மே 2014 கவிதைகள்!

 இர.மணிமேகலை (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்.) கவிதைகள் இரண்டு!

1. பூலோக வாசிகள்

மே 2014 கவிதைகள்!வானளாவி நிற்கும் கட்டிடக்கூரைகள்
பிரபஞ்சவெளிக்குச் செய்தியனுப்புகின்றன
தார்ச்சாலைகளில் பாய்ந்துசெல்லும் மகிழ்வுந்துகளில்
உறுமும் புலிகள் பயணிக்கின்றனவாம்
பலதரப்பட்ட மலைப்பாம்புகள் அவற்றைச்சாகசத்துடன்
ஓட்டுகின்றன என்பதும் குறிப்பு
கவனிக்க…
பயணத்தின்போது சில இடங்களில்
நாசுக்கும் அழகும் மிளிரும் மான்தென்படும்
பாம்பு அதனிடம்
கண்சிமிட்டிக் கரம் குலுக்கி நகரும்..
ஒதுக்கப்பட்ட தவளைகளைக்கண்டால்
பாம்புக்குக் கொண்டாட்டம்
வயிற்றை நிரப்பிக்கொள்ளும்
விழுங்கும் சிங்க ராஜாக்களைக்கண்டால்
கீழ்நோக்கிய பார்வையுடன் பாதம் பணியும்

அதன் பாசாங்கில் ஏமாந்த சிங்கம் மந்தகாசம் புரியும்
வெள்ளந்தி முயல்களைக்கண்டால்
மலையனுக்கு அறவே பிடிக்காது
விஷம் உமிழும்
கழுத்தை நெறிக்க மலையத்துவசன் மகள் இல்லாத்தால்
விஷத்தில் மாளும் முயலின் குருதியும்
பாம்பைப்பெருகச்செய்யும்
ஏகபோக ராஜாக்களும் அசுரப்புலிகளும் உள்ளவரை
அரவுகளின் பயணம் இனிதே தொடரும்
மீண்டும் ஒரு முறை
புசித்துவிடலாம் அறிவுக்கனியை
கிடைத்துவிடலாம் ஒருவேளை
மேடுபள்ளங்களற்ற உலகமும்
சாத்தான்களற்ற ஓவியமும்.
                      
2. பாவைகள்

குளிரூட்டப்பட்ட அறையின் ஒளிக்கு
நிலவின் கதிர்கள் தோற்றிருந்தன
நாற்காலிகள் நிறைந்திருந்த வேளை
மேடையைத் தனதாக்கியிருந்தாள்
குரல் அதிகாரத்தொனி கொண்டிருந்தது
சந்தனக்குறியீடுகளில் வெண்ணிற நெற்றி
ஒளி மங்கியிருந்தது
முழவு முழங்க அவள் பாடத்துவங்கினாள்
மந்திர உச்சாடனம் உச்சத்தையடைந்தது
நாற்காலிக்கூட்டம் எதிரொலித்தது
அசைய மறுத்த இதழ்களும் விரிந்தன
அவனைக்குறித்த அலறலில் திகைத்திருந்தேன்
இன்னும் எத்தனை விரதைகள்
நெருப்புத்தேவன் அணைத்துக்கொள்ள
நாற்காலிகள் நிறைந்திருந்தன
மந்திர ஒலியைமீறி இதயத்தில்
சலங்கை ஒலி அதிர்ந்தது.

smekala10@gmail.com

 


தேவனிடம் ஒரு வேண்டுகோள்!

– முல்லைஅமுதன்

மே 2014 கவிதைகள்!குற்றுயிராய்
இருக்கும் என்னிடம்
வந்து ஆசிர்வதிக்கிறாய்.
எழுந்துகொள்ளவே
முயற்சிக்கிறேன்..
சிறகுகள் அரியப்பட்டுள்ளன.
முக்கி முனகி
எழுகையில் தெரிகிறது
கால்கள்
முடமாக்கப்பட்டுள்ளன…
ஒருகையால்
ஆசிர்வதிக்கும்
தேவனே
உன்
மறுகையில்
மறைத்தபடி
என் உடல் சிதைத்த
வாள் குருதியுடன்…முதலில்
வாளைக் கொடு…
உன்னைச் சாய்க்கவேன்டும்
அல்லது
என்னை நானே
கொன்றுவிடவேண்டும்..
தேவர்களேயாயினும்
தலை குனிந்த
ஆசிர்வாதம்
பெற்றுக்கொள்ள
மனது
என்னிடம் தரப்படவில்லை…

 mullaiamuthan@gmail.com  


 முகநூல்– துவாரகா  சாமிநாதன்

மே 2014 கவிதைகள்!எனது வன்மங்களை
பிரதியிடும் போது
சில
விளம்பர படுத்தல்களும் நிகழ்ந்து விடுகினறன.

ஒவ்வொரு முகஙகளிலும் தேடுகிறேன்
நல்லவைகள் ஒட்டியிருக்கின்றனவாயென
வலைத்தளங்களின் வலைகளில்
இண்டு இடுக்கெல்லாம் ஒடுகிறது
எனது எலி மனம்

சில வேளைகளில் அங்கே கொட்டப்படும்
வன்மங்களின் குப்பைகளில்
விசாரிப்புகளில்
விமர்சனங்களில்
புதைந்து சிதைந்தும் விடுகிறேன்

மனச்சிக்களின் காரணமாக அதன் நடுப்பக்கத்தில்
செருகப்பட்டுவிடுகிறேன்

சில சொடுக்குகளில் விபரீதம் நடத்துகிறேன்
சில இடுகைகளில் உற்சாகமடைகிறேன்

கருப்பு, சிகப்பு, வெள்ளை மஞ்சள் 
நீலமென நிரம்பி வழிகிறது
என் முகமெங்கும்

எல்லோருடைய மனங்களில் எழும்
வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளும்
தொட்டியாய் இந்த முக நூல்………

samijsls@gmail.com


இயக்குநர் பாலுமகேந்திரா  நினைவாக…

– மட்டுவில் ஞானக்குமாரன்

மே 2014 கவிதைகள்!சோடிக்கண்கள் கண்டதை
கோடிக்கண்களுக்கு காட்டியவன்
மகேந்திரன்.

பாலு எனும் இரட்டைவாலுக் குருவி
இறக்கை விரித்து எங்கே போனதோ
தலைமுறைதாண்டி எதார்த்தத் திரைக்கதை வேண்டி
தமிழகம் வந்த
கமராவை காலமா கவர்ந்தது?

அவனின் கூடாக
மற்றவரின் கூட்டாக கட்டிய வீடுக்கு
வண்ணவண்ணப்பூவெலாம் கூடி
விருதுகள் கொடுத்தன

அவனுக்கு மட்டுமே தெரிந்த மூன்றாம்  பிறையை
யாருக்கும்; இதுவரை தோன்றாப் பிறையை
பாரே பார்க்க
திரையிலே காட்டினான்

தன் சோடிக்கண்களால்
கண்ட இன்பத்தை
கோடிக்கண்களுக்கு விருந்தாக்கி ஊட்டினான்  

இலக்கியத்தை 
சினிமாவாக்கி விற்கத்தெரிந்தவர் மத்தியில்
சினிமாவையே இலக்கியமாக்கி கற்கும்
திறன் மிக்கவன்.

பனிமுகில் இவன் படங்களில் வந்தால்
பார்ப்பவர் உடலைக்
கூதல் வந்து தைக்கும்
பூ இதழை இவன் படம் பிடித்தானெனில்
வெள்ளைத்திரையிலும் ஈக்கள்
மொய்க்கும்.

ஒருவேளை தள்ளாத வயது வரை
இருந்திருந்தாலும் கூட
அவன்
பொல்லூன்றி இருக்கமாட்டான்
ஊன்று கோலுக்குப்பதிலாக ஒளிப்படக்கருவியின்
ஏந்து கோலையே ஏந்தியிருப்பான்.

இந்தச்சேவல் 
தாய் தேசத்தை  நினைத்துக்
கூவவில்லை என்ற
வாதமிருக்கிறது அனேகருக்கு

அவன் என்ன கோலிவூட்டிலா படமெடுத்தான்
நினைத்ததை எல்லாம் படமாக்க
கோழிக்கூண்டில் அல்லவா அடைபட்டுக்கிடந்தான்
மீறிக் கூவியிருந்தால்
அவனை பிரியாணி அல்லவா போட்டிருப்பார்கள்

காட்சிப்பிழை எனில்
அதனை நிவர்த்தி செய்யும் உத்தி தெரியும்
இது ஆட்சிப் பிழை
பாவம் அவன் என்ன செய்வான்

கோடி கொட்டி
படம் எடுப்பவர் மத்தியில்
மனங்கள் கோடி தொட்ட படமெடுத்தவன்

அவன் படம்பிடித்தால்;
அழுக்குக் கூட அழகாகத் தெரியும்
புழுக்கூட பாம்பாக விரியும்.

இந்திரன் ஒருவன் இங்கே பிரம்மன் ஆகினான்
ஆம் படங்களைப் படைத்ததால்
பிரம்மன். ஆகினான்
மகேந்திரன்
படங்களைப் படைக்க வந்த பிரம்மன்
அவன் தொப்பி போட்ட பிரம்மன்
.
நீயோ வள்ளுவனையே மிஞ்சியவன்
அவனோ இருவரியில் தான் குறள் சொன்னான்
இவனோ ஒரு காட்சியிலேயே
தன் திறன் சொன்னான்                               

maduvilan@hotmail.com


மணிபாரதி (அம்பாசமுத்திரம்) கவிதைகள்!

1. கூடு

மே 2014 கவிதைகள்!மேய்ச்சலுக்கு போன
மாடுகள் கொட்டடி திரும்பின,

உணவு தேடியலைந்த
பறவைகள் கூடு திரும்பின,

பணி முடித்த
மனிதர்கள் வீடு திரும்பினர்,

அழுக்கடைந்த ஆடையுடனும்
கோணி நிறைய குப்பைகளுடனும்
தனக்கான இடம் தேடி
என்றும் போல்
இன்றும் அலைகிறான்,

வீதியில் அனாதையாய்
விடபட்ட பைத்தியக்காரன்,

2. மழை

மழைபற்றி கதையிருந்தது,
மழைபற்றி நினைவு இருந்தது,
மழை பற்றி கவிதையிருந்தது,
மழை பற்றி எதிர்பார்ப்பிருந்தது,
அனைத்தையும் சுமந்தபடி
பெய்துகொண்டிருக்கிறது மழை,
உள்ளேயும்,வெளியேயும்.

ambaimani75@gmail.com


நவயுகத் தமிழரின் நடைமுறைக் கலாச்சாரம்

–பேராசிரியர் கோபன் மகாதேவா–

மே 2014 கவிதைகள்!கலாச்சாரம் எனும்பதத்தைக் காலமெல்லாம் கேள்வியுற்றும்
விலாவெலும்பு வலிக்குமட்டும் அதைப்போற்றிப் பேணிவந்தும்
கலாச்சாரம் என்னவென்ற இலக்கணத்தை விளக்குதற்கு
வியாக்கியானங்கள் தேடி வித்தகரும் அலைந்திடுவர்.

இனமொன்றின், குழுவொன்றின், குடும்பத்தின் வழக்கங்கள்
கனிவுற்றுக் காலத்தால் மெருகூட்டி முதிர்வு அடைந்து
மனதினிலே பிணக்கின்றித் தன்னியக்க இயல்பாக…
கனவில்போல் நடைமுறையில் நடப்பதுவே கலாச்சாரம்.

உணவினிலும் உடையினிலும் உள்ளதுவும் கலாச்சாரம்
குணத்தினிலும் கலைகளிலும் வீட்டினிலும் வீதியிலும்
பேச்சினிலும் மூச்சினிலும் பிரார்த்தனைகள், பிணைப்பு எதிலும்…
வீச்சினிலும் விடுப்பினிலும் கலாச்சாரம் விதந்திருக்கும்.

தமிழரது கலாச்சாரம் தரணி தனில்
முதல் உதித்த தரு ஒன்று, என்போம்.
சமயமதாம் சைவமும், தமிழும் அதன்
சுமைதாங்கும் தூண்கள் என்போம்.
பத்தாயிரம் ஆண்டாய் சங்கங்கள் தனில்
பேசிஅதை வளர்த்தது என்போம்.
வித்தைமுறைக் கலைகள் எம்வாழ்வினிலே
எண்ணெட்டு வழிகள் என்போம்.
நவயுகமாம் இந்நாளில் அவையெல்லாம்
தமிழர்க்குச் சரியோவென்று
சமகால ஆய்முறையைச் சமமான
மனநிலையில் செலுத்தி நோக்கில்…
எமதுள்ளத்து அடியிருந்து உரத்தவொரு
குரல்தனிலே கேட்கும் செய்தி:
உமக்குகந்த அம்சங்கள் தமை ஏற்று,
மற்றவையை மறப்பீர், என்றே.
குளிர்தேச மேற்குலகின் கோவில்களுட்
செல்ல மேலாடையொன்று இன்றி
பழங்கால வழக்கம்போல் வெறும்தேகம்,
கால்களுடன் செல்லல் ஆமோ?
எலியோட்ட உலகினிலே ஓயாமல்
உழைப்பதுவே இன்று எம் வாழ்க்கை
கலிதீர அன்று போல் விரதங்கள்,
பூசைகளைச் செய்தல் ஆமோ?
காதலே மணவாழ்வின் உயிரென்று, எம்
கன்னியரே இன்று தம் சோடி தேட,
மோதலிலும் முறிவிலுமே முடிவடையும்
பேச்சு-மணம் பேணல் நன்றோ?
மூடுபட்ட வீடுகளின் மூலைகளில்
மட்டை-விறகுப் புகை தூண்டலாமோ?
சூடு-குறை வானிலையில், நாட்டினைப் போல்
வெளி-வாழ்க்கை நடத்தலாமோ?
குளிர், கூட்டம், இருளிடையே நாளாந்தம்
பிரயாணம் செய்கையிலே
முழிப்பான தங்க-நகை, நாலு-முழ
வேட்டி, நலங்காத சேலை கட்டி
சுரங்கவழி செல்வதுவும், பேருந்தில்
ஏறுவதும், விரைந்து ஓடோடி
இரவுபகல் திரிவதுவும் எவ்வாறு
வசதி என்று எனக்குச் சொல்வீர்.
பெண்வீட்டில் குளிப்பாட்டல்,
பொன்னுருக்கல், பலநூறு விருந்தினர்க்கு
எண்ணற்ற ஒழுங்குகளை ஏற்படுத்தி
சாத்திரத்தால் சுபநேரம் பார்த்தும்…
போக்குவரத்துச் சுணக்கால், பெண்ணோ
மணமகனோ பிந்திச் சென்று
ஏக்கமுடன் கணம் பிந்தித் தாலிகட்டல்,
நாம் தேடும் கலாச்சாரம் தானா?
தமிழர்காள்! தயங்காதீர்! வசதியில்லாக்
கலாச்சாரம், எம் காலன், காண்பீர்!
உமது உமது அனுபவ-அறிவால்
உமக்குரிய கலாச்சாரத்தினைத் தெரிந்து
உமதடிமை அதுவென்றும், நீவிர்அதன்
மேலென்றும், உணர்ந்துகொண்டு
சமகால வாழ்க்கை வசதிக்கு, உம்
கலாச்சாரங்களையும் மாற்றிச் செல்வீர்!

professorkopanmahadeva@yahoo.co.uk