என்பது பரந்த தளத்தில் அணுகவேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப்பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது.. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல என்பதையும் தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒருவகையில் அபத்தமானதுதான்.
சமகால ஈழத்திலக்கியம் என்பதை 2000ம் ஆண்டுக்குப் பிறகான சில பிரதிகளினூடாக அணுக விரும்புகின்றேன். ஈழத்திலக்கியத்தில், மிக நீண்டகாலமாக புனைவுகளின் பக்கம் தீவிரமாக இயங்கியவர்கள் என, எவரேயையேனும் கண்டுகொள்ளுதல் சற்றுக் கடினமாகவே இருக்கிறது. விமர்சனத்துறையில் ஒரு தொடர்ச்சியும், தொன்மையும் இருந்ததைப் போல, புனைவுகளின் வழியே நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருந்ததில்லை. அவ்வாறு இல்லாதது நல்லதா கூடாதா என்பதைப் பிறகொரு நேரத்தில் பார்ப்போம். இந்தக் காலப்பகுதியில், ஒரளவு தொடர்ச்சியாக கவிதைத் தளத்தில் தீவிரமாய் இயங்கிவந்த வில்வரத்தினத்தை இழந்திருக்கின்றோம். இன்னொரு புறத்தில் மிகவும் நம்பிக்கை தந்துகொண்டிருந்த எஸ்.போஸை மிக இளமவயதில் துப்பாக்கியிற்குப் பலியும் கொடுத்திருக்கின்றோம். ஆகவே ஈழ இலக்கியத்தை வாசிப்புச் செய்யவரும் ஒருவர், புறநிலைக் காரணிகளான, தொடர்ச்சியான போர், இடம்பெயர்தல், சுதந்திரமாக எதையும் எழுதமுடியாத சூழல் என்பவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது. இதை விமர்சகர்களுக்கு முக்கியமாய் இந்தியாவில் சொகுசான சூழலில் இருந்துகொண்டு, வருமான வசதிகளுக்காய் கோடம்பாக்கத்தில் புரண்டு கொண்டிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்துவது கடினம.
ஈழத்திலக்கியம் என்பதே அவற்றின் நிலப்பரப்புகளுக்கும், கலாசார தளங்களுக்கும் ஏற்ப உட்பிரதேசங்களிலேயே வித்தியாசப்படுபவை. உதாரணமாக யாழில் வெளிவரும் படைப்புக்களுக்கு, பிரயோகிக்கும் விமர்சன அலகுகளை மலையகத்தில் முன்வைக்கமுடியாது. முற்றிலும் வித்தியாசமான சூழல் மலையகத்தினுடையது. கவிதை எழுதும் மலையகப் பெண்ணொருவர் ஒரு நேர்காணலின்போது, தான் ஒரு படைப்பு எழுதி அனுப்புவது என்றால் கூட 4 மைல் நடந்துவந்தே தபால் பெட்டிக்குள் போடவேண்டியிருக்கின்றது என்பதன், பின்னாலுள்ள புறச்சூழல்களை முன்வைத்தே நாம் மலையகப் படைப்புக்களை அணுகவேண்டியிருக்கின்றது. அதேபோன்று வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களினதும், கிழக்கில் இருக்கும் முஸ்லிம்களினதும் வாழ்வு நிலை என்பது கூட முற்று முழுதிலும் வேறுபடக்கூடியது. இந்த வித்தியாசங்கள் அவர்களின் படைப்புக்களில் ஊடாடுவதை விளங்கிக்கொள்ளாது ஒரு வாசிப்பை நாம் எளிதாகச் செய்துவிட முடியாது. இவ்வாறே முற்றுமுழுதாக வாழ்வு குலைக்கப்பட்டு புதிய நாட்டுச் சூழலில் வாழத்தொடங்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் வேறுவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன.
2.
2001ம் ஆண்டு ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ ஒரு புதிய பாய்ச்சலை தமிழ்ச்சூழலில் ஏற்படுத்துகின்றது. கதைக் களத்தில் மட்டுமில்லாது புனைவின் மொழியிலும் அது வித்தியாசத்தைக் கொண்டிருந்தது. அழுது வடிந்துகொண்டிருந்த மொழியில், கதை சொல்லிக்கொண்டிருந்த ஈழத்தமிழர் படைப்புக்களத்தில், இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மிக உக்கிரமான அரசியலை, அங்கதத்தோடு இணைத்துக்கொண்டதால் -எப்போதுமே அரசியல் பேசப்பிடிக்கின்ற தமிழர்களை- அது வெகுவிரைவாக தனக்குள் இழுத்துக்கொண்டது. அதே ஆண்டு அ.முத்துலிங்கத்தின் ‘மகாராஜாவின் புகைவண்டி’ காலச்சுவடு பதிப்பாக வருகின்றது. அதற்கு முன் இங்கொன்றும் அங்கொன்றுமாய் முத்துலிங்கத்தின் கதைகளை வாசித்தவர்களுக்கு -முக்கியமாய்த் தமிழக வாசகர்களுக்கு- இப்படி தங்களை எளிதாகப் புன்னகைக வைக்கின்ற ஒரு கதைசொல்லி இருக்கின்றார் என்பதை அறிகின்றார்கள்.. ஷோபா சக்தியும், முத்துலிங்கமும் புதினங்களில் வாசகர்களின் கவனத்தைக் கோருகின்ற அதேவேளையில், கவிதைகளில் 2000ல் ஆழியாளின் ‘உரத்துப் பேச’வும், பா.அகிலனின் ‘பதுங்குகுழி நாட்களும்’ கவனத்தைப் பெறுகின்றன. காதல் முறிவின்போது என்னிடம் இருந்து எல்லாவற்றையும் திருப்பிப் பெறுகின்ற நீ, எப்படி எனக்குத் தந்த முத்தங்களையும்,விந்துக்களையும் திருப்பிப் பெறுவாய்? என்று அறைந்து கேட்கின்ற கேள்விகள் ஆழியாளிடமிருந்து வெளிவருகின்றது, பா.அகிலனோ இழந்து போன காதலை, மஞ்சள் சணல் வயலில் விழுகின்ற சூரியனாய் ஆக்குகின்ற படிமங்களில் எழுதுகின்றார்.
ஷோபாசக்தியைப் போல, மிகப்பெரும் பாய்ச்சலை புனைவுத்தளத்தில் நிகழ்த்தக் கூடியவர் என்று, மிகவும் நம்பப்பட்ட சக்கரவர்த்தி ‘யுத்ததின் இரண்டாம் பாகத்தோடு’ ஒருவித உறக்கநிலைக்குப் போனது ஈழத்து இலக்கியப்பரப்பில் ஏமாற்றமே. யுத்தத்தின் இரண்டாம் பாகத்தின் சில கதைகள் உணர்ச்சித்தளத்தில் மட்டும் இருக்கின்றன என்றாலும், அதில் உண்மைகள் நேர்மையாகவும் துணிச்சலாகவும் கூறப்பட்டிருக்கின்றது என்பதால் முக்கியம் வாய்ந்ததாகிவிடுகின்றது. மேலும் மட்டக்களப்பு மொழியின் வாசனை கதையெங்கும் மலர்ந்தபடியே இருப்பதுவும் கவனிக்கத்தது. இதே காலகட்டத்தில் இலக்கிய உலகில் காலம் சற்றுப் பிந்தி நுழைந்தாலும் மிகுந்த சொற்சிக்கனத்தோடும் அழகியலோடும் திருமாவளவன் நுழைகின்றார். பனிவயல் உழவில் முன்னவர் சிலரின் பாதிப்பு இருந்தாலும் சிறந்த கவிதைகள் சிலவற்றையாவது அதில் அடையாளங்காண் முடியும். பனிவயல் உழவிற்குப் பிறகு அஃதே இரவு அஃதே பகலில் வேறொரு தளத்தில் கவிதைகளை திருமாவளவன் நகர்த்த முயன்றிருக்கின்றார். ஆனால் அவரது 3வது தொகுப்பான இருள்-யாழி இவ்விரு தொகுப்புக்களை விடுத்து முன்னகர வேண்டியதற்குப் பதிலாக சற்றுத் தேங்கிப் போனது ஒருவகையில் ஏமாற்றமே. இதே காலப்பகுதியில் கனடாவிலிருந்து தேவகாந்தனின் ‘கதா காலம்’ காலம் பதிப்பாக வருகின்றது. மகாபாரதம் நமது ஈழத்துச் சூழலிற்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யப்படுகின்றது.நாம் அறிந்த மகாபாரத பாத்திரங்கள் கதா காலத்தில் வேறு வேறு வடிவங்கள் எடுக்கின்றன.. வாசிப்புக் கவனத்தைக் கோரும் இப்புதினம், ஏற்கனவே வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தின், பெரும் வெளிச்சத்தில் பின் தங்கிவிட்டதோ, என்கின்ற ஆதங்கம் இப்போதும் எனக்கு உண்டு.
2001ல் ஈழத்தில் ஏற்பட்ட சமாதானக் காலம், வன்னியிலிருந்து நாம் இதுவரை அறியாத கதைகளை எம்முன்னே கொண்டுவரத் தொடங்குகின்றது. ஏற்கனவே அறியப்பட்ட தாமரைச் செல்வியின் ‘அழுவதற்கு நேரமில்லை’ சிறுகதைத் தொகுப்பு வெளிவருகின்றது. அதேபோன்று தனது பிள்ளைகளை ஈழப்போருக்குப் பலிகொடுத்து, தானும் ஒரு போராளியாக இருந்த தமிழ் மகள் என்ற கதைசொல்லியின் ‘இனி வானம் வெளிச்சிரும்’ வருகின்றது. வறுமைக்குள் வாழ்ந்து, திருமணமாகி சில வருடங்களில் கணவனால் கைவிடப்பட்ட உறுதிமிகு ஒரு வன்னிப் பெண்ணின் கதை, மிக அற்புதமாக அதில் பதியப்பட்டிருக்கின்றது. இதுவரை ஆண்களின் குரல்களின் வழியே விழுந்த போராட்டம் குறித்த கதையாடல்களை தமிழ்மகள் வேறொரு விதத்தில் அணுகுகின்றார். இந்நாவலின் ஆண்கள் வியந்தோத்தும் வீரத்தை அதிகம் கொண்டாடாது, இப்போராட்டம் தமக்கு வேறு வழியில்லாது திணிக்கப்பட்டது, தமது இருத்தல் என்பதே இப்போராட்டத்தோடு இணைந்துள்ளதென நினைக்கும், ஒரு பெண்ணின் மனோநிலையில் எழுதப்பட்டிருக்கின்றது. போர் குறித்தும் போர் நடத்தப்பட்டது குறித்தும் நமக்கு பல்வேறு கேள்விகள் இருக்கின்றபோதும் தாம் உறுதியாய் நம்பிய ஒரு நிலைப்பாட்டுக்காய் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களின் புதினம் என்றவகையில் இந்நாவல் முக்கியமானதே. மக்சிம் கார்க்கியின் தாயிற்கு நிகரான எத்தனை ஆயிரமாயிரம் தாய்களை நாம் நமது நிலப்பரப்புக்களில் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஒரு தாயின் கதையே இது. மேலும் புலிகளின் அரசியல் துறையில் இருந்த மலைமகள் எழுதிய ‘புதிய கதைகளிலும்’, வெளிச்சம் சஞ்சிகையால் தொகுக்கப்பட்ட ‘வாசல் ஒவ்வொன்றும்’ சிறுகதைத் தொகுப்பிலும் போர்க்கால வன்னிச்சூழல் அங்கே வாழ்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல மலையக பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்ட ‘இசை பிழியப்பட்ட வீணை’யையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த இடத்தில் பெயர்களைப் பட்டியலிடுவதை சற்று நிறுத்தி, மீண்டும் தொடர்ச்சியாக எழுதுவது/ எழுதாமல் இருப்பதன் புள்ளி குறித்து சற்றுப் பார்ப்போம். பல்வேறு புறக்காரணங்கள் இருந்தாலும், ஈழத்திலக்கியத்தில் நல்ல சில படைப்புக்களை எழுதிய எத்தனையோ பேர்கொண்ட பட்டியல் ‘மோகவாசலோடு’ நிறுத்திவிடவில்லையா? ‘ மக்கத்துச் சால்வை’ எம்.ஹனீபா 40 ஆண்டுகளாக எழுதினாலும் ‘அவளும் ஒரு பாற்கடல்’ என்ற தொகுப்பில் 25 கதைகளை மட்டுந்தானே தொகுக்க முடிந்திருக்கின்றது. ஆனால் வாசிக்கும் நாம் ரஞ்சகுமாரையோ, ஹனீபாவையோ, ஏன் அரசியல் தளத்தில் கோவிந்தனையோ தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து கொண்டுதானே இருக்கின்றோம். இதைத்தான் ஈழத்தின் தனித்துவமான ஒரு பண்பு என எடுத்துக்கொள்கின்றேன். எங்களுக்கு -அதாவது வாசகருக்கு- ஒரு படைப்பாளி ஒன்றிரண்டு நல்ல படைப்புக்களைத் தந்தால் கூட அவர் கவனிக்கக்கூடியவர் என்றுதான் எமது ஈழத்து மரபும் வாழ்வும் கற்றுத்தந்திருக்கின்றது. இந்த மரபு இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது என்பதல்ல, சங்ககாலக் கவிஞர்களை இப்போதும் நினைவுகூர எங்களுக்கு அவர்களின் ஒன்றிரண்டு பாடல்களே போதுமாயிருக்கிறது அல்லவா?
இந்தக் காலகட்டத்தில் இணையம் பல புதிய படைப்பாளிகளை அடையாளங்காட்டுகின்றது. முக்கியமாய் யாழ்ப்பாணத்திலிருந்து முரண்வெளி தளத்தில் ஹரி எழுதத் தொடங்குகின்றார். முரண்வெளி தளத்தில் வெளிவந்த ஆமிரபாலியின் கவிதைகளும், அமெளனனின் ‘வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்’ என்பதும் 2005ற்குப் பிற்பான படைப்புக்களில் கவனத்தைக் கோருபவை. வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் கதை இராணுவத்தால் மூடப்பட்ட யாழ் நகரின் வாழ்வைப் பதிவுசெய்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ சூழலின் நிர்ப்பந்தற்குள் உந்தப்பட்டு இராணுவத்தோடு தற்பால் உறவு கொள்கின்ற சிறுவர்களின் பாத்திரங்கள் இதில் வருகின்றது. இக்கதையில் அநேகமான ஈழத்துச் சிறுகதைகளில் விபரிக்கப்படுகின்ற ‘கொடுமைக்கார’ இராணுவம் என்ற பாத்திரம் இராணுவத்திற்கு கொடுக்கப்படாதது கவனத்தில் கொள்ளவேண்டியது. மிக உக்கிரமான போர்ச்சூழல் நமக்கான இரண்டு தெரிவுகளைக் கொடுக்கின்றது; அதிலொன்று நாம் ‘வீரனாகி’ப் போர்க்களத்திற்குப் போவது. அல்லது இன்னுமொரு வாய்ப்பாக இருக்ககூடிய காமத்தின் உச்சத்திற்குள் சிக்கிக்கொள்வது. மேலும் இணையத்தில் ஈழத்திலிருந்து எழுதிக்கொண்டிருந்த நிவேதா, சித்தாந்தன் போன்றோரின் கவிதைகளும் கவனத்தைக் கோருபவையாக இருந்திருக்கின்றன.
2005ற்குப் பின் முத்துலிங்கமும், சோபாசக்தியும் பரவலான கவனத்தைப் பெற்றதால், நாம் அவர்களின் பிற படைப்புக்களைச் சற்று மறந்து பிறரைப் பார்ப்போம். சுமதி ரூபனின் ‘யாதுமாகி’ தொகுப்பு மிதர பதிப்பகத்தால் வெளிவருகின்றது. அவற்றில் அனேகமானவை வானொலிக்கு எழுதியவை என்றாலும் ஒரு பெண்ணின் அகவுலகம் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. முக்கியமாக ‘வேட்கை’ என்று சுமதி திண்ணையில் எழுதிய கதை கவனிக்கத்தக்கது. திருமணமான ஒரு பெண்ணுக்கும் அவரோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கும் வரும் உறவு குறித்துப் பேசும் கதையது. திருமணம் என்கின்ற மிகக்கட்டுபாடான அரங்கை விட்டு நகர விரும்புபவ்ர்களால் கூட சிலவேளைகளில் பண்பாட்டை கழற்றியெறிய முடியாது இருக்கின்றது என்பதைச் சுமதி தாலியை முன் வைத்து அதில் கவனப்படுத்தியிருப்பார். இதே காலப்பகுதியில் கனடாவிலிருக்கும்போது அவ்வளவு கவனம் பெறாத தமிழ்நதி தமிழகத்திலிருந்து தனது தடங்களைப் பதிக்கத்தொடங்குகின்றார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்கின்ற கவிதைத் தொகுப்பும், ‘நந்தகுமாரனுக்கு எழுதியது’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவருகின்றன. தமிழ்நதியின் கவிதை மொழியில் ஒரு வசீகரத்தன்மை இருந்தாலும் அவர் முன்வைக்கும் அரசியல் சிலவேளைகளில் அபத்தமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.
இவர்களை விட மிகவும் கவனிக்கத்தக்க தொகுப்பை நிருபா ‘சுணைக்கிது’வாய் தந்திருக்கின்றார். சிறுமியிலிருந்து வளர்ந்த பெண்வரை பல பாத்திரங்கள் மிக அழகாகச் சித்தரிக்கபப்ட்டிருக்கின்றன. சுணைக்கிது கதையில் சிறுமியொருத்தியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குபவர் யாரென்பதை நேரடியாகச் சொல்லாமல் ஒரு வினாவாகத் தொக்கு நிற்க வைத்து அருமையானதொரு கதையாக முடித்திருப்பார். கிட்டத்தட்ட எஸ்.ராமகிருஸ்ணைன் தனது கதையொன்றில் (விசித்திரி என நினைக்கிறேன்) மனநிலை பிறழ்ந்த பெண்ணொருத்தியோடு உறவு கொண்டது யாரென்பதை கூறாமல் ஒரு கதை எழுதியிருப்பார். அதை ஒரு சிறந்த கதையாக சொல்லித் திரிந்த எவரும் நிருபாவின் சுணைக்கிது கதையைப் பற்றிக் குறிப்பிடாமல்விட்டது வியப்பாக இருக்கிறது.
இதேவேளை பிரான்சிலிருந்து நீண்டகாலமாய் கவிதைகள் எழுதிவரும் வாசுதேவனின் ‘தொலைவில்’ வெளிவருகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்களை சில இடங்களில் கோரக்கூடிய கவனிக்கத்தக்க பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மைதிலியின் ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலம் பிந்தி வந்தாலும், ஆழியாளின் உரத்துப் பேச போன்றதைப் போல கவனிக்கத்தக்கதொரு தொகுப்பே. மேலும், மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்களும்’ , த.பாலகணேசனின் ‘வர்ணங்கள் அழிந்த வெளியும்’ இதே காலப்பகுதியில் வெளிவருகின்றன..
3.
ஈழத்தில் சமாதானக் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலிருந்தும் வன்னியிலிருந்து புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுத வருகின்றார்கள். அதிக கவனத்தைக் கோருகின்ற இருவராக தீபச்செல்வனையும், த.அகிலனையும் கூறலாம். கிளிநொச்சியின் முற்றுகையை தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. இதை சு.வில்வரத்தினத்தினம் தீவுகள் ஆக்கிரமிக்கப்படுவதைப் பாடிய ‘காற்றுவெளிக்கிராமம்’ , யாழ்ப்பாண 95ம் ஆண்டு பெரும் இடம்பெயர்வையும் முற்றுகையையும் முன்வைத்து நிலாந்தன் எழுதிய ‘யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே’ போன்ற தொகுப்புக்களின் நீட்சியில் வைத்துப் பார்க்கலாம். தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பு ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவை விட அதற்கப்பால விரிவடையவில்லை. திருப்பவும் திருப்பவும் ஒரேவிதமான மொழியாடலில் ஒரேவிதமான படிமங்களுடன் தீபச்செல்வன் நிறையக் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதால் அப்படியான வாசிப்பு மனோநிலை வந்ததோ தெரியாது. எனினும் ஒரு சகோதரரை ஈழப்போருக்குக் பலிகொடுத்தும், பதின்மத் தங்கை கட்டாய புலிகளின் ஆட்சேர்ப்பில் உள்ளாக்கப்பட்டு, இன்று தாயும் தங்கையும் முள்வேலி முகாங்களுக்குள் இருக்கும்போது தீபச்செல்வனை வேறு விதமாய் கவிதை எழுதக்கேட்க எங்களிடமும் எவ்வித அறங்களுமில்லை என்பதையும் அறிவேன். நீண்டதொரு பயணத்திற்கு தீபச்செல்வன் தயாராகின்றார் என்றால் இதே விமர்சனத்தைப் பின்னாட்களில் அவர் கேட்கக் கூடும் என்பதால் இதை இப்போது சொல்லவேண்டிய அவசியமும் இருக்கிறது எனவே நம்புகிறேன். த.அகிலனின் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கின்றது, அதை வாசிக்காதவரை அதுகுறித்து கருத்துச் சொல்லமுடியாது எனினும் புனைவுத் தன்மையில் அகிலன் எழுதிய ‘மரணத்தின் வாசனை’ முக்கியமானதொரு படைப்பு. ஒவ்வொரு கதையும் மரணத்தையே பேசுகின்றது. இவ்வளவு மரணங்களையும் நெருக்கமாகக் கண்ட ஒருவரால் இவ்வளவு நிதானமாகப் பதிவு செய்யமுடிகின்றதே என்ற ஆச்சரியமும், மரணம் சூழப்பட்ட எம் ஈழத்தமிழ் இனம் குறித்த சோகமும் மரணத்தின் வாசனை வாசிக்கும்போது சூழ்கின்றது. இத்தொகுப்பு வெளிவந்த சில மாதங்களில் அவரின் சகோதரரும் போரின் நிமித்தம் பலிகொடுக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஏன் இவர்களின் படைப்புக்களோடு இவர்களின் புறச்சூழல் குறித்தும் குறிப்பிடுகின்றேன் என்றால், இவர்களைப் போன்ற பல படைப்பாளிகள் பலர் இவ்வாறான இழப்புக்களோடும் துயரங்களோடும் நேரடியாகப் பாதிக்கப்படடவர்கள். தாங்கள் நினைத்த நேரத்திற்கு கும்பமேளாவிற்கும், குமரிமுனைக்கும் போய் வருபவர்களுக்கு எத்தகைய நெருக்கடிகளிலிருந்து ஈழத்துப் படைப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிதல் கடினமே.
இறுதியாக அண்மையில் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் ‘வேருலகம்’ பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இது ஒரு குறுநாவல் அளவு சிறிதெனினும் பலவித கதைகளை நீட்சித்துக் கொண்டுபோகக்கூடிய இடைவெளிகளை வாசகருக்குத் தரக்கூடிய ஒரு முக்கிய படைப்பு. மெலிஞ்சி முத்தனின் கவிதைகள் என்னை அவ்வளவு ஈர்க்காதபோதும், மெலிஞ்சியின் ‘வேருலகு’ அண்மையில் புலம்பெயர் சூழலில் வெளிவந்த முக்கிய படைப்பு எனலாம். அவரின் கவிதைகளிலிருந்து பார்க்கும்போது, இக்குறுநாவல் மிகப்பெரும் பாய்ச்சலாகவே இருக்கின்றது.
இதைவிட ஈழத்திலிருந்து அண்மைக்காலமாய் தொடர்ச்சியாகவும் காத்திரமாகவும் எழுதும் அனாரைத் தவிர்த்து நாமின்று சமகால ஈழக் கவிதைகள் குறித்து பேசமுடியாது. ‘வரையாத தூரிகை, ‘எனக்கு கவிதை முகம்’, ‘உடல் பச்சை வானம்’ என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார். மேலும் தொகுப்பாய் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காதபோதும் சிறுகதைகளில் தனித்து மிளிரும் திசேராவும், கவிதைத்தளத்தில் பஹிமா ஜகானையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது. அதேபோன்று மட்டக்களப்பிலிருந்து எழுதும் மலர்ச்செல்வனின் பெரிய எழுத்திலும் சில நல்ல கதைகள் இருக்கின்றன.
மஜீத்தின் ‘புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன’, கருணாகரனின் ‘பலியாடு’ என்பவற்றையும் வாசிக்காதபோதும் -வாசித்த விமர்சனங்களின் அடிப்படையில்- அவையும் சமகால ஈழத்திலக்கியத்தில் முக்கியம் வாய்ந்தவை போன்றே தெரிகின்றன. அதேபோன்று யாழிலிருந்து வெளிவந்த பா.சத்தியமூர்த்தியின் ‘இப்படியாயிற்று நூற்றியொராவது தடவையும்’, புலத்திலிருந்து வெளிவந்த கலாமோகனின் ‘ஜெயந்தீசன் கதைகள்’ மற்றும் இரவி அருணாசலத்தின் ‘காலமாகி வந்த கதை’யும்’, வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’ குறுநாவலும் வாசிப்பில் உள்ளடக்கவேண்டியவை.
நீண்டகாலமாய் புனைவுத்தளத்தில் இயங்கிவரும் பொ.கருணாகரமூர்ததியின் ‘கூடு கலைதலும்’, ‘பெர்லின் இரவுகளும்’ கவனிக்கத்தககவை. பொ.கருணாகரமூர்த்தியிடம் மரபு சார்ந்த கதைசொல்லி அவ்வப்போது வெளிப்பட்டு வாசிப்பவருக்கு இடைஞ்சல் கொடுத்தாலும், அதை வெளிப்படையாக உணரமுடியாதவளவுக்கு அவரின் கதைகளில் அங்கதம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரின் படைப்புக்கள் குறித்து அவரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாகப் பேசியிருப்பதால் அவற்றைப் பற்றி இங்கே பேசுவதைத் தவிர்க்கிறேன்.
மேலும் தொகுப்புக்களாய் வெளிவராதபோதும் (என்னை) மிகவும் வசீகரித்த கதைகளை எழுதிய மைக்கல், பார்த்தீபன், சித்தார்த்த சே குவேரா போன்றவர்களையும் கவிதைகளில் பிரதீபா தில்லைநாதன், துர்க்கா போன்றவர்களையும் நாம் இந்த இடத்தில் தவறவிட முடியாது; அவ்வாறு குறிப்பிடத்தக்க நீண்ட பட்டியல் நம்மிடையே இருக்கிறது. றஞ்சினி, தேவ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் -நேரங்கருதி- இங்கே தவிர்க்கின்றேன். அத்துடன் சேரன், செழியன், சோலைக்கிளி, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம் போன்றவர்களின் -2000ம் ஆண்டிற்குப் பின்- வெளிவந்த தொகுப்புக்களையும் அவர்கள் ஏற்கனவே பரவலாக அறிமுகம் உடையவர்கள் என்ற காரணத்தால் தாண்டிப் போகின்றேன்.
பல்வேறு படைப்பாளிகளின் படைப்புக்களைத் தொகுத்து இலண்டனிலிருந்து பத்மநாப ஜயர் (கண்ணில் தெரியுது வானம்), பிரான்சிலிருந்து ஷோபா சக்தி, சுகன் (சனதருமபோதினி, கறுப்பு), கனடாவிலிருந்து தேவகாந்தன் (கூர்), தமிழகத்திலிருந்து அ.மங்கை (பெயல் மணக்கும் பொழுது), சுவிஸிலிருந்து ரஞ்சி (மை) போன்றோர் வெளியிட்ட தொகுப்புக்கள் சமகால ஈழத்து இலக்கியம் குறித்த பலவேறு குறுக்கு வெட்டு முகங்களைத் தருகின்றன.
3.
ஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம்பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் சகாப்தத்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொருவகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல இலக்கியம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒருகாலத்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்பதும் பிறகு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்கவேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்டளவில் எங்களைவிட கணிசமானோர் இலக்கியச் சூழலில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவர்களுக்கு ஏற்பட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வந்து நிரப்பிவிடுகின்றார்கள்.
மேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப்படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா (சோவியத்து ஒன்றியம்) உட்பட பல நாடுகள் post war வரை அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம்வரை காத்திருக்கவேண்டியிருக்கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிடலர் பற்றியும் வெளிவந்த அதிகமான பதிவுகள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை தங்களுக்குள் பறிகொடுத்த ஈழத்தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்பது கூட வரலாற்றை முன்வைத்துப் பார்க்கும்போது மிகக் குறுகிய காலமே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்கமுன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப்பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.
கடந்த 10 வருட காலத்தில் கவிதை, சிறுகதை போன்றவற்றில் கவனிக்கத்தக்க படைப்புக்களை பதிவு செய்த ஈழத்து இலக்கிய உலகம் நாவலகளிலோ விமர்சனம் உள்ளிட்ட அபுனைவுத்தளத்தில் அதிகளவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாவல்கள் என்று பார்க்கும்போது ஷோபா சக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’, தேவகாந்தனின் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘நிலாச்சமுத்திரம்’, நடேசனின் ‘வண்ணாத்திக்க்குளம்’, ‘உனையே மயல் கொண்டு’, விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’, அ.முத்துலிங்கத்த்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’. ரகுநாதனின் ‘ஒரு பனங்காட்டுக்கிராமத்தின் கதை’, எஸ்.பொவின் ‘மாயினி’ போன்றவையே ஒரளவாவது கவனிக்கத்தக்க படைப்புக்களாய் இருக்கின்றன.
இதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்றவையே முக்கியமுடைய படைப்புக்களாகின்றன. வண்ணாத்திக்குளம் சிங்கள/தமிழ் உறவுகளை அதிக ரொமான்டிசை செய்ததுபோல இருக்க, உனையே மயல் கொண்டு ஒரு ஆணாதிக்கப் பிரதியாகவும் யாழ்ப்பாணியக் கூறுகள் அதிகம் கொண்டதாகவும் தெரிகின்றது. பனங்காட்டுக் கிராமத்தின் கதை ஈழத்துப் பஞ்சமர் வாழ்வைச் சொல்ல முற்படும் ஒரு படைப்பு என்றாலும் அதில் சில விடயங்கள் திருப்பச் திருப்பச் சொல்வது ஒருவித அலுப்பை ஏற்படுத்துகின்றது. சிறந்த கதை சொல்லியாக தன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ மிக மோசமான தமிழ்த்தேசிய பிரச்சாரக் கதையாக மாயினியைத் தந்திருக்கின்றார். அ.முத்துலிங்கத்தின் உண்மை கல்ந்த நாட்குறிப்புக்கள், அவை தனித்தளவில் சிறுகதைகளாய் இருக்கின்றதே தவிர ஒரு நாவலுக்கான வெற்றியை அது அடையவே இல்லை. விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ விளிம்புநிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்கவேண்டிய நுண்ணியபார்வையைத் தவற விட்டுவிடுகின்றது.
ஆனால் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச்சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எமது படைப்புக்கள் தமது தளத்தை உலக அளவிற்கு விசாலிக்கவில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது. நம் படைப்பாளிகள் சக படைப்பாளிகளிடையோ வாசகர்களிடையோ விரிவான உடையாடல்களை நிகழ்த்தாது தங்களின் சாளரங்களை இறுக்க முடிக்கொண்டிருப்பது இருப்பது இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். மற்றும் -இதைச் சொல்வதால் சிலருக்கு கோபம் வரக்கூடும் என்றாலும்- நாம் இன்னும் அரசியல், சினிமா தொடக்கும் இலக்கியம் வரை இந்தியா மீதான் அடிமை மோகத்திலிருந்து வெளியே வரவில்லை என்பதையும் கூறத்தான் வேண்டியிருக்கிறது.
(காலம் இலக்கிய நிகழ்வான ‘ஈழமின்னல் சூழ் மின்னுதே’ வில் வாசிக்கப்பட்ட கட்டுரை, Apr, 2010)