2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்

புதியமாதவி, மும்பைஓரளவு அறிமுகமான எழுத்தாளருக்கு / அரசியல்  விமர்சகருக்கு தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில் அனுபவமிக்க   ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர் தேவை. பிரபலமான அரசியல்வாதிகளின் அரசியல் அறிவை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அறிந்துக் கொண்டதால் தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட எவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார். மிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை வாசித்த அனுபவங்கள் மூலம் அவர்கள் பிரபலமான சூத்திரத்தை அவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு , அறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால சரித்திரங்கள் என்ற பின்புலத்தின் அடிப்படையில் அவருடைய 2012க்கான திட்டங்கள்:

 2012க்கான திட்ட அறிக்கை

* 2012ல் ஓர் இலக்கிய- அரசியல் பத்திரிகை ஆரம்பிப்பது.
* விருதுகள் அறிவிப்பது. (இது ஒருவகையான கொடுக்கல்/வாங்கல்)
*யாராவது எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்தால் அவருக்கே  விருது கொடுப்பதில்/புத்தகம் வெளியீட்டு விழாவில் தலைமை இத்தியாதி  முன்னுரிமைகள் கொடுப்பது.
* இறுதியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர்களுக்கு கட்சியில் பொறுப்புகளும் பதவிகளும் கொடுப்பது.

இந்த திட்டங்களை நடைமுறைப் படுத்த அவசரத் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்/ ஃகாட் மதர்.

கள ஆய்வறிக்கை

*யாராவது பிரபலத்தை நோக்கிச் செருப்பு வீசினால் பிரபலமாகிவிடலாம் என்றார் என் நண்பர் ஒருவர். திகார் ஜெயில் வாசலில் போய் நில்லுங்கள், நிறைய பிரபலங்கள் உள்ளேயும் வெளியேயும் … உங்களுக்கு வசதியாக இருக்கும் என்றார். இந்த ஐடியா சொன்னவர் ஒரு  டி.வி,க்காரர் என்பதால் அவருக்குப் புத்தாண்டில் சுடச்சுட பிரேக் நியுஸ் கிடைக்கும் என்று நம்மை வைத்து காமெடி கிமெடி பண்ணுகிறாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டதால் அந்த ஐடியாவைக் கைவிட்டு விட்டோம்.

*சில இடங்களில் சிலர் வெளியேற்றப்பட்டதால் அந்த வேகன்சியில் முயற்சிக்கலாம் என்றால் நம்மால் இன் -ஹுவுஸ் , 24×7 வேலை எல்லாம் செய்ய முடியாது என்பதால் அதுவும் டிராப்.

*பிரபலங்களின் செல்ல நாய்/ நண்டுகளை சின்னவீடு/பெரியவீடு வேறுபாடின்றி புகழ்ந்து கவிதைப்பாட வேண்டும்  என்றார் ஓர் அனுபவஸ்தர். பிரபலங்களைப் பற்றியே கவிதை எழுத எம் கவிதைகளுக்குத் தெரியாமல் போய்விட்டதால் அதுவும் ஒத்துவரவில்லை.

*நவீன கவிதைகளைப் படைக்கும் அண்ணன் தம்பி, சித்தப்பா/மாமன்/மச்சான் அவர்களின் பிள்ளைகள் என்று யாருமில்லை. அப்படி இருந்திருந்தாலும் கூட அவர்கள் எழுதியதை நம் பெயரில் போட்டு அவர்கள் உதவியுடன் உலக மொழிகளுக்கு நம் எழுத்துகளை எடுத்துச் செல்லும் கொடுப்பினையும் இந்தப் பிறவியில் இல்லாமல் போய்விட்டது.

*அன்னா ஹசாரேவின் மும்பை உண்ணாவிரதத்தில் கலந்துக் கொள்வதற்கு முன்னரே அவரும் உண்ணாவிரதத்தையே முடித்துக் கொண்டதால்  கிடைக்க இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவிப் போய்விட்டது! (உண்ணாவிரதம் இருப்பது எப்படி ? என்பதை அவர் நம்ம தமிழ்நாட்டுக்குப் போய் பயிற்சி எடுத்திருக்க வேண்டாமா… ??!!)

பின்குறிப்பு:
பிரபலமாவது எப்படி ? என்பது  குறித்த ஓர் ஆய்வின் அடிப்படையில் மேற்கண்ட 2012க்கான திட்ட அறிக்கைத் தயார் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திட்டங்கள் குறித்து கருத்தரங்குகள்/பயிற்சிப் பட்டறைகள் நடத்த மாநில ரீதியாகவும்/மாவட்ட ரீதியாகவும் ஐ.ஐ.எம் பட்டதாரிகள் தேவை.

ஏற்கனவே எம்முடன் தொடர்பில் இருக்கும் பெரிசுகள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (அதாகப்பட்டது அவர்கள் எல்லாம் ஒரு வேஸ்ட் ஃபீஸ்கள்/கையாலாகாத பிழைக்கத் தெரியாத பெரிசுகள்) எனினும் பொதுக்குழுவுக்கு அவர்கள் அனைவரும் ஆயுட்கால கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் திட்டங்களை விளம்பரங்களாகவும் தலைப்புச்  செய்திகளாகவும் ப்ரேக் ந்யுஸ்களாகவும் வெளியிடும் ஊடகங்களை , ஊடகவியலாரைக் கனமான கவர்கள் கொடுத்து கவனித்துக் கொள்ள தனியாக ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

திட்டங்கள் மாற்றத்திற்குட்பட்டவை. புதிய கருத்துகளுக்கு என்றும் வரவேற்புண்டு.

puthiyamaadhavi@hotmail.com