கண்ணீர்ப் பனித்துளி நான்
– ரொஷான் தேல பண்டார
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் –
மயிர் கூச்செரியும் கடுங்குளிரில்
நிலவுமறியாது
பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும்
கண்ணீர்ப் பனித்துளி நான்
ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும்
ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று
சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும்
கண்ணீர்ப் பனித்துளி நான்
நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில்
உனது வெளிச்சத்தை முத்தமிட்டு
அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும்
கண்ணீர்ப் பனித்துளி நான்
mrishanshareef@gmail.com
***************
கொள்வோம் செல்வாக்கு
– வே.ம.அருச்சுனன் – மலேசியா –
வாக்கு
உன்னைக் காட்டும்
நீ நல்லவனா, கெட்டவனா
என்பதை மறைக்காமல் உலகுக்கு சுட்டும்.
அருளாளர்
அளிப்பார் நல்வாக்கு
அதை ஏற்றால்
உனக்குச் செல்வாக்கு.
நல்லோர்
வழங்கிடும் வாக்கினிலே
நன்மைகள் பெருகிடும் உலகினிலே
சத்திய வாக்கு நிலைத்தாலே
பிறந்திடும் நித்தம் சுகவாழ்க்கை.
வாக்கு அளிப்பது எளிதாகும்
அதைக் காப்பது என்றும் அரிதாகும்
நியதியை உணர்ந்து
துல்லியமாய்ச் செயல் பட்டால்
ஏளனம் உன் வாழ்வில்
நிலைக் கொள்ளா.
தேர்தல் களத்தில்
உன் வாக்குப் பொன் வாக்கு
அரசியல்வாதிக்கோ உயிர் வாக்கு
உனக்குத் தருவார் பல வாக்கு
தாளம் தப்பாமல்
பாடுவார் கடவுள் வாழ்த்து.
அறிந்து வாக்களித்தால்
அமைந்திடும் நல்லரசு
அறியாமை வாக்கால்
அமைந்திடும் பேய் அரசு.
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை வரும்
அதிர்ஸ்ட தேவதையை
முறையாய்க் கவனித்துப்பார்
அறிவுக்கண்ணைத் திறந்து பார்
ஆத்மாவைக் கேட்டுப்பார்
அடுத்துவரும் தலைமுறையை
நினைத்துப் பார்
நிலையான வாழ்வு உறுதியா
என்றே அலசிப்பார்.
பச்சிளங்குழந்தையின் முகத்தைப் பார்
பால் தரும் அரசை எண்ணிப் பார்.
வாக்கை அளிக்கும் முன்னே
ஒரு கணம்….. ஒரே கணம்
ஞானத்தை அள்ளித் தந்த
பத்துமலை முருகனை நினைத்துப் பார்
நடந்தவற்றை மீள்பார்வை செய்துப்பார்.
உன் கையைக் கொண்டுதான் நீ
கரணம் போடவேண்டுமல்லவா ?
தெளிவுடனே
அளித்திடு நல்வாக்கு
கொள்வோம் செல்வாக்கு….!
arunveloo@yahoo.com
துளிப்பாக்கள்
– முனைவென்றி நா. சுரேஷ்குமார் (பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்) –
1.
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை
புண்ணாக்கு சுமக்கும் காளைகள்
2.
சர்க்கரை வியாதிக்காரன்
வியாபாரம் செய்தான்
கரும்பு
3.
பலாத்காரம் செய்யவில்லை
துகிலுரித்துவிட்டு நகர்கிறது
பாம்பு
4.
குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் (துளிப்பாக்கள்) – 8
4.1
கோலம்போட அவசியமில்லை
குழந்தைகளின் பாதங்கள்
வண்ணவண்ணக் கோலங்கள்
4.2
தூங்கவில்லை பொம்மை
கதைசொல்லத் துவங்கியது
குழந்தை
4.3
குழந்தைகளின் அரவணைப்பில்
அயர்ந்து தூங்குகின்றன
பொம்மைகள்
5.
புத்தாண்டு கொண்டாட்டம்!
புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!
இலவசங்கள் தந்தவுடன் வாய்பிளக்கிறோம்!
இன்னொருவன் வாழ்வையிங்கு கதையளக்கிறோம்!
பழரசம்போல் மதுகுடித்தே நினைவிழக்கிறோம்!
பரவசமாய் மாறியிங்கு பண்பிழக்கிறோம்!!
உரிமைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்கிறோம்
உணவிற்கு பிச்சையிங்கு நாம்எடுக்கிறோம்
அரசியலில் நேர்மைதனை நாம்தடுக்கிறோம்
அவரவர்க்கு கஷ்டமென்றால் போர்தொடுக்கிறோம்
கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே
இறந்தகால துன்பங்களை மறக்கவேண்டுமே
இளைஞர்களே வாழ்வினிலே சிறக்கவேண்டுமே
இறந்துபோன மனிதமிங்கு பிறக்கவேண்டுமே
இலவசத்தை விரும்பும்மனம் இறக்கவேண்டுமே
புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!
6.
ஏழைகளின்எதிர்காலம்?
எண்ணெய் பார்த்திராத கேசத்துடன்
எண்ணிலடங்கா சோகத்துடன்
உதிரம் உதிர உழைத்தும்…
வியர்வை வழிய உழைத்தும்…
கேள்விக்குறியாய் முதுகு வளைந்தும்…
இன்னமும் ஒருவேளை உணவின்றி
தண்ணீரின்றி கண்ணீருடன்…
நித்தமும் வாழும் ஏழைகளின்
விழிகள்வழி தெரியும்
எதிர்காலம் கேள்விக்குறிதானோ?
munaivendri.naa.sureshkumar@gmail.com
காற்றின் வலி!
– ரோஷான் ஏ..ஜிப்ரி –
என்னை அடக்கி வைக்க எத்தனிகின்ற
பெரும் முயற்சிகளை
தோற்கடித்தபடி
ஒலிக்கின்ற மொழியெனது
எந்த பூச்சாண்டிகளுக்கும்
அடிபணிந்து என் சுதந்திரத்தை
அடகுவைக்க இயலாதென்னால்
நெருக்கமாய் இருந்து சுவாசிக்கும் சக்தியும்
நெருப்பையே நெருங்கி ஊதிவிடும் உக்தியும்
தெரிந்தது எனக்கு மட்டும்தான் இங்கு
ஐம்புதங்களிலேயே உங்கள்
புலன்களுக்கு புலப்படாத புதினம் நான்
அளவு கருவிகளையே மீறும்
அதிசயம் தான்
எதிர்வு கூறுபவர்களையே எதிர்த்து மீறும்
வல்லமை பெற்ற வரலாறு எனது
மூங்கில் துளை தாவி இசை முத்தெடுக்கவும்
மூக்கின் வழி ஏகி உயிர் வித்தெடுக்கவும்
என்னால் இயலும்
நான் மழையோடுகலந்து நனைகிறேன்
வெயிலோடு உலர்ந்து விளைகிறேன்
மரங்களோடு சரசம் செய்து மகிழ்கிறேன்
மலர்களோடு உரசி தினம் மணக்கிறேன்
மனங்களில் கூடாகி
உயிர்கள் வசிக்க உறைவிடமாகிறேன்
நான் சுழன்றால் சுறாவளி
சுமுகமானால் தென்றல்
இளகினால் இதம்
இறுகினால் ஜடம்
காலம் காலமாய் உங்களுடன்
கைகுலுக்கி
ஆயுளுக்கு அருகாமையில்
தூய்மையோடு
துணை நிற்பவன் நான்
ஆனால்; இப்போதெல்லாம்
அளவுக்கு மிஞ்சிய உங்கள் ஆசை
கலப்படத்தை என்மீதும்
கரைத்து கலந்து விட்டீர்கள்
சுவாசிக்க முடியாது தலை சுற்றுகிறது
உங்களோடு எனக்கும்
ரசாயனங்கள் கலவை செய்தபடி
குப்பைகள் தெருவில் கொட்டி
ஊத்தைகளை சலவை செய்யாது
ஆயுளை குறுக்கி
அடுத்த சந்ததியை முடமாக்கும்
கனவான்களே,பணவான்களே
இப்போது சொல்லுங்கள்
உங்கள் வாழ்க்கையோடு
வலை பின்னலாயிருக்கும் என்னை
கையாலாகாதவன் என்று
கணித்து விடலாமா?
உங்கள் நினைவுகளுடன்
உழலும் என்மேல் சுமைகளை
திணித்து விடலாமா?!
rozhanajifry@gmail.com
நாங்களும் வாழுகின்றோம்!
– மெய்யன் நடராஜ் (இலங்கை) –
மானம் இழந்த பின்னும்
மரியாதை தேய்ந்த பின்னும்
மனசை தேத்திக் கொண்டு
மண்மேலே வாழுகின்றோம் .
ஈனப் பிறவி என்றும்
இழிவான ஜாதி என்றும்
ஏளன பேச்சு கேட்டு
இங்கே நாம் வாழுகின்றோம்
புருஷன் கண்ணி வெடிக்கும்
புதல்வன் காவல் வெடிக்கும்
பரிசாய் போன பின்னே
பைத்தியமாய் வாழுகின்றோம்
திலகம் அழிந்த பின்னும்
திக்கற்று போன பின்னும்
உலகம் அறியா குழந்தை
உயிருக்காய் வாழுகின்றோம்
உறவுகள் மறந்த பின்னும்
உரிமைகள் அறுந்த பின்னும்
சிறகுகள் முறிந்த கிளிபோல்
செழிப்பின்றி வாழுகின்றோம்
பாம்புகள் உலவும் காட்டில்
பசிக்கழும் குழந்தை யோடு
தேம்பியே அழுது நாமும்
தெம்பின்றி வாழுகின்றோம்
நாதிகள் அற்று இங்கே
நாங்களும் வாழ்ந்த போதும்
வீதியில் குழந்தை வீழ்ந்து
விடாமைக்கு வாழுகின்றோம்
வண்டுகள் சூழ்ந்த பூங்கா
வனமென வாழ்ந்த வீடு
குண்டுகள் அழித்த தாலே
குடிசையில் வாழுகின்றோம்
கோட்டை சாய்ந்த பின்னும்
கொடிகள் தாழ்ந்த பின்னும்
வேட்டை யாட வாழும்
விலங்கினமாய் வாழுகின்றோம்
ஐ .நா கேட்கு மென்றும்
அயல்தே சம்காக் குமென்றும்
பொய்யாய் நம்பிக் கொண்டு
பூமியிலே வாழுகின்றோம்
சுதந்திர சிறையி னுள்ளே
சுந்தர கைதி போலே
இதந்தரும் விலங்கு பூட்டி
ஏதோ நாம் வாழுகின்றோம்!