மார்ச் 2014 கவிதைகள்!


மார்ச் 2014 கவிதைகள்!நீந்தும் மீன்களை வரைபவள்

 

–  எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை –

அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக வரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்

‘முக்காடிட்ட பெண்கள் வரைதல் தகா’
மதகுருவின் உரை சுவரெங்கும் எதிரொலிக்கிறது
பித்தேறிய ஆண்கள் கூட்டம்
நளினமான கரங்களை அடக்கிவைத்திடும்
பாரம்பரிய எண்ணச் சங்கிலிகளோடு
புனித இல்லத்தின் வாயில் தாண்டுகிறது

உயிர் ஜீவராசிகளை
வர்ணச் சித்திரங்களாக வரைவோர்
நரகத்தில் அவற்றுக்கு உயிர்கொடுக்கக் கடவர்
எனவே ஓவியம் கவிதை பாடலிசை
திறமை எதிலிருப்பினுமதைக் காண்பித்தல் கூடாது
மீறிடின் சிறுமியெனக் கூடப் பாராது
மூங்கில் பிரம்பு பேசிடுமென
தடைக் குரல்கள் பல
வீடுகள் தோறும் முழங்கித் தீர்ப்பிடுகின்றன

கோரைப் புற்களைக் கொண்டு வந்து காய்த்து
நெய்யும் பாய்களில் சிறுமியின் முடங்கிய விரல்கள்
அழகிய சித்திரங்களைப் பின்னுகின்றன
ஓலைப் படல்களைத் தாண்டும்
தொட்டில் குழந்தைகளிற்கான
பெண்களின் தாலாட்டுக்கள்
தினந்தோறும் புதிது புதிதாய் உதிக்கின்றன
ஏரிக்கரைகளில் நிலா நேரங்களில்
உலவிடும் பிசாசுகளைப் பிடித்துன் தந்தையை
கட்டிவைக்கச் சொல்லவேண்டுமென்பது போன்ற
விதவிதமான உள்ளக் கிடக்கைகள்
சிறுவர் சிறுமிகளுக்கான பெண்களின் கதைகளில் வெளிச்சமிடுகின்றன

மூதாட்டியின் சிறுபராயம்
பாய்களிலும் கூடைகளிலும் கழிகிறது
வீட்டின் அனைத்து ஆண்களினதும்
வலிய கட்டளைகளுக்கு அஞ்சிய
அவளது எல்லா ஆற்றல்களும்
விரல்கள் வழி கசிகிறது
துளையிடப்பட்ட ஓடம்
மழைக் கணமொன்றில் நடுக்கடலில் தத்தளிக்கிறது

பாட்டியின் கதைகேட்ட சிறுமி தனது
வர்ணப்பெட்டியை எடுக்கிறாள்
எவளது கூந்தல் தூரிகையாலோ மீன்களை வரைபவள்
சித்திரத் தாள்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விடுகிறாள்
காற்றுவெளியில் நீந்தும் மீன்களைப் பிடிக்க
இரை தேடித் தடுமாறுகிறான்
அவ் வீட்டின் தூண்டில்காரன்
யன்னல்வழி கசியும்  மஞ்சள் வெளிச்சம்
அறை முழுவதையும் நிரப்புகிறது

mrishanshareef@gmail.com


போதாத காலம்

– பிச்சினிக்காடு இளங்கோ –

மார்ச் 2014 கவிதைகள்!இது
நடிகர்களின் காலம்
    
நல்ல காலமா
பொல்லாத காலமா
எதுவும்
சொல்லமுடியாத காலம்
    
விழித்ததிலிருந்து
விழிமூடும்வரை
நடப்பதென்னவோ
நடிப்புத்தான்

நடிகர்களுக்காக
வாழ்கிறோம்
அல்லது
நடிகர்களாக வாழ்கிறோம்

கவிஞன் சொல்
பொய்ப்பதில்லை
சேக்ஸ்பியர் சொன்னதும்
பொய்க்கவில்லை

நடித்து மகிழலாம்
மகிழ்ச்சிக்காக நடிக்கலாம்

ஆதாயம் கருதி
அரிதாரமின்றி
நடித்தால்
வாழ்க்கையின் ஆதாரம்
சேதாரம்

எல்லா இடங்களிலுமா
பெருமூச்சு விடுவது

பொன்னுடன் செம்பு
சேர்வதுபோல் சேர்த்தால்
நகைபோல் ஒளிரும் வாழ்க்கை
இல்லையேல்
நகைப்பிற்குரியதாகும் வாழ்க்கை
  
(04.04.2013 அன்று மாலை 6மணியிலிருந்டு 7மணிக்குள் தமிழ்வள்ளல்   நாகை தங்கராசு அலுவலகத்தில் தஞ்சை கூத்தரசன் முன்னிலையில் எழுதப்பட்டது)

pichinikkaduelango@yahoo.com


ஆய்வாளர்

– பிச்சினிக்காடு இளங்கோ –

மார்ச் 2014 கவிதைகள்!(15.09.2013 பிற்பகல் 4.30 லிருந்து 5மணிக்குள் ஜோஸ்கோ அலுவலகத்தில் எழுதியது.சிங்கப்பூர் எழுத்தாளர்கழகம் வெளியிட்ட சிங்கப்பூர் இலக்கிய வரலாறு நூலைப்பார்த்தபோது)

அவர் ஒரு
தயாரிப்பாளர்

இவர் ஒரு
தயாரிப்பாளர்

நீங்கள் ஒரு
தயாரிப்பாளர்

அவரவர் திறமைக்கேற்ப
தயாரிப்பு நடக்கிறது

அவரவர் விருப்படியும்
தயாரிக்கப்படுகிறது

தயாரிப்பு
யாருக்காக?
என்ற கேள்வியும்
எழுகிறது

யாருக்காகவும்
என்ற பதிலும்
இருக்கிறது

சந்தைக்கும்
வந்துவிடுகிறது

வாங்குவோரும்
உண்டு
வாங்கிப்பார்ப்பவரும்
உண்டு

பரவலாக
விற்பனையை
விரும்பும் நீங்கள்
அந்தக்கடைக்காரருக்கும்
அது தெரிந்திருப்பது
அவசியம்

மக்கள் மனதில்
நிற்கவிழையும் நீங்கள்
அந்தக்கடைக்காரருக்கும்
தெரிந்தவராகுங்கள்

அவர் கடையின்
சரக்குப்பட்டியலில்
உங்கள் சரக்கும்
இருப்பது நல்லது

பட்டியலில் இருந்தால்
வரலாற்றில் இருப்பதாய் பொருள்

பார்த்துவையுங்கள்
அந்தப்
பட்டியல்காரர்களை.

வாசிப்போர் மனத்தில்
இருந்தாலும்
வரலாற்றிலும் இருப்பது
அவசியம்.

pichinikkaduelango@yahoo.com


காலக்கெடு. 

– வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க் –

மார்ச் 2014 கவிதைகள்!வெளிப்படும் திறமைப்பாடு
நெறியோடு எடுத்தாட
காலக்கெடு, திட்டமிடலின்
வரைகோட்டுக் கட்டுப்பாடு.
வார்த்தையாடு, விளையாடு, முறையீடென
நடைபோடவே உண்டு காலக்கெடு.

காலக்கிரமத்தில் கடமைகள் புரிந்தால்
காலக்கெடுவும் ஒரு மேம்பாடு.
உருப்படும் உளப்பாடுடையோனுக்குக்
காலக்கெடு, கைகொடுக்கும பற்றுக்கோடு.
காலக்கெடுவை மதிக்கும் உளப்பாடு
ஒருமைப்பாட்டின்  வெளிப்பாடு.

காலச்சக்கரச் சுழல்வில் பருவங்களிடுகிறது
காலக்கெடு, காலப்பயிர்விளைவிற்கு.
காலக்கெடுவில் கிரகங்கள் நடமாடும்.
காலக்கெடுவுண்டு கல்யாணம், குழந்தை பெற.
காலக்கேடு யார் மதிக்கிறார் இவைகளை!
காலக்கெடுவால் விடுதலையன்றோ வேண்டுகிறார்!

காலக்கெடுவிற்குள் காரியமாற்றுதல்
காலையில் ஒரு அக்கப்பாடு.
காலக்கெடு உருப்படாத ஒரு
சாபக்கேடு என்பான் சோம்பேறி.
பொதுவாகக் கூறினால் காலக்கெடுவும்
ஓர் இலட்சுமணன் கோடு தான்.

kovaikkavi@gmail.com


நாடி நாடி ..!தேடி தேடி ..!!

– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை –

மார்ச் 2014 கவிதைகள்!பட்டுத் தெறிக்கும் பார்வையில்
மேகத்தின் அழகும்
இதயங்களின் ஆசையும்
நகர்ந்து செல்லும் போது
பசுமை நிறைந்த காட்சிகளும்
மனதில் தோன்றும் …!

வானில் சுடர் கொடுக்கின்ற
சூரியன் மேனியில்
தடவும் போது
வியர்வையாய் வடிந்து
விழும் சில எண்ணத் துளிகள் …

ஒரு கணம் எதிர்பார்ப்பு
ஏங்கித தவிக்கும் பொழுதில்
முன்பு நிறைவேறத் தவறி விட்ட
வேதனைகளும்
சுமைகளும் தொடரும்
வாழ்க்கைப் பயணங்களில் …

ஆனாலும்
விதியை வரைந்து செல்லும்
வாழ்வின் ஓவியம் …!

கோடையில் விழுந்த
இடியைப் போல்
அதிர்ச்சியூட்டும்
உள்ளத்து உணர்வுகளில்
மின்னல் தாக்கங்கள் ….!

வாழ்க்கையிலே
இத்தனை கீறல்கள்யென்றால்
சுவாசம்
எப்படி மூச்சு விடும்..?
மூச்சு
எப்படி சுவாசம் விடும்..?

காற்றும்
இதயத்தில் தூசுகளாய் தேங்கியிருக்கும்

உள்ளத்து உணர்வுகளில்
நாடி நரம்புகளில்
ஓடிக் கொண்டிருக்கின்ற
குருதித் துளிகளின்
வேதனை வலிகள் எனை

உறுஞ்சி உறுஞ்சி
விழுங்கி விழுங்கி
தாயின் தொப்புள் கொடி
உறவை நாடி நாடி
தேடி தேடி
தினமும் தவமிருக்கின்றன ….

அவர்கள்
என்னை அரவணைக்க
வரவே மாட்டார்கள் என்ற
எதிர்பார்க்காத
நினைவுகளுடனும்
நிகழ்காலங்களுடனும் …!

அவர்கள்
அவர்கள் நாடிய உறவுடன்
அவர்கள் விரும்பிய உறவினர்களுடன்…!

sk.risvi@gmail.com


எனக்கொரு கேள்வி

– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை –

மார்ச் 2014 கவிதைகள்!இந்த உயிர்  எப்போது பிரிந்து விடப்போகின்றதோ …?

மண்ணிலே பிறந்த உயிரை
மண்ணிலே அடக்கம் செய்யப் போகின்றாகளே ..

இது அல்லாஹ் தந்த உடலா  ..
இல்லை தாய் தந்த  கருவா.. ?

நேற்று வரை உடலில் எனக்கொரு வலி
இன்று அதுவே எனக்கொரு கேள்வி

வாழ்க்கையை நினைக்கும் போது
மனசு துடிக்கின்றது  வயசு கூடுகின்றது..

பிள்ளைக்கு பாலூட்டும் தாய்
கல்விக்கு வழி காட்டும் ஆசான்
ஒவ்வொரு மூச்சிலும் சுவாசத்தைப் போல..

புதிய புதிய மாற்றங்களை தருவது
.அல்லாஹ்வின் நாட்டமே ..!

sk.risvi@gmail.com


காத்திடுவாய்!

– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை –

மார்ச் 2014 கவிதைகள்!உயிர் வாழும் போதினிலே
ஆரோக்கியத்தை யாஅல்லாஹ் தந்திடுவாய்
ஊசி துளையாமல் உடலினை
வியாதியின்றி காத்திடுவாய் ..!

நோயற்ற வாழ்கையை
குறைவற்ற செல்வமாக்கிடுவாய்
அல்லாஹ்வே உன்னருளினை
தொழுகையில் தந்திடுவாய்!

அவதிப்படும் நோயாளிகளை 
வேதனையில்லாது  காத்திடுவாய்

நலம் பெரும்  வழியினை
நிறைவாக காட்டிடுவாய்!

கலீமாவுடன் மறையும்
பாக்கியத்தை யாஅல்லாஹ் தந்திடுவாய்
உறுதியான ஈமானை
நிலையாக வைத்திடுவாய்!

சோதனையான வாழ்க்கையை
பொறுமையோடு தாங்கிடச்செய்வாய்
மனித நேயம் காத்திட
அருளினை கொடுத்திடுவாய்!

இறையருள் கட்டளைகளை
ஏற்று நடத்திடச் செய்வாய் 
பாவம் செய்யும் மனதினை
தந்திடாது காத்திடுவாய்!

sk.risvi@gmail.com


காவியத் தலைவர்களின் முகம் மலரும்   

 – வே.ம.அருச்சுணன் –

மார்ச் 2014 கவிதைகள்!இலக்கியத்தில்
பல்வேறு காதலர்கள்
காவியம் படைத்து
மானிட உலகத்தை ஆட்டம்
காணச் செய்துவிட்டனர்……….!
 
நளன்
அன்னத்தை தூதுவிட்டான்
தமயத்தியைக் கரம் பற்றினான்
இன்றைய நவீன
நளன்களின் தர்பார் விடும்
தூது வினோதமாகவும் சமயத்தில்
விபரீதமானதாவும்
நம்மை விசனத்தில்
ஆழ்த்திவிடுகின்றன……….!

இன்று காதலர்கள்
கொடுத்து வைத்தவர்கள்
தொடர்புகொள்ள
வழிகளுக்குப் பஞ்சமில்லை
வஞ்சனையுமில்லை
நொடிப்பொழுதில் எல்லாம் கைவசம்………!

கண்காணா தேசத்துப்
பைங்கிளியுடன் தொலைபேசியில்
மன்மதன்
காதல் மழை பொழிகின்றான்
தொலைபேசி காதலர்கள்
மொழி, இனம்,நாடு,பண்பாடு கடந்து
வாழ்வில் சேர்ந்ததுண்டு
இனப்பெருக்கம் செய்வதுண்டு
மனவொருமையே வாழ்க்கைப்
பயணத்துக்குத் துணை உலகம்
ஒறுமையில் செல்ல
காதலர் பயணம்……………! 

எஸ் எம் எஸ், இன்டர்நெட்,
முகநூல், ஈ மெயில் காதலர்கள்
அமர்க்கலமாய் உலகெங்கும்
சிறகடித்துப் பறக்கின்றனர்
வாழ்கை  வாழ்வதற்கே
தொடக்கம் சரியென்றாலும்
ஆசை அறுபது; மோகம் முப்பது
நாட்கள் நகருமுன்னே
வாழ்க்கை ஒப்பந்தம்
உருகுழைவதேன்?
நீதிமன்றம் ஏறுவதேன்?
அரசல்புரசலானச் செய்திகள் ஏன்?
நிரந்திரப் பிரிவால் வாடுவதேன்?
வாழ்க்கை ஆயிரம் சொல்லும்
மேடு பள்ளம் ஊர்ந்து செல்லும்
போராட்டம் வாழ்வில் செல்லும்
விட்டுக் கொடுத்து வாழ்ந்து பாரு
பெரியோர் சொன்னதில் தப்பிதம் ஏது?
புரிதல் மட்டும் வாழ்வில் கொண்டால்
காதல் புறாக்களின் இன்பத்துக்கு
வானம்கூட எல்லை இல்லை……………! 

arunveloo03@gmail.com
*********************
மரம் 

-முல்லைஅமுதன்- 

மார்ச் 2014 கவிதைகள்!காய்த்த மரம்
கல்லடிபட்டு நின்றது.
வளவுப் பொடியள்
எறிகின்ற கல்லால்
அடிக்கடி
காயப்பட்டுப்போன பொழுதில்
காற்று
நானிருக்கிறேன்
என்று கொஞ்சிப்போனது..
பறவைகளும்
கிளையில்
குந்தியிருந்தபடி
சில்மிஷம் செய்ய
மனது
காதல் கொண்டது..
நட்ட இடத்திலேயே
ஏன்
நிற்கும்படி
இறைவன் வைத்தான்?
எனி
காய்க்காது..
காதல் கொள்ள
முடியாது
என
வெறுப்பாய்
மனிதர்களுடன்,
பறவைகளும்..
கிட்டி அடிக்கலாம் என
பொடியளும்
கிளை ஒடித்துச் சென்றனர்..
குளிருக்கு
ஒளியவென
கூடுகட்டிய
குருவிகளைக்
கலைத்தன
‘கெட்டிபோல்’
ஒன்றின் கல்பட்டு..
மழை வெள்ளம்
அடைக்கவென
மண் அள்ளிச் சென்றனர்..
விறகுக்கும்
உதவாது என பேரம்
பேசியவர்
‘அறா’விலைக்கு
அறுத்துசென்றார்..
நான் குந்தியிருந்த
நிலத்தோடு
பெயர்த்தபின்..
மண்ணும்
சொந்தமில்லையாம்…
வாரிசாய் ஒன்றும்
வாய்க்காத
இந்த பட்டமரம்
இங்கிருப்பது
நல்லதல்ல என
உரிமை
பாராட்டியவர்களே
விலகிப்போனார்கள்.
சொந்தம்
கொண்டாடிய
குருவிகளும் மறந்து போயின..
நான் நின்ற இடம்
இன்னொரு
வாழ்க்கை வாழ ஏதாவது அமையலாம்..
புதையுண்டு போன
கனவுகளுடன்
பயணித்தது பட்டமரம்…

mullaiamuthan@gmail.com