மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (17)
சினிமாவில் பரவலாக அதன் தொடக்கத்திலிருந்தே காணும் பல அவலங்களை, அதன் குணத்தையே தொடர்ந்து நிர்ணயித்து வரும் அவலங்களைக் கண்டாலும் அவை பற்றி நினைத்தாலும் நான் மிகவும் சுருங்கிப் போகிறேன். மனத்தளவிலும் நினைப்பளவிலும். இது எனக்கு நேர்ந்துள்ள எனக்கே நேர்ந்துள்ள மனவியாதி அல்ல. இன்னமும் தமிழ் சினிமாவும் அரசியலும் பாதிக்காது மன ஆரோக்கியமோ உடல் ஆரோக்கியத்தையமோ க்ஷீணித்துப் போகாது பார்த்துக்கொள்ளும் ஜீவன்கள் யாரும் மனம் சுருங்கி உடல் குறுகித் தான் போவார்கள். கூவத்தின் கரையில் வாழ்வதற்கும் உடல், மனப் பயிற்சி வேண்டும் தானே.. அது டிவி செட்டும் வோட்டுப் போட ஆயிரங்கள் சிலவும் கிடைத்துவிட்டால் அது அந்த பயிற்சி பெற்றதற்கான பரிசு என்று தான் சொல்லவேண்டும். தமிழ் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ பேசும்போது இந்த மொழியில், படிமங்களில் தான் நான் பேசத் தள்ளப்படுகிறேன். ஆனால் இந்த சாக்கடையில் உழன்று சுகம் காணும் ஜீவன்கள் அவரவர் ஆளுமைக்கும் பிராபல்யத்துக்கும் ஏற்ப இந்த சமூகத்தையும் ஆபாசப்படுத்தி வருகிறார்கள்.