத்தை பிரித்தானியா நாட்டிலும் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான Trinidad இலும் வாழ்ந்து அவ்வந்நாடுகளில் பணியாற்றியவர். இவரது படைப்புக்களில் காணப்படும் தேசம் கடந்த தேடல்களுக்கும் இந்தப் பயணங்களில் ஏற்பட்ட வாழ்வனுபவங்களே காரணமாகின்றன என்று எளிதில் அனுமானிக்க முடிகின்றது. இவரது புலப் பெயர்வுக்கு முன்னைய ஆரம்ப காலக் கவிதைகளின் தொகுப்பாக The Pearly Island and Older Poems என்ற நூலை கொழும்பில் தனது சொந்த தனியார் நிறுவனமான MITE Organization வாயிலாக 1974இல் வெளியிட்டு வைத்திருந்தார். இந்நூல் பின்னர் 1991இல் திருத்திய பதிப்பாக மீள்பதிப்புக் கண்டுமிருந்தது. (The Pearly Island and Older Poems by Kopan Mahadeva, Birmingham, England: Century House, 99-101, Sutton Road, Birmingham, B23 5XA, Second Edition, 1991, 60pp., ISBN: 1-873265-00-X).
60 பக்கம் கொண்ட இக்கவிதைத் தொகுப்பில் நான் மேற்குறிப்பிட்ட 1948ம் ஆண்டு பள்ளிக்காலக் கவிதைகளிலிருந்து 1990 வரையிலான நாற்பத்தியிரண்டு வருடகால நீட்சி கொண்ட இவரது 61 ஆங்கிலக் கவிதைகள் தொகுக்கப் பட்டுள்ளன.
இலங்கையை இயங்கு தளமாகக் கொண்டிருந்த இக்கவிதைகளின் ஊடாக ஆரம்பத்தில் தமிழ் இனம் சார்பாகவோ, தமிழ்த் தேசிய உணர்வுகள் தீவிரமாகப் பிரதிபலிப்பதாகவோ இவரது கவிதைகள் காணப் படவில்லை.
ஆரம்பத்தில் தேயிலை பற்றி ஒரு கவிதையை Ceylon Tea என்ற பெயரில் 1970இல் இவரது 36ஆவது வயதில் எழுதியிருக்கிறார்.
அக் காலகட்டத்தில் அந்தத் தேயிலையின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தையே தம் முதுகில் சுமந்து நலிந்து வாழும் மலையகத் தமிழர் பற்றியோ அவர்களது சமூக பொருளாதார அவலம் பற்றியோ அமரர் சி.வீ. வேலுப்பிள்ளை மற்றும் ராஜா புரொக்டர் போன்று இவரால் இக் கவிதைகளில் குறிப்பிடப் படவில்லை.
மாறாக, தேயிலையின் சுவை பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் மட்டுமே அங்கதச் சுவையுடன் பேச முடிந்திருக்கின்றது.
இதே போன்று பல கவிதைத் தளங்களின் தேர்வு, பொதுவான விடயங்களிலிருந்து அவதானமாக மேற்கொள்ளப் பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. அங்கதச் சுவையே கவிதைகளில் தூக்கலாகக் காணப்படுகின்றன. O Sweet Saree (1974), Jaffna Mangoes (1961), Palmyrah Porridge (1960), Colombo by Night (1966), Two Wives (1974) என்று இவை சுவையாகத் தொடர்கின்றன. தமிழரின் அரசாங்க வேலை வாய்ப்புக்கான அங்கலாய்ப்புக் காலகட்டத்தை நினைவூட்டுவதாக இலவச கல்வித் திட்டம் பற்றிய Free Learning Scheme (1974) அங்கதக் கவிதை அமைகின்றது. இவை எவற்றிலும் தீவிர அரசியல் வாடையோ, எதிர்ப்புக் குரல்களோ காணப் படாமைக்கு கவிதைகள் படைக்கப்பட்ட காலகட்டச் சூழ்நிலை காரணமாக இருக்கலாம்.
இலங்கையின் இனப் பிரச்சினைகள் முனைப்புப் பெற்ற காலகட்டங்களிலே இவரது கவிதைகளின் பாடு பொருளாக அவை ஆங்காங்கே அமைந்து விட்டிருக்கின்றன. On the Bombing of Jaffna’s Model Market, July 1990 என்ற கவிதையில், அரச படைகளினால் யாழ்ப்பாண மத்திய நவீன சந்தை எரிப்பின் வேதனை வெளிக் காட்டப் பட்டுள்ளது. இக் கட்டடத் தொகுதியின் உருவாக்கத்தில் MITE என்ற அமைப்பு ஈடுபட்டிருந்தது. அக் காலகட்டத்தில் கோபன் மகாதேவா அவ்வமைப்பின் முதன்மை நிர்வாகி என்பதும் குறிப்பிடத் தக்கது. அவரது மன வலியின் ஊமை அழுகையாகவே இக் கவிதையை உணர முடிகின்றது.
1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிந்த அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாள் நிகழ்வின் குழப்பத்தைச் சித்திரிக்கும் வகையில் Jaffna’s Mass Meeting (10.01.1974) என்ற கவிதை அமைகின்றது. பின்னாளில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாகி திலீபனின் மறைவையொட்டி 26.9.1987 அன்று எழுதப் பட்ட Thileepan என்ற கவிதையும், அதே ஆண்டில் எழுதப் பட்ட My Heart Weeps and Bleeds என்ற கவிதையும், 1988இன் The Story of an Ill-Treated Grandma என்ற கவிதையும், 1990இல் எழுதப் பட்ட The Meaning of Eelam என்ற கவிதையும் ஈழப் போராட்டம் சார்ந்தவை.
கவிஞன், தான் வாழும் காலத்தை அவ்வப்போதே இலக்கியமாகப் பதிந்து வைத்து விட்டு நகர்கிறான் என்ற கூற்று கோபன் மகாதேவா அவர்களுக்கும் பொருந்துகின்றது. இவரது கவிதைகளில் எதிர் காலம் பற்றிய கற்பனா வாதங்களோ, தத்துவங்களோ வெளிப்படையாக இருப்பதில்லை. மாறாக, அவ்வப்போது தன்னுணர்வு மேலீட்டால் பிறப்பெடுத்த கவிதைகளாகவே இவை பதிவு பெற்று அந்தக் கண நேர உணர்வினை அழியாததொரு படிமமாக மாற்றி விடுகின்றன.
கோபன் மகாதேவாவின் புலப் பெயர்வின் பின்னதான கவிதைகளின் தொகுப்பாக Vying for Greatness and Later Poems (1991) என்ற தொகுப்பு அமைகின்றது. (Vying for Greatness and Later Poems by Kopan Mahadeva, Birmingham, England, Century House, 99-101, Sutton Road, Erdington, B23 5XA, 1st Edition, 1991, 60pp., ISBN: 1-873265-02-6).
இந்நூலில் இவரது 77 ஆங்கிலக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1961இல் எழுதிய Ode to an Old Age Pensioner Met on First Arrival in Britain என்ற கவிதை முதல், 1991வரை அவ்வப்போது எழுதப் பட்டவை இவை. பெரும்பாலானவை, புலம் பெயர் வாழ்வியலின் பார்வைப் பதிவுகளாகவும் உலகளாவிய மானுடத்தின் தேடல்களாகவும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. Battle in Bed on a Caribbean Holiday (1982), To a Pensive Pardner in Port of Spain (1982), Trinidad Guardian Calipso (1984), From Chester Road to Hebden Bridge (1986), Land of Pan’s Carnival (1990), ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சில அவ்வப்போது தன் நண்பர்களையும், உறவினர்களையும் முன் நிறுத்தியும், விழித்தும் எழுதப்பட்ட பிரத்தியேக கவிதைகளாகக் காணப்படுவதும் கண்கூடு.
கோபன் மகாதேவாவின் தமிழ்க் கவிதைகள் சிலவும் நூலுருவில் வெளி வந்துள்ளன. Poems in Tamil என்ற தலைப்புடனும் வாழ்க்கையும் கவிதையும் என்ற உப தலைப்புடனும் வெளியாகியுள்ள இக்கவிதைத் தொகுப்பும் முன்னைய இரு ஆங்கிலத் தொகுப்புகளின் வெளியீட்டுக் காலத்திலேயே வெளிவந்துள்ளன. (வாழ்க்கையும் கவிதையும், கோபன் மகாதேவா, Birmingham Century House, 99-101, Sutton Road, Erdington, B23 5XA, 1வது பதிப்பு, 1991, 60 பக்., ISBN: 1-873265-03-4). பல கவிதைகள் இலங்கைக் கவியரங்குகளில் மேடையேற்றப் பட்டவை. பல்வேறு தமிழ்ச் சஞ்சிகைகளிலும் பிரசுரமானவை.
இதிலுள்ள தமிழ்க் கவிதைகளில் பெரும்பாலானவை, தன் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆத்ம திருப்திக்காகவும், சொந்த மகிழ்ச்சிக்காகவும் இயற்றப்பட்டவையாக அமைகின்றன. தனது ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தானே தமிழுக்கு மொழி பெயர்த்தும் இத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார். யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் தேசிய கீதத்தை (மூலம்: ஆங்கிலத்தில் Rev. P.T. Cash இயற்றியது) அக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவொன்றின் போது 1969இல் தமிழாக்கம் செய்து வழங்கியிருக்கிறார்.
இவரது கவிதைகளில் சில, வேறு வேறு பரிசோதனை முயற்சிகளாகவும் அமைந்துள்ளன. உதாரணமாக, பிரபலமான Nursery Rhymes என்னும் ஆங்கில பிள்ளைப்பாக்கள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இத்தகைய ஒரு முயற்சியினை முன்னர் பேராசிரியர் நந்தி அவர்களும் மேற்கொண்டு தனிநூலாக்கி இருந்ததும் நினைவுகூரத் தக்கது.
கோபன் மகாதேவா, கவிதையுடன் சில சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அவரது ஆங்கிலச் சிறுகதைகள் மூன்று (Pillai Master, The Displaced Undergraduate, A Matter of Language) தனி நூலாக வெளியிடப் பட்டுள்ளன. (Three Stories from Sri Lanka by Kopan Mahadeva, Birmingham, England: Century House, 99-101, Sutton Road, Erdington, B23 5XA, 1st Edition, 1991, pp60., ISBN: 1-873265-01-8).
1961இல் தன் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக இங்கிலாந்துக்கு வந்த கோபன் மகாதேவா, பேர்மிங்ஹாம் நகரில் பெரும்பாலும் வாழத் தலைப்பட்டார். அக்காலம் முதலாக அப் பிரதேசத்தின் கவிஞர்களுடனும், தேசிய இலக்கிய அமைப்புகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்தார்.
Milands Arts Centre என்ற பிரித்தானிய இலக்கிய அமைப்பு 1962இல் பேர்மிங்ஹாம் மாநகரசபையால் தோற்றுவிக்கப் பட்டது. இவ்வமைப்பின் கவிஞர் அவையான Cannon Poets (Cannon Hill Park, Birmingham, B12 9QH) என்ற இலக்கிய சங்கத்தின் தலைவராக 1990 முதல் 1995 வரை ஐந்தாண்டுகள் பணியாற்றிய இவர், அவர்களது கவிதைத் தொகுதிகளையும் தனது Century House மூலமாக நூலுருவாக்கி இருந்தார். பின்னர் தானே உருவாக்கிய Century Poets என்ற அமைப்பின் இயக்குநராகவும் பன்னிரண்டு ஆண்டுகள் செயற் பட்டிருந்தார்.
Century Poets என்ற இவ்விலக்கிய அமைப்பின் அங்கத்தவர்களான பிரித்தானிய ஆங்கிலக் கவிஞர்கள், மாதா மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சந்தித்து இலக்கியப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஆரோக்கிய நிகழ்வொன்றிற்கு கோபன் மகாதேவா கால்கோள் இட்டிருந்தார். இச்சந்திப்பு 1990 முதல் 2002 வரை தொடர்ந்தது.
இவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பொன்றினை Life in Nutshells என்ற தலைப்பில் Poetry Now என்ற பிரித்தானிய இலக்கிய அமைப்பு தனி நூலாகவும் வெளியிட்டிருந்தது. (Life in Nutshells by Kopan Mahadeva, Peterborough, England: Poetry Now, 1-2, Wainman Road, Woodston, Peterborough, PE2 7BU, 1st Edition, 1997, 67pp., ISBN: 1-86188-600-4). இந்நூலுக்கு 1997இன் சிறந்த கவிதை நூலுக்கான பரிசை பிரித்தானியாவின் முக்கிய பிரசுர நிறுவனமான Forward Press வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.
பேர்மிங்ஹாமிலிருந்த காலத்தில் இவரது வீட்டின் பெயரைத் தாங்கிய Century House என்ற பெயரில் ஒரு வெளியீட்டகத்தை உருவாக்கி அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டு வைத்திருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னாளில் கோபன் மகாதேவா, பணியிலிருந்து ஓய்வுபெற்று லண்டனில் வாழத் தலைப்பட்ட காலத்திலும், அங்கு பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் (ELAB: Eelavar Literature Academy of Britain) என்ற அமைப்பை உருவாக்கி, இலக்கியப் பணியாற்றி வருகின்றார்.
ஈழத் தமிழ் இலக்கியத்தை புகலிடத்திலும் நுகரத் தம்மாலான வகையில் தீவிரமாக ஈடுபட்டு உழைக்கும் இலக்கியவாதிகளின் அமைப்பொன்றாக பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் லண்டன் கொலிண்டேல் பகுதியில் 2006 தொடங்கி (Published Address in 2007: Eelavar Literature Academy of Britain (ELAB), 1A, Rookery Close, Colindale, London, NW9 6QJ ) இன்று மத்திய ஹறோவில் இயங்கி வருகின்றது. நல்ல கலை இலக்கியங்களை வளம் படுத்தும் நோக்குடன், கலையார்வம் கொண்டவர்களை இணைத்து உருவாக்கப் பட்ட பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம், எழுத்தாளர்களின் ஒருங்கிணைப்பினால் மாதா மாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன் மூலம் இலக்கிய அறிகையையும் ஆர்வத்தையும் தமது அங்கத்தவர்கள் இடையே ஏற்படுத்தி வருகின்றது. ஒரு கட்டத்தில் அவர்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளைச் சுயமாக உருவாக்கிப் பயிற்சி பெறவும் பகிர்ந்து கொள்ளவும் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் வாய்ப்பளிக்கின்றது.
இவ்விலக்கியச் சங்கம் அண்மையில் பரீட்சார்த்த முயற்சி ஒன்றிலும் துணிவுடன் இயங்கியுள்ளது. பூந்துணர் என்ற தலைப்பில் (ISBN: 1-873265-52-2), 210-பக்கம் கொண்ட தொகுப்பு மலர் ஒன்றினை 2007இல் இவர்கள் லண்டனில் தயாரித்து, தமிழகத்தில் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். இது தமிழ் ஆங்கிலப் படைப்புகளைக் கொண்ட ஓர் இருமொழி நூல்.
எனவே, Perceptions in Bloom என்ற ஆங்கிலத் தலைப்பும் இந்நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் ஒருங்கிணைப்பினால் மாதா மாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன் மூலம் பெறப்பட்ட இலக்கிய வடிவங்களைப் புடம் போட்டு கனகச்சிதமாக இந்தப் பூந்துணர் தொகுப்பின் ஊடாக இவர்கள் வெளிக் கொணர்ந்துள்ளனர். இத்தொகுப்பில் கோபன் மகாதேவாவுடன் சேர்ந்து எஸ். கருணானந்தராஜா, கதிரித்தம்பி சிவானந்தன், மீ. ராஜகோபாலன் ஆகியோரின் கவிதைகளும், கோபன் மகாதேவா, கா. விசயரத்தினம், சீதாதேவி மகாதேவா, தயா கருணானந்தராசா ஆகியோரின் கட்டுரைகளும் தொகுக்கப் பெற்றுள்ளன. மொத்தம் 41 கவிதைகளும், 19 கட்டுரைகளும் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன. பேராசிரியர் கோபன் மகாதேவாவின் ஒரேயொரு ஆங்கிலக் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மற்றைய அனைத்தும் தமிழ்ப் படைப்புக்களே.
இவை அனைத்தும் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் அவ்வப்போது ஒழுங்கு செய்த சந்திப்புகளில் படிக்கப் பெற்றவை என்பதை அறியும் போது, இச்சங்கத்தின் பணிகள் பற்றிய உயர்வான மதிப்பே மேலோங்குகின்றது. இங்கு வாசிக்கப்படும் படைப்புக்கள் அனைத்தும் அறிமுக எழுத்தாளர்களின் படைப்புகளல்ல. இலக்கியத்தை ஆழமாகக் கற்றுத் தேர்ந்த இலக்கிய வாதிகளுள் சிலர் இந்த அமைப்பின் சந்திப்புகளின் மூலம் அதனை வெளிப் படுத்த வடிகால் தேடிக் கொண்ட நிகழ்வாகவே இந்த நூலைப் பார்க்க முடிகின்றது.
கோபன் மகாதேவா தான் சார்ந்த பொறியியில் துறையிலும், அரசியல் துறையிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு கருத்தரங்குகளில் அவற்றைச் சமர்ப்பித்திருந்த போதிலும், இக்கட்டுரையின் வரையறைக்கு உட்பட்டு அவற்றை இங்கு குறிப்பிடவில்லை. இலக்கியம் சாராத பல்வேறு நூல்களும் அவ்வப்போது இவரால் வெளியிடப் பட்டுள்ளன. அவை பிறிதொரு தனியான தேடலுக்கும், பதிவுக்கும் உரியவை.
[குறிப்பு: இக்கட்டுரை 2009ல் வெளிவந்த பேராசிரியர் கோபன் மகாதேவாவின் பவளவிழா மலரின் 83-87ம் பக்கங்களில் முதலில் இடம் பெற்றது. (Kopan Mahadeva: 75th Year Felicitation Volume, Editors: I.T.Sampanthan, Dr. Pon Balasundaram, N. Satchithananthan, E.K. Rajagopal, Nunaviloor K. Wijeyaratnam (Wijey), Century House, 35, HA1 2JU, U.K., pp.144, 2009, ISBN: 978-1-873265-62-8].