ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

 

சித்திரவதைக் கூடத்திலிருந்து

– அஜித் சி. ஹேரத்,
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் –

அடுத்த கணம் நோக்கி
எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர
முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ
ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை

எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும்
அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து
தப்பிக்கொள்ள முடியவில்லை
சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே
எண்ணங்கள் காணாமல் போயின

துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள்
உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள்
மரண ஓலங்கள்
அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள்
பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன

பயங்கரத்தைத் தவிர
இங்கிருப்பது
மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை
சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும்
ஒரே அன்பான தோழன்
மரணமே
அவனும்
எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான்

நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின்
குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது

சேவல் கூவ முன்பு
மூன்றாவது முறையாகவும்
எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி
காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக
அச்சம் தரும் மரணத்தையும்
கெஞ்சுதலுக்குப் பதிலாக
சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி
எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த
இறுதிக் கண்ணீர்த் துளிகளை
சமர்ப்பித்தது உன்னிடமே

உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவாக
பகலுணவோடு கிடைத்த யோகட் கோப்பையின்
அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன்
அதை எரிந்து மிதிக்கிறான்
அடுத்தது யார்

இங்கு வாழ்க்கை இதுதான்
இங்கு மரணம் எது?
முகமொன்றற்ற பிணமொன்று மற்றும்
தலைப்பொன்ற செய்தியொன்று மட்டும்

பட்டியலிடப்படாத வாழ்க்கை
பட்டியலிடப்படாத மரணத்தோடு
வந்து சேர்கிறது

பைத்தியக் கனவுகளோடு
நான் எத்தனை தடவை இங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறேன்
எனினும் நான் இங்கேயேதான்
இந்தத் தெளிவு கூட
கண்டிப்பாகப் பயங்கரமானது

இங்கு படுகொலை செய்யப்பட்ட
அனேகருக்கு
மனித முகமொன்று இருந்தது
எனது இறுதிச் சாட்சியாக
எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே

mrishansha@gmail.com


நினைவுகள் மிதந்து வழிவதானது

– எம்.ரிஷான் ஷெரீப் –

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

இருளின் மொழியைப் பேசும்
தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும்
வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய
வனத்தின் நீரூற்றுக்கள்
பெரும்பாலும் மௌனமானவை
எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில்
பரவியணைக்கப் போதா நீர்
நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில்
யாது பயன்

காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை
செரித்து
தேயாப் பசி கொண்ட கானகத்தின்
எப் பெருவிருட்சத்தின் வேர்
அகன்ற வாயைக் கொண்டதுவோ

புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும்
இக் காட்டிலெது நீ
அண்டும் குருவிகள் எக்கணமும்
குருதி சிந்தப் பறக்கக் கூடுமான
முற்செடியொன்றின் ஒற்றைப் பூ
விஷமெனப் பலரும்
விட்டொதுங்கக் கூடுமான
பாம்புப் புற்றருகில் தனித்த காளான்
இக் காட்டிலெது நீ

உள்ளே செல்ல எப்பொழுதும்
அனுமதி மறுக்கப்படக் கூடுமான
மாளிகை வாசல் யாசகன்
எவராலும் கரை சேர்க்கப்படாமல்
பயணம் தொடரக் கூடுமான
நதி முதுகின் இலை
மற்றுமோர் அழியா மேகமும் நான்

தவிர்ப்புக்களுக்கு வசப்படா
நினைவுகள் மிதந்து வழிவதானது
மெதுவாய்க் கொல்லும் நச்சு
இப்பொழுதும்
உள்ளிருந்து விழிகளுக்கு
தாவித் தீர்க்கும் உள்ளாழ்ந்த நிறைகனல்
உன்னால் தோன்றியதுதான்

mrishansha@gmail.com


காலையும் மாலையும் துதித்தல் நன்று

-துவாரகன்

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

உன் பேச்சு நன்று
உன் பாடல் நன்று
உன் நினைவு நன்று
உன் வரவு மிக நன்று
நீ வாழ்க்கை தந்தாய். வாழ்க!

இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள்
இரக்கம் இல்லாதவர்கள்
குற்றம் சொல்பவர்கள்
உன் அருமை புரிவதேயில்லை

நீயே என் வாழ்வு
நீயே என் வழிகாட்டி
உனக்காகவே என் காலங்கள்
எனக்கு வேறு என்ன வேலையிருக்கிறது

கொஞ்சம் பொறுக்கிறீர்களா?
காலைக்கடன் முடித்துவிட்டு வருகிறேன்.
07/2012

kuneswaran@gmail.com


விடுதலையை வரைதல்

வேலணையூர்-தாஸ்

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

அவள் ஓவியம் வரைபவள்
கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள்
தனிமையை தீட்டி இருக்கிறாள்
அடக்கு முறையை சித்திரிக்க முடிந்திருக்கிறது
துன்பத்தையும் சோர்வையும்
சொல்பவை பல ஓவியங்கள்
பலவீனத்தை படமாக்கி இருக்கிறாள்
வீடும் பணிச்செயல்களும்
உயிர்பானவையாக இருக்கும்
பலவீனங்களை படமாக்கியிருக்கிறாள்
இருளை இணைக்க முடிந்திருக்கிறது
ஆனால்
விடுதலையையும் ஒளியையும்
இறுதி வரை அவளால் வரைய
முடிந்திருக்கவில்லை..

drsothithas@gmail.com


வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ்,டென்மார்க்) கவிதைகள்!

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

மாற்றங்கள். 
 
கோள்கள் சுழலக் காலக் கணிப்பு.
கோலம், கொள்கை, குணம், வயது,
ஞாலம் போற்றும் இயற்கை, பருவம்,
ஞானம் தரும் அறிவு, கவனம்,
வான முகிலாய் மாற்றம் காணும்.
வாழ்வும், தாழ்வும், வளமான அன்பும்
வானவில்லாய், பாலைவனக் கானலாய்
வசமாகும் கணத்தில் வரம்பில்லா மாற்றங்கள்.

மாற்றங்களில் மயக்கம் தேற்றாத நெஞ்சில்
நாற்றம், சீற்றமாய்த் தோற்றாது சிதைவு.
ஆற்றலால் ஏற்றம், ஊற்றான புகழும்
போற்றல், மகிழ்தலும் பொறிப்பது மாற்றம்.
சலனமற்ற நீரில் பலமாகும் பாசி.
விலகாத நீரில் விரவாது மாற்றம்.
விரக்தி தொலைக்கும் வித்தியாச அனுபவம்.
வியப்பு, விசனம் குவிப்பது மாற்றம்.

மாற்றம்.  

தன்னிலையிலும் உயர் முன்னேற்றம்,
முன்னிலையிலும் தாழ்ந்த கீழிறக்கம்,
ஓன்று போல மற்றொன்றில்லாதது மாற்றம்.
ஓன்றிய இயக்கத்தின் இடைவேளையும் மாற்றமே.
தோன்றிய பிறந்த ஊர், வளர்ச்சி
அன்றாட வாழ்வு, அனுபவங்கள், சூழல்,
நின்றோடும் கல்வி, காதல், திருமணம்
ஊன்றிய தாய்மை, குழந்தைகளாலும் மாற்றம்.

நேற்றைய மலைப்பிரதேச இல்லத்தரசி வாழ்வு
மாறியது இனக்கலவரத்தால் புலம் பெயர்வாய்.
மேற்குலகோருடன் டென்மார்க் மொழிக் கல்வி
அற்புதம் ”பெட்டகோ” வெனும் சமூகஅங்கீகாரம்.
மாற்றம் சுயகாலூன்றிய சுதந்திர நிலை.
பெற்ற பொருளாதாரம் வசதியற்ற பிள்ளைக்கு
உற்றபடி உதவும் பத்து வருட நிறைவு.
ஊற்றான கவி, ஊடகங்களோடு பயணம்.

ஏற்றிய கவிஒளி நாடுகள் தோறும்
வேற்றுமை அழித்து நல்ல உள்ளங்களை
தோற்றியது அறிமுகம் எழுத்தாள நண்பர்களாக
மாற்றம் இது பெரும் மாற்றம்.
ஊறுகாய் போன்றது அனுபவ மாற்றம்.
தேறுதலாயிது சுவை மாற்றும் ரசனை.
விஞ்ஞானக் கோட்பாட்டுக் கூற்று, ஒன்றிலிருந்து
ஒன்று மாறுதலேயன்றி அழிவதில்லையாம்.

11-11-2007
kovaikkavi@gmail.com


முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் (பரமகுடி) கவிதைகள்

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

1. என் தங்கச்சி

அன்பான என்தாயீ என்னோட தங்கச்சி
அன்பாலே எந்நாளும் அவளிங்கு என்கட்சி
கண்ணுக்கு இமைபோல காத்திட்ட என்மகளே
பண்பான உனைத்தானே பாராட்டும் ஊர்மெச்சி

அறிவுடனே பேசிடுவாய் அறிவுரைகள் கூறிடுவாய்
பரிவென்ற வார்த்தைக்குப் பொருளாக மாறிடுவாய்
பிரிவுவந்த பிறகேதான் பாசத்தின் பொருள்புரியும்
பிரிந்துநின்ற போதினிலும் பரிவிற்கு வேரிடுவாய்

கடந்தகால நினைவினிலே கவிதையிங்கு பாடுகிறேன்
படர்ந்துநின்ற அன்பினையே பரவசமாய்த் தேடுகிறேன்
தொடர்ந்துவரும் நிழல்போல தங்கையுன் மகனோடு
தொடர்ந்துவரத் தானிங்கு தனிமையிலே வாடுகிறேன்

2. என் மருமகன்

அடிமன வெளியினில் ஆடிடும் முகிலே
மடியினில் தவழும் மரகத மணியே
கொடிபோல் கைகள் குறுவாய்ச் சிரிப்பு
விடியலைத் தந்தாய் வெள்ளி நிலாவே

கண்ணுங் காதும் கவிதைகள் பாடும்
கண்ணா உனையென் கண்கள் தேடும்
அன்பே நிறைந்த அன்னையு முனக்கு
உன்னா லெமது உறவுகள் கூடும்

நம்முடை தமிழை நாவில் பழக்கு
தெம்புட னெழுவாய் தென்படும் கிழக்கு
கொம்புடைக் காளை குழவியும் நீயே
தும்பியைப் போலே சோம்பலை விலக்கு

விழிகள் திறந்து வெளிச்சம் பார்ப்பாய்
ஒலியும் கேட்டு உளத்தில் ஏற்பாய்
வலியும் தாங்கும் வலிமையும் வேண்டும்
அழியாப் புகழை அதிகம் சேர்ப்பாய்

3. அஞ்சல்பெட்டி

அன்பு குழைத்து
அன்னைக்குத் தந்தைக்குத்
தங்கைக்கு எழுதும் பாசமடல்களை
பாதுகாக்கும் பெட்டகம்

மழை பெய்தாலும்
புயல் அடித்தாலும்
வெயில் கொளுத்தினாலும்
பொறுமையுடன்
போராடிப் பாதுகாக்கிறது
மடல்களை

துணையாக யாரும்
இல்லாவிட்டாலும்
தனிமையாய் நின்று
கடமையிலிருந்து விலகாமல்
கவனமுடன் பாதுகாக்கிறது
கடிதங்களை

அலைபேசி மின்னஞ்சல்
வந்தபிறகும்கூட
இன்னமும் என்மனம்
இலயித்துக் கிடக்கிறது
மடல்கள் வழியே வெளிப்படும்
பாசப்பிணைப்பில்…

4. மரநேயம் (துளிப்பாக்கள்)

ஓசியில் ஏசி தரும்
உன்னதக் கொடையாளிகள்
மரங்கள்

மின்சாரம் இல்லை
தடையில்லா ஏசி
மரங்கள் தலையாட்டுவதால்…

மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூயகாற்று
என்னே மரநேயம்!!!!!!

மனிதநேயம் இல்லா ஊரிலும்
இன்னமும் உயிர்வாழ்கிறது
மரநேயம்

munaivendri.naa.sureshkumar@gmail.com


எங்கோ செல்கின்றேன்

– மெய்யன் நடராஜ் (டோஹா, கட்டார்) –

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

பயணங்களின் தொடக்கங்கள்
எங்கோ செல்கின்றேன்
என்பது மட்டும் தெரிகிறது
என் பாதை எதுவென்றுதான்
புரியவில்லை

என் திசைகள் எட்டும்
சுழல் காற்றில்
சிக்கிக் கொண்டதால்
என் பயணத்தின் நோக்கம்
ஏக்கமாகி கிடக்கிறது.

முற்களிடமிருந்து
தற்காத்துக்கொள்ள
வாங்கிய செருப்பும்
கால்களை கடித்துவிட்டதால்
செருப்பை கடித்து
பழி தீர்க்க முடியாமல்
வாயை மூடிக் கொள்கிறேன்

நிழலுக்கு
ஒரு மரமில்லா
பாலைவன வெளிகளில்
வாழ்க்கையின் தாகங்களோடு
நதி தேடி நடக்கிறேன்

தலையில்
பாரம் சுமக்க வைத்து
வழியில் முள்ளை
தூவி விட்டவர்களிடமிருந்து
தூரமாகி விடவேண்டுமென்று
எங்கோ செல்கிறேன்
என்பது மட்டும் புரிகிறது

ஆனால்
முடிவில்லா என்
எல்லா தொடக்கங்களும்
தொடக்கத்திலேயே
முடிந்து போவதுபோல்
முடிவை காணாமல்
முடிந்து போகுமோ  இந்த
பயணத்தின் தொடக்கமும்..?

megathoothan001@hotmail.com


சுயம்வரம்

– கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) –

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

உள்ளத்து உணர்வுகளின்  இறுக்கம்…
சொல்லி அழத் தோன்றும் மன வேதனை
பெற்றவர்கள் இல்லைஎன்றதொரு ஏக்கம்!
தொழுகையில் கழுவ  முயல்கிறேன்…!

வென்றது என்னை
பொறுமையோடு  வாழ  நினைக்கிறேன்
மாற்றியது  என்னை
படுக்கையில் கூட விடுவதில்லை
சுவாசமாக  திக்ரின் ஓசைகள்

அடிக்கடி இறையச்சத்தை
அழுத்தும் மனசு
என்ன செய்தாலும் கபூர் வேதனையை
எனக்கு  நினைவு  படுத்துகிறது..!

எங்கு சென்றாலும்  நிழலாய்
உள்ளத்தில் தொழுகையின்  பாரம்
நல்லடியாராக்குவதா அமல்களின்  நோக்கம் ?

இதில் மட்டும் தோற்று விடுவாய் என்னிடம்
இறை வசனங்கள்
அல்லாஹ்வின் நாட்டத்தினால்
பாடமாக்கி மார்க்கக் கல்விக்குள்
 நுழைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது

இன்றோடு நன்மைகள்   செய்தே தீருவது
என்ற தீர்மானத்துடன்
என்னுள் அமல்களை  விதைக்கின்றேன்

எத்தனையோ பொறாமைகளுக்கு  மத்தியில்
அழிந்து  விட்டது என்று நான்
நம்பத் துணிந்த என் ”சுயம்” (வரம் )
எங்கோ பறந்து  சென்ற மிச்சத்தின் தூசுளாய்
ஏக்கப் பார்வை பார்க்கிறது என்னை!

sk.risvi@gmail.com


ஜுமானா ஜுனைட் (இலங்கை) கவிதைகள்!

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

1.“மை”க் குப்பி
 
அதோ…
தூரத்தில் கிடக்கின்ற
மைக் குப்பி

அது போதும்
அருகே ஒரு
வானம் அமைக்கலாம்..
 
அதோ தெரிகின்றன
அவை
அந்தரத்தில் தொங்குகின்ற
நட்சத்திரங்களா?
பறித்து வர ஒரு
வெள்ளைத் தாள் போதும்!
 
அருகே ஓர்
ஆகாயம் வேண்டுமா?
அதில் உலாவி வர
ஒரு கோடி நிலா
வேண்டுமா?

படி வைத்து ஏறி,
பிடித்து வர
பட்டு முகில் வேண்டுமா?

அடிக்கொரு தூத்தில்
கிரகங்கள் வேண்டுமா?
அண்டைச் சூரியன்
தூரமாய் வேண்டுமா?
 
அதோ..!
தூரத்தில் கிடக்கின்ற
மைக் குப்பி
அது போதும்
எல்லாம் கிடைத்து விடும்!              
 

2.அந்தி அழகு…

சூர்யப் பிளம்பு மறைகையிலும்
சுகமான ஓர் இயற்கை..
 
அழகிய மேகங்களின்
இடையிடையே
அந்தி வெயில்
சாய்ந்து கிடக்கின்ற போது…
அதையும் மீறி பேரழகு
இல்லையெனத் தோன்றும்..!
 
பகல் ஒளியைப்
பறித்துக் கொண்டு மேற்கில்
பகலவனும் மறைகையிலே
ஓரழகு..
 
எண்ணாத கோணங்களில்
எண்ணி வைத்த நட்சத்திரங்கள்
எட்டியெட்டிப் பார்க்கையிலே
ஓரழகு..
 
ஓன்றையொன்று
முந்திக்கொண்டு
ஓடும் முகில் கூட்டங்களும்
ஓரழகு..
 
ஓரிடத்தில் நில்லாமல்
மெல்ல மெல்ல
நகர்ந்து செல்லும்
ஓற்றை நிலா தனியழகு…
 
jjunaid3026@yahoo.com