செப்டெம்பர் 2011 கவிதைகள் -2

 

சம்பூர் சனா (புத்தளம்) கவிதைகள்!. 

1. கண்ணீர் ஒத்தடங்கள்… 
 
எனக்கும் விருப்பம்
உன்னை மறந்து
வாழ்வதற்கு…
ஆனால்
இதயம் என்னவோ
மறுக்கின்றது..
 
உன்னை
நினைக்க மறந்து விட்டால்
உலகே
மரணித்து போகின்றது…!

உன்னை மறந்து வாழும்
சரித்திரங்களை
உருவாக்கத்தான்
சந்தர்ப்பம் தேடுகிறேன்…

உன்னைப் போல்
நானும் மறந்தால்
என்னைப் பார்த்து
நீ சந்தோஷப் படுவதாக
நினைத்துக் கொள்வேன்…

நான் மட்டும்
இவ்வாறு
சங்கடப்படுவதற்கா
நீயிலாத வாழ்நாட்களை
உற்பத்தி செய்து தந்தாய்…?
ஒருவர் மனதை ஒருவர்
பற்றி எரிக்கும்
ஊதுவர்த்தியாக
அன்று நாம்
வாசம் கொடுத்தோம்
வாழ்ந்த தேசத்திற்கெல்லாம்…,
இன்று –
 

பலூனில்
அடைபட்ட காற்றாய்
கைசேதப்படுகின்றேன்
வசந்தத்தைத் தேடி
தினமும்…!

ஒரு சொல்லாவது பேசாமல்
மௌனியாகி
தீயணைப்பு
செய்து கொள்கிறேன்
செல்லமாக
உன்
உறவை
நினைக்கும் போதெல்லாம்…!

பற்றி எரியும்
மனதைப்
பற்றிக் கொள்ள
கண்ணீர்
ஒத்தடங்கள் தான்
மிச்சம்
இங்கே…
 

2. மறுபடியும் உருவாகுவோம்…

அறிந்தும் அறியாத
உயிராய்-
என்
இதயம்
மறவாத
உறவாய்
ஏன் ஆனாய்?

கலப்பற்ற மெய்
சொல்லுகின்ற உயிரே
குழப்பத்தை ஏன்தந்து
கொல்லுகின்றாய்?

உன் பரிபாசை
தெரியாமலும்
நான் இல்லை..
என் மன ஓசைகள்
அறியாமலும்
நீ இல்லை..
 
நீதான்
எழுத நினைத்தாய்
என் கதையை-
முற்றுப் புள்ளியையும்
வைத்து விடு
நீயே..!
 
இனி எதைத்தான்              
நான்                         
ஆரம்பிக்க…?,
முழுதாய்
உன்னுள்
அமிழ்ந்து விட்டேன்!

உயிரே
கதை எழுது..
என்
உறக்கத்தை
திருப்பிக்கொடு-

மறுபடியும்
தூங்க வேண்டும்
நிம்மதியாக.

இன்றைய “நீயும்”
இன்றைய “நானும்”
இனி வேண்டாம்-

நேற்றைய “நாமாய்”
உருவாகுவோம்
மறுபடியும்!

sampoorsana@yahoo.com


தைமுதல்நாள்…

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

       
காக்கின்ற அரசென்று சொல்லிக் கொண்டு
  காகத்தின் கூட்டமென நம்மை எண்ணி
தூக்கத்தைக் கலைக்கின்ற செயலைச் செய்து
  துக்கத்தைத்  தமிழர்க்குத் தருவ தென்றால்
நாக்கிற்குக் கிடைத்தாலே வாலை ஆட்டும்
  நாய்க்கூட்டம் தமிழரென்ற எண்ணம் தானே
வாக்கிற்கு விலைபோன சோரம் தானே
  வாய்மூடி வாழ்வதுவோ சோகம் தானே

பயன்பாடு  இல்லாத திட்டம் வேண்டாம்
  பகட்டிற்குச் செய்ததென்றால் ஏற்க வேண்டாம்
உயரத்தில் இருப்பதுபோல் வேடம் காட்டும்
 உதவாத ஏமாற்றுப் பேச்சு வேண்டாம்
நயமானப் பண்பாட்டில் தொன்மைப் பேரில்
  நரிபோலத் தீங்கிழைத்தல் என்ன நீதி
துயரத்தைத் தூவுவது தொடரு மானால்
  துக்கத்தைத் துடைப்பதற்கு எண்ண வேண்டும்

தமிழாய்ந்தோர் சிந்தித்து முடிவு செய்தார்
  தைமுதலே தமிழாண்டின் தொடக்கம் என்றார்
தமிழாண்டு தமிழ்முனிவர் ஆண்டு என்றே
  தமிழ்ச்சான்றோர் சந்தித்து அறிவித் தார்கள்
தமிழாண்டு தமிழர்க்கு வேண்டும் வேண்டும்
  தமிழ்ப்பகைவர் சூழ்ச்சிகளை வெல்ல வேண்டும்
தமிழாண்டை யார்கொண்டு வந்தால் என்ன?
  தமிழ்ப்பகைவர் செய்தாலும் ஏற்க வேண்டும்

தமிழ்வளத்தைத் தமிழ்ச்சுவையை சொல்லிச் சொல்லி
  தமிழர்களை ஆண்டதெல்லாம் போதும் போதும்
தமிழ்நிலத்தைக் காக்கின்ற அரசு வேண்டும்
  தமிழர்க்குக் குரல்கொடுக்கும் தலைமை வேண்டும்
தமிழர்க்கே ஊறுசெய்யும் கூட்டம் என்றால்
  தமிழரென நாமிருந்து ஆவ தென்ன?
தமிழர்களே உணர்விருந்தால் சிந்தி யுங்கள்
  தக்கதொரு முடிவெடுக்க சந்தி யுங்கள்

<elango@mdis.edu.sg>


ஜுமானா ஜுனைட் (இலங்கை) கவிதைகள்!

1. ஏய் குழந்தாய்…!
 
பூவில் ஒருபூவாய்
அழகிற்கோரணியாய்
அடியோ தாமரையிதழாய்
அகம்பாவம் அறியாதவளாய்
குணம் வெள்ளை நிறமாய்
குறுநகையால் வெல்வாய்..…!
 
மகிழ்ந்தால்
மங்கலப்புன்னகையாய்…
மதியால்
மாநிலம்
காப்பவளாய்…
அழுதால்
ஆற்றிடை ஆம்பல் மலராய்…
அதிர்ந்தால்
நாற்றிடை நாதஸ்வரமாய்…
அயர்ந்தால்
தென்னங்கீற்றிடைப் பூவாய்
உறைவாய்.
 
சீருடைச் சிப்பிக்குள்
முத்தாய்…
தேரிடைப் பூவுக்குள்
தேனாய்…
நேர்த்தியாய்
பாடசாலையில் பயில்வாய்
சீரிய குழந்தாய்
சுறுசுறுப்பாய்..!

2.  முடிவை நோக்கி…  

முடிவை நோக்கி…
வாழ்க்கை செல்கிறது!
 
வாழ்வை விரும்பினாலென்ன…
விரும்பாமல் சலித்தாலென்ன
முடிவை நோக்கி
ஆயுள் செல்கிறது….
 
ஆசைகளை அடைந்த போதும்
நிராசைப்பட்டு சடைந்த போதும்
எமது முடிவுப் புள்ளி
பிறந்ததில் இருந்து
எமை நோக்கி
வந்து கொண்டேயிருக்கிறது…..
 
இலட்சியம்
வெளுத்துப் பிரகாசிக்கலாம்…
கசந்து காய்ந்து போகலாம்…
“வெற்றி” சுவை கூறலாம்..
மறுத்து தொலைவாகலாம்.
பூமி புதிர் போடலாம்..
காற்று கவி பாடலாம்..
சோகம் வதை பண்ணலாம்..
இன்பம் கதை சொல்லலாம்..
 
நாம் கடி மலரில் துயிலலாம்..
காற்றில் பறக்கலாம்..
கீதம் பாடலாம்
ஓளிக்கீற்றில் நடக்கலாம்..
 
எத்திசையில் போனாலும்
“முடிவை” நோக்கியே செல்கிறோம்
அதை முகர்ந்து பார்க்கத்தான்
இன்னமும்
இதயங்கள் துடிக்கின்றன..!              

jjunaid3026@yahoo.com