[ சுற்றுச் சூழல் துறைக்கு ஆற்றிய சேவைக்காக நோபல் பரிசினைப் பெற்ற ‘வங்கரி மாதாய்’ அண்மையில் மறைந்தார். அவரது ஞாபகமாக , அவர் நோபல் பரிசினைப் பெற்றபோது பதிவுகளில் வெளியான குறிப்பினை மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்] இம்முறை சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆபிரிக்காவின் பெண்ணொருத்திக்குக் கிடைத்துள்ளது. நோபல் விருதினைப் பெறும் முதலாவது ஆபிரிக்க தேசத்துப் பெண் என்ற பெருமையினைப் பெற்றிருக்கின்றார் கென்யாவைச் சேர்ந்த வங்கரி மாதாய் (Wangary Maathaai). சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் அமைதி போன்றவற்றுக்கு இவர் ஆற்றிய, ஆற்றிவரும் சேவைக்காக இவர் இம்முறை இவ்விருதினைப் பெறுகின்றார். 1940இல் பிறந்த கிழக்காபிரிக்காவின் முதலாவது பெண் கலாநிதி, கென்யாவின் பல்கலைக் கழகமொன்றின் இலாகாவொன்றின் முதலாவது பெண் தலைவர் என்ற பெருமைகளையும் ஏற்கனவே பெற்றுள்ள இவர் கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சூழல் மற்றும் இயற்கை/வன வளத்துறைக்குரிய இணை அமைச்சராகவும் விளங்கி வருகின்றார். இவர் உயிரியற் துறையில் பட்டப்படிப்பினை கன்சாஸிலுள்ள மவுண்ட். செயின்ற் ஸ்கொஸ்டிகா காலேஜிலும், பிட்ஸ்பார்க் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் (Masters) பட்டத்தினையும் பெற்றவர். அதன் பின்னர் கென்யா திரும்பிய இவர் நைரோபிய பல்கலைக் கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் ஆய்விலீடுபட்டுக் கலாநிதி பட்டம் பெற்றவர். சக ஆண்களின் அவநம்பிக்கையினையும், எதிர்ப்பினையும் சமாளித்து இவர் இப்பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அப்பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி மிருக வைத்தியத் துறைக்கான தலைவராக பதவி உயர்வு பெற்ருச் சாதனை புரிந்தார்.