கடந்த 29-10-2011, சனிக்கிழமை, ரொறன்ரோ 50, ஜாவேயிஸ் டிரைவில் உள்ள கலையரங்கில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் பெருமையுடன் வழங்கிய நட்சத்திர இரவு – 2011 இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்இந்தியா, இலங்கை போன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, கனடாவில் 24 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்து, பிரபல திரை உலக இசை அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், மற்றும் இசை ஆர்வலர்கள் பலரின் பாராட்டையும், அபிமானத்தையும் பெற்று வெற்றி நடை போடும் பவதாரணியின் பாரதி கலைக் கோயில் இசைக் கலைஞர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து நடத்திய நட்சத்திர இரவு, இனிமை, புதுமை, குதூகலம் அனைத்தும் ஒன்றுகூடிய இசை நிகழ்ச்சியாக இசை ஆர்வரர்கள் பலராலும் பாராட்டத்தக்க வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திருமதி குணரட்ணம், திருமதி அரசநாயகம், திருமதி பாலசிங்கம், திரு. திருமதி மகாலிங்கம், திருமதி சந்திரசாகரா, திருமதி பரமேஸ்வரம் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவைத் ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம் ஆகியன கவிநிதா உதயகுமார், அஜிதன் உதயகுமார் ஆகியோரால் இசைக்கப்பட்டன. அடுத்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து பவதாரணியின் பாரதி கலைக் கோயிலின் தயாரிப்பில் நாட்டியக்கலைமணி ஸ்ரீமதி மாலினி பரராஜசிங்கத்தின் மாணவிகள் வழங்கிய ‘பாதைகள்’ என்ற பரதநாட்டிய வரவேற்பு நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில் ஆர்த்தி குணசிங்கம், ஷர்மிலா சிவநேசன், சோபியா மோகனதாஸ், ஆரணியா மோகனதாஸ், சங்கவி சிவஞானசுந்தரம், சிந்தியா மோகனதாஸ், கலீனா சத்தியசீலன், உஷாந்தி கிருபாகரன் ஆகியோர் பங்குபற்றி, அரங்கம் நிறைந்திருந்த பார்வையாளர்களின் பலத்த கரவோசையோடு கூடிய பாராட்டைப் பெற்றனர்.
உலகின் தொன்மையான இசை வடிவங்களில் தமிழிசையும் ஒன்றாகும். தமிழிசைக்கு அடிப்படையாக இருப்பது தேவாரப் பண்கள் என்றால் மிகையாகாது. இசை அளவில்லாதது, ஆனால் அழகானது என்று இசையை ரசிக்கத் தெரிந்த இசையார்வலர் பொதுவாகக் குறிப்பிடுவர். தமிழ் இசை வடிவம் கர்நாடக இசைவடிவில் இருந்து சற்று முன்னேறி, இன்று மெல்லிசை திரையிசை துள்ளிசை என்று பல வடிவங்களை எடுத்திருக்கின்றது. அந்த வகையிலே அதிக இசைக் கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைக்கப்படும் இசையைப் பொதுவாக மெல்லிசை என்பர். பவதாரணியின் பாரதி கலைக்கோயில் மணவ, மாணவிகள் கலந்து கொண்ட நட்சத்திர இரவும் அதிக இசைக்கருவிகளைப் பாவித்து நடத்திய ஒரு மெல்லிசை நிகழ்ச்சியாகவே இருந்தது. இசைத்தாய் பவதாரணியின் மறைவின் பின் பாரதி கலைக்கோயில் முன்னெடுக்கும் 3வது இசை நிகழ்ச்சியாகவும், 9வது வருடாந்த இசை நிகழ்வாகவும் இது அமைந்திருந்தது. கனடாவில் முதல் முறையாக தொடர் இசை நிகழ்சி நடத்தி பணம் சேகரித்து மருத்துவத் துறைக்கு நன்கொடையாக வழங்கிக் கனடியர்களினது நன்மதிப்பைப்பெற்ற இந்தக்கலைஞர்கள்;, இசைத்தாய் பவதாணியின் மறைவின் பின்னரும் இவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபட்டது பாராட்டத்தக்கதே! எஸ். பி. பாலசுப்ரமணியம், மனோ, சித்திரா, ஜானகி, சுசித்திரா, கிரேஸ், கிரிஸ், சிம்மையி, இசையமைப்பாளர்கள் எம். எஸ். விஸ்வநாதன், தோனிசைத்தென்றல் தேவா போன்ற பலரின் பாராட்டையும் பெற்று கனடிய மண்ணிலே சாதனையாளர்களாய் திகழும் இக் கலைஞர்களின் இசை நிகழ்விலே 37 வாத்தியக்கலைஞர்களும் 18 பாடக பாடகிகளும், பல்வகையான பாடல்களையும் இசைத்து, நிகழ்ச்சி நிறைவு பெறும்வரை பார்வையாளர்களை இசை மழையில் நனைய வைத்தது பாராட்டத்தக்கது.
பவதாரணியின் பாரதி கலைக் கோயில் அதிபரும், இசைத்தாய் அமரர் பவதாரணியின் கணவருமான மதிவாசன் தனது உரையில் கலைக்கோயிலின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டு அதற்கு உதவியாக நின்று ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக கலைக்கோயிலோடு ஒன்றிப் போய்விட்ட இரட்னேஸ்வரர், வியாழினி ஆகியோரைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். மதிவாசனின் உரையைத் தொடர்ந்து பவித்ரா இரட்னேஸ்வரன், ஜஸ்வினி மதிவாசன் ஆகியோரது இசை அர்ப்பணிப்பைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பவதாரணியின் தாயாரான திருமதி. கௌரி பரமேஸ்வரம் வழங்கி அவர்களைச் சபையோர் முன்னிலையில் கௌரவித்தார். அடுத்து பெற்றோர் தன்னார்வத் தொண்டரைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது. கலாநிதி சிவகணோசானந்தம் அவர்கள் ஸ்ரீகாந்தி சதாசிவம், மாணிக்கவாசகர் சண்முகம் ஆகியோருக்கு விருது வழங்கிக் கௌரவித்தார். பாரதி மாணவத் தன்னார்வத் தொண்டருக்கான விருதைக் கனடா மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. என். சாந்திநாதன் தன்னார்வத் தொண்டரான நரேஸ் சிறிதரனுக்கு வழங்கிக் கௌரவித்தார். தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கான விருதை உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கமும், ரீ.வி.ஐ. சார்பில் அதன் பிரதிநிதியும் அதிபர் திரு. பொ. கனகசபாபதியால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அடுத்து இடம்பெற்ற, பிரசாந், ரமேஸ், டின்சன், பிரவீன் ஆகியோரின் தனி ஆவர்த்தனம் பலரின் பாராட்டையும் பெற்றது. தொடர்ந்து இசைக் கலைஞர்களான ஜஸ்வினி மதிவாசன், ஆர்த்தி சதாசிவம், பவித்ரா இரட்னேஸ்வரன், சகானா ராஜசிங்கம், பாரதி மதிவாசன், மஜிதா மாணிக்கவாசகர், நயானி இராமகிஷ்னன், துபாரகன் சோதிலிங்கம், யதூஷன் கதிர்காமநாதன், பிரஸாந் சண்முகநாதன், பிரவீன் மதிவாசன், ராமீஸ்ராஜ் விஜயகுமார், நிசாந்தன் பாலகுமார், டின்சன் வன்னியசிங்கம், பாபு ஜெயகாந்தன், ஐஸ்வரியா சுந்தரேசன், கிருஸ்சிகா ஆனந்தராஜா, அக்ஷானியா மோகன்ராஜ், துசித்தா கோபிகிருஷ்னா, பிரணவன் ஸ்ரீஸ்கந்தநாதன், சகானா ரவீந்திரன், தக்ஷிகா சிறீதரன், விஜீன் சண்முகநாதன், நாராணன் ராமகிருஷ்னன், நிஷாந் லக்ஷ்மன், தட்ஜீனன் உதயகுமாரன், நரேஸ் சிறீதரன், நிருஜா சிவநேசன், சாரங்கி மகாத்மநாதன், கிரிஷ்கன் சிவபெருமான், அல்வின் லீனஸ், மாதேவ் முகுந்தன், அனூஜன் ரவீந்திரன், பிரகதீஸ் சிவசேகரம், பரதன் சுரேஸ்குமார், கிருஷாந் கோபிகிருஷ்னா, ஞானகுருபரன் லோகேஸ்வரன் ஆகிய இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வைத்திய கலாநிதி சிவாஜி, சிவபாலு, பத்மநாதன் ஆகியோர் இசைக் கலைஞர்களைக் கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமது குரல் வளத்தால் சபையோரைக் கவர்ந்திழுத்த பாடகர்களான பிரபா, துஷி, அன்னநாதன், யூட், சஜீகா, ஜெசிகா யூட், தயாபரன் ஆறுமுகம், மயூரதி தேவதாஸ், சிந்து இந்திரசித்து, விஜிதா மயில்வாகனம், அபிராமி கிஷ்னதாசன், யூட் நிக்கலஸ், சங்கீதா, தட்யனன் உதயகுமார், சித்ரா பிலிக்ஸ், ஸ்ரீமுருகன், திருவழகன், ஆகியோர் பாடகர் பொன். சுந்தரலிங்கத்தால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை எந்த ஒரு தளர்வும் இல்லாமல், மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்திய கலா கார்த்திக், நவநீதா நவரட்ணம் ஆகியோரைக் குரு அரவிந்தன் விருது வழங்கிப் பாராட்டிக் கௌரவித்தார்.
இதைத் தொடர்ந்து மினி ஸ்டார்ஸ் வழங்கிய கண்ணுக்கிய திரையிசை நடன விருந்து இடம் பெற்றது. பாமினி சதீஷின் ஆக்கத்தில் தவீனா சதீஷ், அனிதா தெய்வேந்திரன், அபீனா சண்முகராஜா, செறீனா சண்முகராஜா, விபுகாந் சிங்கேஸ்வரன், அபிலாஷ் சிங்கேஸ்வரன், சக்திகுமரன் லோகேஸ்வரன், ருக்ஷன் புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகாஜனாக் கல்லூரி முன்நாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி, பாடகர் பொன். சுந்தரலிங்கம், வைத்திய கலாநிதி. சிவாஜி, வைத்திய கலாநிதி சிவகணேசானந்தம், கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், மாக்கம் நகரமன்ற உறுப்பினர் திரு.லோகன் கணபதி, வைத்திய கலாநிதி திருமதி லோகன் கணபதி, கனடா எழுத்தாளர் இணையத் தலைவர் சிவபாலு, கனடா மகாஜனாக்கல்லூரிப் பழைய மாணவர சங்கத் தலைவர் என். சாந்திநாதன், ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் குரு அரவிந்தன் ஆகியோரும், விழா சிறப்பாக அமைய நிதி உதவி செய்த பல வர்த்தகப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
மறைந்தும் மறவாமல் இருக்கும் இசைத்தாய் பவதாரணியின் பிறந்ததினத்தில் இவ்விசை நிகழ்ச்சி நடத்தப் பட்டது அவரை நினைவுகூருவது மட்டுமல்ல, கௌரவிப்பதாகவும் இருந்தது. உள்ளுர் கலைஞர்களைக் கொண்டு, மிகவும் சிறப்பான இசை அமைப்போடு மிகவும் பிரபலமான பாடல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் இடம் பெற்றதால் பார்வையாளர்கள் மிகவும் திருப்தியோடு மகிழ்சியாக வீடு திரும்பினர். அடுத்து வரவிருக்கும் நட்சத்திர இரவு 10வது ஆண்டு நிறைவு விழாவாக இருப்பதால் இசை ஆர்வலர்கள் நிறையவே எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள் என்பது திண்ணம். புலம்பெயர்ந்த இந்த மண்ணில் தொடர்ந்தும் இசை மணம் பரப்பி எங்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை நிலைநிறுத்த எமது வாழ்த்துக்கள்.
kuruaravinthan@hotmail.com