செப்டம்பர் 2013 கவிதைகள்!

செப்டமபர் 2013 கவிதைகள்!

மரங்களைப்போல்உ

பிச்சினிக்காடு இளங்கோ

அருவியென அன்புமழை பொழிந்த பெற்றோர்
    அரவணைத்து  மனம்குளிர வளர்த்த வர்கள்
உருவிழந்து முதுமைவந்து கொடிபி டிக்க
    உள்ளத்தில் தளர்ச்சிவர உடல்ந டுங்க
கருவிகளால் துணைக்கோலால் பார்த்தும் கேட்டும்
    கடத்துகிற வாழ்க்கையிலே இறுதி நாளில்
மருவுகிற குழைந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும்
    மரங்களைப்போல் நிழல்தந்தால் பெருமை கொள்ளும்

நீரூற்றி வளர்த்தபெரு மரங்க ளெல்லாம்
    நிழல்வழங்கி அரவணைக்கும் கனிகொ டுக்கும்
யாரூற்றி வளர்த்தார்கள் பார்ப்ப தில்லை
   யாரென்றும் எவரென்றும் கேட்ப தில்லை
வேரூன்றிப் போராடி வளர்ந்த பின்னே
   விளைகின்ற பயன்களெல்லாம் மக்க ளுக்கே
பாருக்கே மழைவழங்கும் பசுமை கொஞ்சும்
   பறவைகளும் விலங்குகளும் புசித்தும் மிஞ்சும்

நிழல்கேட்டு மரமலைதல் நீதி யாமோ
   நீர்கேட்டு கடல்வாடி போக லாமோ
உழல்கின்ற மனத்தோடு பெற்றோ ரெல்லாம்
   உருக்குலைந்து போவதற்கா பெற்றார் பிள்ளை
நிழலாக உடனிருந்து காக்க வேண்டும்
   நிம்மதிதான் அவர்முகத்தில் மின்ன வேண்டும்
விழலுக்கு இறைத்ததென எண்ண லாமா
   விதைத்ததெல்லாம் பதர்களென நோக லாமா

மனம்கனிந்து கருணையுடன் அணுக வேண்டும்
  மனம்குளிர்ந்து பெற்றோர்கள் மகிழ வேண்டும்
குணமுடைய குழந்தைக ளேநிலைத்த சொத்தாம்
  குன்றாத புகழுக்கும் அதுவே வித்தாம்
தனம்வேண்டாம்  தனக்குமிகு வளங்கள் வேண்டாம்
   தம்மைப்பார்க்க கேட்கதம்பிள் ளைஇருக் கின்றார்
எனஎண்ணும் மனநிலையே போதும் போதும்
  ஏங்காது வாழ்ந்திடுவார் நாளும் நாளு

pichinikkaduelango@yahoo.com


நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்

— எம்.ரிஷான் ஷெரீப் –

செப்டமபர் 2013 கவிதைகள்!

சந்திப்பதற்கான ப்ரியம்
பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து
ஆரம்பிக்கிறது
உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம்
தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக் கிளி

ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது
நீ பரிசளித்த அக் கிளி
சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை
கிளையில்லை ; ஆகாயமில்லை
ஒரு கூண்டு கூட இல்லை

நீ கவனித்திருக்கிறாயா
விரல்களை அசைத்தசைத்து
நான் ஏன் ஒற்றைப் பாடலை இசைக்கிறேனென

உனது கவனத்திற்கும் அப்பாலான எனது கனவிற்குள்
நீயறியாதபடி
இருக்கிறது திரைகளேதுமற்ற ஒரு வாசச் சோலை

உனது கிளி அமர்ந்திருக்கும்
இச் சீமெந்து வாங்கின் மூலையில்
ஆறிக் குளிர்ந்திருக்கின்றன இரு தேநீர்க் குவளைகள்
வாசிக்க மனமின்றி மூடி வைத்த புத்தகத்தில் பட்டு
மின்னுகிறது பொன்னந்தி மாலை

எனது சோலைக்கு நீ வரவேயில்லை

தோட்டத்தின் ஐங்கோணப் பலகை வேலி தாண்டி
பூஞ்சோலைக் காவல் சிறுமி
நரம்புகள் பூக்காச் சிறு கரங்களில்
கிளியை ஒரு குழந்தையென ஏந்தி
பறந்து கொண்டிருக்கிறாள்

mrishanshareef@gmail.com


இரைதேடும் …………..!      

-வதிரி-சி.ரவீந்திரன்-

செப்டமபர் 2013 கவிதைகள்!

நிரையாக ஒளிவீசி
நீளப்பயணம்!
விரைவாக செல்ல விசைகூடும்.
கனமான வாகனங்கள்
களைப்பின்றி ஓடும்.
சொம்பல் முறித்து
கனவுகளை அடகு வைத்து
நல் நினைவுடனே
நாளாந்தம் பயணிக்கும்.
விழிப்புக்கு
கட்டுபடியாக ஊதியம்;
வழியில் கிடைக்கும்
ஆகாரம் தானமாகும்.
பல உயிர்களை
பாதுகாத்து பயணம்
நீளும்!
சினிமாப் பாடலும்
இனிப்பு பண்டமும்
விழிப்புக்கு துணையாகும்.
எல்லோரும் தூங்கினாலும்
இவன் மட்டும்
தன் தொழிலோடு…..விழிப்பாய்
இரவு பயணத்தில் இரைக்காக
துயில் கொள்ளா மனிதனாக
விழிப்பிருந்துஉயிர்காத்து
நீளும் இவன் பயணம்!

வழிக்கு வழி
கைகாட்டி,சமிக்கையிட்டு
நிறுத்தப்படுகையில்
இவன் கைகள் குலுக்கும்
குலுக்குவது மட்டுமல்ல
இவன் மனமும் சிணுங்கும்.
உழைப்பின் ஊதியத்தை
இரைதேடும் கழுகு பறவைகள்
கறக்கும்போது………….
இதுஎன்னவாழ்வு என கேட்கும்
இரைதேடிய கழுகுகள்
சொற்பநேரத்தில்
தங்கள் உணவைச் சேகரித்து
தங்கள் குடிசைக்குள் வாசம் புரியும்!
உழைப்புக்கு வந்தவன்
களைப்போடு
கால் வலிக்க
விடியலுக்குமுன்
கடமை முடிந்து
இறங்குகிறான்.
இவனைப்போல…..பலர்
தம் இரைக்காக உழைக்க
இவர்களிடம் இரைபறித்துண்ணும்
கழுகுகள்
இலகுவாக தம் வயிற்றை நிரப்பி
அடுத்த பொழுதுக்காய்
பகல் தூக்கம் கொள்கின்றன!

vanampaadiravi@yahoo.com


கல்வி ஒழுக்கம்

கலைமகள் ஹ்தாயா ரிஸ்வி -இலங்கை

செப்டமபர் 2013 கவிதைகள்!

கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்

வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
வலம் புல பெறுவோம் நம்பி க்கையிலே
யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
(கல்வி ஒழுக்கம் )

பூத்திடும் மலர்கள் சோலையிலே
புலர்ந்திடும் விடியில் காலையிலே
ஆரத் தெழுவோம் நலம் செர்த்திடுமே
அன்பினை உலகெங்கும் ஊ ட்டிடவே
(கல்வி ஒழுக்கம் )

ஊடகமென்பது உலகாளும்
உன்னதமான செயலாகும்
நாடக உலகம் நமதாகும்
நன்மைகள் உழைப்பில் விளைவாகும்

கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்


விட்டுச் சென்ற தாய்க்கு தொட்டுச் செல்லும் வரிகள்!

– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை  –

செப்டமபர் 2013 கவிதைகள்!

பத்து  மாதம்  சுமந்தே என்னைப்
பரிவுடன்  வளர்த்தவள்  உம்மா !
இத்  தரை  தன்னில் இவளருந்  தியாகம்
எழுந்தே  தொட்டிடும்   விண்ணை .!

கண்ணே !என்று  இமையைப்  போலே !
காத்திருப்பாள்  இவள் நிதமே !
பொன்னே என்றும்  பூவே என்றும்
பொலியும்  அன்போர்  விதமே !

ஈ யோடெறும்பு  எதுவும்  அணுகா (து )
இனிதாய் வளர்த்த  உள்ளம் !
ஒளிரும்(தோயும் )அன்புச் சுடரால்  என்னைத்
துலங்க  வைத்தால் !உய்வோ,ம் !!

பள்ளிப் பாடம்  சொல்லித்  தந்தே !
பண்பாய்  அனுப்பி  விடுவாள் !
வெள்ளி பூத்தே விடியும்  வானாய்
விளங்க  அனைத்தும்   இடுவாய் !

பட்டம் பெற்றே  பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க   வைத்தாள் !
தொட்டுப் பேசித்  துணையாய்  நிற்கும்
தூய  உள்ளம்   உம்மா !

உதிரம் தன்னைப்  பாலாய்  உதிர்த்து
ஊ ட்டி  வளர்த்தவள்  உம்மா
உள்ளத்  துணர்வில்  வாழும்  இதயம்
இவளை  மறவேன் மண்ணில்

sk.risvi@gmail.com


குள்ள நரிப் புத்தி

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

செப்டமபர் 2013 கவிதைகள்!

நம்மில் …
நம்பிக்கையற்றவர்கள்
ஏமாற்றக்காரர்கள்
உள்ளவரையில்
எம்முரிமை
கேள்விக் குறிகளாகவே
கணிப்பிடப்பட்டுக் கொண்டிருக்கும் .

தேர்தல் காலங்களில்
போலி வார்த்தைகளை
தேனாய்க் கொட்டும்
துரோகிகள்  (பொய்யர்கள்  )
எமக்குத் தேவையில்லை

மக்களுக்கு
பாசம் காட்டி
வேஷம் போடுவோருக்கு
தன்னுரிமையை வழங்கிடாது காப்போம் ..!

எங்களுக்கு
தொழில் வாய்ப்புக்களை
பெற்றுத் தருவதாக
வாக்கு உரிமைகளை
விட்டுச் சென்றவர்கள்
எங்களிடமிருநத
மன நிம்மதியினையும்
இழக்கச் செய்து விட்டனர் .

தான்தோன்றித்தனம் தான்

இவர்களின்
குள்ள நரிப் புத்திகளால்
மிதிக்கப்பட்ட
துவைக்கப்பட்ட
நம் சமூகம் இன்று
சுடர் விட்டு எரியும் பிரச்சினைத் தீயில்
சாம்பலாகிக் கொண்டிருக்கின்றது ..!

மத பேதம் எதுவுமின்றி
மான மரியாதையோடு
வாழ்ந்து கொண்டிருந்தசமூகமும்
சித்ரவதைகளுக்கு –
உள்ளாக்கப் பட்டுவிட்டன .

அராஜக அடக்கு முறை
அட்டகாசங்களினால்
தன மானம்
தலை குனியும் வேளைகளில்
வாயிருந்தும் ஊமையர்களாய் …,
காதிருந்தும் செவிடர்களாய்  …
கண்ணிருந்தும் குருடர்களாய்
பணம்
பட்டம்
பதவிகளுக்காய் ..
முண்டமாய் மாறி நிற்கின்றன ..!

இதயங்களை இழந்து விட்டு
செல்வாக்கில்
வளம் வந்து கொண்டிருக்கும்
பச்சோந்திகள்
அரசியலில் உள்ளவரை
மண்ணில் வாழும் வரை 
எங்கள் சமூகம்
என்றென்றும்
திசையறு கருவிய்ற கப்பலாகவே
பயணிக்கும் ..!

s.k.risvi@gmail.com


அழகாக வாழ்த்துங்கள்!

மேகதூதன்

செப்டமபர் 2013 கவிதைகள்!

சந்தோஷ ராகங்கள் எடுத்து
..சங்கீதம் பாடுங்கள்
சந்தேக மேகங்கள் களைத்து
..சன்மார்க்கம் தேடுங்கள்
மந்தகாசம் இதழோரம் தொடுத்து
..மழையாக பெய்யுங்கள்
வந்ததுயர் மாறட்டு மென்று
..வசந்தத்தை நாடுங்கள்
இல்லாத பொருளுக்காய் வாழ்வை
..இல்லாது ஆக்காமல்
செல்லாத பயணத்தால் நெஞ்சை
..செல்லரிக்க வைக்கமால்
பொல்லாத எண்ணத்தால் பிறரை
..புரியாது வாடாமல்
நல்லெண்ணத் தோடென்றும் நீங்கள்
..நல்வாழ்வு வாழுங்கள்.
நிறுத்தங்கள் கண்டாலும் அங்கு
..நிறுத்தாத பேரூந்தாய்
இருக்கின்ற காலத்தில் யார்க்கும்
..ஈயாது வாழாமல்
வருத்தங்கள் கொண்டோர்க்கு துன்பம்
..வழிந்தோட வைக்கின்ற
அருத்தத்தைக் காண்பித்து மண்ணில்
..அழகாக வாழுங்கள்.
 
megathoothan001@hotmail.com


நாமே சக்தி

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

செப்டமபர் 2013 கவிதைகள்!

எழிலுரு  உலக மாதா
இதயமாம்  இளைஞர்  சக்தி !
தொழிலெனும்  கருவி கொண்டு
துரத்துதல்  ஆகும் ! பொல்லா ,
இழி விருள்  வறுமை  தன்னை
இரவியை மிளிரும் தூய
இளைஞரே  ஒன்று கூடி
இன்பமாய்  உழைக்க  வாரீர் !

பள்ளியில்  படித்தோம் !மேன்மை
பட்டங்கள் பலவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி  பூண்டு
குவலயம்  தன்னை  மீட்க
தெள்ளிய உணர்வி  னோடு
திறம்பட  உழைத்து  மண்ணை
வெள்ளிடை  மலையாய்  என்றும்
விளங்கிட வைக்க வாரீர் !

காடுகள்  மாய்த்து  நல்ல
கழனிகள்  உண்டு பண்ணி
மேடுகள்  வலம் படுத்தி
மேன்மை சேர் பயிர் வளர்த்து
வாடிய முகங்கள் யாவும்
வசந்தமே !கண்டு பாடி
கூடியே  மகிழ்ந்து  வாழ
கூடியே  உழைக்க வாரீர் !

ஏர்பிடித்  துழுவோம் !நல்ல
எந்திரம்  துணையாய்க் கொள்வோ!
போர்வைகள்  தம்மை  நீக்கி !
புதுமைகள்  உழைப்பில்  செய்வோம்
கார் மழை  தன்னைத்  தேக்கி
காசினிக்  குதவும்  வண்ணம்
சீர்மையாய்ப்  பயிருக்குப்  பாய்ச்சி !
செகமது  செழிக்கச்  செய்வோம் !

தேயிலை  இறப்பர்  தெங்கு
சிரித்திடும்  வயலின் நெல்லு !
ஆயநற்  கனிகள் நூறும்
அறு  சுவைக்  குதவும்  யாவும்
நேயமாய்  வளர்ப்ப   தாலே !
நிலத்திடை  வளங்கள் கூடும்
சாயந்  திடும் கதிர் வளத்தால்
தலையை  நாம் நிமிர்த்த  லாமே !

இளைஞர்  கை  இணைந்தா லிங்கு
எங்கிலை  அபிவி  ருத்தி ..?
வளை கரம்   வாளை  ஏந்தி
வயற்  கதிர் அறுக்கும் போதும் !
களைதனைப்  பிடுங்கி வீசி
காரிய  மாற்றும்  போதும்
களைந்து  போகும்  வறுமைக்  கோடு
காணுமே !வளத்தை நாடு !

உயர்வுக்கு  இளைஞ்ர் சக்தி ,
ஒன்று பட்டினையு  மானால் !
நயம் பல வந்து கூடும்
நலிவுகள்  மறைந்து  ஓடும்
புயங்களை  உயர்த்தி  யிந்தப்
பூமியை  பசுமை  யாக்க
செயற்பட  எழுமின் !எங்கள்
இளைஞரே ! நாமே !சக்தி !


வெளிநாட்டார் நாடாளுமன்றம்           
    
 வே.ம.அருச்சுணன் –  மலேசியா 
 
செப்டமபர் 2013 கவிதைகள்!

இன்றைய  நடப்புகள்
நாளைய வரலாறு அல்லவா
மனத்துள் பல்வேறு பிம்பங்கள்
வியப்பில் நிழலாடுகின்றன சில
செவிகளுக்குத் தேனாகவும் பல
குளவிகளாய் காதில் புதுமனைப் புகுவிழாவை
விமரிசையாகவும் நடத்துகின்றன……….!
 
அருவியாய்த் தவழ்ந்த பூமி
அன்னியரின் படையெடுப்பால்
தடமாறிப் போனதேனோ……?
 
மூவினமும் சேர்ந்த பெற்ற
சுதந்திரத்தை நடுவீதியில்
தாரைவார்த்தல் முறையா……?
 
மலாய் மக்களுக்குச் சிறப்புவழி
வானுர்ந்த சொகுசு வாழ்வு
சீனருக்குத் தனிவழி
எதிலும் போதாதென்ற சுயநலப்போக்கு
தமிழருக்கு மட்டும் வாழ்வே மாயம்தானா ?
 
என்ன கொடுமை இது
பிரமனும் நம்மை சபித்துவிட்டானா
ஆள்பார்த்து ஒதுக்கிவிட்டானா……?
 
ஆதியிலே வந்தகுடி
காட்டையும் மேட்டையும் அழித்து
தன்னையும் இலட்சம் இலட்சமாய்
அழித்துக் கொண்ட  தமிழனுக்குத் திருவோடு
நிரந்திரமாய் வாழ்வதோ தெருவோடு……..!
 
கள்ளக்குடியினர் இங்கே தொழில் மேதை
அனுமதிச் சீட்டில் அரசின் கம்பீரமுத்திரை
துணிக்கடை,பழக்கடை,மளிகைக்கடை,மதுக்கடை இன்னும்
கணக்கில்லா கடைகளெல்லாம் அன்னியர் மயமாகி 
வியாபாரம் தூள்பறக்குது
வெற்றிக் களிப்பு ஓங்காரமிடுகிறது
தட்டிக்கேட்க ஆளில்லை
தமிழனுக்கோ நாதியில்லை………!
 
வயிற்றுப்பாட்டுக்குத் தெருவோரமாய்
வெற்றிலைக் கடைவிரிப்புக்கு
பண்டராயா அதிரடி அனுமதி மறுப்பு
கேள்வி கேட்ட குமாருக்குப் பல்லுடைப்பு
ஜாமினில் எடுக்க
கர்பாலுக்கு அவசர அழைப்பு
நாடாளுமன்றத்தில் தீர்மானம்
குலசேகரன் தலைமையில்
பலம் பொருந்தியக் குழுவமைப்பு…..!
 
வெளிநாட்டார் தர்பார்
விரைவில் முடியட்டும் நாட்டில்
மூவினத்தின் மாண்பு  நாடெல்லாம்
மீண்டும் ஜொலிக்கட்டும் ஒன்றுபட்ட
மலேசியர்கள் நாமென்றே கைகோர்த்திடுவோம்
அயல்நாட்டார் நம்மை வாழ்த்தி விடை பெறட்டும்
தன்மானச் சிங்கங்களாய்த் தமிழர்வாழ்வு
மறுபடியும் ஓங்கி வளரட்டும்………..!
 
வெளிநாட்டார் நாட்டாமைக்கு எதிராக
‘நம்பிக்கை வை’ பிரதமரின் முதல்
ஓட்டு தவறாமல் விழட்டும் நாட்டில்
தமிழர்  வாழ்வு சிறக்கட்டும்……! 

arunveloo@yahoo.com


அணு உலை!

– சாமிநாதன் –

செப்டமபர் 2013 கவிதைகள்!

என் கர்ப்பிணித் தாய்
அணு சாம்பல் தின்கிறாள்
கூடங்குளத்தில் ….!
என் மூளையில் கதிரியக்கம் .
வெட்டி தொங்கவிடப்பட்ட
ஆட்டின் சதை போல துடிக்கிறது
பின் வரும் சந்ததியை நினைத்து .
உலையின் குறி
கடல் வெளியெங்கும்

zerosami@yahoo.co.in


உருமாறும் வசவுகள்

– மு.கோபி சரபோஜி,. இராமநாதபுரம் –

செப்டமபர் 2013 கவிதைகள்!

பத்தாண்டாகியும்
பாலூட்ட வக்கத்தவலென
சபித்தவர்களின் வசவுகள்
மலரா பூக்களாய்
மலர்ந்த மலர்களாய்
உவந்த வார்த்தைகளாய்
உறை நீங்கா வாழ்த்துகளாய்
வருடந்தோறும் உருமாறி
முகம் பார்க்க வந்து விடுகிறது
எந்தவித குற்றவுணர்வுமின்றி
என் திருமண தினத்தில்!
நீள்கிறது…….!

nml.saraboji@gmail.com