ஆடுஅழுத கண்ணீர் கொடுவாள் அறியாது ….!
– மட்டுவில் ஞானக்குமாரன் –
சோவென வீசிய
ஊழிப்பெருஞ்சூறையில்
சிறகு விரிக்கத் தெரியாமல் சிக்கிப்போனதொரு சின்னப் பறவை
எந்த மதம் சொன்னது
ஒரு பெண்ணை காம வெறிகொண்ட ஆடவர்
முன்னை நிறுத்தி
ஆடைகளைந்து
கேவலப்படுத்தச் சொல்லி
எந்தப் போரியல் விதி சொல்லியது
வெறுங்கையோடு நிற்கும் பெண்ணை
அம்மணமாக்கிய பின்னே அவளை சிதைத்துப்
பிணமாக்கச்சொல்லி
புத்தனின் பரி நிர்வாணத் தத்துவத்தை
யார் வந்து
பிழையாகச் சொல்லித்தந்தது
களத்திலே
குறியோடு திரியச்சொன்னதை
தவறாக புரிந்து கொண்டதாலா
உன்னை குறிகளால் துளைத்தெடுத்தார்கள்.
சுந்தரத்தமிழில் பாடிக்கழித்த வாய்
அந்தரக்குரல் கிழிய கத்திய போதும் வரலியே யாரும்
சேலை தர
வார்த்தைகள் அற்ற வலிகள்
அழுத கண்ணீர் உப்புக்கரிக்கும்
வடிந்த குருதி வலி சொல்லும்
வீசும் வாடையில் வீசுகிறது பிணவாடை
அந்த வாடையிலே கூட
காடைகள் பிய்த்துத் தின்ற உனது சாவொலியின் வாடை
துச்சாதனன் கூட்டத்திட ம் ஆடை கேட்டு அழுதவளே
ஆடுஅழுத கண்ணீர் கொடுவாள் அறியுமா
மீன்களின் வேதனை
வலைகளுக்குத் தெரியுமா
ஐயோ அது நானல்ல என்பது பொய்ய என
கூக்குரல் போட்டும்
யாரும்வாராத காரணத்தினால்
அக் கூக்குரல் சாக்குரல் ஆனது
நீ விரும்பியிருந்தால் ஏதோ ஒரு பனிவிழும் தேசத்தில்
போரின் பேரைச் சொல்லி வாழ்க்கை நடத்தியிருக்கலாம் த
வறியதால் தானோ
மன்னம் பெரியை போல நீயும் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டாய்
ஆனால் நீ கெஞ்சிய வார்த்தைகள் மட்டும் இன்னும்
மிச்சமாய் ஒலிக்கிறது ஒளிநாடாவில்.
ஊமை உள்ளங்கள்
– வி. சந்திராதேவி – நமுனுகுல (இலங்கை) –
பாசத்தில் வேசங்களை பார்த்து
பழகிய எனக்கு உன் பாசமொரு
இன்ப அதிர்ச்சியடி!
வாசத்தை மணந்ததுண்டு
உண்மை நேசத்தை
உணர்ந்ததில்லை
இன்று உன்னால் உணர்ந்தேனடி
இவ்வுலகில் மனித ஜென்மம்
மரணிக்கவில்லையென்று!
உன் இரக்கமனசை
வரவேற்கும் அதே நிமிசம்
இவ்வுலகைப்பற்றி கொஞ்சம் கூறுகிறேன்
கேள்!
உண்மைகளையும்இ பாசங்களையும்
இவ்வுலகம்
புதைத்துக்கொண்டிருகின்றது
யாரையும் நம்பாதே!
பைத்தியகாரி!
என்னைக் காணவில்லையென்று
உன் மனம்
நோகுகிறதென்றாயே
உன்னை உயிர்வாழ வைக்கும்
காற்றுக்கூடதான் உன் கண்ணில்
தென்படுவதில்லை
அதனால் காற்று இல்லையென்பாயா?
பாசங்கள் உருவமாவதை விட
அருவமாக இருப்பதே
அழியாமலிருக்கும் அன்பே!
.
உண்மை அன்பை உரத்துக் கூறவேண்டும்
என்று எண்ணுகிறாயே
அப்படியானால் ஊமைகளெல்லாம்
அன்பற்றவர் என்பாயா?
என் அன்பு அப்படிதான்
புரிந்துக்கொள்!
நான் வரிகளில் இனிமையாய்
எழுதி முடிக்க என் அன்பு
சிறுகதையல்ல
என்றுமே முடியாத
தொடர்கதை!
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று எழுதிய சில காதல் கவிதைகள்
– முனைவென்றி நா. சுரேஷ்குமார் –
‘
என் கனவுலகில்
எப்போதும் இருள்சூழ்ந்ததில்லை.
அதோ தூரத்தில் தெரிகிறாள்
என் வெளிச்ச தேவதை
————————————
படிக்கும்போதும்
வீட்டுநினைவு வந்ததாய்
சொன்னாய் நீ.
அந்த நூலக வாசலில்
ஆறுதல் சொன்னேன்.
நீ அன்பாய் பார்த்த
அந்த நொடியில்
விதையாய் விழுந்து
விருச்சமானதடி
நம் காதல்
————————————
தோழியென்றே பழகிவந்தாய்
‘யாரையாவது காதலிக்கிறாயா?’
என்றாய்.
‘இல்லையே’ என்றேன்.
‘பொய் சொல்லாதே’ என்றாய்.
‘நிஜமா இல்லப்பா’ என்றேன்.
‘அதான்
என்னைக் காதலிக்கிறாயே…’
சொல்லிவிட்டு
ஓரக்கண்களால் முறைத்தவாறே
எதிர்த்திசை நோக்கி
மெல்லமெல்ல தவழ்ந்தாய்
வேற்றுகிரக வாசியாக
மாறிக்கொண்டிருந்தேன் நான்.
————————————
என் வீட்டில் தவழ்கிறது
என் மகளென்ற பெயரில்
ஒரு பொம்மைக்குட்டி
உன்னைப் போலவே…
————————————
நம் குழந்தையை
கொஞ்சும் சாக்கில்
என் மீசையை பி(க)டித்திழுத்து
விளையாட ஆரம்பித்தாய்.
உனக்கு
இன்னொரு குழந்தையாய்
மாறிப்போனது
என் மீசை
————————————
வாழைக்கன்று மாங்கன்று
மல்லிகைக்கொடி ரோஜாச்செடி
என எனக்காக
நீ வளர்த்ததைப் போலவே
நீ பி(க)டித்திழுத்து விளையாட
உனக்காக வளர்த்து வைத்திருக்கிறேன்
என் மீசையை…
————————————
இனிமேல் உன்னை நினைத்து
கண்ணீர் விடப்போவதில்லை நான்
என்னுள் இருக்கும் நீ
என் கண்ணீர் வழி
கரைந்து விடுவாய் என்பதால்…
————————————
உன்னை
செல்லங்கொஞ்சி அழைப்பதால்
நீ என்
செல்லமாகி விடவில்லை.
நீ செல்லுமிடமெங்கும்
என் நினைவுகள் சுழல்வதால் தான்
நீ என்
செல்லமாகி விட்டாய்
————————————
உன்னைத் தேடி வேறெங்கும்
அலையப் போவதில்லை
நான்.
கண்கள் மூடி
எதைப் பற்றி யோசித்தாலும்
முண்டியடித்துக் கொண்டு
முதலாவதாய் வந்து நிற்கிறாய்
நீ.
munaivendri.naa.sureshkumar@gmail.com,
மவுனமாய் அழுகின்றது
– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை –
இறைஇல்லம் தாக்கப்படும்
போதெல்லாம்
மவுனமாய் அழுகின்றது
மனமொன்று !
ஷைத்தான்களை விட்டும்
துரத்தியடிக்கப் பட்ட ….
ஈமானிய கல்புகள் –
இன்று அன்னியரின்
தொல்லைகளுக்குள்
சிறையாகிப் போனது .
பிறந்த மண்ணில் (சொந்தமண்ணில்)
அடி வேர்களுடன்
பிடுங்கி வீசப்பட்ட மக்கள் பிரநிதிகள்
வாயிருந்தும் ஊமைகளாய்
நாயிலும் கேவலமாய்
அரசியல் சிம்மாசனத்தில் !
மனிதவுள்ளங்களின்
வேதனை –
மூச்சுக்களில்
சுவாசமாய் மாறும்
தொலைந்து புதையும்
சுய நல வாதிகள் !
மனித இதயங்களை
ஏமாற்றி வாழும்,
அடுத்தவர் உரிமையில்
அத்துமீறல் செய்யும்
மனித அட்டைகள்
உயிர் குருதிகளை
ஊறிஞ்சிக் குடிக்கும்
தன்னாசைகளைத் தீர்க்கும் !
அதனால் ,
இறைஇல்லம் தாக்கப்படும்
போதெல்லாம்
மவுனமாய் அழுகின்றது
மனமொன்று !