கனடாவில் இயங்கிவரும் ஒன்ராறியோ தமிழ் ஆசியர் சங்கத்தின் பரிசளிப்பு விழா – 2013 சென்ற சனிக்கிழமை 25-05-2013 கனடா கந்தசுவாமி கோயில் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஒன்ராறியோ கல்விச்சபைகளில் கல்விகற்கும் சுமார் 2000 தமிழ் மாணவர்கள் பங்குபற்றிய தமிழ் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குகான பரிசளிப்பு விழாவாகவும், கலாச்சார நிகழ்வாகவும் இது அமைந்திருந்தது. மங்கல விளக்கேற்றல், கனடாப்பண், தமிழ்த்தாய்வாழ்த்து, அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து ஆசிரியை திருமதி. ரஞ்சனா சிவகுமாரனின் வரவேற்புரையும் அதைத் தொடர்ந்து ஆசிரியை குமுதினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது. சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் ஒன்ராரியோவில் கல்விபயிலும், பாலர் நிலையில் இருந்து எட்டாம் தரத்திற்கான பரிசு பெற்ற மாணவர்களுக்கு விசேட விருந்தினர் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தனர்.
தொடர்ந்து ஆசிரியை வசந்தா தர்மசீலனின் தலைமையுரையும், ஆசிரியை ஜெயந்தி இரட்னகுமாரின் மாணவிகளின் வீணை இசையும் இடம் பெற்றன. அடுத்து செந்தில்நாதன், கந்தசாமி கங்காதரன், கமல்பாரதி ஆகியோரின் நகைச்சுவை நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து நடன ஆசிரியை செந்தில்செல்வி சுரேஷ்குமாரின் மாணவிகளின் நடனங்கள் இடம் பெற்றன. மன்றத்தின் காப்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ரொறன்ரோ கல்விச்சபை அதிகாரிகள் பலரும் இந்தப் பரிசளிப்பு விழாவில் பங்குபற்றி விழாவைச் சிறப்பித்தனர். புலம் பெயர்ந்த பல்கலாச்சார மண்ணில் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் பேணிக்காப்பதில் ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் முன்னின்று உழைப்து பெருமைக்குரியது.