நவம்பர் 2013 கவிதைகள் -2

அக்டோபர் 2013 கவிதைகள்!

நிழல் தேடும் நியம்

– நெற்கொழு தாசன் –

திரண்டெழும்  ஏக்கத்தின் கனதி சுமந்த வேர்கள்
நீர்ப்பிடம் தேடியலைந்து
வெடித்துக்கிளம்ப எத்தனித்து
கேவல்களுடன் ஒடுங்கிப்போகிறது.

இந்த
தோட்டத்தின் அந்தரங்க இருளில்
அரங்கேறுகிறது அவலநாடகம்.

வெற்றிடத்தில்
எதிர்கொள்ளவியலாத மௌனம்

உள்ளெழுந்த விரிசல்களும்
எதிர்பார்ப்புக்களும்
கௌரவவிம்பத்தால் புறக்கணிக்கப்பட
எழுகிறது முடிவற்ற ஈனக்குரல்

இப்போதெல்லாம்  நான் கேட்பது
பரிபூரண சரணடைதல் ஒன்றையே.
காலம் ஒப்பனைகளுடன் கூடிய நேசித்தலை சுமத்துகிறது.

சபிக்கப்பட என் இதயமே,
எந்த விலக்கப்பட்ட கனியை உணவாக்கினாய் ?
மக்கிக்கிடக்கும் இந்த எலும்புகள் மீது
இனி எக்காலம் எவரால் கங்கை பாயும் ?

எங்கோ தொலைவில்,
வசந்தகாலக் கனவில் பாடிக்கொண்டிக்கும்
பறவையின்  குரல் சுமந்து தொடுகிறது காற்று.
 
netkoluthasan@gmail.com


இருளில் புதையும் எழுத்துக்கள்….!

– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அக்டோபர் 2013 கவிதைகள்!

பொறாமைத்தீ மனதில் எரிவதனால்
நம்மில் –
புகை குப்பைகள்

உள்ளவரையில்
அறியாமையின் அகங்காரம்

தலைககனம் பிடித்தாடிக்
கொண்டேயிருக்கும் ..!

திறமையானவர்களை 
இருளில் புதைக்கும்
துரோகிகள்
இனிமேலும்
எம்முறவுக்குத் தேவையில்லை

பத்திரிகைகளுக்கு
தூசு தட்டி
எழுத்துக்களுக்கு
தடை விதிக்கச் சொன்னவர்களை
நடுத்தெருவில்
எச்சில்களாய்ப் பார்ப்போம் !

வேடிக்கை என்ன வென்றால்
எங்களுக்கு
கவிதைகளின் விலாசம்
பெற்றுத் தருவதாக
எழுத்துக் குவியல்களை
அள்ளிச் சென்றவர்கள்
எங்களிடமிருந்த
நல்லென்னங்களையும்
நாசமாக்கி விட்டுச் சென்றனர்
பொறாமை புகைச்சளோடு தான் …!

இவர்களின்
சூதாட்ட குணங்களினால் 
சுரண்டப்பட்ட
நம் கலையுலகம் இன்று
வீதியில் விமர்சனமாய் நிற்கின்றது !

தூரங்கள் எதுவுமின்றி
எழுதிக் கொண்டிருந்த
கவியுள்ளங்களும்
முடமாக்கப் பட்டு விட்டன

அடக்கு முறை
பேச்சுக்களால்
உரிமைக் குரல்கள்
உருக்குலையும் வேளைகளில்
ஐஸ் கட்டிகளாய்
மனசு கரைந்து விடுகின்றன

இதயங்களை
கழுவி விட்டு
பதவியில
நறுமணம் பூசிக் கொண்டிருக்கும்
பச்சோந்திகள்(நய வஞ்சகர்கள்)
வாழும் வரையில்
ஈழத்து பெண் இலக்கியம்
என்றென்றும்
இருளினுள்ளேயே
இருக்கும் ….!

sk.risvi@gmail.com
05/11/2013


பேராசிரியர் கோபன் மகாதேவா கவிதைகள்!

 

 அன்று நன்றோ? இன்று நன்றோ?
என்று மென்றிடல் ஒன்று.
இன்றில் , அன்றே நன்று என்றோ,
அன்றேல் இன்றே, என்றோ…
மன்றில் வென்று, சென்று குன்றில்
நின்று, குழறல் ஒன்று.

இன்றும் நன்றே, அன்றும் நன்றே
நின்று சிந்திப்பார்க்கு!
நன்றும் உன்டே அன்றில்,
துன்பும் உண்டே அன்றில்,
நன்றும் உண்டே இன்றில்,
துன்பும் உண்டே இன்றில்.

என்றும் நன்றே என்றோ,
என்றும் துன்பே என்றோ..
ஒன்றும் என்றும் இல்லை
என்று ஒன்றல் நன்று!

2. சித்திரச் சிரிப்பு!

பிக்காசோவின்
இச்சித்திரம்
அபாண்டத்திலும்
அபாண்டம்…
புரியாத புதிர்..
நேரத்தை விழுங்கும்
பயங்கரப் பூதம்..
என்றான் ஒருவன்
கண்காட்சி ஒன்றில்.

பக்கத்தில் நின்ற
பிக்காசோவின்
பரம விசிறிக்குப்
பொங்கியது கோபம்
பொத்தென்று.

சட்டென்று விட்டான்
குத்தொன்று..
விமர்சகனின் வாயுக்கு.

மண்ணில்
மயங்கி விழுந்த
விமர்சகன்,
சுய நினைவு
திரும்பிய பின்,
கண் திறந்து…
படுத்திருந்தபடியே
மறுபடியும் பார்க்கையிலே..

அதே சித்திரம்
அவனைப் பார்த்து…
அர்த்தம் பல புரிய
அழகாகச்
சிரித்தது.

3. இயற்கை மருத்துவர்கள்!

வயிற்றுப் பசி தீர்க்க…
மலரிடம் பறந்து
ஓடோடிச்செல்லும்
தேனீக்கள், அறியா…
தாங்கள்
திறமையாய்த் தன்னியங்கும்
இயற்கை மருத்துவர்கள்
என்று.

ஏனெனில்..
அவற்றின் மூளை
அணுவளவே!
அத்துடன் அவை…
பிறவிக் குருடும் என்பர்.

எனவே, மலரோ..
தான் பெரிதாகிப்
பருவமடைந்தவுடன்…
வெட்க உணர்வு
ஒன்றுமே இன்றி…

தன்னுடம்பைத்
திறந்து வைத்துக்
காத்திருக்கும்…
தேனீக்களின்
வருகை வரை..
கர்ப்பம் தரிப்பதற்கு!

professorkopanmahadeva@yahoo.co.uk

நவம்பர் 2013 கவிதைகள் -1

 

 

 

 

1. அன்றோ? இன்றோ?