அக்டோபர் 2012 கவிதைகள் -1

ஆகஸ்ட் கவிதைகள் -2

தேடல்

– சு.துரைக்குமரன் –

இத்தனை நாள் இல்லறத்தில்
என்னிடம் சொல்லாத
இரகஸியங்கள் உன்னிடம்
மிச்சம் உண்டாவென்றேன்
என் விழிகளைத்
தீவிரமாய்ப் பார்த்து
பின் தீவிரத் தேடலில்
ஆழ்ந்தாய்
பகராத முத்தப் பொழுதுகள்
மலராத காதல் அரும்புகள்
பகிராத ஒருதலை நினைவுகள்
புரியாத வயதின் தினவுகள்
புலராத காலைக் கனவுகள்
ஒன்றோ இரண்டோ
உன் முகமேந்தி
ஏதேனும் இருக்கிறதாவெனா
உன் விழிகளை ஆய்ந்தேன்
நிகழ் மீண்ட உன்
இதழ் திறக்குமுன்
முந்திய ஆர்வத்தை
முயன்றடக்கி நோக்க
நீ கேட்டாய்
சொல்லாமல் இருப்பது தானே
ரகஸியம்
என்னிடம் மட்டும் நீ கேட்கவேயில்லை.

duraikkumaran@gmail.com


சினேகிதனொருவன்

– இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை –

சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு
ஒரு பயனுமற்ற பொறுக்கியென
அனேகர் கூறும்படியான

அவ்வப்போது நள்ளிரவுகளில்
பயங்கரமான கனவொன்றைப் போல
உறக்கத்தைச் சிதைத்தபடி
வருவான் அவன் எனதறைக்கு

வடையொன்றை, கடலைச் சுருளொன்றை
எனது கையில் திணிக்குமவன்
வரண்ட உதடுகளை விரித்து
குழந்தைப் புன்னகையை எழுப்புவான்

உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு
சிவந்த விழிகளைச் சிறிதாக்கி
புரியாதவற்றை வினவுவான்
எனது தோள்களைப் பிடித்து
பதிலொன்றைக் கேட்டு
இரு விழிகளையும் ஊடுருவுவான்

அத்தோடு எனது தோள்மீது
அவனது தலையை வைத்து
கண்ணீர் சிந்துவான்

நிறுத்தும்படி கேட்கும்
எனது பேச்சைச் செவிமடுக்காது
ஒரு கணத்தில் இருளில்
புகுந்து காணாமல் போவான்

பகல்வேளைகளில் வழியில்
தற்செயலாகப் பார்க்க நேர்கையில்
தெரியாதவனொருவனைப் போல
என்னைத் தாண்டிச் செல்வான்

mrishanshareef@gmail.com


புகழ் பாடுங்கள் !

பாவரசி கலைமகள் ஹிதாயா றிஸ்வி  இலங்கை  (சாய்ந்தமருது) –

கையெழுத்துப்  போடயிவன் கற்றதில்லை!
காசடுக்கும்  அனுபவத்தை பெற்றதில்லை
வையகத்தில் தலையெழுத்தை வயல் வெளிக்குள்
வாகாகத்  தான்  வரையும் ஆற்றல் பெற்றான்!

கார்முகிலைக்   கதிரவனைக் கரங்கள் உயர்தி!
இறைவனை பிரார்த்தித்தான்! கதிரறுத்தான்
பார்  மக்கள் வயிற்றிலெழும் பசியைக்  கொல்ளும்     
படை கொண்ட  ஏருழவன் புகழ் பாடுங்கள்!

கிழக்கினிலே  விடி வெள்ளி  முளைத்துப் பின்னர்
கீழ் வானம் இளஞ் சிவப்பு  கொள்ளும்  காலை 
வழக்கமென  ஏர் கலப்பை  எருது பூட்டி
வயலுழுவான்! வீடு வர ஆகும் மாலை.!

காடு  நிலங்கள்  கனிவடைய நீரைப்  பாச்சி,
காடுகளை கழனிகளாய் மாற்றம்  பண்ணி,
சுடு  வெயிலில் உடல் கருகி வியர்வை  சிந்தி,
சோம்பலெணும் சொல்லறியா துழைத்து நிற்பான்!

கஞ்சியொடும்  கூழுடனும்  காலம் ஒட்டி!
காலமெல்லாம்  குடிசையிலே  வாழ்வை  ஒட்டிப்
பஞ்சமதை  தன் வாழ்வின்  நண்பனாக்கிப்
பாருங்கள்! வையகத்தார் பசி தீர்க்கின்றான்!

மண்ணகத்தில்  மாமன்னர் தொட்டு மற்ற
மனிதரெவர் உழவனுக்கு  நிகராயுள்ளார்!
மண்ணிலே  சிகரமிவன்  பாரில்  மைந்தன்
பாடுங்களிவன்  புகழைப்  பாரதிரத்தான்!

sk.risvi@ gmail .com


தெய்வத்தையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிடாதீர்கள்

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்  

உயிரின் அஸ்திவாரங்களில்
வியாதிகளின் வேர் பரப்பி
மரணத்தின் மலர்களை
புஷ்பிக்கும் புகையிலைச் சுருள்
சவப்பெட்டிகளின் மேல் 
கண்ணுக்கு தெரியாத எழுத்தில்
‘புகைபிடித்தல்
உடல் நலத்திற்கு கேடாகலாம்’
என எழுதி பகிரங்கமாய்
வியாபாரம் நடாத்தலாம்.

வாழ்க்கையின் எண்ணம்
குப்பைகளாகிட
வானவில் வண்ணக் குப்பிகளில்
குடியையே கெடுக்கும்
குடியை கூட
அரச ஒப்புதலோடு 
சந்திக்குச் சந்தி
கடை போட்டு
கௌரவ படுத்தலாம்
பந்தய மைதானங்களில்
குதிரைகள் உழவுசெய்ய
பணம் விதைத்து
பதர்அறுவடை செய்யவும்
சீட்டுக் கட்டுகளின்
சில்மிசங்களில் சிதைந்து போகவும்
அனுமதிக்கு மறுப்பில்லை

உத்தரவு பெற்று
ஆடும் மாடும் கோழியும்
பன்றியும் மீனும் தினசரி
கொல்கையில் பாவங்கள்
புண்ணியமாகின்ற
கண்ணியவான்களுக்கு
ஆலய கருவறைக்குள்ளே
குருக்கள் பலியானது பலியல்ல …..

ஆண்டாண்டுகால
ஆலய பலி பூஜை
நேர்த்திக்காய் நேர்த்தியாய்
நடந்தால் நேர்த்தி இல்லையாம்
ஒ..இந்த பாவத்தில் லாபமில்லையோ..?

உயிர்பலி கூடாதென்று
விடிய விடிய
சத்யாக்கிரக போராட்டம்
நடாத்தியதில் வேளை
ஆலய வளாகத்தில்
கொன்று குவித்த
கொசுக்களின் எண்ணிக்கை
எத்தனை எத்தனையோ?

ஆலயத்தில்
பலி வேண்டாமென்ற
ஆர்ப்பாட்டத்தில்
உங்கள் காலடியில் 
நசுங்குண்ட எறும்புகள்
எத்தனை எத்தனையோ?

போராட்ட முடிவில்
போராட வந்தவர்களுக்கு
கோழி பிரியாணியும் ஆட்டுக் கறியும்
மீன்வறுவலும் இறைச்சி பாயாவும்
அவசியமானவர்களுக்கு
பன்றி சவர்மாவும் தாக சாந்திக்காய்
மதுபானமும் வழங்குவோம்
அதில் பிழை இல்லை
எங்களுக்கு போராட்டம்தான் முக்கியமென்று
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும்
முடிச்சுப் போட நீங்கள்  திரித்த கயிறு
உறுதியானதுதானா என்றொருமுறை
உறுதி செய்துகொள்ளுங்கள்

இத்தனை காலம்
கடவுள் எங்களை தண்டித்தது போதும்
இனி நாங்கள் கடவுளை
தண்டிப்போம் என்று
ஒற்றைக்கால் தவமிருக்கும்
முனிவர்களே…..

பூஜை அறையில் நுளம்புச்சுருள்
ஏற்றிக்கொண்டு பிரார்த்தனை
மயக்கத்தில் கண்திறக்க
மறந்துபோன  நீங்கள்
ஊதுவத்தியையும்
கொஞ்சம் நுகருங்கள்
கொசுவும் எறும்பும் கூட
உயிர்கள் என்னும்
உண்மை புரியும்.
அங்கீகரிக்க படாத
அலுக்கோசுகளின்
ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி
அல்லல் பட்ட மக்களின்
ஆத்ம திருப்திகளுக்கு ஒரு
குளுக்கோஸ் போல
இருந்துவிட்டு போகட்டும்

வேண்டுமென்றால்
பலி பீடத்தில்
உயிர் பலி கொடுத்தல்
உயிர்களுக்கு நல்லதல்ல என்று 
கொட்டை எழுத்தில்
ஒரு பதாகையை தொங்கவிட்டுவிட்டு
தள்ளி நில்லுங்கள் போதும் 

பாவம் தெய்வம் விட்டுவிடுங்கள்
அதன் அடி வயிற்றில்
கைவைத்து அகதியாக்கி
ஆஸ்திரேலியாவுக்கு
அனுப்பிவிடாதீர்கள்

megathoothan001@hotmail.com


முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள்!

1. துளிப்பாக்கள்

துணிக்கடையில் துணிப்பஞ்சம்
விளம்பரங்களில் நடிகை
அரைநிர்வாணமாய்

நட்சத்திரப் பெண்களில்
நிலா!
என்னவள்!!

நாத்திகன்கூட
வழிபடும் கடவுள்
அம்மா

2. தூக்கம்

உழைத்த களைப்பில் உண்டான மயக்கம்!
மூளையின் இயக்கத்தில் மின்சாரத் தடங்கல்!!
கண்களில் பிறந்த கனவுதொழிற் சாலை!
தன்னிலை மறந்து தள்ளாடும் போதை!!
மரணம் பெற்ற மகவுகளில் ஒன்று!
நரக வாழ்க்கையின் நிரந்தரமில்லா ஒய்வு!!
காதலர் வரவேற்கும் கனவு மாநாடு!
மோகம் அரங்கேறும் மோகனப் பூமேடு!!
குருட்டுப் பயணத்தில் குறட்டை ஒலியே!
இருட்டில் மிரட்டும் மௌன மொழியே!!
மரணத்தின் ஒத்திகையாய் மயக்குமிந்த உறக்கம்!
குரங்கான மனதினையே கட்டிவைக்கும் கடிவாளம்!!

பிறந்த குழந்தையின் பிஞ்சு மனம்போல!
உறங்கிச் சாய்வாய் உறக்கத்தில் பிணம்போலே!!

இருள் சூழ்ந்து இமைதழுவச் சொல்கையிலே
காரிகை வேண்டுமடா கண்ணுறங்கச் செல்கையிலே!!

கவிதை முடியுமுன்னே கவிக்கிரண்டு சந்தேகம்!
புவிதனில் உள்ளோரே பதில்சொல் வீரே!
உடலென்னும் கூட்டுக்குள்ளே உயிரெங்கு உள்ளதடா?
உடலா உயிரா உறக்கத்தில் ஒய்வுபெறுவது?
கவிதை முடியும்போது கவிக்கிரண்டு சந்தேகம்!
புவிதனில் உள்ளோரே பதில்சொல் வீரே!

3. விவசாயி

வானம்பார்த்த பூமி
விதைத்தால் விறகாகும்
கருவேல மரங்கள்

கண்ணீர்விட்டு வளர்த்தோம்
இந்தவருடம் பூப்பெய்தியது
எங்கவீட்டு புளியமரம்

கண்ணைப் போல்
தென்னை வளர்த்தோம்
இளநீர் தந்தது

குழிவிழுந்த வயக்காடு
தாகம்தீர்த்துச் சிரித்தது
மழையால்

உழைத்துக் களைத்த உழவன்
உறங்கத் துடிக்கும் தாய்மடி
மரங்கள்

4. முத்தங்கள் பலநூறு தா!

சேலைகட்டி வந்தமயில் சோலையிலே கூவும்குயில்
காலையிலே என்முன்னே நடந்தாள்! – நானும்
மாலையிடும் ஆசைகொண்டு வேளைவரும் நாளையெண்ணி
சாலையிலே அவள்பின்னே நடந்தேன்!!

கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை! – அவளைப்
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை!!

கச்சணிந்த முன்னழகில் மச்சமுள்ள இடையழகில்
மிச்சமுள்ள பெண்ணழகில் மயங்கி! – நானும்
கச்சணிந்த முன்னழகை மச்சமுள்ள இடையழகை
அச்சமுடன் பின்தொடர்ந்தேன் தயங்கி!!

கொஞ்சதூரம் போனபின்னே வஞ்சியவள் திரும்பிநிற்க
அஞ்சிநின்று வேறுதிசை பார்த்தேன்! – அவள்
நெஞ்சமதை நானறிய வஞ்சியவள் பெயரறிய
கொஞ்சதூரம் நடந்தபடி வேர்த்தேன்!!

தத்தையவள் எனைநோக்கிச் சித்திரமாய்த் திரும்பிவந்து
பத்திரமாய் ஒருசேதி உரைத்தாள்! – ‘நானுன்
அத்தையவள் பெற்றமகள் பைத்தியமா நீ?’என்று
புத்திமதி சொல்லிவிட்டு முறைத்தாள்!!

உண்மையது புரிந்தவுடன் மென்மையான பெண்மையிடம்
உண்மையான காதலென்று சொன்னேன்! – அவளும்
‘நானுமுனைக் காதலித்தேன் நாணமுற்ற நாள்தொடங்கி’
பெண்மையவள் மென்மையாகச் சொன்னாள்!!

முத்துரத வீதியிலே தத்திவிளை யாடுங்கிளி
சித்திரமாய் என்னருகே வந்தாள்! –அவள்
முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய்ப் பத்திரமாய்
முத்தங்கள் பலநூறு தந்தாள்!!

‘குழவியாகப் பார்த்தவுன்னை தலைவியாகப் பார்த்தவுடன்
குழம்பியது என்னறிவு’ என்றேன்! – என்
தலைவியான அவளோடு தலைகோதி சாய்ந்தபடி
மழலையாக வீடுநோக்கிச் சென்றேன்!!

munaivendri.naa.sureshkumar@gmail.com


முகவரி…

  -செண்பக ஜெகதீசன் –

அவன்,
ஓடிவிட்டான்..
அவள்
தேடிக்கொண்டிருக்கிறாள்..

அவன் முகவரி தெரியவில்லை,
அவள் காத்திருக்கிறாள்..

இதோ,
காலத்தின் முகவரிகள்-
அவள்
கனிமுகத்தில்…!

vsnjag@gmail.com