அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. படைப்பு இலக்கியம் – நடனம் – ஓவியம் – ஊடகம் – சமூகம் – பண்பாடு முதலான துறைகளில் தேடலையும் சிந்தனையையும் மேம்படுத்தும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள 15 ஆவது எழுத்தாளர் விழா அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் எழுத்தாளர் திரு. எம். ஜெயராம சர்மா அவர்களின் தலைமையில் மெல்பனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலின் பீக்கொக் மண்டபத்தில் எதிர்வரும் 14-11-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது. நூல்களின் கண்காட்சி அரங்கு – இலக்கிய கருத்தரங்கு – நூல் விமர்சன அரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – மகளிர் அரங்கு முதலான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து எழுத்தாளர் டொக்டர் ச. முருகானந்தன் திறனாய்வாளர் திரு. எஸ். வன்னியகுலம் இங்கிலாந்திலிருந்து எழுத்தாளரும் நாழிகை ஆசிரியருமான திரு. மாலி . மகாலிங்கசிவம் சிட்னியிலிருந்து நடன நர்த்தகி நாட்டியக்கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர் ஆகியோர் வருகை தருகின்றனர்.
அத்துடன் சிட்னி மெல்பன் எழுத்தாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் இவ்விழா நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவர். இலக்கியக்கருத்தரங்கு திரு. வன்னியகுலம் தலைமையிலும் நூல் விமர்சன அரங்கு அவுஸ்திரேலியா வள்ளுவர் அறக்கட்டளை இயக்குநர் திரு. நாகை. சுகுமாறன் தலைமையிலும் கவியரங்கு திரு. கேதார சர்மாவின் தலைமையிலும் விவாத அரங்கு திரு. ஜெயகாந்தன் தலைமையிலும் மகளிர் அரங்கு திருமதி சாந்தினி புவநேந்திர ராஜாவின் தலைமையிலும் நடைபெறும். அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் வெளியீடுகளின் கண்காட்சியை எழுத்தாளர் திரு. கே.எஸ். சுதாகரன் ஒழுங்குசெய்துள்ளார். இலக்கியக்கருத்தரங்கில் சிட்னியில் கடந்த ஆண்டு மறைந்த மூத்த எழுத்தாளர்கள் எஸ்.பொன்னுத்துரை – காவலூர் ராஜதுரை ஆகியோரின் நினைவாக பேருரைகளும் இடம்பெறும்.
எஸ்.பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் சுயசரிதை நூலை முன்வைத்து அவருடைய படைப்பு ஆளுமையும் வாழ்வும் பணிகளும் தொடர்பாக சமகால இலக்கியப்பரப்பில் அவர் எவ்வாறு இனம்காணப்படுகிறார் என்பதாக டொக்டர் நடேசனின் உரை அமையவிருக்கிறது. மூத்த இலங்கை வானொலி ஊடகவியலாளரும் படைப்பிலக்கியவாதியும் திரைப்படத்துறையில் ஈடுபட்டவருமான காவலூர் ராஜதுரையின் பணிகளுடன் இன்றைய ஊடகத்துறையின் சமூகம் சார்ந்த தாக்கம் குறித்து திரு. மாலி. மகாலிங்க சிவம் உரையாற்றுவார். தமிழர்தம் பாரம்பரிய நடனக்கலையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்தங்கள் – புகலிடத்திலும் நடனக்கலையின் தாக்கம் குறித்து நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர் உரையாற்றுவார்.இலங்கையில் சமகாலத்தில் இலக்கியப்போக்கும் இளம் தலைமுறையின் ஈடுபாடும் குறித்து புகலிட வாசகர்களிற்கு அறிமுகப்படுத்தும் பாங்கில் இலங்கையிலிருந்து வந்துள்ள எழுத்தாளர் டொக்டர் ச. முருகானந்தன் உரையாற்றுவார்.
ஓவியங்கள் சமூகத்தின் நிகழ்வுகளில் எத்தகைய தாக்கத்தை தோற்றுவிக்கின்றன என்பது பற்றி திரு. ஸ்ரீநந்தகுமார் உரையாற்றுவார். நூல் விமர்சன அரங்கில் சிட்னியில் வதியும் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா கவிஞர் செ. பாஸ்கரன் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர் மெல்பனில் வதியும் டொக்டர் நடேசன் கலைவளன் சிசு. நாகேந்திரன் கே.எஸ். சுதாகரன் ஆகியோரின் நூல்களை முறையே திரு. ஜே.கே. ஜெயக்குமாரன் திருமதி சாந்தினி புவநேந்திரராஜா திரு. எஸ். சிவசம்பு திரு.நவரத்தினம் இளங்கோ திரு. சிவசுதன் திரு. க. குமாரதாசன் ஆகியோர் விமர்சிப்பர். கவியரங்கில் அஜந்தன் தமிழ்ப்பொடியன் ஆவூரான் சந்திரன் ஒருவன் ஆகியோரும் விவாத அரங்கில் ருத்ரபதி ஜனந்தன் பொன்னரசு – சுகந்தன் ஆகியோரும் மகளிர் அரங்கில் சீராணி குமரன் – கீதா மாணிக்கவாசகம் – இந்திராணி ஜெயவர்த்தன ஆகியோரும் பங்குபற்றுவர். புலப்பெயர்வில் தமிழர் பண்பாடுகள் தமிழ்ப் பெண்கள் சுதந்திரம் தமிழரின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக இந்த அரங்கு ஆராயும். நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் மெல்பன் வானமுதம் ஊடகவியலாளர் திரு. நவரத்தினம் அல்லமதேவன். விழாவின் இறுதியில் சங்கத்தின் செயலாளர் திரு. ஸ்ரீநந்தகுமார் நன்றியுரை வழங்குவார்.
letchumananm@gmail.com