மார்ச் 2012 கவிதைகள்

'பதிவுகள்' மார்ச் கவிதைகள்

எங்களுக்கு விசர்பிடித்ததென்று அங்கீகரியுங்கள்

-துவாரகன் –

மார்ச் கவிதைகள்!நீங்கள் எப்போதாவது
விசர்நாயைக் கண்டதுண்டா?

உடல் இளைத்து
நாக்குநீட்டி உமிழ்நீர் வடித்து
தூங்கி விழுந்த வாலுடன்
வீதியெல்லாம் அலையும்

வேட்டைப்பல் காட்டி
வெறித்துப்பார்க்கும் குரைக்காது
கண்டதெல்லாம் கடிக்கும்.
அந்த விசர் எங்களுக்கும் பிடித்ததென்று
அங்கீகரியுங்கள்

குழந்தைக்கும் குமரிக்கும்
குறியொன்று இருக்குதென்று
குண்டிதட்டிச் சொன்னான் ஒருவன்.
அப்போதிருந்து அலைகிறது
வீதியெங்கும் விசர்

விசர்… குத்தும் கிழிக்கும்
கூடிச் சிதைக்கும்
கொல்லும்
இன்னும் என்னவெல்லாம் செய்யும்

நாங்கள் ஒவ்வொருவரும்
விசர்களுக்கு
தீனிபோட்டு வளர்க்கிறோம்.
விசராக்கியவன்
கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு
தன்னைத்தானே
குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.
03/2012

kuneswaran@gmail.com


முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்) கவிதைகள்!

1.  பாவேந்தர்!

மார்ச் கவிதைகள்!செந்தமிழால் புகழ்பெற்ற
பைந்தமிழ்ப் பாவலனே!
புவிதனை மாற்றவந்த – தமிழ்க்
கவித்தேனின் காவலனே!
பாருக்கு அதிபதியாம் 
பாரதியின் தாசனே!
தமிழுக்கு அமுதென்று
பேர்படைத்த நாயகனே!
குடும்ப விளக்கேற்றி – தமிழ்க் 
குடும்பம் காத்த திராவிடனே!
மூவேந்தனுக்கும் வேந்தனாய் 
தமிழ்நாட்டு பாவேந்தனே!
வாழ்க நீபல்லாண்டு! – உன்புகழ்
வளர்க பலநூறாண்டு!!

2. ஏழைகள்!

வறுமைத்தீயில்
தீக்குளிக்கும்
விட்டில் பூச்சிகள்!!

3. காதல் சிலுவை!

உன்னை நேசிப்பதை
உன்னிடம் சொல்வதற்கு
மலர்களை கொண்டுவராமல்
மலர்களைவிட மென்மையான
என் காதலை கொண்டுவந்தேன்!

நீயோ
உன் மௌனமெனும்
ஆயுதமெடுத்து
என் இதயத்தின் கைகளில்
ஆணிகளிடித்து
எனை சிலுவையில் அறைகிறாய்!

இயேசு
முதல் நாள் மரித்து
மூன்றாம் நாள்
உயிர்த்தாராம்!
நானும்
ஒவ்வொரு நாளும்
உறக்கம் என்ற பெயரில்
மரித்து உயிர்க்கிறேன்!!

உன்மீது என்மனதிலுள்ள
அன்பின் ஆழத்தை
உணர்த்துவதற்காக…

4. அம்மா!

அன்பான தேவதையே அழகான தாரகையே
என்னைப் பெற்றெடுக்க இடுப்புவலி சுமந்தவளே
கண்களைப் பிரிந்தேதான் கண்ணிமைகள் வாழாது
உன்னைப் பிரிந்தேநான் உயிரோடு வாழேனோ?

எத்தனையோ சொற்கள் அமுதாக இருந்தாலும்
அத்தனையும் அம்மாவென் றழைப்பதற் கீடாமோ?
சோதனைகள் வந்தபோது சோர்வின்றி உழைத்திட்டாய்
வேதனைகள் தாங்கிதினம் வெளியில்நீ சிரித்திட்டாய்

பசியே தெரியாமல் பாசமாக வளர்த்தாயே
பாசத்தைக் குறைவின்றி பரிமாற வந்தாயே
நேசத்தை வளர்த்திட்டாய் நேர்மையை வகுத்திட்டாய்
மாசில்லா நவமணியே மங்கையே நீவாழ்க!!

5. வாருங்கள்!

இந்தியாவில்
சதிகளை சாய்க்க…
மதங்களை மாய்க்க…
தீவிரவாதத்தை தீர்க்க…
பெண்ணடிமை போக்க…
வரதட்சிணையை வேரறுக்க…
ஊழலை ஊதித்தள்ள…
கையூடலை கைகழுவ…
மனிதர்களே வாருங்கள்!
மனிதர்களாய் வாருங்கள்!!

6. காதல்!

ஒலியின்றியே
விழிகள் பேசும்
புதுமொழி!

திருநங்கைகள்!
ஆண் தேவதைகள்
நாங்கள்!

ஒருபாதி ஆணாய்
ஒருபாதி பெண்ணாய்
அர்த்தநாரிஸ்வரர்கள் நாங்கள்!

கருப்பை இல்லாத
பெண்கள்
நாங்கள்!

இயற்கையின் படைப்பில்
முரண்பாடுகள்
நாங்கள்!

வண்டுகள் தேன்பருகாத
மலர்கள்
நாங்கள்!

தோகையுள்ள
பெண்மயில்கள்
நாங்கள்!

எங்குபோனாலும்
அங்கீகாரம் பெறமுடியாத
அனாதைகள்
நாங்கள்!

XX  குரோமோசோம்களால்
பிறப்பது ஆண்!
XY குரோமோசோம்களால்
பிறப்பது பெண்!
X,Y குரோமோசோம்களின்
குளறுபடியால்
எங்களுக்குப் பெயர்
திருநங்கைகள்!!

munaivendri.naa.sureshkumar@gmail.com


நமக்கே தான் பரிசு…!

கலைமகள் ஹிதாயா  றிஸ்வி (இலங்கை)

மார்ச் கவிதைகள்!போட்டிக் கொரு கவிதை போட்டுப் பணப் பரிசை
ஈட்டிக் கொள வேண்டும்!என்னுமோராவலாற்
பாட்டுப் புலமை  சார்  பாவலர்கள் சூழ்ந்த,இந்
நாட்டுப்  புலவர்  நடுவன்,நான் தூசென்றே
எண்ணிக் கலங்கா (து),  இறுககமுடன் யானின்று
மன்னும் பொருட் சார் மகுடத்தில்  பாவாக்க முனைந்தேன்!

தலைப்பு தடுமாற்றம்! தக்கதலைப்பற்ற
மலைப்பு எனக்கு…!
மகிபனை  வேண்டிடுங்கால்…..!
மோட்டு வளை போன்று ,முண்டு கொடுக்கின்ற
வீட்டுக்காராசி விற்புருவத்தால் வெட்டி விலாசுகிறாள்!

”புத்தகம் தூக்கிப்புறப்பட்டமுத்த மகளோ
வித்தகம் போதுமே! வேண்டாம் இனிப்படிப்பு”
என்று  கூறாமலே  இன்றவளோ  வீட்டினிலே
நின்று விடடால்!அந்த நினைப்பு வருதா….?
ஆமாம்………,
செல்வி எனதுமகள் சொல்லாது பள்ளிக்குக்
கல்விதனை விட்டகவலையால் நீ மட்டும்
கலங்குவதாய்  எண்ணாதே!
கண்ணே!  நின் கூற்று
விளங்குதடி என் செய்வேன்..?வேதனை தான்
என் மகளும்-
 கற்று  வரட்டும்! நற்கல்வியெனும் செல்வத்தைப்
பெற்று வரட்டும்! பெயர் பெறட்டும்!
என்றே   நான்   விட்டேன்  !

மகளே! நீ  மூத்த மகனாய்ப்   பிறந்திருந்தால்
கவலையின்றி , யான் கட்டுப்படுகின்ற
நிலைமைக்கு ஆளாகி நிச்சயம்  நான் வாடேன்!
வதுவைக்குச்சிதனங் கேட்டுச் சீணுங்கும்  பொடியர்க்கு
மாதனமாய்க் கல்வியையும் வைக்கலாமென்று,
”ஜோப்புக்கும் ,   உன்னிடத்தில் யோக்கியதை”
உண்டென்றும்,
செப்புதற்கு  ஏலாமற் செய்து விட்டு நிற்கின்றாய்!
ஒப்பனையிற்  கூடிட்ட  ஒருவனை நீ வெறும்
கற்பனையிற் போட்டுக் களிக்கின்றாய்
புத்திரியே….!”
எனப்பாட்டு அந்த இலக்கியப் போட்டிக்கு
முனைப்பூட்டி நானெழுத முனைகின்ற போழ்து சீ
மாட்டி என்னருகே வந்து திருவாய் திறந்தே
“போட்டிக்குப் பாட்டுப் புனைகிறது போது முங்கள்
பாட்டுக்குக் (கு)
இருந்து கொண்டு பாப்புனைந்தாற்போதுமோ?
போட்டுத் தள்ளிவிட்டுப் புறப்படுங்கள்!
அன்னவளைக்-
கட்டிக் கொடுத்து “கரச்சலை” நீக்கிடுவோம்!
எட்டி நடந்து இனிவரனைத்   தேடுங்கள்,
என்றிரைந்தாள்!

உச்சவரம்பு! உயிர்குடிக்கும்
சீதனத்தால்-
அச்சமிகக் கொண்டு அலைகிறேன்!
எவ்விடத்தும்
“பிச்சை”கிடைக்காது பின்வாங்கி நான்வந்த
அச்சமயம்-
கருணை யுள ஒருவன்
கை கொடுக்க முன் வந்தோன்!
வரனை யடைந்த மகிழ்ச்சியாலே-
துள்ளுகின்றேன்!
கட்டிக் கொள்ள வந்தோன்! கற்றவன் தான்
தான் நடத்தும்
பழக்கடையொன்றின் பேருரிமைக்காரன்.
சற்று தலை மொட்டை
சம்பியனைப் போற் தோற்றம்!
முற்றும் உடல் முறுக்கு!
முப்பதுக்கு கீழ் வயது!
மாப்பிள்ளை கிட்டி விட்டார்!

மாத வருமான ஆசிரய மாமன் ,யான் என்றனுக்குப்
பூதா காரமான பொல்லாச் சுமைகள்!
ஏதும் மீதமில்லை! என்றாலுங் கல்யாண
மாது! எனது மகள் மணமகளாய் ஆகுவதை
யானினி மேல்-
விரும்பாதிருக்கலாமோ? வேண்டாமே இப்பொறுப்பு
பெரும்பாடு!
ஈதென்றே பேசாதிருக்கனுமோ?
ஆம்
வாழ்வுச் சுமையை வாஞ்சையுடன் ஏற்று,மணக்
கோலம் புனைந்து கொழுநரா யாக வரும்
மருகர் தம்மைக்கு-
கணையாழி ஒன்றினைக் கட்டாயமிடும்பொறுப்பு
மனையாளும் இந்த மாமனுக்கு உண்டல்லோ?
அதை நினைத்தே –
இறைவனை, யான்வேண்டி எழுதுகிற போழ்திற்
குறையாதே ! வந்து குடும்பத் தரசியே!
பொறுப்புப் புரியாய்ப் புருஷன் என என்னை
வெறுப்புக் கொண்டு விடாது
இருந்து  பார்!

போட்டிக்கு கவிதையைப் போட்டு-
முதற்பரிசை
ஈட்டிப் பணமெடுத்துப்  இலங்கு பொன்மோதிரத்தை
வாங்கி,
அவர் விரலில் வதுவை நாட் சூட்டி
 நீக்கித் துயர்…..பெரு மூச்சை..!
விடுகின்ற எண்ணத்தை விட்டு விடாமற்
பாடுகின்ற பாட்டோடு
பாட்டெழுதிப் போட்டேன்..!
மனையாளே…!
பார்     
நமக்கே தான் பரிசு…!

sk.risvi@gmail.com


மெய்யன் நடராஜ் இலங்கை கவிதைகள்!

1. முருங்கை மரங்களை அழித்துவிடுவது நல்லது.

மார்ச் கவிதைகள்!சர்வதேச அடுப்புகளில்
இப்போதுதான் புகைகிறது
நேற்றுகளில் நீங்கள்
நெஞ்சில் ஈரமின்றி
எரித்த ஈர விறகுகள்.

ஐ.நா.வின் வெள்ளாவிக்குப்
போயிருக்கும் உங்கள்
கறுப்பு ஆடைகள்
வெளுக்கும் என்பதில் 
ஊர்ஜிதங்களில்லை.

பூகம்ப ஜப்பானின்
அணு உலையாய்
கசியத்தொடங்கிய
உங்கள் அந்தரங்கங்கள்
அம்பலமாகிய பின்னாலும்
எரிமலையில் குந்திக்கொண்டு
கடற்கரை காற்று வாங்குவதாய்
சொல்வதை செவிடர்கள் கேட்டு
ஆனந்தப் படுகின்றார்கள்

இலட்சங்களின் வாழ்வை
இருட்டாக்கிய இலட்சியம் வென்று
விழித்துக்கொண்டு
கனவுகாணும் வசதியை
வழங்கிய உங்களால்
குருடர்களின் உலகம் பற்றி
உணர்ந்த நாங்கள்
எங்களுக்கான மொழியிருந்தும்
ஊமையாக்கப்பட்டதில்
ஊமைகளின் அவஸ்தை பற்றியும்
உணர்ந்து கொண்டோம்.

என்றாலும் எங்கள்
உரிமைக்குரல் கேட்டும்
கேளாது நடிக்குமுங்கள்
செவிட்டுத்தன்மையை
உணரத்தான் எங்களால்
முடியவில்லை.

ஒருவேளை நீங்கள்
நவீன வேதாளம்
என்பதாலோ என்னவோ
விக்கிரமாதித்தனாய்
நாங்கள் கூறும் எங்கள்
தீர்வுக்கதைகள்
கேட்டும் உங்களின்
பழைய முருங்கையிலேயே
ஏறிக்கொள்கின்றீர்கள்.

இனியும் உங்களிடம்
எங்கள் கதைகளை கூறுமுன்
வெட்ட வெட்ட தலைத்துவிடும்
ரத்தத்தில் வேரூன்றிவிட்ட
உங்கள் இனவாத
முருங்கை மரங்களை
இல்லாதொழித்துவிட்டு
வருவதுதான் நல்லது போலும்.

2. சந்தன மலரிதழ் சிந்திய தேன்தனில்

மார்ச் கவிதைகள்!சந்தன மலரிதழ் சிந்திய தேன்தனில்
 செண்பகம் குளித்து வந்தாள்
சாமரம் வீசிய பூமரம் பேசிய
 சங்கதி விழியில் சொன்னாள்
குங்குமம் நுதல்தனில் சங்கமம் ஆகிட
 குறுநகை பூத்து நின்றாள்
கொடியினை எடுத்தொரு இடையென கொண்டவள்
 குளிர்தரும் நிலவை வென்றாள்

திங்களும் தென்றலும் திருடிய மனதினை
 தேவதை திருடிச் சென்றாள்
தீண்டலில் உயிர்வரை சீண்டிடும் காற்றென
 தேகியை வருடிச் சென்றாள்
மன்மதன் அம்பினை புருவமாய் கொண்டவள்
 மனதினை துளைத்து விட்டாள்
மலரணை மீதினில் புதுக்கவி புனைந்திட
 மாதெனை அழைத்து விட்டாள்

இருபதை தாண்டிய இளமையின் தவமதை
 இளையவள் களைத்து விட்டாள்
அறுபதை தாண்டினும் அடங்கிட மறுத்திடும்
 ஆசையை விதைத்து விட்டாள்
திருமணம் எனுமொரு மருத்துவம் மாத்திரம்
 தீர்த்திடும் நோயை தந்தாள்
கருமங்கள் யாவுமே முடிவதற் குள்ளே
 கண்களை விட்டுச் சென்றாள்                       
                                                     

megathoothan001@hotmail.com


பேரதிசயம்

ஜுமானா ஜுனைட், இலங்கை.
 
மார்ச் கவிதைகள்!அந்திவரை வெயில் அழகும்..
பிந்திவரும் இருள் அழகும்..
வானுடுத்த உடுவழகும்..
பானுவிடும் கணையழகும்..
மண்ணுலகில் இல்லையெனில் –
மாந்தர் நிலை என்னவாகும்..?
 
“காற்று” வீச மறந்தால்..
ப+மி சுற்றமறுத்தால்..
மேகம் அசையாது போனால்..
தேகமும் உள்ளமும் என்னவாகும்!
 
புவி ஆகர்சம் இல்லையென்றால்..
“ஆக்சஸின்” வாயு அழிந்துபோனால்;;
நீர் வட்டங்கள் குழம்பி விட்டால்..
“வாழ்க்கை வட்டங்கள்” நிலையென்ன..?,
“கண்ணீர் வட்டங்கள்”தான் மீதமாகும்!

jjunaid3026@yahoo.com


மனநிறைவுடன்…

– சம்பூர் சனா –

மார்ச் கவிதைகள்!உன் உயிர் காக்க
வருபவன்
இன்னுயிராய் உனக்கு
என்றும் இருப்பான்…
இறைவனிடம் கேட்பேன்
என்றும் உனக்காக
பிரார்த்தனைகள் கோடி..
 
உலகத்தில்
எங்கணும்
அழைத்துச் செல்வான்..
உனக்கென
ஒரு பெயர்
சொல்லி அழைப்பான்..
 
உனை மட்டும்
தன் நெஞ்சத்தில்
நிறைத்து வைப்பான்..
 
உனக்காய் அவன்
என்றும் எங்கும்
உழைப்பான்…
 
தனக்கென ஓருயிர்
நீயென்பான்..
தாதவிழ் பூவினில்
வண்டாவான்..
திருக்கரம் கொண்டு உனைத்
தாங்கிடுவான்..
 
நீ அவன் முதல் சேய்
என்றிடுவான்..
இன்னும் உனக்காய்
ஆறேழினைக் கொடுத்திடுவான்…
உனை என்றுமே இன்பத்தில்
திளைக்கச் செய்வான்…!!
 
உன் முகம் கண்டு
தினமும் மலர்ந்திடுவான்..
உன் சிரிப்பினில்
தன்னுயிர்உடல் மறந்திடுவான்..
 
அழகே உந்தன்
நகைச்சுவையில்
அயர்வுகள் அனைத்தையும் கடந்திடுவான்..
 
ஆடைகள் உன்னுடன்
துவைத்திடுவான்..
சமையல்கள் உனக்காய்
செய்திடுவான்..
சமயம் பார்த்து
தலை கோதி விடுவான்..
 
தோழி என்றும் நீவாழ
பாடல் இது உனக்காக..
 
sampoorsana@yahoo.com