ஏப்ரல் 2014 கவிதைகள்!

ஏப்ரல் 2014 கவிதைகள்!எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) கவிதைகள்!

1. நுழைதல்

எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி
உன் நேசத்தைச் சொல்லிற்று

பசியினைத் தூண்டும் சோள வாசம்
காற்றெங்கிலும் பரவும்
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை
முடித்து வந்திருந்தாய்
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்
பெண்களின் சித்திரங்களை
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்
வெயிலெரித்த சருமத்தின் துயரம்
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது

நகரும் தீவின் ஓசை
நீ நடந்த திசையெங்கிலும்
பாடலாகப் பொழிந்திடக் கூடும்
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்

உனைத் தீண்டி நகர்ந்திருந்ததொரு விஷத் தேள்
உச்சியிலிருந்து சருக்கச் செய்தது அதன் நச்சு
எல்லாம் கடந்துவிட்டன
நேற்றிருந்த மேகத்தைப் போல
இக் கணத்து நதி நீர் போல

உனது பயணங்கள் முடிவற்றன
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
பாளங்களாய்க் கனன்றெரிந்து
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
தெப்பமென நனைந்தேன்

நரகப் பெருநெருப்புக்கஞ்சி
எவருக்கெனவோ மூடிக் காத்திருந்த பொக்கிஷ நந்தவனமொன்று
நீ வரத் திறந்தது
அன்று
உனக்கென உதிர்ந்ததொரு மந்திரப் பூ
உனக்கெனத் தெளிந்ததொரு வாசனைப் பொய்கை
உனக்கென மட்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ஒரு தளிர்

எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்
ஆனாலும் சகா
நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்
அப்பாலுள்ளது எனதுலகம்

2. விலகல்

அடைமழை பெய்தோய்ந்த
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
பனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்

பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
பல்லாயிரம் விழிகள்
அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்

நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
விடிகாலையில்
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
உன்னைப் போலவே

3. தெளிதல்

ஏமாற்றத்தின் சலனங்களோடு
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை

மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்
ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன
நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்
மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்
விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது

மிக எளிய ஆசைகள் கொண்டு
நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ
புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது
வெளிச்சம் எதிலுமில்லை

கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்
அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது
ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க
அலைகளும் எங்குமில்லை
நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது

எந்த நேசமுமற்று எப்பொழுதும்
உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்
ஏமாற்றத்தின் முதல் தளிரோடு
ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று

நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை

mrishanshareef@gmail.com


பேராசிரியர் கோபன் மகாதேவா கவிதைகள்!

1. வெளியீட்டாளருக்கு ஒரு விளம்பரக் கவிதை
 
ஏப்ரல் 2014 கவிதைகள்!எத்தனையோ எத்தனையோ சித்திரங்கள்
முத்துமுத்தாய் என்இருட்டு மனக்குகையில்
வித்தகப் பொக்கிசமாய்ப் பொத்தி வைத்தேன்
பொத்திவைத்துப் பேணிப்பூட்டிக் காவல்செய்தேன்.
 
பத்தல்ல, நூறல்ல, பல்லாயிரக் கணக்கில்
வித்தகத்தின் முத்துகளைப் பொத்திவைத்தேன்.
வைத்திருக்கையில் ஒருநாள் என்உயிரைக்
கொத்திக்கொண்டு ஓடினான், எம் காலதேவன்.
 
பொத்திக்காத்துப் பூட்டிவைத்த சொத்தைஇழந்தேன்
வித்தகரின்விருதை, வரலாற்றில் இழந்தேன்.
மொத்தத்தில் உலகினரும் என்னைஇழந்தார்
இத்தைஇன்று ஆவியாகி அழுதுசொல்வேன்.
 
பொத்திச்செத்திட்டஉம் சககலைஞன் சொல்லுகிறேன்
வித்தரே, உம் முத்துகளை உடனேயே வெளிக்கொணர்வீர்!
சித்திரமோ, புத்தகமோ, சிறுகதையோ, காப்பியமோ
பொத்திவைத்து இழக்காமல் பாரினர்க்குப் பரிசளிப்பீர்!


 
2. நான் இலங்கையின் அடுத்த சனாதிபதியானால்…

ஏதோ என் முற்பிறப்பின் விதியால் நான்
இன்றேயோ நாளையோ இலங்கை என்னும்
சீதோஷ்ணத் தலைகீழ் மாங்காய்த் தீவின்
மாஅதிபர் எனத் துலங்கும் பதவிஏற்றால்…

சனநாயகச் செம்பழத்தைச் சமமாக இலங்கையின்
நல் இனங்களாம் நால்வற்றிற்கும்
மனமார அளிப்பதற்கு அன்புடைய அன்னையாய்
ஒற்றுமையை உடன் வளர்ப்பேன்.

பிரதமமந்திரியாய் மாறிமாறி நாலினத்து நல்லாரை
என்ஆட்சிதனில் சேர்த்துக்கொள்வேன்.
இருபாலிளையாரைச் சமமாக நிர்வாகத்தலங்களிலே
பிரதமர்கீழ் பணியாற்ற நியமம்செய்வேன்.

சிங்களமும் செந்தமிழும் செழிப்புடனே எங்கும்
சமமாக நடமாட விதிகள் யாப்பேன்.
இங்கிலிசு மொழியையும் நாம் இழக்காமல் நாளாந்தப்
பாவனையில் இருக்க வைப்பேன்.

தனிமனிதர் உரிமைகளை உயிரைப் போல் மதித்துத்
தருமம் எனும் குடைகீழ்க் காத்து,
இனி ஓர் அதர்மமுமே இலங்கையிலே இல்லையெனத்
திடமாக நிலைக்கச் செய்வேன்.

புத்தரின் புனித மதம், இந்துக்களின்; சைவமதம்,
கிறிஸ்துவமும் இஸ்லாமியம் எல்லாம்
எத்தகைய மதமெனினும் பவித்திரமாய் வாழ்தற்கு
வேண்டிய நல் விதிகள் செய்வேன்.
 
இலங்கையெனும் எமது ஈழத் தீவினிலே
எவ்வினமும் சமமென்று உணர்ந்து, உவந்து,
கலங்காமல் வாழ்வதற்குக் கட்டுப்பாட்டுக்
கண்ணியமுள் காவல்துறைதனை அமைப்பேன்.

இராணுவ முப்படைகளிலே ஈழத்தின் நாலினத்து
ஆண்பெண்பால் எல்லோர்க்கும் இடமளிக்க
சரியான விகிதத்தின் எண்களிலே கரிசனமாய்
தேர்ந்து எடுத்து, எம் மொழிகள் மூன்றும்

பேசுதற்கும் பேண்பதற்கும் பயிலச்செய்து,
மேன்மை தரும் இன-உறவுகளை வளர்த்து,
தேசத்தைக் காப்பதையும் தேசீய உற்பத்தித்

தொழில்களையும் செழிக்க வைப்பேன்.
அரசாங்க ஊதியத்தில் பணிசெய்யும் எவரேனும்
கரிசனமாய் எம்மூன்று மொழியும்கற்று
சிரமமின்றித் திறமையினால் முன்னுரிமையுடன்

உச்சிப் பதவிகட்கு உயரச் செய்வேன்.
ஆடம்பரங்களெல்லாம் அநியாயச் செலவென்று
நானே முன்உதாரணனாய் ஊக்கி நிற்பேன்.
நாடாளும் பணிகளிலே நேர்மையையும்

திறமையையும் நாளாந்தம் திளைக்கச் செய்வேன்.
கல்விக்கும் விஞ்ஞானத் தொழில்நுட்ப ஆய்வுக்கும்
சரிசமனாய் நிதிசேர் வளங்கள் ஊட்டி,
எல்லாஇனத்தினரும் எல்லாவயதினரும்

என்றென்றும் கற்று, ஆயும் கூடங்கள் அமைப்பேன்.
மேலுலகின் நாகரிக மோகம் உந்தக், குருடர் போல்,
நாம் அவர் பின் தொடர்தல் விட்டு
ஏலுமானதையும், எமக்குத் தேவையானவையை

மட்டும், உசிதம் போல் தேர்ந்தெடுப்பேன்.
உணவுவகை, சுகாதாரம், உடுபுடவை, சமுதாயம்,
சமயம், சட்டமெனும் நிரலில், மேலும்
பணவாட்சி, படிப்பித்தல், முப்படைகள் போன்றவைக்குப்

பதினான்குஅமைச்சில் மட்டும்…
நிர்வாக முறை அமைத்து, நேர் சீராய், இராப் பகலாய்ச்
சேவை ஆற்றிக், கண்காணித்து
தர்மத்தை நிலை நிறுத்தி, அபிவிருத்தியைப் பெருக்கி,

இலங்கையினை ஓங்கவைப்பேன்.
சிங்களர்க்கு உலகினிலே சிறீலங்காவே ஒரேஒரு
நாடு எனும் யதார்த்தமாம் நிலையுடனே
அங்குள்ள மற்றோரின் சிறப்புரிமை, பிறப்புரிமை

உண்மைகளை எவருமே ஏற்கவைப்பேன்.
இனரீதித் தனித்துவமும் ஒற்றுமையும் இலங்கையிலே
சமமாகக் கூட்டாட்சி நடத்துதற்கு
இனங்களின் எண்ணிக்கை ரீதியிலே மாகாணங்கள்

அமைத்துச் சுதந்திரம் வழங்கிடுவேன்.
மேலேநான் சொன்னவையும் மேலும் அவை
போன்றவையும் ஆற்றிய பின், பதவி முற்றில்…
கோலாகல அ-நிர்வாக அதிபரின் கீழ், சனநாயகச்
சமஆட்சியினை நிறுவிச் செல்வேன்.  

professorkopanmahadeva@yahoo.co.uk


முதியவர்கள் எங்கள் காவல் தெய்வங்கள்!

– இணுவையூர் சக்திதாசன்  டென்மார்க் –

ஏப்ரல் 2014 கவிதைகள்!முன்னாள் நினைவுகள்
முன் படலையைப் பார்த்தபடி
தன்னால் இயன்றவரை அடியெடுத்து
இயலாமையால் விழுந்து அன்புக்காய் ஏங்கும்
தன்னிலை மறந்து வாடும்
வாடா மலர்கள் – முதியவர்கள்.

காலச்சக்கரத்தின் ஓடிக்களைத்து
ஓய்ந்தவர்கள்
சொத்துகளைச் சேர்த்து வைத்தும்
வாழ்வைத் தொலைத்து
நடைப்பிணமாய் முதியோர் இல்லங்களில்.

நிழல் தந்த மரங்கள் – இன்று
நிர்க்கதியாய்க் கிடக்கின்றன.
ஆதரவு தந்த கரங்கள் – இன்று
அனாதைகளாய்க் கிடக்கின்றன.

உன் சுவாசமாயிருந்த தென்றல்
உனக்கு ஒளி தந்த கதிர்
அன்பு மழை பொழிந்த மேகம் – இன்று
தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றதே…
உன் இரு கரம் கொண்டேந்தி அணைக்க வேண்டாமோ?

வாழ்வினைத் தந்து அன்பினை ஈர்ந்து
அனுபவத்தில் பூத்து அகிலத்தில் ஜெயித்த முதியவர்கள்
எங்கள் காவல் தெய்வங்கள்!
ஏங்க விடலாமோ?
அனாதை இல்லத்தில் தவிக்க விடலாமோ?
ஒருவேளை சோறு கொடுக்க முடியாவிட்டாலும்
ஒருவேளை அருகிலிருந்து ஆறுதல் கொடுத்துப் பார்.

துள்ளியெழுந்து கூறுவர் உனக்காறுதல
காலக் குழந்தாய்!
அலட்சியம் செய்யாதே – மனதில் கொள்
என்றோ ஒருநாள் இது நமக்கும் தானெறு!

sakthy-@hotmail.com


கிணற்றுத்தவளை!

– மு.கோபி சரபோஜி, இராமநாதபுரம்

ஏப்ரல் 2014 கவிதைகள்!சுவாசித்தலுக்கான தகவமைப்பு பெற்றிருந்தும்
வாழ்தலின் சூத்திரத்தை
பிழையாய்க் கற்று
தடாகத்தின் தடம் தப்பி
கிணற்றடிக்கு வந்திருந்த தவளையிடம்
எப்படியிருக்கிறாய்? என்றேன்.
எந்த போராட்டமுமின்றி
சமர்த்தாய் இருப்பதாகச் சொல்லி
அகம் குதித்த தவளை
தன்னையே பலியாக்கிக் கொண்டது
தன்னைப் போலவே
சமர்த்தாய் அங்கிருந்த பாம்பிடம்!

nml.saraboji@gmail.com


உண்மை!

– முல்லை அமுதன் –

ஏப்ரல் 2014 கவிதைகள்!உனக்கு நானும்
எனக்கென நீயும்
நிச்சயிக்கப்பட்ட
வாழ்வில்
இணைந்தோம்
அல்லது பிணைந்தோம்.
நமக்காக,
நாலு பேருக்காக
வாழ்தலிலும்
சுகமும்,
சுவாரஸ்யமும்
இருக்கவே இருக்கிறது.
இருந்தும்,
என்னை நீயோ
உன்னை நானோ
இல்லையெனில்
வலிப்பதில்
தெரிகிற
உணமைகள்
பலருக்கும்
தெரிய வாய்ப்பில்லை எனினும்
நமக்கு
காதல் அல்லது காமம் சார்ந்ததாகவும்
இருப்பதை
யாராலும்
நிராகரிக்கமுடியாது…
இன்று என்னை நீ
இழந்ததுவரை…

mullaiamuthan@gmail.com


முத்தமிட்டு மகிழ்ந்த எண்ணிக்கை …!

-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை  –

ஏப்ரல் 2014 கவிதைகள்!தொடரும் கடல் அலை போல்
நிறைகின்ற உறவு
இந்த மீனவர்களுடையது..!

கடலினுள்  தோணி பயனிக்கையிலும்
சவலின் துணிவு
விசிறித்தரும் சிறகு
இயந்திரமொன்றின் பரிமாற்றம்

இவை,
மீன்களை பிடித்துக்  குவித்த எண்ணிக்கையினும்
அலைகளை முத்தமிட்டு மகிழ்ந்த எண்ணிக்கை அதிகம்

பணத்தின் மதிப்பை விட
இதயங்களின் இழப்புக்கள் அதிகம்..!

பணம் ,பிணம்
இரண்டுமே சரித்திரமாகும்
தரித்திரம் ஒன்று இல்லாத வரையில்

இன்று காலையில் சிக்கிய
வலையில் சடலமொன்று
ஒரு உயிரை மாட்டிக் கொள்ள ,
தண்ணீருடன் தனனிறகை அடித்துக் கொன்டது
திமிங்கிலமொன்று ..!

இறக்கும் வரை கடற் தொழிலை நம்பியிருக்கும்
மீனவர்களின் முன்னால்
கடலோ இறை கொடுக்கும் 
அருட் கொடையாய் தவமிருக்கின்றன !

வாழ்விலும் ,சாவிலும்
குறையாமல் தான் கொடுக்கின்றன
மனிதர்கள் தான்எதையும் நிறைவாக பார்ப்பதில்லை  ..!

sk .risvi @gmail .com


நீ ஒரு குழந்தை!

– முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் –

ஏப்ரல் 2014 கவிதைகள்!வெளியூர் போன நான்
வீட்டிற்குள் நுழைகிறேன்

ஓடிவந்து
என் கழுத்தில் தொங்கி
ஊஞ்சலாடியபடி
‘எனக்கு
என்ன வாங்கிவந்தாய்?’
என்று கேட்டு
அடம்பிடிக்கிறாய்

‘அப்பா, எனக்கு
என்ன பொம்மை
வாங்கி வந்தாய்?’
என்று கேட்கும்
நம் குழந்தைபோலவே…

munaivendri.naa.sureshkumar@gmail.com