ஜூலை 2012 கவிதைகள்!

  

 துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்

   – ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் –

1.
நானொரு கப்பற்படை மாலுமி
எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள்
பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன
எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன்
என்னை நீங்கள் நம்பாவிடில்
எனது ஆடைகளைப் பாருங்கள்

உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும்
எந்த வித்தியாசமுமில்லையென்பதால்
நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர்.
முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம்
தற்போது நாம் சுவர்களைத் தாண்டி வந்து
கதவுகளுக்கு வெளியே உள்ளோம்

அத்தோடு இன்னுமொருவர் கூறினார்
அவர்களை நம்பாதீர்
அவர்கள் பொய்யர்கள்
நாம் உயிர் வாழவில்லை

2.
எனதறைக்குள் எளிதாக நுழைவதற்காக
அவர்கள் இறந்த உறவுகளின் வடிவத்தில் வருகிறார்கள்
அவர் ஒரு தடவை கதைக்கையில்
அவர் மாமா ஒருவரா அல்லது சகோதரனொருவனா என நான் பார்க்கிறேன்
அவரொரு காவற்துறை அதிகாரியென நான் காண்கிறேன்

ஐந்து வயதேயானவோர் மகள் இருந்தாள் எனக்கு.
இறந்து விட்ட அவளும் நானும் இப்பொழுது ஒன்றாக இருக்கிறோம்

வார்சா நகரின் பின்னால் தனது
கரங்களை விட்டு வந்திருக்கும் அவளால்
அசைய இயலாதாகையால் வெறுப்படைந்திருக்கிறாள்

ஒரு குரல் சொல்கிறது
மண்ணைக் கிளறியெடுக்க எந்த உருளைக் கிழங்குகளும் இல்லை
உடைப்பதற்கு எந்தக் கற்களும் இல்லை
சந்தைக்குக் கொண்டு செல்ல எந்தச் சுமையும் இல்லை
நானிங்கு அமைதியாக உள்ளேன்

ஒருவன் தனது மனைவி குறித்து கவலையுற்றிருக்கிறான்
வீட்டின் தகவல்களை அவன் என்னிடம் கேட்கிறான்

நான் மரணித்தபோது
அவர்கள் எனது மிகச் சிறந்த மேலங்கியைக் கைப்பற்றிக் கொண்டனர்
எனக்குக் குளிராக இருக்கிறது
குளிர்காலம் முன்னால் வருகிறது

பின்னர் அவர்கள் ஒன்றாகக் கதைத்தனர்

3.
“நாம் ஒரு குவளையிலிருந்து நீரருந்துகிறோம்
மாலைவேளைகளில் ஒன்றாக உணவு உண்கிறோம்
எமது அன்பிற்குரியவர் மீது யாருடைய நேசமோ இருக்கிறது
யாருக்கோ எமது தாய்மாரினால் சீராட்டி வளர்க்கப்படத் தேவையாக இருக்கிறது”

எமது படகுத் துறைகளுக்கு அவர்கள் கண்டபடி வந்து செல்கின்றனர்
ட்ராம் வண்டிகளில் எமக்கிடையே அவர்கள் நுழைகின்றனர்
அவர்கள் நம்மை விட்டு ஒருபோதும் செல்வதில்லையெனத் தெரிகிறது
மீண்டுமொரு நீண்ட காலம் வாழும் தேவை அவர்களுக்கிருக்கிறது

mrishansha@gmail.com


ர.மணிமேகலை கவிதைகள்!

1. அர்ஜுனத் தாயத்து

கருமேகங்கள் தவழும் மாலை
வீடு திரும்பும் இணைக்காகக் காத்திருக்கவில்லை
அந்தத் தெருப்பெண்கள்
ஒதுக்குப்புறமான சிறுவர்ப் பூங்கா
குடையில்லா ராட்டினங்கள்
ஊஞ்சலின் அசைவில்
என் சிறுவனின் மகிழ்ச்சி பொங்குகிறது கடலலைகளென
மேகக்கூட்டங்கள் முழங்கத்தொடங்க வீடு திரும்புகிறோம்
இடிஇடித்தால் அர்ஜுனனை அழைக்கப் பழகாத
அவனுள் ஆயிரம் வினாக்கள்
இருள் கவியத்துவங்கிய சற்று நேரத்துக்கெல்லாம்
மேகம் நிலம் நோக்கி நீர்விதைத்தது
மின்னல் ஒளியின் அச்சத்தில்
அவன் இடம்பெயர்ந்தான்
என் கருப்பையின் கதகதப்பு மறந்த அவன் பாதங்கள்
எதிர்மடி நோக்கி நகர்ந்தன
பணியிடக்காதலில் கனிந்திருந்த என்னுள் பேரிடி
எந்த அர்ஜுனனையும் நான் அழைக்கவில்லை.

2. பெண் ‘மை’

குவளைகளின் விளிம்புகள் தாண்டி
திரண்டு வருகிறது திராட்சைக்கள்
நுரையீரலின் நாளங்களில் பிராணவாயுவுடன்
இரண்டறக்கலந்திருக்கிறது நினைவுகளின் இருப்பு
வேர்வை பிசுக்கும் குளிர்ந்த உணர்வும் மணமும்
மூச்சுக்காற்றில் கரைய மறுக்கிறது
காற்றில் அலையும் ஆடைமடிப்புக்களில் கறியின் சுவை
நாவின் நடனம் முடியவேயில்லை
புறநானூற்றுப் புறந்தருதல் கடன்
கோலாகலத்துடன் நிறைவேறிக்கொண்டுதானிருக்கிறது
வாகனப்புகைப் பயணங்களினூடாக.
  
smekala10@gmail.com


பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

– எம்.ரிஷான் ஷெரீப்

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்
சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்

இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்

மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே

அப் பாடலைப் பாடியபடி
அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி
பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்
அங்குமிங்குமசையும் ஊஞ்சல்
அந்தரத்தில் சரணடையும் ஆவல்
அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்

அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்
சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்
எமக்கெதிரான
எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்
அத்திவாரத்தில் இருவரில்
எவரது அன்பைப் போட்டு மூடினோம்

இனித் தவறியும் ஒருவரையொருவர்
நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ
ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை
விழுங்கிச் செறிக்க முடியாது
விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்
யுகங்களாகத் தொடர
வேண்டியிருந்தோமா

பிரிவின் அன்றை
இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்
சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்
பின்வாசல் சமதரைப் புல்வெளி
நிலவின் பால் குடித்தரும்பிய
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்
இரவின் சாயல் துளியேதுமில்லை

mrishansha@gmail.com 


ஜுமானா ஜுனைட்( இலங்கை) கவிதைகள்!

1.சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?

யாம் சொல்லும் சொல்லெல்லாம்
எங்கே செல்லும்…?
 
காற்றலையில் கரைவதனால்
வார்த்தைகள்
காணாமல் போயிடுமா..
 
கண்டபடி சிதறித்தான்
ஏழு
கண்டங்களும் உலவிடுமா..?
 
உலகின் காந்தமது
ஈர்க்கும் வடபுலந்தான்
விரைந்திடுமோ…
 
ஊசாட்டம் இல்லாத
இடமொன்று எங்கே
அங்கு சென்றொழிந்திடுமோ… 
 
வார்த்தை பேசிடும் உதட்டளவில்
உறைந்திடுமோ
இல்லை
கேட்டிடும் இதயமெல்லாம் சென்று
குடியிருந்திடுமோ… 
 
ஆறு குளம் மலைகளைத் தான்
அடைந்திடுமா
அண்டவெளி தாண்டி
வார்த்தை சென்றிடுமா…
 
இந்த வளி மண்டலத்தை
நிரப்பிடுமா…
இதுகாறும்
காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..?
 
இருதயத்தில் என்றென்றும்
இருந்திடுமா…
இரு தோள்புறத்தில் இருப்பாரை
அடைந்திடுமா…
 
 
2. காலம் ஒரு கணந்தான்….!  பகுதி(7)
 
பிழை எது சரி எது 
பாரிதில்
அளவுகோள் ஏது..?
 
வெகுஜனம் சொல்வது
“சரி”யென நினைப்பது
தவறு…!
 
தனியொரு மனம்
மெய்சொல்ல நினைப்பது
தவறா,
தவறென பதில் கிடைத்ததும்
அது தவிப்பது
சரியா..?!
 
இந்த உலகத்தில்
“நிஜமெ”ன்று ஒரு தனி ரகம்
நிலையாய் இருக்கின்றதா… 
சூழ்நிலைகள் மாற
“சரி”யென்பது பின்பு பிழையாய்
ஆவதில்லையா..?
 
கோடிகோடி
சான்றுகள் கொண்டு
ஒரு “தவறை”
நிஜமெனக் காட்டுவதுண்டு…,
எமைத்தேடி வரும்
“தவணை” வந்தால்
எவர்தான் ஜெயிப்பர்
விதியினை வென்று..?!
 
பொய்கள் சிலநேரம்
எம் கண்ணை மறைத்தாலும்,
உரிய நேரம் நெருங்கும் போது
விழியின் பார்வை
மாயத் திரைகள் தாண்டி
நிஜத்தைக் காணுமே..!
 
ஆனால் அப்போது
எது நாம் செய்தாலும்
மண்ணில் வாழ்வு முடிந்து போய்
கண்கள் எம் வினையைக் காணுமே…!!
 
 jjunaid3026@yahoo.com 


சுடரொளி

– கலைமகள் ஹிதாயா றிஸ்வி –

ஆதாரமாய் …அனுதினமும்..
பெயர் சொல்லி  அழைக்கும்..உறவு …

உயிரைத் தடவும் உயிர் …
உள்ளத்தை  தழுவும் உறவு ..

வயிற்றுக்கும் ஊட்டும் உணவு ..
உயிர்க்கும்  ஊட்டும் உறவு

உடம்பை  அணைக்கும் பாசஊற்று
துன்பத்தை  துரத்தும் உறவு ..

செல்வத்தை தரும்  அருளொளி
மனதால் . மகிழும்  உறவு .

இருளகற்றும்  சூரியஒளி
உள்ளத்தை   தழுவும் ..உறவொழி..!

ஒளியற்ற  இவ்வாழ்வை .
விழி திறந்த  மனிதனாய்

சூரியனாய்  பிரகாச  வைக்கும்…சுடரொளி 
ஒளியில்லா உலகம் விழியில்லா முகமாக
அன்பினை  வடித்திடும் ..தந்தையெனும் சுடரொளி!

sk.risvi@gmail.com 


முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்!

1. அஞ்சல்பெட்டி

அன்பு குழைத்து
அன்னைக்குத் தந்தைக்குத்
தங்கைக்கு எழுதும் பாசமடல்களை
பாதுகாக்கும் பெட்டகம்

மழை பெய்தாலும்
புயல் அடித்தாலும்
வெயில் கொளுத்தினாலும்

பொறுமையுடன்
போராடிப் பாதுகாக்கிறது
மடல்களை

துணையாக யாரும்
இல்லாவிட்டாலும்
தனிமையாய் நின்று
கடமையிலிருந்து விலகாமல்
கவனமுடன் பாதுகாக்கிறது
கடிதங்களை

அலைபேசி மின்னஞ்சல்
வந்தபிறகும்கூட
இன்னமும் என்மனம்
இலயித்துக் கிடக்கிறது
மடல்கள் வழியே வெளிப்படும்
பாசப்பிணைப்பில்…

2. கண்ணீர்க் கதை!

இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

கதிரவன் கதிர்பரப்பினான்!
காளையவன் கண்விழித்தான்!
காளைகளுடன்
கலப்பையும் சுமந்து சென்றான்
கழனிக்கு!!

பதைபதைத்து விதைவிதைத்துக்
கதைசொல்லிக் களைபறித்துக்
கண்ணீர்சிந்தித் தண்ணீர்பாய்ச்சுவான்
காளையவன்!

அவன்
களைப்பு ஆற…
களைப்பில் வந்த
இளைப்பு ஆற…
களிப்பில் திளைப்பான்!
கொண்டவளை நினைப்பான்!!

வயலுக்கு வருவாளே வஞ்சி!
பசிக்குத் தருவாளே கஞ்சி!
காளையவன் கேட்பானே கெஞ்சி!
கேட்டதைக் கொடுப்பாளே கொஞ்சி!!

இப்படித்தான் இனிக்கும் இளமை!
ஏமாற்றத்தில் தவிக்கும் முதுமை!
அவளருகில் இருந்தால் இனிமை!
அவளென்றும் அழகுப் பதுமை!!

வெப்பத்தைக் கொடுப்பது சூரியக்கதிர்! – நமக்கு
ஏப்பத்தைக் கொடுப்பது நெற்கதிர்!
காந்தத்தின் துருவங்கள் எதிரெதிர்!
காளையவன் பருவங்கள் புரியாத புதிர்!!

மழைபெய்தால் பிழைக்கும் பயிர்! – மழை
பிழைசெய்தால் பதைபதைக்கும் உயிர்!!

சிறுநடை போட்டு அறுவடை செய்தும்
சிறுவடைக்குப் பெருநடை!!

ஏர்போய் எந்திரம் வந்தாலும்
ஏழையவன் ஏடு மாறவில்லையே!
காளையவன் பாடு மாறவில்லையே!!

ஏற்றம் பிடித்த கைகளுக்கு
ஏற்றம் வரவில்லையே!
அவன் வாழ்வில்
மாற்றம் வரவில்லையே!!

இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

இன்று
இது ஒரு கண்ணீர்க்கதை!
நாளை
நறுமணம் வீசும்
பன்னீர்க் கதையாய் மாறும்!
இது திண்ணம்!!

munaivendri.naa.sureshkumar@gmail.com